நேரடியாக மோதுவது இந்நாள் முன்னாள்…நீலகிரியில் தகிக்கிறது அரசியல் அனல்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

அந்த மலையின் மகிமையா, மக்களின் ராசியா என்னவென்று தெரியவில்லை; பக்கத்திலே இருக்கும் ‘வெயிட்’ ஆன தொகுதியான கோவையின் எம்.பி.க்குக் கூட இதுவரை கிடைக்காத மத்திய அமைச்சர் பதவி வாய்ப்பு, இப்போது வரை நீலகிரி எம்.பி.க்கு மட்டும் தான் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீலகிரியில் அதிக முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிரபுவுக்கு தான், இந்த வாய்ப்பு முதலில் கிடைத்தது. மொத்தம் 16 ஆண்டுகளில் நடந்த 5 தேர்தல்களில் வென்ற அவர், ராஜிவ் காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார். அதன்பின் நீலகிரி எம்.பி.யாக இருந்த எஸ்ஆர்.பாலசுப்ரமணியமும் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார்.

அவர்கள் காங்கிரஸ், தமாகா சார்பில் தேர்வானவர்கள். அப்போது அது பொதுத்தொகுதியாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில் தனி தொகுதியான பின், திராவிட இயக்கங்களின் வசம் தொகுதி கை மாறியது. முதல் முதலாக ஆ.ராசா, நீலகிரியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகி, மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இடம் பிடித்தார். இப்போது அவர் முன்னாள் மத்திய அமைச்சர். அதே நீலகிரியில் அவர் இப்போது மோதப்போவது இந்நாள் மத்திய இணை அமைச்சருடன். அரசியல் வரலாறு அநேகமான திருப்பங்களைக் கொண்டது என்பதற்கு, நீலகிரி தொகுதியின் இந்த மாற்றங்கள் நிகழ்காலச் சான்று.

வென்றாலும் தோற்றாலும் பதவி!

எல்.முருகன், இந்தத் தொகுதியில் களம் இறங்குவார் என்பது ஒரு பரபரப்பான அரசியல் திருப்பம் தான். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த அவரை, சட்டமன்றத் தேர்தலில் தாராபுரத்தில் தோற்கடித்த ஒரே காரணத்துக்காக, தமிழக அமைச்சரவையில் கயல்விழிக்கு இடம் தரப்பட்டது. அதே காரணத்துக்காக, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து எல்லோரையும் பதற விட்டது பாரதிய ஜனதா தலைமை. அந்தப் பதவியில் நீடிப்பதற்காகவே, மாநிலங்களவை பதவியையும் வாங்கிக் கொடுத்தது. தற்போது பாஜக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து பதவியேற்றுவிட்டார் எல்.முருகன். அதனால் அவர் நீலகிரிக்கு வர வாய்ப்பில்லை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க, அவரையே நீலகிரி வேட்பாளராக அறிவித்து அதிர விட்டிருக்கிறது. இறுதியில் இப்போது நீலகிரி தொகுதி, இந்நாள் முன்னாள் மத்திய அமைச்சர்கள் நேரடியாக மோதும் பரபர அரசியல் களமாகியிருக்கிறது.

அதனால் தேசிய அளவிலான பார்வையும், நீலகிரி தொகுதியின் மீது திரும்பியிருக்கிறது. மற்ற தொகுதிகளில் நடப்பது அரசியல்ரீதியான மோதல் என்றால், இந்தத் தொகுதியில் நடப்பது சித்தாந்தங்களுக்கு இடையில் நடக்கும் யுத்தம் என்று சொல்லலாம். இந்த சித்தாந்த யுத்தத்தில் எந்தெந்த இன, சமுதாய மக்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதில் தான், நீலகிரி தொகுதியின் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படவுள்ளது. இன்னும் உடைத்துச் சொல்வதாக இருந்தால், இது பக்திக்கும், பகுத்தறிவுக்குமான பந்தயமாகவே பார்க்கப்படுகிறது.

மேலே 3 கீழே 3

நீலகிரி தொகுதியின் இயற்கை அமைப்பு, மற்ற தொகுதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அங்கே 3 சட்டமன்றத் தொகுதிகள், மலைப்பகுதியிலும், 3 சட்டமன்றத் தொகுதிகள், சமவெளிப்பகுதியிலும் உள்ளன. அதை விட விநோதம், 4 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரே நாடாளுமன்றத் தொகுதியும் இது தான். உதகை, குன்னுார், கூடலுார் ஆகியவை, நீலகிரி மலை மாவட்டத்திலும், மேட்டுப்பாளையம் தொகுதி, கோவை மாவட்டத்திலும், அவினாசி தொகுதி, திருப்பூர் மாவட்டத்திலும், பவானி சாகர் தொகுதி, ஈரோடு மாவட்டத்திலும் இருக்கின்றன. இதனால் பல தரப்பட்ட மக்கள் இணைந்து தேர்வு செய்கிற ஒரு மக்கள் பிரதிநிதி என்கிற பெருமை, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருக்கு எப்போதுமே உண்டு.

நீலகிரி தொகுதியில், மலையிலுள்ள 3 தொகுதிகளில் 6,44,964 ஆயிரம் வாக்குகளும், சமவெளியிலுள்ள 3 தொகுதிகளில் 7,73,951 வாக்குகளும் உள்ளன. இதில் பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிப்பது மலை மக்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். நீலமலை, பல ஆண்டுகளாக திமுக கோட்டையாகவே இருந்து வந்திருக்கிறது. அதில் சமீபமாக பெரிய ஓட்டை விழுந்துள்ளது. காலம் காலமாக திமுக வசமிருந்த கூடலுார் தொகுதி, சென்ற சட்டமன்றத் தேர்தலில், உட்கட்சிப் பூசலால் அதிமுக வசமானது ஓர் அத்தாட்சி. மற்ற இரு தொகுதிகளில் உதகை, காங்கிரஸ் கையிலும், குன்னுார் திமுக வசமும் உள்ளன. கீழே இருக்கும் 3 தொகுதிகளுமே அதிமுக வசமே இருக்கின்றன. மொத்தத்தில் 4:2 என்ற விகிதாச்சாரத்தில் அதிமுகவே இங்கு அசுர பலத்துடன் இருக்கிறது. ஆனால் அந்த பலம், இந்தத் தேர்தலில் எடுபடுமா என்பது தான் விடை தெரியாத விடுகதையாகவுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் & 2021 சட்டமன்றத் தேர்தல் ஒப்பீடு

2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆ.ராசா அதிமுக வேட்பாளர் தியாகராஜனை விட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

2019 பாராளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆ.ராசா பெற்ற வாக்குகளின் விவரங்களை, 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த இரண்டு ஆண்டுகளில் தொகுதியில் நடந்த சில மாற்றங்களை கவனிக்கலாம்.

  • முதலில் பவானிசாகர் (தனி) சட்டமன்றத் தொகுதி

2019 பாராளுமன்றத் தேர்தலில் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆ.ராசா அதிமுகவின் தியாகராஜனை விட 36,007 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் பி.எல்.சுந்தரத்தைக் காட்டிலும் 16,008 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம் திமுக கூட்டணி பெரும் பின்னடைவை இத்தொகுதியில் 2021இல் சந்தித்திருப்பதை நாம் கவனிக்கலாம்.

  • இரண்டாவது உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் உதகமண்டலம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் ஆ.ராசா 45,446 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 5,348 வாக்குகளே அதிகம் பெற்றிருந்தார்.

திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், வாக்கு வித்தியாசம் பெருமளவு குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது.

  • மூன்றாவது கூடலூர்(தனி) சட்டமன்றத் தொகுதி

2019இல் அதிமுக வேட்பாளரை விட 11,734 வாக்குகள் அதிகம் பெற்றிருந்த திமுக, 2021 இல் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது.

  • நான்காவதாக குன்னூர் சட்டமன்றத் தொகுதி

இத்தொகுதியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வித்தியாசமாக 33,961 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக, 2021 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4105 வாக்குகளே அதிகம் பெற்றிருந்தது.

இங்கும் திமுகவின் வாக்கு வித்தியாசம் பெரும் சரிவைத் தான் சந்தித்திருக்கிறது.

  • ஐந்தாவதாக மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி

2019 இல் 30,812 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக, 2021 சட்டமன்றத் தேர்தலில் 2456 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோல்வியடைந்தது.

  • ஆறாவதாக அவினாசி (தனி) சட்டமன்றத் தொகுதி

2019 இல் 17,770 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக, 2021 இல் 50,902 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோல்வியடைந்தது.

மொத்தமாகப் பார்க்கும்போது அனைத்து தொகுதிகளிலுமே திமுகவின் வாக்குகள் பெரும் சரிவை சந்தித்ததுடன், 4 தொகுதிகளில் தோல்வியையும் சந்தித்திருக்கிறது.

எல்.முருகன் என்ன விளைவை ஏற்படுத்துவார்?

பாரதிய ஜனதாவின் வேகமான வளர்ச்சி, இரண்டு திராவிட இயக்கங்களுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. கட்சியின் வளர்ச்சி ஒரு புறம் என்றால், வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் என்பது போட்டிக்கு மேலும் கனம் சேர்க்கிறது. மலை மாவட்டத்தின் பெரும்பான்மை மக்களான படுகர்கள் காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் பக்கம் நீண்டகாலமாக இருந்தவர்கள், தற்போது பாஜகவின் பக்கம் நகர்கிறார்கள். ஆனால் ஆ.ராசா பிரச்சாரத்திற்காக படுகர் கிராமங்களுக்குச் சென்றபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு இருந்திருக்கிறது.

எல்.முருகனைப் பொறுத்தவரை அவர் அப்பகுதிகளில் கோயில்களுக்கும் இதர விசயங்களுக்கும் நிறைய பணம் செலவு செய்திருக்கிறார். அது அப்பகுதிகளில் எல்.முருகனுக்கான பலத்தை கூட்டியிருக்கிறது. அதேபோல, அவர் சார்ந்த அருந்ததியர் சமுதாய மக்களின் வாக்குகளும் அவருக்குக் கணிசமாகக் கிடைக்கலாம். அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டுள்ள இளையவர்களின் வாக்குகளும் இன்னுமோர் போனஸ் தான்.

எல்.முருகன் மத்தியப் பிரதேச மாநிலத்தின் எம்.பியாகி விட்டார். இனிமேல் அவர் ஏதாவது நலத்திட்டங்கள் செய்ய வேண்டுமென்றாலும் அந்த மாநிலத்திற்குத் தான் செய்வார். அவருக்கு ஏன் இங்கு ஓட்டு போட வேண்டும் என்ற பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் திமுகவினர்.

மாவட்டத்தில் கணிசமாகவுள்ள மலையாளிகள், கன்னடியர், வடமாநிலத்தவர்களின் வாக்குகளும் பாரதிய ஜனதாவுக்கு ப்ள்ஸ் என்றால், அவர்களைத் தவிர்த்த பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாயகம் திரும்பியோர் வாக்குகள் பெருமளவில் திமுகவுக்குப் போவதற்கு வாய்ப்பு அதிகமிருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கு இடையில், அதிமுக வேட்பாளர் என்ன ஆவார் என்ற கேள்வி எல்லோருக்குமே எழுகிறது.

வாக்கு வங்கியை தக்க வைக்குமா அதிமுக?

அதிமுகவில் நிறுத்தப்பட்டுள்ள லோகேஷ் தமிழ்ச்செல்வன், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன். மொத்தத் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இருப்பதால், அவர்களின் தேர்தல் பணி, இவருக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, அதிமுக தன்னுடைய வாக்குவங்கியைத் தக்க வைப்பதற்கே முயற்சி செய்கிறது என்பது ஊரறிந்த சேதி. ஆனால் அதைத் தக்க வைப்பது அத்துணை எளிதாயிருக்காது. அதற்கு பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும். இல்லாவிடில், அந்த வாக்குகள், ராசாவுக்கும், முருகனுக்கும் போவதைத் தடுக்கவே முடியாது. மிக முக்கியமாக, சிறுபான்மை இன மக்களின் வாக்குகள், இந்த தொகுதியில் முழுமையாகவே அதிமுகவுக்குக் கிடைக்க வாய்ப்பேயில்லை என்பதே கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பகிரும் தகவலாகவுள்ளது.

இருந்தாலும் இரட்டை இலையின் மீதான எளிய மக்களின் ஈர்ப்பு, அத்திக்கடவு–அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைக் கொண்டு வந்தது என அதிமுகவின் வாக்குவங்கியை அவ்வளவு எளிதில் சிதைத்து விடவும் வாய்ப்பில்லை என்பதையும் உறுதிபடச் சொல்லலாம். அதிமுக சார்பில் எடுக்கப்பட்ட முதற்கட்ட சர்வேயில், கட்சி வாக்குகளை அப்படியே வாங்குவதற்கும் பெரும் செலவு செய்ய வேண்டுமென்று தெரியவந்துள்ளது. இதுபற்றி இந்தத் தொகுதிக்குப் பொறுப்பாளராக உள்ள வேலுமணிக்கு, எடப்பாடி பழனிசாமி சில முக்கிய உத்தரவுகளை வழங்கியதாகத் தகவல் சொல்கிறார்கள் நீலகிரி அதிமுக நிர்வாகிகள். அதனால் கடைசி நேரத்தில் அதிமுக இறங்கி அடிக்கும் என்று தான் தெரிகிறது.

ஆ.ராசாவின் பலம்

நீலகிரி ஒரு கடும் போட்டியை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். 2021 சட்டமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளை அதிமுக வென்று, திமுக கூட்டணியை பின்னுக்குத் தள்ளியிருந்தது. ஆனாலும் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஆ.ராசா நிற்கிறார் என்ற அவரது இமேஜ் திமுகவின் பலத்தை கூட்டியிருக்கிறது. தற்போதைய நிலவரம் என்னவென்றால், ஆ.ராசா தொகுதிக்கு செய்த பணிகள், நலத்திட்டங்கள் இவற்றின் காரணமாக அவர் பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதேசமயம் இதே அளவுக்கான ஆதரவு எல்.முருகனுக்கோ, அதிமுகவுக்கோ இல்லை என்றே களத்திலிருந்து வரும் ரிப்போர்ட் சொல்கிறது.

கோடைக்கு நீலகிரியின் குளிர் இதமாக இருக்கும்; இப்போது அங்கேயும் அனல் பறக்கத் துவங்கியிருக்கிறது. அதற்குப் பெயர் தான் அரசியல்!

–பாலசிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவையில் அண்ணாமலை…கொடுக்கப்போவது என்ன விலை?

மீம்ஸ்…கார்டு…ரீல்ஸ்…விதவிதமா மெசேஜ் கொட்டுது பாரு… கோவையில் ஐ.டி.,விங் ஆட்டத்துல ஜெயிக்கப்போவது யாரு?

சிதம்பரம்: பாமக வாக்குகளை பங்கு போடும் அதிமுக-திமுக. தனி கணக்கு போடும் திருமா

+1
1
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *