திராவிட மாடலால் தீர்க்க முடியாத நதிநீர்ப் பிரச்னைகள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் இருவரும் பொதுவெளியில் பேசும்போது,  நாங்கள் எல்லாம் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வது மட்டுமல்ல, இந்த இருவருமே கேரளத்திலும், தமிழகத்திலும் பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு பாசப் பிணைப்போடு பேசுகிறார்கள். இது உண்மைதானா என்று நம்ப முடியவில்லை. 

நேற்று முன்தினம் (29.03.2023) சட்டமன்றத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறார். 2007 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன்.  அப்போது கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரைக் கால்வாயை கேரள அரசு மூடிவிட்டது. அப்போதும் தி.மு.க ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. துரைமுருகன்தான் அப்போதும் இத்துறைக்கு அமைச்சராக இருந்தார். 

நெய்யாறு அணை வரலாறு இன்று அரசியலில் இருப்பவர்களில் பலபேருக்கு தெரியாது. அன்றைக்கு சென்னை மாநிலத்தில் காமராஜர் முதல் அமைச்சர். கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியில் சங்கர் முதலமைச்சர். சென்னை அரசாங்கத்தின் செலவில்தான் இந்த நெய்யாறு அணை கட்டப்பட்டது. நெய்யாறு அணை திறப்பு விழாவில் இரு மாநில முதலமைச்சர்களான காமராஜரும் சங்கரும் கலந்து கொண்டனர்.

அப்போது சங்கர், “தமிழ்நாட்டையும் கேரளத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலை பிரித்தாலும், கேரள மக்கள் தமிழர்களை பாசத்துக்குரிய சேட்டன்களாகத்தான் நினைத்து உறவு கொண்டாடி வருகிறோம்” என்று கூறினார். காமராஜரும் சங்கரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். அன்றைய இரு மாநில முதல்வர்களின் உறவால், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர முடிந்தது. 

இந்தநிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரள அரசு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக கேள்வியை எழுப்பியிருக்கிறார். சட்டமன்றத்தில் கேள்வியை எழுப்பிய அவரும் அதற்குப் பதில் கூறிய நீர்வளத்துறை அமைச்சரும் கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நெருக்கமாக இருப்பதாகவே கூறியுள்ளனர். 

அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று 2017 – இல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தபோது, அதை பினராயி விஜயனும், மு.க.ஸ்டாலினும் எதிர்த்தார்கள்.

மக்கள் சாப்பிட வேண்டிய உணவை மத்திய அரசு எவ்வாறு தீர்மானிப்பது? உணவு விஷயத்தில் டெல்லியில் இருந்தும், நாக்பூரில் இருந்தும் அறிவுரை தேவையில்லை. கேரள மக்கள் இயல்பாகவே ஆரோக்கியமான உணவை உட்கொள்கிறார்கள் என்று பினராயி விஜயன் கூறினார்.

அதேபோன்று மு.க.ஸ்டாலினும், மோடி விரும்புவதை தான் நாம் சாப்பிட வேண்டும் என்றால் தனிமனித உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. சுதந்திர நாட்டில் வாழ்வதாக கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது போன்ற தடைகளால் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறது என்று தனது கருத்தைக் கூறினார். இருமாநிலங்களிலும் மாட்டுக்கறி விருந்துகள் நடத்தப்பட்டன. இதில் இருவரும் ஒரே மாதிரியான கருத்தையே கொண்டிருந்தார்கள்.

தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்ற 30 ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 3  ஆம் தேதி கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்டது. ‌அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தார். திராவிட மாடல் (The Dravidian Model) என்ற தனது புத்தகத்தை பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

River water problems that cannot be solved by Dravida model

கேரளத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிலும், கண்ணனூரில் நடந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிலும் ஸ்டாலின் பங்கேற்றார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி நாகர்கோவிலில் நடந்த தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய இருவரும் பங்கேற்றுப் பேசினார்கள்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன் தொடக்கவிழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

மத்திய அரசை எதிர்ப்பதிலிருந்து இப்படி பல்வேறு பிரச்னைகளில் ஒற்றுமையாக மு.க.ஸ்டாலினும், பினராயி விஜயனும் செயல்படுகிறார்கள். ஆனால் நதிநீர்ப் பிரச்னை என்று வரும்போது மட்டும், கேரள அரசு தனது சுயநலத்தைக் காட்டுகிறது. மு.க.ஸ்டாலினுக்கும் பினராயி விஜயனுக்கும் இந்த விஷயத்தில் நெருக்கமில்லாமல் போய்விடுகிறது.

