சிறப்புக் கட்டுரை: பாரம்பரிய அறிவினை பாதுகாப்பதில்-பரப்புவதில் பழங்குடி பெண்களின் பங்கு!

சிறப்புக் கட்டுரை

கே. எம். லீலாவதி தனராஜ் 

உலகில் 37 கோடி பூர்வகுடி பழங்குடியின மக்கள் 90 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இது உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவு எனினும் வறுமையின் பிடியில்  வாழும் மக்களில் 15 சதவீதம் பழங்குடிகளாகவும் உள்ளனர்.

பழங்குடியினர் எவ்வளவு பேர் இருக்கின்றனர்?

இவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு அதிகமான கலாச்சாரங்களையும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளையும் பேசுகின்றனர். இந்தியாவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடிகள் சுமார் 104,545,716 (8.6%) எண்ணிக்கையில்  உள்ளனர்.

அதாவது உலகில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான  பழங்குடிகள் இந்தியாவிலேயே வாழ்கின்றனர். தமிழகத்தில் 36 பட்டியல் பழங்குடியின வகுப்பை சார்ந்த சுமார் 7 1/2 இலட்சம் (ஏழரை) 1.1 சதவீதம் பேர் வாழ்கின்றனர். பழங்குடியின மக்கள் தலைமுறை தலைமுறையாக தங்களின் கலாச்சாரங்களையும், வாழ்வியலையும் இயற்கை சூழலுடன் இணைத்து வாழ்கின்றனர். 

பூர்வகுடிகளும் உயிர்ச் சூழலும்

1982 ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பானது ஆகஸ்ட் 9 ம் தேதியினை சர்வதேச பழங்குடிகள் தினமாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் கடந்த 40  வருடங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டுவரும் பூர்வகுடியினர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் பழங்குடி மக்களின் வாழ்வியல், கலை, கலாச்சாரம், மொழி, மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றது. 

பூர்வகுடி பழங்குடிகள் வாழ்விடத்தில் தான் உலகின் 80  விழுக்காடு உயிர்சூழல் பன்மயம் கொண்டதாக உள்ளது. அன்பை அடிப்படையாகவும்  சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் கொள்கையாக கொண்டவர்கள் பூர்வகுடிகள். காடுகளை, இயற்கை வளங்களையும் பாதுகாக்க பழங்குடி பெண்களின் தீரமிக்க செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.  மரங்களுக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த பழங்குடி பெண்களின் வரலாறு உலகெங்கிலும் உண்டு. சூழலியல் ஜனநாயகத்தை பேசுவதிலும் நடைமுறைப் படுத்துவதிலும் பூர்வகுடிகளே மிக உன்னதமானவர்கள், அமைதி சமூகத்தினர்.  

பழங்குடியினரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்!

சூழலியலை பாதுகாக்க நாம் பூர்வகுடிகளை பாதுகாக்க வேண்டும். பழங்குடிகள் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கும் நிலையில் உள்ளனர். அதாவது எதிர்காலத்தில் ஏற்படும் பெரும்தொற்று குறித்தும் நமக்கு சொல்லிக்கொடுக்கும் அறிவுடையவர்கள் பழங்குடி மக்களே. ஏனெனில் தங்கள் பாரம்பரிய அறிவை அவர்கள் இயற்கையிடம் இருந்தும், தங்களின் முன்னோர்களிடம் இருந்து பெறுகின்றனர்.

எனவே தான் பழங்குடியினரால் சூழலுக்கு ஏற்ப தங்களை பாரம்பரிய முறையில் தங்களை  தகவமைத்து கொள்கின்றனர்.  கோரோனா போன்ற  பெரும்தொற்றை மிக எளிதாக எதிர்கொள்ளவும்,  தங்கள் மரபார்ந்த பாரம்பரிய அறிவு, மற்றும் கடந்த கால அனுபவங்களை கொண்டு சுயமாக தீர்வை காணும் ஆற்றல் உடையவர்களாக இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் நமக்கு இதை நிரூபிக்கின்றனர்.

வானம் சார்ந்த தனித்த பிரதேசங்களில் வாழும் இவர்கள் தங்களின் பாரம்பரிய அறிவினை பயன்படுத்தியே குழந்தை பிறப்பு, முதல் இறப்பு வரை அனைத்து நோய்களுக்கும், நோய்த் தடுப்புக்கும் பாரம்பரிய முறையில் மருத்துவம் செய்து வந்தனர். மேலும் இப்பாரம்பரிய அறிவு எல்லோரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வெளிப்படையானது ஒளிவு மறைவற்றது. 

பூர்வகுடிகளின் பாரம்பரிய அறிவு 

கொரோனா நோயின் தோற்றம் குறித்த ஆய்வு முடிவுகள் இன்னும் முடிவடையாத   நிலையில் பூர்வகுடிகள் சூழல் சீர்கேடுதான் நோய் பரவக் காரணம் என்பதை முன்பே அறிந்து வைத்துள்ளனர். பூர்வகுடிகள் உண்மையில் சூழலியல் நிபுணர்கள் என்பதற்கு அவர்களின் பாரம்பரிய அறிவே இதற்கான சான்றாக இருக்கின்றது.

பாரம்பரிய அறிவு என்பது ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவாற்றலாலும் நடைமுறைகளாலும்  பிரதிநிதித்துவமாக மக்களால் உருவாக்கப்பட்டது. இது அம்மக்களால் வரலாறாக விரிவாக்கம் செய்யப்பட்டு இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு பரிமாற்றம் செய்யப்படுவது.

இது அதிநவீன புரிதலின் கருத்துக்கள் மறுவிதமாக விளக்கப்பட்டு வாழ்க்கையின் நடைமுறை பழக்கத்தில் கலாச்சார சிக்கலுக்கிடையே ஒரு வடிவம் பெற்ற மொழியாக உள்ளடங்குகிறது. உரையாடல், நம்பிக்கைகள், பாடல்கள், சடங்குகள், வழிபாடுகள், கலைகள் என எல்லாவற்றிலும் இக்கூறுகள் நிரம்பி இருக்கும்.    இது மேலும் வகைப்படுத்தி வளமிக்க நடைமுறை பழக்கமாகி ஆன்மீகத்திலும் வலுப்பெற்று உலகத்தாரால் அறியப்படுகிறது.

alt="role tribal women preserving spreading traditional  knowledge"

பிறப்பில் இருந்து இறப்பு வரை வாழ்வை கொண்டாட்ட மனநிலையில் வாழும் பழங்குடிகளில் பெண்கள் அதிக முக்கியத்துவம் உடையவர்கள். வரதட்சணையற்ற இப்பழங்குடி சமூகத்தில் பெண்கள் தங்கள் சமூகங்களில் அனைத்து நிலைகளிலும் முக்கியமான பங்கு வகிக்கின்றனர்.

அதிலும் உணவளிப்பவர்களாக, அறிவு பகிர்ந்து பராமரிப்பவர்களாக, தலைவிகளாக, மனித உரிமை பாதுகாவலர்களாக பலவிதமாக  முக்கிய பங்கு வகிக்கின்றனர். பழங்குடி பெண்கள் பழங்குடி மக்களின் முதுகெலும்பு அவர்களின் பாரம்பரிய மூதாதையினர் அவர்கள் அறிவை பாதுகாக்கின்றனர், அது மட்டுமன்றி அறிவை பரப்புவதிலும் முக்கியமான பங்கு வகிக்கின்றனர்.

இப்பெண்கள் இயற்கை வளங்களை பராமரிப்பவர்களாகவும் அறிவியல் அறிவை காப்பவர்களாகவும் ஒருங்கிணைந்த கூட்டு மற்றும் சமூக பாத்திரங்களையும் கொண்டுள்ளனர். பழங்குடி பெண்கள் தங்கள் வாழும் பகுதிகளில் உள்ள சமூக நிலங்கள் மற்றும் அங்கிருக்கும் பிரதேசங்களை பாதுகாப்பதில் மும்முரமாக முன்னணியில் நின்று செயல்படும் உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களின் கூட்டு உரிமைக்காகவும் வாதாடுகின்றனர்.

பழங்குடி பெண்கள் பாலினம், வர்க்கம், இனம் மற்றும் சமூக பொருளாதார நிலைக்கேற்றவாறு பல்வேறு நிலைகளில் பாகுபடுத்தப்பட்டு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் சுய நிர்ணய உரிமை, சுய நிர்வாகம் மற்றும் மூதாதையர் நிலங்களின் மீதான கட்டுப்பாடு பல நூற்றாண்டுகளாக மீறப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவின் முக்கியத்துவம் எங்கும் பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

நவீன அறிவியலின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முன்பே அதாவது நீண்ட கால கட்டத்திற்கு முன்பாகவே பழங்குடி மக்கள் எவ்வாறு எந்த சூழலில் உயிர் வாழ்கின்றனர் என்பதை அறிந்து ஆராய்ந்து அதன் வலிகளையும் அர்த்தங்களையும் நோக்கங்களையும் அதன் மதிப்பீடுகளையும் பற்றிய சிந்தனைகளையும் உருவாக்கி உள்ளனர்.

பழங்குடி மக்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்கள் கூறியுள்ள கூற்றுகளின் படி பாரம்பரிய அறிவு சமகாலங்களில் மிக ஆற்றல் மிக்கது, அது பிறவகையான அறிவுக்கும் சமமான மதிப்புடையது என்பதை சுட்டிக்காட்ட ‘அறிவியல் அறிவு’ என்ற சொல் வெகுவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பருவநிலை மாற்றங்களுக்கு தீர்வினை நோக்கி நகர பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு அவசியமானது. பழங்குடிகள் குறித்த பார்வை நவீன உலகில் எளிதாக அறிந்து கொள்ள கூடியதாக இருப்பினும் அவர்களின் உயர்ந்த பண்பாட்டு செழுமை வெளிக்கொணரப்பட வேண்டும். அதற்கு பழங்குடியினர் தினம் போன்ற கொண்டாட்டங்களும் தொடர் உரையாடலும் இணைந்த செயல்பாடுகளும் அவசியம். 

(இன்று ஆகஸ்டு 9 உலகப் பழங்குடியினர் தினம்)

கட்டுரையாளர் குறிப்பு: உறுப்பினர், தமிழ்நாடு ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம். 

குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் எம்.பி.!

+1
0
+1
0
+1
0
+1
11
+1
0
+1
0
+1
0

1 thought on “சிறப்புக் கட்டுரை: பாரம்பரிய அறிவினை பாதுகாப்பதில்-பரப்புவதில் பழங்குடி பெண்களின் பங்கு!

Leave a Reply

Your email address will not be published.