பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.634 கோடி வசூல் செய்து இந்திய அளவில் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘பதான்’ திரைப்படம். இதில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் என பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.
4 ஆண்டுகளாக தங்களின் உச்சநட்சத்திரம் ஷாருக்கானை திரையில் காணாமல் கண் பூத்திருந்த ரசிகர்களுக்கு பதானின் வரவு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதையும் தாண்டி களை இழந்து நின்ற பாலிவுட்டுக்கு புது பாய்ச்சலை அளித்துள்ளது பதான்.
வேதனை அளித்த 4 வருடங்கள்
கடந்த 2018ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜீரோ திரைப்படம் தனது பட்ஜெட் தொகையான 200 கோடி ரூபாயைக் கூட தாண்டவில்லை.
ஷாருக்கானின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மட்டுமல்ல. அதற்கு முன்வந்த ரயீஷ், டியர் ஷிண்டகி, ஜேப் ஹேரி போன்ற திரைப்படங்களின் தோல்வியும் அவரை வீட்டுக்குள்ளேயே முடக்கின.
இந்த அனைத்து தோல்விகளுக்கும் படத்தின் கதையைத் தாண்டி வேறொரு முக்கிய காரணமும் இருந்தது.
ஆம்… கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் படங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரங்களும் ஷாருக்கான் மட்டுமின்றி சல்மான்கான், அமீர்கான், ஹ்ரித்திக் ரோசன், அக்சய் குமார் போன்ற பாலிவுட் ஹீரோக்களின் படங்களுக்கு தோல்வியை தேடி கொடுத்தன.
அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் லால் சிங் சத்தா, ரக்ஷா பந்தன், லைகர், விக்ரம் வேதா என முன்னணி நடிகர்களின் படங்கள் பாய்காட் கலாச்சாரத்தின் நேரடி தாக்குதலால் பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்தன.
பதானை புறக்கணிப்போம்
இதற்கிடையே தான் ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் அப்டேட் கடந்த ஆண்டு வெளியானதுமே படத்தை புறக்கணிப்போம் என்று #BoycottPathaan ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து படத்தில் இருந்து முதல் பாடலாக ‘பேஷாராம் ரங்’ பாடல் வெளியானதுமே படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் இன்னும் அதிகமாக ஓங்கி ஒலித்தன.
ரசிகர்களும் முதன்முறையாக பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்களும் காவி வண்ண உடைகளை பட நாயகி தீபிகா அணிந்திருந்தது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்.
ஒவ்வொரு நாளும் ரூ.100 கோடி
இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கோடிக்கணக்கான ரசிகர்களும் தங்களது பலத்தை டிக்கெட் முன்பதிவில் இருந்தே காட்ட தொடங்கினர்.
அதன்படி சமூகவலைத்தளங்களில் நிறைந்த வெறுப்புக்கு எதிராக முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது ஷாருக்கானின் பதான்.
அதன்பிறகு ஒவ்வொரு நாளும் கடந்த 7 நாட்களாக இந்திய திரையுலகில் பதான் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
ஒருநாளைக்கு 100 கோடி வீதம் முதல் 5 நாட்களில் உலகளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்து மிரள வைத்த பதான். கடந்த திங்கள், செவ்வாய் என 2 வார நாட்களில் மட்டும் சிறிய பின்னடைவை சந்தித்துள்ளது.
எனினும் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.634 கோடி வசூல் செய்து, இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸில் வரலாற்று சாதனையுடன் பதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 7 நாட்களில் ரூ. 395 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
பாலிவுட் சினிமா விமர்சகர் மற்றும் வர்த்தக ஆய்வாளரான தரண் ஆதர்ஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் விரிவான தகவலை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், “வெளியான 7வது நாளில் பதான் ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது. முதல் வார முடிவில் படத்தின் உள்நாட்டு வசூலில் இந்தியில் மட்டும் சுமார் ரூ. 318.5 கோடி கிடைத்துள்ளது.
மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் ரூ.11.75 கோடி வசூல் நடந்தேறியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
7 நாளில் ரூ. 300 கோடி கடந்த முதல் படம்
இதன் மூலம், 7 நாட்களில் உள்நாட்டில் ரூ.300 கோடியைத் தாண்டிய முதல் இந்தி மொழித் திரைப்படம் என்ற பெருமையை பதான் பெற்றுள்ளது.
