ஆதிதிராவிட மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றதன் மூலம், அனைவருடைய மனங்களிலும் இடம்பிடித்துள்ளார் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு.
’நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்பார் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். பலரும் எத்தனையோ சாதனைகளைச் செய்யலாம்; ஆனால், அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே அப்துல் கலாமின் கனவு. அதைத்தான் தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாற்றிக் காட்டியிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவருடைய பல்வேறு சேவைகளால் அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார். குறிப்பாக, கடந்த டிசம்பர் 7ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மனுநீதி நாளின்போது, ஆட்சியர் கவிதா ராமுவே, மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து இருந்த இருக்கை அருகே சென்று அவர்களுடைய மனுக்களை பெற்றுக்கொண்டார்.
எல்லோரும் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு கொடுக்க, கவிதா ராமுவோ, அவர்கள் இருந்த இடம் நோக்கிச் சென்று மனுக்களைப் பெற்றது அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இப்படி, பல சேவைகளைச் செய்துவரும் ஆட்சியர் கவிதா ராமு, கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்த சாதனைதான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலான அளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் அருகில் உள்ள ஆதிக்க சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆதிதிராவிட மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை அவர்கள் விதித்துள்ளனர். அதில் ஒன்று, அவர்கள் கோயிலுக்குள் நுழையவும், பொது இடங்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி, மயக்கம் மற்றும் ஒவ்வாமையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்ததில் குடிநீரில் கலப்படம் இருப்பது தெரிய வந்தது. அதன்படி, அவ்வூர் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்ததில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவே நேரடியாக களத்தில் இறங்கினார்.
அந்த கிராமத்துக்கு ஆய்வுக்குச் சென்ற அவருக்கு உண்மை நிலை புரிந்தது. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு நேரும் இன்னல்களை அடுக்கடுக்காய் ஆட்சியர் கவிதா ராமுவிடம் தெரிவித்துள்ளனர். அதில் முக்கியமாய் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற விஷயத்தை அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவ்வூர் மக்களை, கையோடு அழைத்துச் சென்று கோயிலுக்குள் நுழைய முயன்றார்.
அவர் சென்றபோதும் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. ஆனால் அதையும் மீறி அம்மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்தார். அதுபோல், அவ்வூரில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதையும் விசாரித்து நடவடிக்கை எடுத்த ஆட்சியர் கவிதா ராமு, அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் குறித்து ஆட்சியர் கவிதா ராமு, ”புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். கோயில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்டரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த விஷயத்தில், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவும் கரம் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இவர்களுடைய செயலை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் பாராட்டியிருந்தது. அதுபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், திமுக எம்பி செந்தில்குமாரும் பாராட்டியிருந்தனர்.
திமுக எம்பி செந்தில்குமார், “இந்த நடைமுறைதான் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பட வேண்டும். இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதனை சாத்தியமாக்குவதில் வாக்கு வங்கி அரசியலில் சமரசம் செய்துகொள்ளாத அரசியல்வாதிகளை விட அதிகாரிகளுக்கு பல நன்மைகள் இருக்கின்றன” எனத் தெரிவித்த அவர், இதேபோன்று, மதுரையில் உதயசந்திரன் (தற்போது முதல்வரின் முதன்மைச் செயலாளர்) மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. டாக்டர் ரவிக்குமாரும் இந்தச் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”நமது நாட்டின் நிர்வாக அமைப்பில் ஒரு மாவட்ட ஆட்சியர் நினைத்தால் அந்த மாவட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக கவிதா ராமு, கடந்த ஆண்டு (2021) ஜூன் 17ஆம் தேதி பதவியேற்றபோது, அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதேநேரத்தில் அவருடைய சாதி அடையாளத்தை மையப்படுத்தியும் சமூக வலைத்தளங்களில் சில கருத்துக்களைப் பதிவிட்டிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த கவிதா ராமு, “சமூக நீதி கருத்துக்கள் என்னுள் ஆழப் பதிந்துள்ளது. பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்தச் சித்தாந்தங்களைக் கேட்டும், படித்தும் வளர்ந்தவள் நான். பெரியார் அறிவுறுத்திய சில கொள்கைகளை என் வாழ்க்கையில் செயல்படுத்துபவள். அதில் முக்கியமானது, சாதி எதிர்ப்பு. எனவே, எந்த ஓர் அடையாளத்திலிருந்தும் விடுபட்டு இருக்கும் என்னை, நீங்களும் அப்படியே பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன். அடையாளங்கள் சுமையாகிவிடுகின்றன.
சில அடையாளங்கள் மனித இனத்துக்கு எதிராக அமையும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, நடனம் ஒன்றை மட்டுமே என் தனித்த அடையாளமாகச் சொல்லிக்கொள்ள நினைக்கிறேன். சக மனுஷியாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கான பாதையில் என் சிறப்பான செயல்பாட்டைக் கொடுப்பேன்” என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் இன்னும் சில இடங்களில், ஏன் பள்ளிக்கூடங்களில்கூட தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் இழிசெயல் சில ஆசிரியர்களால் அரங்கேறி வருகிறது. அதற்கு எல்லாம் உதாரணமாய் இந்த செயல் மூலம் அனைவருடைய உள்ளங்களிலும் உயர்ந்து நிற்கிறார், ஆட்சியர் கவிதா ராமு.
ஜெ.பிரகாஷ்
குஷ்பு நீங்க எந்த ஷாம்பு யூஸ் பண்றீங்க? – நீதிபதி கேட்ட கேள்வி!
இன்று சாயந்தரமே கூட நான் மாற்றப்படலாம்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி
ஓம் சிவாய நம. சட்டம் போட்டா அன்பை சொல்லித் தர முடியும். காட்டுமிராண்டிகளின் மனம் மாறாவிட்டால் அந்த மக்களுக்கு விடிவு காலம்…..
“புதுவை” அல்ல புதுகை ஆட்சியர்
மாற்றிவிட்டேன். உங்கள் கருத்துக்கு நன்றி.
It’s not puduvai (puducherry).. should be puthugai..
இது புதுகை பா புதுவை இல்ல..