பழ. அதியமான்
“பெரியார் படைப்புகளை நாட்டுடைமையாக்கச் சொல்லுங்கள். அப்பொழுது நான் குறிப்பிட்டது எதில் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறேன்” என்று அரசியலர் ஒருவர் பதிலளித்தார்.
இதைச் சொன்னவருக்குப் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கம் பற்றி இக்குறிப்பு பேசப்போவதில்லை. ஏனென்றால் அந்த நோக்கம் தமிழ்நாட்டு அரசியலைச் சமூக ஊடகங்கள் வழியாகத் தினந்தோறும் கவனித்து வரும் அனைவரும் அறிந்த ஒன்று.
“ஒரு ஏமாற்றும் சம்பவத்தில் சிறு உண்மையும் கலந்திருக்க வேண்டும்” என்ற’ சதுரங்க வேட்டை’ படம் சொன்ன தர்க்கப்படி ஒரு உண்மைத் தகவலும் அச்சொற்றொடரில் உண்டு. எனினும் அச்சொற்றொடர் முழுதும் உண்மை என்று நினைக்கும் இளைஞர் சிலருக்காக இந்தக் குறிப்பு எழுதப்படுகிறது.
பெரியார் படைப்புகள் எவை? நாட்டுடைமை என்றால் என்ன? நாட்டுடைமை ஆனால் தான் ஒருவரது படைப்புகளை ஒரு வாசகர் வாசித்து அறிய முடியுமா? போன்ற தொடக்க நிலை கேள்விகளுக்கான பதிலாக இந்தக் கட்டுரை அமையும் .
பெரியார் படைப்புகள் யாவை?
இது போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்று.
பெரியார்(1879- 1973) வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய, பேசிய பேச்சுக்களின் தொகுப்புகளைப் பெரியாரின் படைப்புகள் எனலாம். குடிஅரசு (1925), ரிவோல்ட்(1928), புரட்சி(1933 ), விடுதலை(1935), பகுத்தறிவு (1934), உண்மை(1970), மாடர்ன் ரேஷனலிஸ்ட்(1970) போன்ற அவர் நடத்திய பத்திரிகைகளில் தமிழிலும் ஆங்கிலத்தில் வெளிவந்த அவரது எழுத்துக்களை பெரியாரின் படைப்புகள் என்று நாம் சொல்லலாம். இவை முதன்மையானவை.
இரண்டாவது நிலையில் அவர் தொடங்கி நடத்திய குடிஅரசு பதிப்பகம், பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் போன்ற பதிப்பகங்களின் வழியாக வந்த அவரது பெயரிலான நூல்கள். இப்படைப்புகள் பலரது முயற்சியால் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்கு படிக்கக் கிடைக்கின்றன.
தோழர் ஆனைமுத்து தொகுத்தவை!

முதலாமவர் தோழர் வே .ஆனைமுத்து: பெரியார் எழுத்துக்களாக பத்திரிகைகளில் வெளிவந்தவற்றையெல்லாம் தொகுத்து வே.ஆனைமுத்து 3 தொகுதிகளாக வெளியிட்டார். திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் 1974 அவை வெளிவந்தன. பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் என்பது அந்த நூலின் பெயர். அதன் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 மார்ச்சில் அவராலேயே வெளியிடப்பட்டது. சமுதாயம், இயக்கங்கள், அரசியல், மதமும் கடவுளும், தத்துவம், கிளர்ச்சிகளும் செய்திகளும், Speeches and writings எனப் பொருள் அடிப்படையில் ஏழு தொகுதிகளாக அவை அமைந்தன. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் என்ற பெயரில் இரு வரிசைகளில் அமைந்த இந்தத் தொகுப்புகளின் மொத்த எண்ணிக்கை 20. இவை தவிர அவரது வேறு நூல்கள் தனி.
ஆசிரியர் கி.வீரமணி தொகுத்தவை!

அடுத்தவர் ஆசிரியர் கி. வீரமணி: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் (பெரியார் திடல்) மூலம் பெரியார் களஞ்சியம் 1976 முதல் வெளிவரத் தொடங்கியது. கடவுள், மதம், பெண்ணுரிமை, சாதி, தீண்டாமை ஆகிய தலைப்புகளில் இதுவரை 32 நூல்களாக 10,000 பக்கங்களை அவை தாண்டி விட்டன. இவை தவிர குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களில் பெரியார் எழுதிய கட்டுரைகளை ஆண்டு வாரியாக காலவரிசையில் 2009இல் வெளியிடத் தொடங்கி, 42 தொகுதிகள் வெளியிடப்பட்டு விட்டன. குடி அரசுக் களஞ்சியம் என்ற பெயர் தாங்கியவை அவை.
கொளத்தூர் மணி(தி.வி.க.) தொகுத்தவை:

கொளத்தூர் மணியின் அமைப்பின் மூலமாக குடிஅரசு இதழ்க் கட்டுரைகள் 27 தொகுதிகளாக 2010 ஜூன் 10, 11 தேதிகளில் சேலத்திலும் சென்னையிலும் வெளியிடப்பட்டன. இவை கணினி வழியாகப் படிக்க இயல்வன. பெரியாரின் ஆங்கில இதழான ரிவோல்ட் இதழும் தொகுப்பாக வெளிவந்து விட்டது.
கோவை கு.இராமகிருஷ்ணன்(த.பெ.தி.க.):

குடி அரசில் வெளிவந்த கட்டுரைகளை மட்டுமல்லாமல் அதில் வெளிவந்த விளம்பரம் உட்பட அனைத்தையும் கொண்ட குடிஅரசு தொகுதிகளை வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளார் தபெதிகவின் பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன். குடி அரசின் நூற்றாண்டையொட்டித் திட்டமிடப்பட்ட இது 2025 க்குள் வந்துவிடலாம்.
இவ்வளவு பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் பொதுவெளியில் எவரும் வாசிக்கத் தக்க வகையில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
நாட்டுடைமைக்கு முன் காப்புரிமை அறிவோம்!
நாட்டுடைமை என்றால் என்ன என்று பேசுவதற்கு முன் காப்புரிமை (copyright) என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு எழுத்தாளருக்குத் தன் படைப்பின் மீது பொருளாதாரம் சார்ந்து, அறம் சார்ந்து இரண்டு வித உரிமைகள் இருக்கின்றன. படைப்பைப் பதிப்பித்தல், மக்களிடம் பரப்புதல், வேறு வடிவத்திற்கு மாற்றுதல், மொழி பெயர்த்தல் போன்றவற்றின் மூலம் வருமானம் பெறுதல் ஆகியன பொருளாதார உரிமைகள். ஆசிரியர் நிலையை நிறுவிக் கொள்ளுதல், முழுமையைப் பாதுகாத்தல் ஆகியன அற உரிமையில் பிரதானமானவை. நூலின் ஆசிரியர் தம் பெயரை நூலில் குறித்துக் கொள்ளுதல் இந்த வகை அற உரிமை சார்ந்ததே.
ஒரு எழுத்தாளனின் படைப்பின் மீதான பதிப்புரிமையைப் பாதுகாக்கும் சட்டம் எல்லா நாடுகளிலும் அமலில் இருப்பது போல இந்தியாவிலும் நடைமுறையில் இருக்கிறது. இந்த எண்ணம் நவீன கால கண்டுபிடிப்பு அல்ல. 15 ஆம் நூற்றாண்டில் முடிவிலேயே பதிப்புரிமை பாதுகாப்பு பற்றிய கருத்து உருவாகிவிட்டது. 1710 இல் பதிப்புரிமை பற்றிய விதி முதலில் இங்கிலாந்தில் உருவானது. ராணி அன்னாள் சட்டம் என அதை அழைத்தனர் .
தங்கள் புத்தகத்தை மறு அச்சுசெய்து கொள்ள அதன் ஆசிரியருக்கு அச்சட்டம் உரிமை தந்தது. புத்தகங்கள் தொடர்பாக முதலில் தோன்றிய பதிப்புரிமை பின்னர் ஓவியங்கள், வரைபடங்கள் முதலியவற்றுக்கும் ஆகியது. 1911 இல் காப்புரிமைச் சட்டம் விரிவாக இங்கிலாந்தில் நடைமுறைக்கு வந்தது. இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்ததால் இந்தியாவிலும் அது இயல்பாக செயல்பாட்டுக்கு வந்தது.

விடுதலைக்குப் பிறகு புதிய சட்டம்
நாட்டின் விடுதலைக்குப் பிறகு காப்புரிமை தொடர்பான புதிய சட்டம் 1957 இல் இயற்றப்பட்டது. கால மாற்றத்தை அனுசரித்து இதுவரை ஐந்து முறை 1983, 84,92, 94, 99 ஆம் ஆண்டுகளில் அது திருத்தப்பட்டுள்ளது. இப்பொழுது நடைமுறையில் இருப்பது கடைசியாகத் திருத்தப்பட்ட சட்டமாகும். ஒரு எழுத்தாளனின் படைப்புக்கான காப்புரிமை என்பது அந்த எழுத்தாளர் வாழ்காலமும் அவர் மறைந்தபிறகு 60 ஆண்டுகளும் ஆகும். அதற்குப் பிறகு காப்புரிமை தானாக பொதுவெளிக்கு வந்து விடுகிறது.
நாட்டுடைமை என்றால் என்ன?
ஒரு எழுத்தாளனின் காப்புரிமையை அரசே அதற்குரிய பணத்தைக் கொடுத்து அந்த எழுத்தாளனிடமிருந்து வாங்கி விடுவது நாட்டுடைமை என்பதாகும். அதாவது அரசுடைமை ஆக்குவது, பின் அதை மக்களுக்கான உரிமையாக்கி நாட்டுடைமை ஆக்குவது. உலகத்தில் எந்த நாட்டிலும் இத்தகைய முறை இல்லை. தமிழ்நாட்டில் தான் உள்ளது.
இந்த நாட்டுடைமையாக்கும் முறை தமிழ்நாட்டில் முதன்முதலாக பாரதியாரின் படைப்புகளுக்குச் செய்யப்பட்டது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சியில் பாரதியின் படைப்புகள் முதலில் அரசுடைமை ஆகியது. சூழலின் நெருக்கத்தால் பாரதியின் பாடல்கள் அரசுடைமையானது.

இந்த நாட்டுடைமை ஆவதற்கான எதிர்ப்பும் சமூகத்தில் உள்ளது. அறிஞர்கள் பலர் இதன் நடைமுறை விளைவுகளைச் சுட்டி இதைத் தவிர்க்க வலியுறுத்துகின்றனர். தொடர்புடைய படைப்பாளிகளின் சட்ட வாரிசுகளும் பலர் இவ்வுரிமையைத் தர மறுத்துள்ளனர்.
சாண்டில்யன், மு.வரதராசன், கண்ணதாசன், சுந்தர ராமசாமி போன்றோரின் சட்ட வாரிசுகள் இந்த நாட்டுடைமையை ஏற்க மறுத்துள்ளனர். பெரியாரின் சட்டபூர்வ வாரிசுகளும் நடைமுறையில் நேர வாய்ப்பு இருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டி மறுக்கின்றனர். ஆசிரிய நிலையை நிறுவிக் கொள்ளுதல், முழுமையைப் பாதுகாத்தல் ஆகியன அறவுரிமையில் பிரதானமானவை. அதை முன்னிலைப்படுத்தி பெரியாரின் சட்ட வாரிசுகள் நாட்டுடைமை ஆக்கத்திற்கு ஆதரவான நிலையை எடுக்காமல் இருக்கின்றனர். அது சட்டப்படி சரியானது.
நாட்டுடைமையானால்தான் ஒரு படைப்பை வாசிக்க முடியுமா?
நாட்டுடைமையானால்தான் ஒரு படைப்பை வாசிக்க முடியுமா? ~என்பது அடுத்த கேள்வி. ஒரு எழுத்தாளனின் படைப்புகளைப் பதிப்பிக்கத்தான் தொடர்புடைய எழுத்தாளர் அல்லது வாரிசுகளின் அனுமதி வேண்டுமே தவிர படைப்புகளை வாசிக்கவோ குறிப்பிட்ட பகுதியை எடுத்துக் காட்டவோ அல்ல. கல்வி, விமர்சனம் போன்ற காரணங்களுக்காக பயன்படுத்தலாம். எழுத்தாளனுக்குப் பொருளாதார இழப்பு, நேராத வகையில், படைப்பைப் பயன் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதற்கு முன் இசைவு கூட அவசியம் இல்லை.
சட்டம் தொடர்பான பணிகளுக்காக, படைப்பின் சில பக்கங்களை ஏன் சில பகுதிகளைக் கூடப் பயன்படுத்துவது காப்புரிமை மீறல் ஆகாது. இதை ஃபேர் யூஸ் (fair use) என்று சட்டம் குறிப்பிடுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக முழு நூலுமே கூட சில சமயம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நிலைமை இவ்வாறிருக்க சான்றாதாரம் தொடர்பான விளக்கங்களுக்காக படைப்புகளை நாட்டுடைமையாக்க கோருவது, சான்றாதாரம் பற்றிய அறியாமையாக இருக்கலாம். அல்லது பிரச்சனையை வேறு திசைக்குத் திருப்பும் நோக்கமாக இருக்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் முடிந்து போன ஒரு பிரச்சனையை கிளறுவதாகவோ இன்னும் ஏழு எட்டு ஆண்டுகளில் தானாகவே முடியப் போகும் ஒரு பிரச்சனையை வேறு நோக்கங்களுக்காக நினைவூட்டுவதாகவோ இந்த அரசியலரின் பேச்சு அமைகிறது.
‘நிலவைச் சுட்டிக்காட்டும் போது (வேண்டுமென்றே) விரலைப் பார்ப்பார்கள் ‘ என்ற சீனப் பழமொழியை இது நினைவூட்டுகிறது.
காப்புரிமை தொடர்பாக மேலும் அறிய விரும்புபவர்கள், “புதிய புத்தகம் பேசுது ” ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குனர் சுந்தர் கணேசனைச் சிறப்பாசிரியராகக் கொண்டுசிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது (2010) அதைப் பார்க்கலாம் அல்லது கிடைத்தவரை லாபம்(2016) என்கிற காலச்சுவடு வெளியிட்ட எனது நூலையும் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு:

பழ. அதியமான் தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர். தமிழ்ச் சிந்தனை- வரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர். ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’, ‘வைக்கம் போராட்டம்’ உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதியவர். சின்ன குத்தூசி நினைவு அறக்கட்டளை விருது பெற்றவர்.
~