இந்தியாவில் தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி என கொள்கைகளால் இரு துருவங்களில் இருப்பவர்களின் பிறந்தநாளும் ஒரே நாளில் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நமீபியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட 8 சீட்டாக்களை பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இன்று விடுவித்தார்.
இதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்திய மண்ணில் சீட்டா வகை சிறுத்தைப்புலிகளின் கால்தடம் பதிந்துள்ளது.
அதேவேளையில் ’தீண்டாமை ஒழிய வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டும்’ என்று சமத்துவத்திற்காக தன் இறுதி மூச்சுவரை போராடிய தந்தை பெரியாரும் ’சீட்டா’ ஒன்றை பாசமுடன் வளர்த்துள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
செல்லப்பிராணிகளின் மீதான பாசம்!
பெரியாரும், மணியம்மை அம்மையாரும் குழந்தைகளிடம் எப்போதும் பாசமுடன் இருப்பார்கள். வெளியூர்களில் சுற்றுப் பயணம் முடித்து நடுஇரவில் வீட்டுக்கு வந்தாலும் குழந்தைகளின் நலம் விசாரித்துவிட்டு அதன்பின்பு தான் உறங்கச் செல்வார்கள். அதேபோல தான் இருவரும் செல்லப்பிராணிகளிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

பெரியாரின் செல்லம் சீட்டா!
பெரியார் தான் ஆசையோடு வளர்த்த அல்சேஷசன் நாய்க்கு ‘சீட்டா’ என்று பெயர் வைத்து அதனை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தார்.
மணியம்மையும் அதற்கு சமமாக பாசம் காட்டினாலும், பெரியாரிடம் தான் எப்போதும் சீட்டா அதிக பாசத்துடன் இருக்கும். எனவே அவரை விட்டு எந்த நேரத்திலும் பிரியாது.
செல்லபிராணிகள் மீது அன்பு கொண்ட பெரியார், பல நாய்களை வளர்த்தாலும் சீட்டாவின் மீது பெரியாருக்கு பாசம் அதிகம் அதிகம் தான்.
பெரியாரின் காவலன் சீட்டா!
பெரியார் வெளியூர் கூட்டங்களுக்கு செல்லும்போது, சீட்டாவும் அவருடன் வண்டியில் ஏறிவிடும். பெரியாரும் அதனை தடுப்பதில்லை. மேடைகளில் இன்று தலைவர்கள் பேசும்போது, பாதுகாப்பிற்காக போலீசார் நிற்பதுண்டு.
அதே போல அன்றைய காலத்தில் பெரியார் மேடையில் இருந்தால், சீட்டா கீழே ஒரு பாதுகாப்பு வீரனைப் போல் கம்பீரமாக நிற்கும். அவர் பேசும் போது அமைதியாக இருக்கும் சீட்டா, பெரியாருக்கு எதிராக யாராவது கலகம் செய்ய முயன்றால் குரைக்க தொடங்கி விடும்.
அவர்கள் மேலும் முயன்றால் பாய்ந்து போய் அவரை கவ்வி விடும். பின்னர் பெரியார் சீட்டா என்று அழைத்தால் மட்டுமே அவர்களை விட்டு விலகும். இதனால் பெரியாரை பிடிக்காதவர்கள் சீட்டா இருந்தால் அவரை நெருங்க பயப்படுவார்கள்.

நாய்கள் மீதான பெரியாரின் அன்பு!
பொதுவாகவே செல்லபிராணிகள் மீது மிகுந்த அன்பு காட்டும் பெரியார், நாய்களின் நன்றியுணர்வுக்காக அவற்றின் மீது மிகவும் அன்பு செய்தார்.
”மனிதர்கள் நன்றியறிதலைப் பொருட்படுத்தமாட்டார்கள். அதேவேளையில் நாய் மட்டுமே நன்றியறிதல் உடைய ஜீவனாகும்.” என்று நாய்கள் குறித்து அடிக்கடி பெரியார் குறிப்பிடுவாராம்.
அதிலும் தன் மீது பாசத்துடன் இருக்கும் சீட்டாவை, ’எப்போதும் புத்தி கூர்மையுள்ள நாய்’ என்று தான் பெரியார் அடிக்கடி கூறுவார்.
நாய்களுக்கு ஏதாவது நோய் என்றால் உடனே மருத்துவரிடம் காண்பித்து தக்க சிகிச்சை கொடுக்க பெரியாரும், மணியம்மை அம்மையாரும் தயங்கியதே இல்லை.

சீட்டாவால் மீளாத்துயரில் பெரியார்!
ஒருநாள் அவரின் பாசத்திற்குரிய சீட்டா நோய்கண்டு துடித்துள்ளது. பெரியாரும் மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை கொடுத்துள்ளார். எனினும் அது பலனளிக்காமல் சீட்டா இறந்துவிட்டது.
எதற்கும் கலங்காதவரான பெரியார் அது புதைக்கப்படும் வரை கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும் சீட்டா இறந்த துக்கத்தில் சில நாட்கள் வெளியே வராமல், சோகமாகவும் இருந்துள்ளார்.
சீட்டா குறித்து தனது விடுதலை பத்திரிகையில், ”நன்றியறிதலுக்கும், புத்திகூர்மைக்கும் இலக்கணமாய் இருந்த சீட்டாவின் வயது நான்கு” என்று பெரியார் எழுதியுள்ளார்.
மேலும் இந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்காக தான் பர்மா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வந்த அழைப்பை ஏற்று வெளிநாட்டிற்குப் பயணம் செய்தார்கள் என்று ’தந்தை பெரியார்’ என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதிய கவிஞர் கருணானந்தம் குறிப்பிட்டுள்ளார்.

தன் கண் முன்னே அநீதி நடக்கிறது என்றால் சிங்கமென கர்ஜிப்பதற்கு எப்போதும் தயங்காதவர் தந்தை பெரியார்.
அதேவேளையில் செல்லப்பிராணிகளின் மீதும், குறிப்பாக சீட்டாவின் மீது வைத்திருந்த பாசம் அளப்பரியது. அன்பால் நிறைந்தது.
கிறிஸ்டோபர் ஜெமா
இலங்கை குண்டுவெடிப்பு: சிறிசேனாவுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு!
ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேர் இடமாற்றம்!