Publishers for Palestine - Statement of Solidarity

பாலஸ்தீனத்துக்காக ஓர் கையெழுத்திடுங்கள்- பப்ளிஷர்ஸ் ஃபார் பாலஸ்தீன் அமைப்பின் வேண்டுகோள்!

இந்தியா சிறப்புக் கட்டுரை

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் தாக்குதலுக்கு பதிலடி என்று  பாலஸ்தீனம் மீது தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல், இன்று (ஜனவரி 6)  வரைக்கும் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது. தினம் தினம் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களில் பல்வேறு பாலஸ்தீனிய ஊடகத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனம் இப்படி நேரடி போரை எதிர்கொண்டு வருகிறது என்றால்,  பாலஸ்தீனத்துக்கு ஆதரவான கருத்துக்களை பொதுவெளியில் வெளியிட்டு வரும் ஊடகத்தினர், பதிப்பாளர்களும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார்கள். மேலும் மேற்குலக ஊடகங்கள் இஸ்ரேல் ஆதரவுப் போக்கிலேயே செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த பின்னணியில்தான் பப்ளிஷர்ஸ் ஃபார் பாலஸ்தீன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, பாலஸ்தீனம்  பற்றிய உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்வதற்கான செயல் திட்டங்களில் இறங்கியுள்ளது. அதில் ஒன்றாக…  உலகளாவிய பதிப்பாளர்களை  பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேச வைக்க, எழுத வைக்க, பாலஸ்தீனத்தின் பாதிப்புகள் பற்றிய புத்தகங்களை வெளியிட வைப்பதற்காக கையெழுத்து இயக்கமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்து இயக்கத்தை நவம்பர் மாதம் தொடங்கிய , பப்ளிஷர்ஸ் ஃபார் பாலஸ்தீனம்’ அமைப்பு இதுகுறித்து விரிவான ஓர் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

Publishers for Palestine - Statement of Solidarity

அதன் தமிழாக்கம் இதோ… 

நீதி, கருத்துச் சுதந்திரம், எழுத்தின் வலிமை போன்றவற்றை அங்கீகரிக்கும் உலகமெங்கும் உள்ள பதிப்பாளர்களையும், தொகுப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் இந்த அறிக்கையில் கையெழுத்திடவும் பாலஸ்தீனத்துக்கான பதிப்பாளர்கள் என்ற இந்த உலகளாவிய கூட்டுமுயற்சியில் இணைந்துகொள்ளவும் அழைப்பு விடுக்கிறோம்.

பாலஸ்தீனர்களின் துணிவும், விடுதலைக்கான வேட்கையும், தமது நிலத்தின் மீதான பிடிப்பும், இஸ்ரேலின் இனவழிப்புக்கும் வன்முறைக்கு எதிரான அவர்களது போராட்டமும் மதிப்புக்குரியவை. மேற்குலகின் காட்சி ஊடகங்களும் கலையுலகும் இந்த வன்முறைக்கு பெரிதும் துணையாயிருந்தாலும், அதையும் மீறி தொடர்ந்து உலகம் முழுதும் தெருக்களிலும் சமூக ஊடகங்களிலும் ஒன்றிணைந்து எழுதியும், உரையாடியும், பாடியும், பொய் பரப்புரைகளுடன் போராடியும் கொண்டிருக்கும் மனிதர்களும், அவர்களின் குரல்களும் எமக்குப் பெரும் நம்பிக்கையூட்டுகின்றன.

கடந்த மாதத்தில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தொடர்ச்சியான, கூட்டுத் தண்டனையை ஒத்த தாக்குதல்களுக்கு நாங்கள் சான்றாயிருந்தோம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் அரசாங்கங்களின் ஆதரவுடனும் பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் வேறு எதிர்பார்த்திராத புது ஆயுதங்களுடனும் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

தமது வீடுகளை விட்டு தப்பியோடிய 1.1 மில்லியன் பாலஸ்தீனர்கள் ஏனைய புகலிடங்களான மருத்துவமனைகள், பாடசாலைகள், அகதி முகாம்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் கொடூரமாக அழிக்கப்படுவதையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இஸ்ரேல் தனது தரைவழித் தாக்குதலையும் தொடங்கியிருப்பதால் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள், அதிலும் 50%  குழந்தைகள், தமது அடிப்படை ஆதாரத் தேவைகளான புகலிடம், உணவு, நீர், எரிபொருள், மின்சாரம் போன்றவை கூட நிராகரிக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் காண்கிறோம்.