முன்னதாக ரூ.300 கோடி வசூலை குவிக்க இந்தி வெர்சனில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் 10 நாட்களும், கேஜிஎஃப் 2 திரைப்படம் 11 நாட்களும் எடுத்துக்கொண்டன.
அதே போல் நேரடி இந்தி மொழியில் வெளியான அமீர்கானின் தங்கல் 13 நாட்களும், சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹை மற்றும் ரன்பீர் கபூரின் சஞ்சு 16 நாட்களும் ரூ 300 கோடி வசூலை பெற எடுத்துக்கொண்டன.
ஆனால் அதே மைல்கல் சாதனையை வெறும் ஏழு நாட்களில் கடந்து உள்நாட்டில் ரூ.300 கோடி கிளப்பில் வேகமாக நுழைந்த படமாக பதான் மாறியுள்ளது.
இதுமட்டுமின்றி இந்தி சினிமா வரலாற்றிலேயே அதிக ஓப்பனிங்-வீக் வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையையும் பதான் பெற்றுள்ளது.
கேஜிஎஃப் 2 ஏழு நாட்களில் மொத்தம் ரூ 268.63 வசூல் செய்தது மற்றும் பாகுபலி 2 ரூ 247 கோடி வசூலித்தது.
பதான் இயக்குநர் சித்தார்த் ஆனந்தின் முந்தைய படமான வார் பாலிவுட்டில் முதல் வாரத்தில் ரூ 238.35 கோடி வசூல் செய்தது. 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்த பாலிவுட் படமான தங்கல், முதல் வாரத்தில் ரூ.197.54 கோடி மட்டுமே வசூல் செய்தது.
வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை
உள்நாட்டில் தொடர்ந்து சர்வதேச நாடுகளிளும் வசூல் புயலை பதான் நாள்தோறும் நடந்து கொண்டு இருக்கிறது.
அதன்படி, சாக்னில்க்கின் கூற்றுப்படி, பதான் சவூதி அரேபியாவில் 1 மில்லியன் அமெரிக்க டாலரையும், வட அமெரிக்காவில் 10 மில்லியன் அமெரிக்க டாலரையும் கடந்துள்ளது.
இதன்மூலம் வெளிநாட்டில் மட்டும் படத்தின் மொத்த வசூல் 239 கோடி ரூபாய் ஆக உள்ளது. இதன் மூலம் கடந்த 7 நாட்களில் பதான் திரைப்படம் உலகளாவிய வசூல் ரூ.634 கோடியை பெற்று வீறுகொண்ட வெற்றிநடையை எட்டியுள்ளது.
விரைவில் இத்திரைப்படம் வசூலில் ரூ.1000 கோடிகளை தாண்டும் முதல் சாதனை படமாக ஷாருக்கானின் மணிமகுடத்தில் பொறிக்கப்பட உள்ளது.
பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கான பதிலடி!
இதற்கிடையே பதான் திரைப்படத்தின் இந்த பிரம்மாண்டமான வெற்றியை வெறும் படத்தினை தயாரித்த யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வெற்றியாகவோ, ஷாருக்கானின் வெற்றி படமாகவோ குறுக்கிவிட முடியாது.
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் கோலோச்சி வரும் முன்னணி இஸ்லாமிய நடிகர்களுக்கு எதிராக வலுவான வெறுப்புணர்வு பரப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் பதானின் வெற்றி வெறுப்புணர்வு கலாச்சாரத்திற்கு எதிராக வீசப்பட்ட முதல் சவுக்கடியாகவே பாலிவுட்டில் பார்க்கப்படுகிறது.
இதனை குறிப்பிட்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள கருத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அவர், “பதான் சூப்பர்ஹிட் வெற்றியானது நாட்டிலும் உலகிலும் நேர்மறையான சிந்தனையின் வெற்றியாகும். மேலும் இது வெறுப்புணர்வை விதைத்து வரும் பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு பொருத்தமான பதிலடி” என்று தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் ஆபீஸில் புயலை கிளப்பி வரும் பதானின் பெரும் வெற்றி, பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு பொருத்தமான பதிலடி என்பது சற்றும் மிகையல்ல.
கிறிஸ்டோபர் ஜெமா
பழைய மற்றும் புதிய வருமான வரி அடுக்கு : செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?
கடைசி டி20: கோலியின் சாதனை முறியடிப்பு… சூப்பர் சதம் கண்ட சுப்மன் கில்