நா.மணி , வே. சிவசங்கர்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊதிய விகிதத்தில் உள்ள வேறுபாடுகள் உலகறிந்த ரகசியம். பாலின சமத்துவமின்மையும் பெண் அடிமைத்தனமும் பாலின ஊதிய விகித வேறுபாடுகளுக்கு அடிப்படைக் காரணம். நம் நாட்டில், பாலின சமத்துவமின்மை, சாதியோடு சேர்ந்து கொண்டு வேறொரு பரிமாணத்துக்கு நகர்ந்து நம் நாட்டுப் பெண்களைப் பெருந்துயரில் ஆழ்த்தி வருகிறது. பாலின சமத்துவம் இன்மையும் அதனை ஒட்டிய பல்வேறு சிக்கல்களையும் தொடர்ந்து பேசி வருவோர் இருக்கிறார்கள். அதற்காக உயிரைப் பணயம் வைத்து போராடி வருவோர் இருக்கிறார்கள். போராடி மடிந்தவர்கள் ஏராளம். அதேநேரத்தில், இந்த விஷயத்தில், இன்னும் அமைதி காத்து வருவோர் உண்டு. அந்த அமைதியின் ஊடாக இதுவெல்லாம் இப்போதும் சரியென ஆமோதிப்பவர்களும் இருக்கிறார்கள்.
பாலின சமத்துவம் இன்மை தோன்றிய காலம் முதல், அதற்கு எதிராகப் போராடிவரும் இன்றைய காலம் வரை எடுத்துக்கொண்டாலும், பாலின அடிப்படையிலான கூலி வேறுபாடுகள், பெண்களின் உழைப்பு சந்தை பங்கேற்பு, நீடித்தே வருகிறது. இன்றைய தேதியில், தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும், வட அமெரிக்க நாடுகளில் பாலின ஊதிய விகித வேறுபாடுகள் மிகவும் அதிகம். இந்த நாடுகளில், தற்போது நிலவும் பாலின ஊதிய வேறுபாடுகள் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வளர்ந்த நாடுகளில் இருந்த பாலின ஊதிய விகித வேறுபாடுகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால், பொதுவாக கடந்த 100 ஆண்டுகளில் எல்லா நாடுகளிலும் உழைப்பு சந்தையில் பெண்களின் பங்கேற்பு கூடியுள்ளது. இதன் காரணமாக, சமூக பொருளாதார மாற்றங்கள் பெருமளவில் நிகழ்ந்துள்ளது.
ஆணும் பெண்ணும், சம அளவில் வேலை வாய்ப்புகளில் பங்கேற்பதால், பாலின சமத்துவம் ஏற்பட்டுவிட்டதாக பொருள் கொள்ளல் ஆகாது. பாலின சமத்துவமின்மை என்பது, உழைப்பு சந்தையில் பல பரிமாணங்களைக் கொண்டது. அந்த வகையில், உயர் வருமானம் உள்ள வளர்ச்சி அடைந்த நாடுகளில், பெண்கள் பங்கேற்பு கூடி இருந்தாலும், அங்கும் ஆண் பெண் ஊதிய வேறுபாடுகள் நீடிக்கிறது. பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் கூட ஆண் பெண் பாலின ஊதிய விகித வேறுபாடு 13 விழுக்காடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல், கார்ப்பரேட் நிறுவனங்களில் வாரிய உறுப்பினர்களின் பதவிகள், முதன்மை செயல் அலுவலர் பதவிகள் ஆகியவற்றில் இன்னும் பெருத்த பாலின வேறுபாடு நீடிக்கவே செய்கிறது.
ஏன் உழைப்பு சந்தையில் பாலின வேறுபாடுகள் நீடிக்கிறது? உலகம் முழுவதும் இந்த வேறுபாடுகள் நீடிக்க காரணம் என்ன? பாலின சமத்துவம் என்பது பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறதா? அதிக வருவாய் உள்ள வளர்ந்த நாடுகளிலும் ஏன் பாலின ஊதிய வேறுபாடுகள் இன்னமும் நீடிக்கிறது? பெண்கள் அதிகமாக படித்த பின்னரும், சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும் என்று சட்டங்கள் போட்ட பிறகும் ஏன் இவை சாத்தியமாகவில்லை? உழைப்பு சந்தையில் பாலின சமத்துவம் இல்லை என்பது, பாலினம் சமத்துவம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, அது பொருளியல் திறன் சார்ந்த பிரச்சினை. சரியானவர்களுக்கு சரியான வேலையை ஒதுக்கீடு செய்யாத பிரச்சினை. இதன் காரணமாக, சமூகத்துக்கு பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படும். பாலின ஊதிய வேறுபாட்டை குறைத்தல் என்பதும், திறமையான பெண்களுக்கு திறன்மிகு வேலைவாய்ப்பு வழங்குதல் என்பதும், உலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய பயன்படும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கும், சமூக அக்கறை சார்ந்த சிந்தனைக்கும் செயல் திறனுக்கும் விடை அளிக்கும் விதமாக, இதுவரை பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ஆனால், அவை, யாவற்றை காட்டிலும் தனித்துவமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கும் அதன் முடிவுகளுக்கும், 2023ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசுகளை தாண்டி, சமூக அறிவியலில் நோபல் பரிசு வழங்கப்படுவது பொருளாதாரத்துக்கு மட்டுமே. பொருளாதார அறிவியல் என்ற அடிப்படையிலேயே, பொருளியலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் பொருளியல் நோபல் பரிசுக்குரியவர், 77 வயது நிறைந்த கிளாடியா கோல்டின். அமெரிக்க நாட்டின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், வரலாற்றுப் பொருளியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
கோல்டின் அவர்களின் அணுகுமுறை வரலாறு மற்றும் பொருளாதாரம் இரண்டையும் இரண்டு கண்களாக கொண்டது. இந்த வரலாற்று பொருளியல் ஆராய்ச்சி அணுகுமுறை, வரலாற்றின் வேர்களில் இருந்து, பொருளாதார வளர்ச்சிக்கான பாதையை கண்டறிந்ததோடு, பெண் சமத்துவத்தின் விடியலை நோக்கி பயணிக்கும் வழியில் மைல்கல். இவரது ஆய்வுகள், நீண்டகால பார்வையில், உழைப்பு சந்தையில், பாலின ஊதிய வேறுபாடுகளில் படிப்படியாக நிகழ்ந்து வரும் மாற்றங்களை பற்றியது. அவரது இந்த ஆய்வுகள், அமெரிக்க நாட்டின் உழைப்பு சந்தை பாலின ஊதிய விகிதம் வேறுபாடுகள் பற்றிய நீண்ட கால ஆய்வு. கிளாடியா கோல்டின் ஆய்வு, தொழில்நுட்ப மாற்றம், கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கருத்தரிப்பு விகிதக் குறைவு ஆகியவற்றை உள்ளடக்கியது.
இவரது ஆய்வுகள், அமெரிக்க நாட்டின் பாலின வேறுபாடுகளை பற்றியதாக இருந்தாலும், இதே போன்ற வளர்ச்சி மற்றும் மாற்றங்களின் தன்மைகளைக் கொண்ட நாடுகளுக்கும் இந்த ஆய்வுகள் பொருந்திப் போகலாம். கோல்டினின் ஆய்வுகளை வைத்து, மற்ற நாட்டு பாலின ஊதிய வேறுபாடுகளை பற்றி புரிந்துகொள்ள முடியும். ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும். ஊதிய விகித வேறுபாடுகள் பற்றி மட்டுமல்லாது, வேலை வாய்ப்பு பங்கேற்பு ஆகியவற்றையும் பிற நாடுகளோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள இயலும். உதாரணமாக உழைப்பு சந்தையில் பெண்கள் பங்கேற்பை பொறுத்தமட்டில், 1900ஆம் ஆண்டு அமெரிக்கா எந்த நிலையில் இருந்ததோ, அந்த நிலையில் இந்தியா இன்றைய தேதியில் உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
250 ஆண்டுக் கால புள்ளி விவரத்தை சேகரிப்பது அவ்வளவு எளிதான பணியல்ல. புள்ளி விவரங்களே கிடைக்காத காலம், பெண்களின் உழைப்பை குறைத்து மதிப்பிட்ட காலம், உழைக்கும் பெண்கள் அனைவரையும் மனைவிமார்களே என்று பட்டியலில் அடைத்த காலம். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், திருமணம் நடந்து விட்டால், மனைவி என்ற அந்தஸ்து மட்டுமே. அவர்களின் வேலை, ஊதியம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படவில்லை. அப்படி ஒரு காலம் அமெரிக்காவில் இருந்திருக்கிறது. இப்படிப் பல சிக்கல்களை தாண்டியே, 250 ஆண்டுக் கால புள்ளி விவரங்களை சேகரித்து கோல்டின் தனது ஆய்வுகளை செய்து இருக்கிறார்.
கோல்டினின் ஆய்வுகளுக்கு முன்பும், பாலின பேதம் உழைப்பு சந்தையில் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளைப் பற்றி இருந்தது. ஆனால் அத்தகைய ஆய்வுகள், அவற்றின் விளைவுகளைப் பற்றிய ஆய்வுகள், மிகவும் குறைவாகவே இருந்தது. இதுபோன்று மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில், முன்வைக்கப்பட்ட ஆய்வு முடிவுகள், எல்லா காலத்துக்கும் ஏற்றதாக இல்லை. வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வுகள், சமூக பொருளாதாரத் தளத்தில், பாலின வேறுபாட்டின் நிலைப்பாட்டையைப் பேசுவதாக இருந்தது. பொருளாதார வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளோ, பெண்களின் உழைப்பை மதிப்பீடு செய்வதிலும், வரலாற்று உணர்வுகளிலிருந்து தரவுகளை சேகரிக்கவும் முடியவில்லை. பொருளாதார ஆய்வுகளோ நீண்ட தொடர்பு வளர்ச்சி பற்றியதாக இருந்தது. கோல்டினின் இந்த ஆய்வுகள், விடுபட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. அதற்காக, கல்வி, கருத்தரிப்பு, உற்பத்தித்திறன் ஆகியவற்றை இணைத்தார். அதோடு படிப்படியாக மலர்ந்து வரும் பெண்களின் அபிலாசைகள், பெண்களின் அடையாளங்கள், நிறுவன மாற்றங்கள் ஆகியவற்றையும் இணைத்தார்.
பொருளாதாரத்தில், மாறிவரும் பெண்களின் அந்தஸ்து, பொருளாதாரக் கட்டமைப்பை உள்ளடக்கியது. பெண்களின் வேலை, கூலி, பெண்களின் திறன் சார்ந்தது. பெண்களின் உழைப்பின் தேவையும், அளிப்பும் அவர்களது திறன்களில் அடிப்படையிலானது எனக் கண்டறிந்ததோடு, சமூக விதிகள், நிறுவன தடைகள், வேலையுடன் குடும்பத்தை அனுசரித்துப் போதல் ஆகியவற்றோடும் பெண்களின் உழைப்பு உள்ளது என்பதைக் கண்டறிந்தார்.
1990 ஆம் ஆண்டு, கோல்டின் மேற்கொண்ட ஆய்வில், “பெண்கள் உழைப்பு சந்தையில் பங்கேற்பது, பொருளாதார வளர்ச்சியின் காரணமாகத்தான்” என்ற கருத்தியலை இவரது ஆய்வுகள் மாற்றி அமைத்தது. உழைப்பு சந்தையில், பெண்கள் பங்கேற்பில், திருமணமான பெண்கள் எவ்வாறு பங்களிப்பை அதிகரிக்க முடிகிறது என்பதை நிரூபித்தார். பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பில் பங்கேற்பதற்கு காரணம், தொழில்நுட்ப வளர்ச்சியும் உடல் உழைப்பு சாராத தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் முக்கிய பங்கு வகிப்பதையும் இவர் கண்டறிந்தார். இருந்த போதும், வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்களின் சமூக நம்பிக்கைகள், நிறுவன தடைகள் அதில் பெரும் பங்கு வகிப்பதையும் அவர் ஆவணப்படுத்தினார்.
கடந்த 250 ஆண்டுகளாக பெண் உழைப்பு பங்கேற்பில் மூன்று முக்கிய முடிவுகளுக்கு அவர் வந்தார். ஒன்று, சம வேலைக்கு சம ஊதியம் என்ற போராட்டங்கள் தொடங்கும் முன்பே, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு நிர்பந்திக்கும் முன்பாகவே, பெண்கள் உழைப்பு சந்தையில் அடிப்படை மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிட்டன. இரண்டு, தொழில் புரட்சிக்கு பிந்தைய உடல் உழைப்பு சாராத பணிகள் அதிகரித்த பிறகு பெண்களின் பாலின ஊதிய வேறுபாடுகள் குறுகியதாக மாற்றம் அடைந்தது. மூன்று, தேசிய வருமானம் மும்முடங்காக உயர்ந்த போதும், தனிநபர் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்த போதும், பாலின ஊதிய வேறுபாடுகளில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தது. பாலின ஊதிய வேறுபாட்டில் ஏன் மாற்றங்கள் மெதுவாக நிகழ்கின்றன என்பதையும் கோல்டின் தன் அடிப்படை கேள்வியாக முன் வைத்தார்.
நாளை தொடரும்…
கட்டுரையாளர்கள்:
நா.மணி, பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி.
வே.சிவசங்கர், இணைப் பேராசிரியர், பொருளாதாரத் துறை, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
லியோ LCU தான்… உறுதி செய்த உதயநிதி…!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் எக் ஆம்லெட்