அவர்களிருவரும், “நாங்கள் எல்லாம் திராவிட இனம் ” என்று பேசிக் கொண்டாலும், கேரளத்திலிருந்து  தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.  பணம் கேட்கிறார்கள். இது இன்றைக்கு நேற்றைக்கு உள்ள பிரச்னையில்லை. பல ஆண்டுகளாக எந்தவொரு முடிவும் இல்லாமல் தொடரும் பிரச்னை. 

ஒரு சொட்டுத் தண்ணீர் அண்டை மாநிலத்துக்கு கேரளா தர வேண்டும் என்றால், அது கேரள சட்டமன்றத்தில் பேசப்பட்டுதான் தர முடியும் என்ற ஒரு விநோதமான நடவடிக்கையையும் மேற்கொள்கிறார்கள். 

இந்த நெய்யாறு சிக்கல் தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கு ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

வெறும் நெய்யாறு மட்டுமல்ல, அப்படியே வடக்கு நோக்கி வந்தால், நெல்லை மாவட்டம் கொடுமுடி ஆறு, பச்சை ஆறு, தென்காசி மாவட்டத்தில் 1989 தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அடவி நயினார் அணை, செங்கோட்டை அருகே உள்ளது. அதன் தண்ணீர் வரத்து கூடாது என்று உலக வாதம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அச்சுதானந்தம் தமிழகத்தின் எல்லைக்குட்பட்ட இடத்தில் உள்ள அடவிநயினார் அணையை உடைக்க கடப்பாரை மண்வெட்டியுடன் 2002 இல் வந்தார்.

இப்பிரச்னைகளைப் போல நீண்டகாலமாக கேரளாவில் உள்ள அச்சன்கோவில் – பம்பை, தமிழகத்தில் சாத்தூர் அருகே உள்ள வைப்பாறோடு இணைப்புத் திட்டம் முக்கியமானதாகும். இது குறித்து 1983 இல் தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற என்னுடைய வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு 2012 இல் இவை எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடுத்து இதே தென்காசி மாவட்டத்தில் சிவகிரி, வாசுதேவநல்லூர் அருகே தமிழகத்துக்கு உரிமையான செண்பகவல்லி தடுப்பணை சுவரை இடித்து, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு பயன்பாட்டுக்கு உதவும் அணையையும் செப்பனிடாமல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னைகள் உள்ளன.

River water problems that cannot be solved by Dravida model

இதற்கு சற்றே வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 1966 – 68 வரை தமிழக அரசு அழகர் அணையைக் கட்டத் திட்டமிட்டது. ஆனால் அழகர் அணை இன்று வரை கட்டப்படாமல் கேரள அரசின் அனுமதியை எதிர்நோக்கி காத்திருக்கும் சிக்கலில் உள்ளது. 

முல்லைப் பெரியாறு பிரச்னை அனைவருக்கும் தெரிந்த முக்கியமான பிரச்னை. அப்படியே கொங்கு மண்டலம் வரை ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு, புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு, அமராவதி என்று பத்துக்கும் மேற்பட்ட நதி நீர் தீரங்களின் சிக்கல்கள் ஏறத்தாழ 40 வருடங்களுக்கும் மேலாக உள்ளன.

River water problems that cannot be solved by Dravida model

இதையெல்லாம் பேசி தமிழ்நாட்டு நதி நீர் தீரங்களின் உரிமைகளைப் பாதுகாக்க முயற்சிகள் எதுவும் செய்யாமல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேரள முதல்வர் பினராயி விஜயனும், “நாங்கள் எல்லாம் திராவிடமண்ணைச் சார்ந்தவர்கள் ” என்று கட்டித் தழுவிக் கொள்வதில் என்ன பயனோ?

இந்தநிலையில் நேற்று முன்தினம் (29.03.2023) தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரள அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. அந்தப் பகுதி பாலைவனமாக உள்ளது. நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 

அதற்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “சட்டப்படி கேரள அரசு நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால் தண்ணீர் கொடுப்பதற்கு பணம் கேட்டனர். உலகத்திலேயே எந்த நாட்டிலும் தண்ணீருக்குப் பணம் வாங்கியதில்லை. இதனால்தான் அந்த விவகாரத்தைத் தொடர முடியாமல் போய்விட்டது. தண்ணீருக்காக கேரளா பணம் கேட்டது நியாயமானது அல்ல” என்று கூறியிருக்கிறார். 

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காரிய சித்தம் இல்லாமல் வெட்டிப் பேச்சினிலேயே சாதனைகளைச் செய்துவிட்டோம் என்று பேசுவதில் எந்த  அர்த்தமும் இல்லை. மேலும் மேலும் தமிழகத்தின் உரிமைகளை இழந்து  காவிரி சிக்கல் மாதிரி பெரும் தலைவலிதான் ஆகும். இந்தச் சூழ்நிலையில் பினராயிவிஜயனுக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள உறவுக்கு என்ன அர்த்தம் உள்ளது என்பதே புரியவில்லை. 

“என்னை புதைக்கின்ற சமாதியில் ஒரு வரி எழுதினால் போதும், ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று எழுதியிருந்தால் போதும் ” என்று உருக்கமுடன் பேசிய  நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், இந்தப் பிரச்னையை மிக அழுத்தமாக மு.க.ஸ்டாலினிடம் எடுத்துச் சொல்லி தமிழக மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதில் என்ன தடை என்ற கேள்வியும் எழுகிறது.

உச்சநீதிமன்றத்தில் நதிகள் தேசியமயமாக்கப்படவேண்டும் என்றும், கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி, குமரி மாவட்ட நெய்யாறோடு இணைக்கவேண்டும் என்றும், கேரள நதிப்படுகைகளான அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கவேண்டும் என்றும் 30 ஆண்டுகாலம் போராடி கடந்த 2012 பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பைப் பெற்றேன்.

அந்த வழக்கில் தமிழக நதிநீர்ச் சிக்கல்கள் எல்லாவற்றையும் சொல்லி தீர்வையும் கேட்டேன். அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள் உருப்படியாகச் செய்தது எதுவுமில்லை. அப்படி ஏதேனும் முயற்சி செய்திருந்தால் இன்றைக்கு நீர்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில், சட்டப்படி கேரள அரசு நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால் தண்ணீர் கொடுப்பதற்கு பணம் கேட்டனர். உலகத்திலேயே எந்த நாட்டிலும் தண்ணீருக்குப் பணம் வாங்கியதில்லை. இதனால்தான் அந்த விவகாரத்தைத் தொடர முடியாமல் போய்விட்டது என்று தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போயிருக்கும். 

கர்நாடகத்தில் காவிரி, தென்பெண்ணையாறு, ஒகனேக்கல், மேகதாது, ராசிமணல் தொட்டல்லா ஆறு அணைக்கட்டு திட்டம், ஆந்திராவில் பாலாறு, பொன்னியாறு  என வரிசையாக நமக்கு அண்டை மாநில நதிநீர்ச் சிக்கல்கள் பெருகியுள்ளன.

கர்நாடக, ஆந்திர முதல் அமைச்சர்களை விட கேரள முதலமைச்சரோடு உறவும், நட்பும் அதிகமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும்போது, இம்மாதிரியான பிரச்னைகளை ஏன் தீர்க்க முடியாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை.

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

கட்டுரையாளர்: அரசியலாளர்

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம்!

மழை: ஐபிஎல் போட்டி நடைபெறுமா?

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *