தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை திரையிடும் நடைமுறைக்கு மாற்றம் கண்டபின் வாரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் புதிய திரைப்படங்களை நகரம் முதல் கிராமங்கள் வரை உள்ள திரையரங்குகள் திரையிட்டு வருகின்றன.
தமிழகத்தில் தனித்திரையரங்குகள், இரட்டை திரைகள், அதற்கும் மேற்பட்ட திரைகள் உள்ள மால்கள் என 1100 திரைகள் உள்ளன. முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அதற்கு உரிய வரவேற்பு, டிக்கெட் தேவையை பொறுத்து திரைகள் ஒதுக்கீடு, காட்சிகள் அதிகரிப்பதை திரையரங்க நிர்வாகங்கள் மேற்கொள்ளும்.
குறுகிய நாட்களில் அதிகபட்ச வசூலை அள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத்குமார், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் வாரத்தில் பிற பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் தவிர்த்து வந்தனர். இதனால் சிறு முதலீட்டு படங்கள், மூன்றாம் கட்டத்தில் இருக்கும் நடிகர்களின் படங்கள் வெளியீடு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் திரைப்படங்களை வெளியிடும் தொழிலில் முழு வேகத்துடன் ஈடுபட தொடங்கிய பின்னர் ஏரியா அடிப்படையில் படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பு நிலையில் உள்ளனர்.
ஏரியா அடிப்படையில் படங்களை முன் தொகை கொடுத்து வெளியிட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் திரையரங்குகளை குத்தகைக்கு எடுத்து நடத்துவது, பிற திரையரங்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் திரைப்படங்களை ஒப்பந்தம் செய்யும் தொழிலுக்கு மாறினார்கள். வசதி படைத்தவர்கள் திரையரங்குகளை விலைக்கு வாங்கி நவீனப்படுத்தி நடத்தும் தொழிலுக்கு மாறினார்கள்.
தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், விநியோகம், திரையரங்குகளில் திரையிடுதல் என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் ரெட் ஜெயண்ட் விநியோக தொழிலில் முழுமையாக ஈடுபட தொடங்கிய பின் தொழில் முறையில் அந்நிறுவனத்தின், பிரதிநிதிகளாக, ஒத்த கருத்துடையவர்களாக தங்களை மாற்றிக்கொண்டார்கள்.
ரெட் ஜெயண்ட் வியாபார உத்தி
தமிழில் தயாரிக்கப்படும் முன்னணி நடிகர்களின் படங்களின் உரிமை அவுட்ரேட் முறையில் வியாபாரம் செய்யப்படும் முறையை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவந்தது ரெட் ஜெயண்ட் மூவீஸ். படத்தின் பட்ஜெட், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அடிப்படையாக கொண்டு திரையரங்குகளில் அட்வான்ஸ் வாங்கி அதனை தயாரிப்பாளர்களுக்கு முன்பணமாக கொடுத்தனர்.
ஏற்கனவே குறிப்பிட்ட சில ஏரியாக்களில் இருந்த மினிமம் கேரண்டி தொகை என்பதையும் ரத்து செய்து அட்வான்ஸ் வியாபார முறையை அமுல்படுத்தினார்கள். முன்பணம் வாங்குவதில் திரையரங்கு உரிமையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப விட்டுக் கொடுக்கும் நடைமுறையை கடைபிடித்தது ரெட் ஜெயண்ட். அதனால் அந்நிறுவனம் கேட்கும் சதவீதத்தில் திரையரங்கு வசூலில் பங்கீட்டுமுறைக்கு திரையரங்குகள் ஒப்புக் கொண்டனர்.
இதில் வழக்கமாக இருந்த சதவீத அடிப்படை முற்றிலுமாக மாறி அதிகபட்ச சதவீதமான 70% பங்குத்தொகையை தயாரிப்பாளர்களுக்கு வாங்கித் தந்ததால் அவர்களின் அபிமானத்திற்குரிய நிறுவனமாக மாறியது. அதே நேரம் படம் வெளியிடும்போது வரக்கூடிய பைனான்சியர் பஞ்சாயத்துகள் வீரியமின்றி ரெட் ஜெயண்ட் மூவீஸ் கண் அசைவுக்கு கட்டுப்பட்டது.
படம் திரையிட கொடுத்த முன் தொகை வசூல் மூலம் கிடைக்காத நிலையில் பாக்கித்தொகையை தயாரிப்பாளர்களிடம் திரும்ப வாங்குவது கடுமையான போராட்டமாக கடந்த காலங்களில் இருந்து வந்தது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் படம் ஓடி முடிந்தவுடன் கணக்கு பார்த்து முன் தொகை பாக்கி உடனுக்குடன் திருப்பிக்கொடுக்கப்பட்டது.
இதன் காரணமாக தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் விருப்பத்துக்குரிய நடிகர் கமல்ஹாசன் பாராட்டும் நாணயம்மிக்க நிறுவனமாக ரெட் ஜெயண்ட் மூவீஸ் விஸ்வரூபம் எடுத்தது. எல்லாவகையிலும் நற்பெயருக்கான தற்காப்பு நடவடிக்கைகளை கடந்த ஒருவருட காலமாக தாங்கள் வெளியிட்ட படங்களின் மூலம் ஏற்படுத்திக்கொண்டனர்.
திரையரங்குகளுக்கான மின்கட்டணம், உயர்ந்துவரும் ஊழியர்களுக்கான சம்பளம், சொத்துவரி என எல்லாமே உயர்ந்துவரும் சூழலில் 60% – 40% என்கிற பங்கீட்டு முறையை 70% -30% சில பகுதிகளில் 80% – 20% என்கிற முறையையும் ரெட் ஜெயண்ட் அமுல்படுத்தியதை திரையரங்கு உரிமையாளர்கள்பொறுத்துக்கொண்டனர். ஆளும் கட்சி நிறுவனம் என்பதால் அரசு அதிகாரிகளின் மாமூல் தொல்லை இருக்காது.
இவையெல்லாம் ரெட் ஜெயண்ட்க்கு சாதகமான அம்சங்களானது தங்கள் நிறுவனம் மீதான நற்பெயர் பிம்பத்தை கட்டமைத்தபின் நாம் என்ன செய்தாலும் பொதுவெளியில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் எந்த பாதிப்பும் இனி வராது என்கிற முடிவுக்கு ரெட் ஜெயண்ட் வந்திருப்பதாகவே தெரிகிறது.
துணிவு, வாரிசு படங்களின் வெளியீட்டில் அந்நிறுவனம் கடைப்பிடிக்கும் அல்லது திரையரங்குகளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை பார்க்கின்றபோது நவீன தொழில்நுட்பத்திலும், மிகப்பிரமாண்டமாகவும் தயாரிக்கப்படும் படங்களை பெரிய திரை கொண்ட திரையரங்குகளில் குடும்பத்துடன் பார்ப்பதற்கு மக்கள் விரும்புகின்றனர். அதனால்தான், நவீன வசதிகளுடன் கூடிய தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால் தியேட்டர் அதிநவீனமாயிருந்தாலும் கட்டண வரைமுறை உண்டு.
தமிழகத்தில் தமிழ்நாடு சினிமா கட்டுப்பாட்டு விதிகள் 1957 ன் படி, எந்தெந்த உள்ளாட்சிகளில், எத்தகைய தியேட்டர்களில் எவ்வளவு குறைந்தபட்சம், எவ்வளவு அதிகபட்சம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கலாம் என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசை சார்ந்தது.
அதன்படி, தமிழகத்தில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 2017 அக்டோபர்16 ல், தமிழக உள்துறை சார்பில் அரசாணை (எண்: 762) வெளியிடப்பட்டது. அதுவே இன்று வரை நடைமுறையில் உள்ளது.
டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
அதில், மல்டி பிளக்ஸ், மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து என மூன்று பிரிவுகளாக தியேட்டர்கள் அட்டவணைப்படுத்தப்பட்டது. குளிரூட்டபட்ட திரையரங்கு, அந்த வசதி இல்லாத திரையரங்கு என பிரிக்கப்பட்டு இரண்டுக்கும் அதிகபட்சம், குறைந்தபட்சம் என தனித்தனியாக கட்டணத்தை அரசு நிர்ணயித்திருக்கிறது.
அதன்படி, மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தபட்ச டிக்கெட் விலை 50 ரூபாய், அதிகபட்ச டிக்கெட் விலை150 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு இக்கட்டணம் பொதுவானது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படும் குளிரூட்டப்பட்ட திரைகளில் குறைந்தபட்ச டிக்கெட் விலை 40 ரூபாய், அதிகபட்ச விலை100 ரூபாய்.
குளிர் வசதி இல்லாத திரையரங்குகளுக்கு இது முறையே 30 ரூபாய் மற்றும் 80 ரூபாய் என அரசு கட்டணம் நிர்ணயித்திருந்தது. கிராம பஞ்சாயத்துப் பகுதிகளில் உள்ள A/C தியேட்டர்களுக்கு இது முறையே 25 ரூபாய் , 75 ரூபாய் என்றும், A/Cஇல்லாத அரங்குகளுக்கு 20ரூபாய், 50 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
அப்பட்டமான விதிமீறல்
தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டநாளிலிருந்து எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இன்று வரையிலும், எந்தத் தியேட்டரில் என்ன புதிய படம் ரிலீஸ் ஆனாலும் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுவதேயில்லை. மாறாக முன்னணி நடிகர்களின் படங்கள், அதற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பொறுத்து குறைந்தபட்ச டிக்கெட் விலை 150 ரூபாய் என விற்பனை செய்யப்படுவது எழுதப்படாத சட்டமாகி போனது. ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களும் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் விற்கப்படுவதில்லை.
அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்துக்கு GSTதனியாகச் சேர்த்தாலும் கூட, 200 ரூபாய்க்கு மேல் அதிகபட்சமாக டிக்கெட் கட்டணம் வசூலிக்க சட்டத்தில் இடமேயில்லை. சில காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்களை ரசிகர் மன்றத்தினரே வாங்கி, ஒவ்வொரு டிக்கெட்டையும் ரூ.500 லிருந்து ரூ.2000 வரை விற்று விடுகின்றனர்.
சில தியேட்டர்களில், ‘ஆன்லைன் டிக்கெட் இல்லை’ என்று இணையத்தில் முடக்கிவிட்டு, தியேட்டருக்கு வரும் ரசிகர்களிடம் ‘ஆன்லைன் புக்கிங்’ டிக்கெட்களை, தியேட்டர் நிர்வாகமே ஆட்களை வைத்து, பல மடங்கு விலை உயர்த்தி விற்பதும் நடந்துவந்தது. இதே ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்கள், தொடக்க காட்சிக்கு தியேட்டர்களில் 2000ம் ரூபாய்க்கு விற்கின்ற அத்துமீறலும் பகிரங்கமாக நடக்கிறது.
இது அப்பட்டமான சட்டவிரோதம், விதிமீறல் என்று தெரிந்தாலும், இதுவரை எந்தவொரு அரசும் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது இல்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த ‘ஆன்லைன்’ டிக்கெட்டின் கறுப்பு மார்க்கெட் எல்லையும், மதிப்பும் அதிகரித்து வருகிறது.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் உத்தரவு
ஜனவரி 11 அன்று வெளியாகும் வாரிசு, துணிவு படங்களை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான திரைகளில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது என்பதால் கட்டணம் மற்றும் காட்சி விதிமீறல்கள் எவ்வித அச்சமுமின்றி அரங்கேறி வருகின்றன. முதல் நாள் சிறப்புக்காட்சிகள் உட்பட, ரிலீசாகும் நாளிலிருந்து முதல் வாரம் முழுவதும் குறைந்தபட்சம் 200 ரூபாய் அதிகபட்சமாக 500 ரூபாய்க்கு டிக்கட் விற்கப்பட வேண்டும் என்று ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிர்வாகிகள் வேண்டுகோள் இல்லை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள் என்கிறது தியேட்டர் வட்டாரம்.
இது சம்பந்தமாக ஐம்பது வருடங்களுக்கு மேலாக திரையரங்கு நடத்தி வரும் உரிமையாளர்களிடம் பேசியபோது, “தமிழ்நாடு சினிமா விதிகளின்படி, ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் காட்சிகளை வெளியிடுவதற்கு சட்டத்திலேயே இடமில்லை இதனை நுகர்வோர் அமைப்பினர், தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஆனால் சினிமாக்காரர்களின் தயவுக்காக எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழக அரசு தொடர்ந்து இந்த சிறப்பு காட்சிகளை அனுமதித்து வருகிறது. தீபாவளிக்கு இப்படித்தான் மூன்று நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
அதேபோல, இப்போதும் நள்ளிரவு ஒரு மணி, காலை நான்கு மணிக்கு சிறப்புக் காட்சிகளைத் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சிறப்புக்காட்சியே சட்டவிரோதம் என்கிற நிலையில், அதற்காக 10 மடங்கு அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்கப்படுவது ரசிகர்களின் ஆர்வக்கோளாறை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் செயலுக்கு இணையானது. ஆளும்கட்சி அமைச்சருக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் இந்த அத்துமீறலை அதிகாரிகள் கண்டு கொள்வதேயில்லை.
தியேட்டர்களில் எவ்வளவு டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும், வாகனங்களுக்கு ‘பார்க்கிங்’ கட்டணம் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதையெல்லாம் கண்காணித்து, அதில் விதிமீறல் நடக்கும்போது, நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, மாவட்ட நிர்வாகத்துக்கே உள்ளது. சுகாதாரம், பாதுகாப்பு, கட்டணம் என பலவற்றையும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக எந்தத் தியேட்டரிலும் மருந்துக்கும் கூட, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதேயில்லை. அதிலும் குறிப்பாக தமிழில் வெளியாகும் முக்கியமான படங்கள் அனைத்தையும் உதயநிதிக்கு சொந்தமான நிறுவனம் வெளியிடுவதால் எந்த அதிகாரிகளும் எந்தத் தியேட்டர் மீதும் எந்த அத்துமீறலுக்காகவும் நடவடிக்கை எடுப்பதேயில்லை. அதிகாரிகள் வாங்கும் மாமூல், குடும்பத்துடன் ஓசி சினிமா என பல காரணங்களும் இதன் பின்னணியில் உள்ளன.
ஆக மொத்தத்தில், தமிழக அரசியல்வாதிகளாலும், சினிமாக்காரர்களும் அதிகமாக ஏமாற்றப்படுவது, தமிழக மக்கள்தான். ஒரு தியேட்டரில் அனுமதி பெற்றதை விட அதிகமான காட்சிகளை திரையிட வேண்டுமெனில், அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். உண்மையை சொல்வது என்றால் சிறப்புக்காட்சிகளை அனுமதிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் ஆளும் அரசுகள் தங்கள் வசதிக்கு ஏற்ப சட்டத்தை வளைத்துக்கொள்கின்றனர்.
வாரிசு – துணிவு பட வெளியீட்டில் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் அதிகாரிகள் திரையரங்கு உரிமையாளர்களிடம் வரம்புமீறி பேசுவதுடன், எதையும் கட்டளையாகவே பிறப்பிக்கின்றனர்.
எந்தவித முதலீடும் இன்றி அதிகார பலத்தை பயன்படுத்தி திரையரங்குகளிடம் முன் தொகை வாங்கி அதனை தயாரிப்பாளரிடம் மொத்தமாக கொடுக்கும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் செய்யும் வேலை என்பது முகவர் பணியே. ஆனால் அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்திருக்கும் எங்களை நடத்துகிற விதம் அநாகரிகமானது.
சில லட்சம் அல்லது கோடிகளில் கிடைக்கும் கமிஷனுக்காக ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் அத்துமீறிய நடவடிக்கை சினிமா தொழிலுக்கு ஆரோக்கியமானது இல்லை என்பதுடன் மக்களின் மனங்கவர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், அரசியல் ரீதியான பாதிப்பை தேர்தல்களில் ஏற்படுத்தும்.” என்றார்
இராமானுஜம்
காளையை அடக்க துடிக்கும் இளசுகள்: தொடங்கியது ஜல்லிக்கட்டு முன்பதிவு!