மக்கள் நலனா? டாஸ்மாக் வருவாயா?

Published On:

| By Kavi

மது என்பது அதை குடிப்பவரை மட்டுமல்ல, அவரை சார்ந்திருப்பவர்களையும் கடுமையாக பாதிக்கும்.

நீங்கா வடு!

அதற்கு உதாரணம் தான், வேலூர் மாவட்டம், குடியாத்தம், சின்னராஜகுப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டது.

இந்த சிறுமி,   “எனது அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும். எனது குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்படியென்றால் தந்தையின் குடிபழக்கத்தால் அந்த சிறுமி எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்பார்.

என் ஆசை அப்பா குடிப்பதை நிறுத்தவும்... 16 வயது சிறுமி தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்

கடந்த மாதம் தான் இந்த சம்பவம் நடந்தது. அப்போது மது பழக்கத்தை கட்டுப்படுத்த அந்த சிறுமியின் புகைப்படத்தை மதுபாட்டில்களில் ஒட்ட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்தார்.

இந்த துயர சம்பவமே இன்னும் நீங்கா வடுவாக இருக்கும் நிலையில் புதிய மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சரான முத்துசாமி வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களிடையேயும், பெண்களிடையேயும், அரசியல் கட்சியினரிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக, ‘அளவா குடிச்சா, உடம்புக்கு ஒன்னும் ஆகாது’ என்று வசனம் பேசப்படும். ஆனால் மொடா குடிக்காரர்களை காட்டிலும், அளவாக குடிக்க ஆரம்பித்து அதன் பிறகு அந்த மதுவுக்கு அடிமையாகி உயிரிழந்தவர்கள், அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.

People welfare TASMAC revenue

இதற்கென தமிழ்நாடு அரசு ஆய்வு நடத்தி, தரவுகளை வைத்திருக்கிறதா என்பது கேள்விகுறியே.

எது எதற்கு ஆய்வு?

ஆனால் புதிதாக அமைச்சர் முத்துசாமி மதுவிலக்குத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

முதலில் அமைச்சர் முத்துசாமி தனது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து டாஸ்மாக்கில் இருக்கும் பிரச்சினை என்ன? அதனை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுப்பது? என ஆலோசனை செய்தார். அப்போது டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள், ‘இந்த பத்து ரூபாய் வாங்குவதெல்லாம் ஏற்கனவே இருந்த ஆட்சியிலும் நடந்திருக்கிறது.

கடைக்கு மின் கட்டணம், பாட்டிலின் சேதார செலவு, கடை வாடகை உள்ளிட்ட எதையும் டாஸ்மாக் நிர்வாகம் வழங்குவதில்லை. இந்த செலவுகளை சமாளிக்க கூடுதலாக 10 ரூபாய் வாங்குகிறோம். டாஸ்மாக் நிர்வாகம் கொடுத்துவிட்டால், கூடுதலாக காசு வாங்க வேண்டிய தேவை இருக்காது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் சலுகைகளை கொடுங்கள்” என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் முத்துசாமி, “கேரளாவில் மதுபானக் கடைகள் எப்படி செயல்படுகிறது என்று ஆராய ஒரு குழுவை அனுப்பியிருக்கிறோம். அவர்கள் சொல்வதையும் கேட்டுக்கொள்வோம். நீங்கள் சொல்லும் கருத்தையும் முதல்வரிடம் சொல்லி ஒரு முடிவெடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில்தான்  ஜூலை 10 ஆம் தேதி  அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன் பிறகு அமைச்சர் கூறிய இரண்டு விஷயங்கள்தான் விவாத பொருளாகியிருக்கிறது.

People welfare TASMAC revenue

ஒன்று டெட்ரா பேக்கில் மது. டெட்ரா பேக் என்பது சிறிய வடிவிலான அட்டை பெட்டி. இதுபோன்ற பேக்குகளில் தற்போது சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் ப்ரூட்டி போன்ற பழச்சாறுகள் விற்பதை பார்த்திருப்போம். அதுபோன்றுதான் டெட்ரா பேக்கை டாஸ்மாக்கிலும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். “180 மி.லி கொண்ட ஒரு குவார்ட்டர் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஒருவரால் குடிக்க முடியாது என்பதால் பார்ட்னருக்காக 40 சதவிகித குடிமகன்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால் கட்டிங் முறையில், அதாவது டெட்ரா பேக்கில் 90 மி.லி அளவாக குறைத்து விற்பனை செய்யப்படும். இதனால் ஒருவர் இன்னொருவருக்காக காத்திருக்க வேண்டியதில்லை” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

கட்டிங்கிற்கு பிரச்சினை இல்லை!

அமைச்சரின் இந்த அறிவிப்பு குடிமகன்களுக்கு வேண்டுமானால் நல்ல அறிவிப்பாக இருக்கலாம். அவர் சொல்வது போல் குடிமகன்கள் பார்ட்னருக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. கட்டிங்கை சரியாக பிரித்து கொள்ள வேண்டும் என்ற முட்டல் மோதல் இருக்காது.

People welfare TASMAC revenue

ஆனால் அதேசமயம் இதுவரை 130 ரூபாயோ, 140 ரூபாயோ கொடுத்து வாங்கமுடியாமல் இருந்தவர்கள், இனி அதில் பாதி 65 அல்லது 70 ரூபாய் தானே என்று வாங்கிக் குடிக்க முடியும். குவாட்டராக இருந்த போது வாரம் ஒருமுறை, இருமுறை குடித்தவர்கள் தற்போது தினசரி குடிக்க இயலும். தங்களுக்கு கொடுக்கும் பாக்கெட்மணியை வைத்து கல்லூரி பள்ளி மாணவர்களும் டெட்ரா பேக்கில் தினசரி மதுவை வாங்க முடியும்.

இது அரசுக்கு வருவாயை தருமே தவிர எந்த வகையிலும் மக்களுக்கு நன்மை பயக்காது.  தமிழ்நாடு முழுவதும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த சட்ட விரோத  பார்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக அரசுக்கு கொஞ்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.

அமைச்சரின் மற்றொரு அறிவிப்பு மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது டாஸ்மாக் கடை திறப்பு நேரம்.

இதுவரை டாஸ்மாக் கடைகளின் நேரம் பலமுறை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது  பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

“இதனால் காலையில் 7 மணி முதல் 9 மணி வரை கட்டிட வேலை உள்ளிட்ட கடுமையான வேலைக்கு செல்பவர்கள் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். எனவே இதற்கு என்ன வழி” என்று ஆலோசித்ததாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

“இதுபோன்று வேலைக்கு செல்பவர்கள் இரவே வாங்கி வைத்து கொண்டால் பரவாயில்லையே என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், மதுவை வாங்கி வைத்து விட்டு இரவு முழுவதும் பார்த்து கொண்டிருக்க முடியாது. அதுமட்டுமின்றி வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றார்கள். இது பொறுப்பான பதிலாக தெரிந்ததால் இதனை தடுப்பதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று ஆலோசித்து கொண்டிருக்கிறோம். இதனை தீவிரமாக பரிசீலித்து தான் இதற்கான முடிவை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.

வியப்போ வியப்பு!

ஒருவேளை அமைச்சர் சொல்வதுபோல் காலையிலேயே மதுக்கடைகளை திறந்தால், காலையிலேயே குடித்துவிட்டு எப்படி வேலைக்கு செல்வார்கள் என்ற கேள்வி இந்த ஆய்வு செய்தவர்கள் யாருக்கும் எழவில்லை போல. வேலைக்கு போகாமல் காலையிலேயே அரசே குடிக்கச் சொல்கிறதா என்ற கேள்வியும் இங்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

ஒருவேளை குடித்துவிட்டு பணிக்கு சென்ற பின் ஒரு கட்டிட தொழிலாளி ஏதோ விபத்து ஏற்பட்டு இறக்கும் போது பணி நேரத்தில் உயிரிழந்தார் என்று அரசு இழப்பீடு கொடுக்குமா? பணியாளர் இழப்பீட்டு சட்டப்பிரிவு 3(1) பணி நேரத்தில் மதுபோதையில் இருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தாலோ அல்லது ஊனம் அடைந்தாலோ இழப்பீடு இல்லை என்று கூறுகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் மதுபிரியர்களின் பதிலை பொறுப்பான பதில் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். பொதுவாக கட்டிட வேலை, சுமை தூக்கும் வேலை ஆகியவற்றுக்கு தின கூலிக்கு செல்லக்கூடியவர்கள் உடல்வலி தெரியாமல் இருக்க வேலை முடித்து வந்தாலோ அல்லது இரவு நேரத்திலோ மது வாங்கி அருந்துவார்கள். ஆனால் மதுவை வாங்கி வைத்துக்கொண்டு இரவு முழுவதும் குடிக்காமல் வேடிக்கை பார்ப்பதா என்று கேட்கிறார்கள் என அமைச்சர் சொல்வது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

People welfare TASMAC revenue

வருவாய்… வருவாய்… வருவாய்…

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற  சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அப்போதைய மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் டாஸ்மாக் வருவாய் 2022-23ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.44,098 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது 2003-2004ஆம் ஆண்டில் 3,639 கோடியாக இருந்தது. அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளில் டாஸ்மாக் வருவாய் 40 ஆயிரம் கோடி அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் 12ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்திருக்குறது. திமுக ஆட்சிக்கு வந்த காலகட்டமான 2021-22ஆம் ஆண்டில் 33,811 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் 2022-23ஆம் நிதியாண்டில் 10,287 கோடி ரூபாய் அதிகரித்து 44,098 கோடி ரூபாயாக உள்ளது.

இதுபோன்ற சூழலில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாலும், 3,000 பார்கள் மூடப்பட்டதாலும் அரசுக்கு ஏற்படும் இழப்பை நிகர் செய்து, மேலும் வருமானம் ஈட்டவே இதுபோன்ற அறிவிப்புகள் என அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

“ஒருவேளை அமைச்சர் சொன்ன இந்த இரு அறிவிப்புகளும் அமலுக்கு வந்தால் கடுமையான போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். அமைச்சர் முத்துசாமி மதுவிலக்குத் துறை அமைச்சரா அல்லது மதுவிற்பனை துறை அமைச்சரா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, “Sec 3(1) EC Act படி மது அருந்திய தொழிலாளி பணிநேரத்தில் விபத்தால் ஊனமடைந்தால் இழப்பீடுகோர இயலாதே?. அமுதா ஐஏஎஸ் இதை அறிந்தே தலையாட்டலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன், “மதுவை 90மி.லி பாக்கெட்களில் விற்றாலோ மற்றும் வேலைக்கு மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் மதுபானக் கடைகளைத் திறந்தாலோ அமமுக சார்பில் பொதுமக்களைத் திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இப்படி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கும் இந்த இரு அறிவிப்புகளையும் திரும்ப பெற்று, “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என்ற வாசகத்தை வாசகத்தோடு விட்டுவிடாமல் உரிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

பிரியா

மாவீரன் படத்தில் விஜய்சேதுபதி குரல்!

மன்னிப்பு கேட்டால் மீண்டும் சேரலாம்! எடப்பாடியின் ’கெத்து’ அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share