9000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இதுவரையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது தவிரவும் 1948இல் கட்டாய வெளியேற்றத்தின்போது காஸாவுக்கு இடம்பெயர்ந்த பல தலைமுறைகளைக் கொண்ட முழுக் குடும்பங்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். 3500க்கும் அதிகமான குழந்தைகளை இஸ்ரேல் கொல்வதையும் ஆழ்ந்த துயரத்துடன் பார்த்திருந்தோம். யூத அறிஞரான ராஸ் சேகல் கூறியதைப் போல, “காஸா மீதான இஸ்ரேலின் இனவழிப்பு மிகத் தெளிவான, வெளிப்படையான, எந்தக் குற்றவுணர்வுமற்ற வன்முறை.”

இஸ்ரேலும் மேற்குலகின் அதிகார மையங்களும் மாற்றுக் கருத்துக்களை ஒழிப்பதிலும் கருத்துப் பரிமாற்றத்தின் மீதான தமது கட்டுப்பாடுகளைப் பேணுவதிலும் மிகவும் மும்முரமாக இயங்கி வருகின்றனர். அக்டோபர் மாதம் 7ம் தேதியிலிருந்து பதிப்பு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளிப்படையாக உரையாடுபவர்களுக்கு எதிராக தொடர்ந்த கடுமையான எதிர்வினைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஸாவில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கிறோம். Mohamed Fayez Abu Matar, Saeed al-Taweel, Mohammed Sobh, Hisham Alnwajha, Mohammad Al-Salhi, Mohammad Jarghoun, Ahmed Shehab, Husam Mubarak, Mohammad Balousha, Issam Bhar, Salam Mema, Assaad Shamlakh, Ibrahim Mohammad Lafi, Khalil Abu Aathra, Sameeh Al-Nady, Abdulhadi Habib, Yousef Maher Dawas, and Roshdi Sarraj ஆகியோர் அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சிலர்.

நாங்கள் மொழிக்கும், எழுத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பண்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் இந்த வன்முறையை நியாயப்படுத்துவதற்கு இஸ்ரேலின் இராணுவத் தலைவர்கள் “மனித விலங்குகள்” போன்ற பதங்களை காஸாவின் சாதாரண குடிமக்களைக் குறிக்க பயன்படுத்துவதையும், அவ்வாறான குறிப்புகளுடன் தான் இந்த இனவழிப்பு தொடங்கிவைக்கப்பட்டதையும் அவதானித்தவாறு இருக்கிறோம்.

வரலாற்றின் குறித்ததொரு காலகட்டத்தில் இனவழிப்புக்குள்ளான ஒரு சமூகம் தாமே இன்னொரு சமூகத்தை நோக்கி இவ்வாறான அவமதிக்கும் மொழிப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது அதிர்ச்சிக்கும் வருத்தத்துக்கும் உரியது. இதே இனவழிப்பைத் தூண்டும் மொழிப்பிரயோகம் தான் 106 வருடங்களுக்கு முன்னர், 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி பிரித்தானிய காலனிய அரசினால் செயற்படுத்தப்பட்ட Balfour பிரகடனத்தின்போதும் பயன்படுத்தப்பட்டது.

“மக்களற்ற நிலம் நிலமற்ற மக்களுக்காக” என்ற யூத தேசியவாதத்திலும் கிறிஸ்தவ தொன்மவியலிலும் ஊறிய அந்தப் பிரகடனத்தை இப்போது நாம் நினைவு கூறுகிறோம். வெள்ளை இனவாதமும், காலனித்துவ, முதலாளித்துவ நிறுவனங்களும் தொடர்ந்துகொண்டிருக்கும் இத்தகைய அழிப்பு, அதிகாரம், வளச் சுரண்டல்களின் வரலாறுகள் இந்தக் கணத்திலும் எதிரொலிப்பதைக் காண்கிறோம்.

கலை, பண்பாட்டுத் தளங்களிலும் இவை எதிரொலித்தபடியிருக்கின்றன. பிராங்க்பேர்ட் புத்தக சந்தை/Litprom பாலஸ்தீன எழுத்தாளரான Adania Shibliக்கு வழங்கப்பட்ட விருதை அங்கீகரிக்க மறுத்தமை (இதற்கெதிரான கையெழுத்துப் போராட்டம் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் கையெழுத்தைப் பெற்றிருந்தது), நியூயார்க்கின் 92Y நிகழ்வில் எழுத்தாளர் Viet Thanh Nguyenஇன் வாசிப்பு நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டமை, University of Vermont இல் Mohammed el-Kurd இன் வாசிப்பு நிகழ்வு மறுக்கப்பட்டமை, Artforum இதழின் ஆசிரியரான David Velasco சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டமை போன்றவை சில உதாரணங்கள்.

மேற்கத்திய இலக்கிய, பதிப்பக நிறுவனங்கள் பாலஸ்தீனத்துக்காகக் குரல் எழுப்பும் எழுத்தாளர்களை தண்டிப்பதன் மூலமும் அவர்களது குரல்களை அடக்க முயற்சிப்பதன் மூலமும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசியல் பொருளாதார நலன்களோடு தமது நெருக்கமான பிணைப்பை வெளிப்படுத்துகின்றன.

தமது இயலாமையாலோ மௌனத்தினாலோ, அல்லது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின், ஏகாதிபத்திய நன்கொடையாளர்களின், அரசாங்கங்களின் கோரிக்கைகளுடன் ஒத்துழைப்பதனாலோ இவ்வாறான ஒடுக்குமுறையை முன்னெடுக்கும் அல்லது அதற்கு வழியமைக்கும் பொது மற்றும் தனியார் பதிப்பகங்களை நாம் கண்டிக்கிறோம். எழுத்தாளர்களை கண்காணிப்பதையும் தணிக்கை செய்வதையும், புத்தகக் கடைகளின் உரிமையாளர்களையும் பணியாளர்களையும் அச்சுறுத்துவதையும், பாலஸ்தீனர்களுடன் கூட்டிணையும் பதிப்பக பணியாளர்களை மிரட்டுவதையும் நாம் கண்டிக்கிறோம்.

எமக்கு பதிப்புத்துறை என்பது விடுதலைக்கான வழிமுறை, பண்பாட்டு மற்றும் எதிர்ப்பின் வெளிப்பாடு. ஆக்கபூர்வமான, நுண்ணாய்வுக்குரிய பாலஸ்தீனக் குரல்களுக்கும் மற்றும் ஏகாதிபத்தியத்தையும், யூத தேசியத்தையும், குடியேற்ற காலனித்துவத்தையும் எதிர்க்கும் அனைவருக்குமான வெளிகளை உருவாக்குவதில் பதிப்பாளர்களாக நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

பாலஸ்தீன விடுதலையைக் கோரும் படைப்புகளைப் பதிப்பிப்பதற்கு, தொகுப்பதற்கு, விநியோகிப்பதற்கு, பகிர்வதற்கு, உரையாடுவதற்கு, விவாதிப்பதற்கான எமது உரிமையை பாதுகாப்பதற்காக நாம் போராடுகிறோம். விடுதலையை நோக்கிய போராட்டத்தில் இதுதான் எமது பாத்திரம்.

பாலஸ்தீன படைப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் மௌனப்படுத்துவது பாலஸ்தீன இலக்கிய வழி போராட்டத்தின் மீதான பயத்தினையே வெளிப்படுத்துகிறது. அத்துடன் பாலஸ்தீனர்களின் மீதான இனவழிப்புக்கும் நிலச் சூறையாடலுக்கும் துணைபோகிறது. குண்டுகள், அழிவுகள், கடத்தல்கள், பாலஸ்தீன சிறைக்கைதிகளின் மீதான சித்திரவதைகள் போன்றவற்றுக்குப் பின் இருக்கும் அதே அச்சவுணர்வே பாலஸ்தீனத்தின் ஆவணங்களை இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது.

எழுத்தாளர் Ghassan Kanafani கூறியதைப் போல, “பாலஸ்தீனத்தின் இலக்கு பாலஸ்தீனர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து புரட்சியாளர்களுக்குமானது”.  நாம் அனைவரும் விடுதலை பெறும்வரையில் நாம் ஒருவருமே விடுதலையடையப் போவதில்லையென்பதை அவர் எமக்கு நினைவுறுத்துகிறார்.

பாலஸ்தீனர்களுடன் ஒன்றுபட்டு நின்று காலனித்துவத்துக்கெதிரான ஒரு புதிய போராட்ட வெளியில் நுழைவதற்கான காலம் இது. ஒஸ்லோ உடன்படிக்கைகளுக்கும் யூத தேசிய அரசுடனான பிணைப்புகளுக்கும் எதிரான, அவற்றைப் புறக்கணிக்கும் காலம். பிரெஞ்சு காலனியவாதிகளிலிருந்து அல்ஜீரியாவை விடுவித்த போராட்டத்தைப் போல குடியேற்ற காலனித்துவ அரசுகளுக்கெதிரான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை நினைவுகூர்வதற்கான காலம் இது.

இஸ்ரேல் மற்றும் அதனை ஆதரிக்கும் அமெரிக்க ஐரோப்பிய அதிகார மையங்களிடமிருந்து பாலஸ்தீனம் விடுதலை பெறுவதற்காக எமது பலத்த ஆதரவை வழங்குவதற்கான காலம் இது. எம் அனைவருக்கும் மத்தியில் கூட்டிணைவை ஏற்படுத்த வேண்டிய காலம். ஒடுக்குமுறை, அச்சுறுத்தல், வன்முறை போன்றவற்றை மறுப்பதற்கான காலம்.

பதிப்பகத் துறையில் ஈடுபட்டிருக்கும் எமது தோழர்கள், சக பணியாளர்கள் அனைவரையும் இந்த அறிக்கையில் கையெழுத்திடவும், பின்வரும் கோரிக்கைகளை ஆதரிக்கவும் அழைப்பு விடுக்கிறோம்:

காஸாவிலும், West Bankஇலும், வரலாற்று ரீதியாக பாலஸ்தீனத்துக்குரித்தான நிலங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் பாலஸ்தீன மக்களுக்கெதிரான இனவழிப்பையும் அனைத்துவிதமான வன்முறையையும் நிறுத்துதல்.

இஸ்ரேலையும் அதன் ஆதரவாளர்களையும் அவர்கள் நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்கக் கோருதல். விடுதலை, எதிர்ப்பு மற்றும் மீள்திரும்புதலுக்கான பாலஸ்தீன மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தல்.

இஸ்ரேலின் இனவெறிக்கெதிரான பகிஷ்கரிப்புகள், புறக்கணிப்புகளை  பின்பற்றுதல். உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் சர்வதேச புத்தக சந்தைகள், இலக்கிய விழாக்களில் பாலஸ்தீனக் குரல்கள் மௌனிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளல்.

இவ்வாறான நிகழ்வுகளில் பாலஸ்தீனர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, அவர்களது கதைகளை, அனுபவங்களை பகிர்வதற்கான வாய்ப்புகளை வழங்கல்.

பதிப்பகத் துறையை கற்றலுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்குமான வெளியாக மாற்றும் பொறுப்பினை ஏற்றல். பாலஸ்தீனக் குரல்களுக்கும் யுத்த இயந்திரத்துக்கெதிரானவர்களுக்குமான வெளிகளை உருவாக்குவதில் பதிப்பாளர்களாக அர்ப்பணிப்புடன் செயற்படல்.

(இந்த அறிக்கையில் உங்கள் பெயரையும் இணைத்துக் கொள்ள விரும்பினால் இந்த பத்திரத்தை நிரப்பவும்).

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYDaGIF_hwidUmFIEB7_w4l5IThkevv2rRWIMdXI8w4KK8Sw/viewform?pli=1

கையெழுத்திட்டவர்கள்:

ArabLit Quarterly and ArabLit Books, Morocco
ARP Books, Canada
Arsenal Pulp Press, Canada
Between the Lines, Canada
Beyond the Pale Books, Ireland
Charles H. Kerr Publishing, US
Common Notions Press, US
Daraja Press, Canada
Fernwood Publishing, Canada
Hajar Press, UK
Haymarket Books, US & UK
Interlink Publishing, US
Interventions, Australia
Invisible Publishing, Canada
Left Book Club, UK
LeftWord Books, India
Lux Éditeur, Québec & France
Manifest Llibres, Catalunya, Spain
Marjin Kiri, Indonesia
Pasado y Presente, Catalunya, Spain
Pluto Press, UK & US
Pluto Journals, Ltd., UK
PM Press, US & UK
Radical Books Collective, US
Roam Agency, US
Saqi Books, UK
Setu Prakashani, India
Stree Samya, India
Tilted Axis, UK
trace press, Canada
Upping the Anti, Canada
Verso Books, US and UK
Verso Libros, Catalunya, Spain
Women Unlimited, India

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான பதிப்பாளர்களின் அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஏர்.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

அம்பாதி ராயுடுவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

திமுக இளைஞரணி மாநாடு தேதி அறிவிப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு: டோக்கன் விநியோகம் எப்போது?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *