எஸ்.வி.ராஜதுரை
பாசிஸ்டுகள், ”அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குத் திட்டங்கள் தீட்டி வருகின்றனர்” என்றார் ஜெர்மானிய மார்க்ஸியச் சிந்தனையாளர் வால்டர் பெஞ்சமின்.
ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அந்தக் கட்சியிடம் நீண்டகாலத் திட்டமொன்று இருப்பது மனிதகுலத்துக்குப் பேராபத்து என்பதைச் சுட்டிக்காட்டவே அவ்வாறு கூறினார்.
அதுதான் இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கிறது என்பதை இங்கு ஒன்றிய அரசாங்கத்திலுள்ள பாஜக ஆட்சி என்பது எதேச்சதிகார ஆட்சியே தவிர பாசிச ஆட்சியல்ல என்று இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கின்ற சில இடதுசாரிக் கட்சிகளும் முதலாளிய ஜனநாயகக் கட்சிகளும் உணர வேண்டும்.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது பற்றிய பல்வேறு விமர்சனங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் பற்றிய பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அந்த செங்கோல் மீதுள்ள நந்திக்குப் பின்னால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை உழவர்கள் இருக்கின்றனர் என்பதையும், மடாதிபதிகள் தங்கள் சிறப்புரிமைகளையும் மக்கள் மீதான மத ஆதிக்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே 1947இல் நேருவுக்கு அதைக் கொடுத்தனர் என்பதையும் இந்தியாவில் எடுத்துரைத்த ஒரே ஒருவர் பேரறிஞர் அண்ணா தான்.
இது குறித்து அவர் ‘திராவிட நாடு’, 24.7.1947ஆம் தேதி எழுதிய கட்டுரையை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரு நாள்களுக்கு முன் ‘விடுதலை’ இதழில் முழுமையாக வெளியிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் தேசியக் கட்சிகளை விட மாநிலக் கட்சிகளே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளன என்று கூறும் புள்ளிவிவரங்கள் பெரிதாகப் பெருமிதத்துடன் பேசப்பட்டு வருகின்றன.
இந்த நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்ட விதம் பற்றியோ குடியரசுத் தலைவர் அதைத் திறந்து வைக்க அழைக்கப்படாதது பற்றியோ நடக்கும் விவாதங்களில் கருத்தில் கொள்ளப்படாத ஒரு முக்கிய விஷயத்தின் சாரத்தைத்தான் அண்ணா அவர்களின் கட்டுரை தொலைநோக்குப் பார்வையுடன் சுட்டிக் காட்டியுள்ளது என்பதை எல்லா எதிர்க் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் புரிதலுக்குத் துணை புரிகின்றது ‘ஆங்கில டிஜிட்டல் ஏடான ஸ்க்ரோல்’ ஏடு கடந்த 27 ம் தேதி வெளியிட்டுள்ள Modi’s new parliament could see Hindi belt gain, South lose power at the Centre என்ற கட்டுரை.
மாநிலத்துக்கு மாநிலம் பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தாழ்வான வளர்ச்சியில் இருந்து கொண்டிருப்பதால் அது இந்தியக் கூட்டாட்சி முறையைப் பாதிக்கும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் இருந்திருக்கிறது. ஆனால், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் (அதாவது மக்களைவைக் கட்டடத்தில்) 888 இருக்கைகள் ஏன் அமைக்கப்பட்டிருக்கின்றன?
இதுதான் விஷயத்தின் சாரம் குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தடுத்து பொருளாதார வளர்ச்சியடைந்த மாநிலங்கள் அந்த சாதனைக்கு ஏற்கெனவே பெரும் விலையைத் தந்து கொண்டிருக்கின்றன. அதாவது தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்துள்ளது.
‘ ஒரு நபர் – ஒரு வாக்கு’ என்பது போதாது, ’ஒரு நபர்- ஒரு மதிப்பு’ என்ற நிலை ஏற்பட வேண்டுமானால் சமூக, பொருளாதார நீதி இருக்க வேண்டும், சாதிய அமைப்பாலும் முதலாளிய அமைப்பாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அரசமைப்பு அவையில் ஆற்றிய கடைசி உரையில் கூறினார்.
‘ஒரு நபர்- ஒரு மதிப்பு’ என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, ‘ஒரு நபர்- ஒரு வாக்கு’ என்ற கோட்பாடு இப்போது இந்தி பேசாத மாநிலங்களில் குறிப்பாக -தென் மாநிலங்களின் வலிமைக்குக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறது.
1976இல் அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தமொன்றின்படி, குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 2001 வரை அதிகரிக்கப்படக்கூடாது. பின்னர் அந்த எண்ணிக்கையை 2026ஆம் ஆண்டுவரை அதிகரிக்கக்கூடாது என்ற இன்னொரு சட்டத் திருத்தம் 2001இல் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், அது, 2026க்குப் பிறகு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, அதற்குப் பிறகு நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது.
அதாவது 2031இல் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தமிழ்நாட்டுக்குரிய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே 41இல் இருந்து 39 ஆகக் குறைக்கப்பட்டிருந்தது.
ஆனால் வட மாநிலங்களில் குறிப்பாக இந்தி பெல்ட் என்று சொல்லப்படுகின்ற உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ஹரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் – தென் மாநிலங்களைப் போல, அதுவும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா ஆகியவற்றைப் போல குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாகவே சங் பரிவாரம், முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகி வருவது இந்துக்களுக்கு ஆபத்து என்று கூறி வருவதுடன் இந்தி பெல்ட்டிலுள்ள பெண்கள் ‘வத வதவென்று’ பிள்ளைகள் பெற்று வருவதை ஊக்குவித்தும் வந்துள்ளது.
ஆக, இந்தி பெல்ட் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதற்கேற்றபடி அதிகரிக்கும்.
அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சி மூளைகளிலொன்று என்று கருதப்படும் ‘சர்வதேச அமைதிக்கான கார்னெஜி நிறுவனம் (Carnegie Endowment for International Peace) என்ற அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கையொன்றை ‘ஸ்க்ரோல்’ கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. மிலன் வைஷ்ணவ், ஜேமி ஹிண்ட்ஸன் ஆகிய இரு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு, 2026ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள மக்கள் தொகைப் பெருக்கம் எவ்வளவு இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் பார்த்தால் மக்களவை உறுப்பினர்களின் எண்னிக்கையை இப்போதுள்ள 552 இலிருந்து 846 ஆக அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று கூறுகிறது.
அப்படிப் பார்த்தால், உத்தரப் பிரதேசத்துக்கு இப்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 80 என்பது 143 ஆகவும், அதேபோல பிகாரிலுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகவும் – அதாவது இப்போதுள்ள 40 இலிருந்து 79 ஆகவும் – அதிகரிக்கும் என்று அந்த ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மேற்சொன்ன இந்தி பெல்ட்டுக்குள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 846 ஆக அதிகரிக்கும். அதாவது இப்போது இந்தி பெல்ட்டுக்குள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, மொத்த மக்களவை உறுப்பினர்களில் அவற்றுக்குள்ள விகிதமான 42 விழுக்காட்டிலிருந்து 48 விழுக்காடாக அதிகரிக்கும்.
அதற்கு நேர்மாறாக இந்தி பெல்டைச் சேராத மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், தென் மாநிலங்கள் ஆகியவற்றுக்கு இப்போது மக்களவையிலுள்ள விகிதம் குறையும் ; குடும்பக் கட்டுப்பாட்டை மற்ற எல்லா மாநிலங்களையும்விட சிறப்பாக நடைமுறைப்படுத்தியுள்ள கேரளாவுக்குரிய மக்களவை உறுப்பினர் விகிதம் – இப்போதுள்ள 3.7 விழுக்காட்டிலிருந்து 2.4 விழுக்காடாக சரியும். ( தமிழ்நாட்டுக்கும் இதே போன்ற கதிதான் ஏற்படும்.)
இந்த ஒட்டுமொத்தமான சித்திரத்தை எடுத்துக் கொண்டால், இப்போது இந்தி பெல்டில் பெரும் ஆதிக்க சக்தியாக உள்ள பாஜவுக்குதான் பெரும் ஆதாயம் ஏற்படப் போகிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தி பெல்ட்டில் அடங்கியுள்ள மாநிலங்களில் பாஜக 198 மக்களைவைத் தொகுதிகளை- அதாவது 80% தொகுதிகளைக்- கைப்பற்றியது.
2014 ஆண்டு நாடளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் பாஜக 51% விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்போது ஆதாயமடையப் போவது சங்க பரிவாரத்தின் அரசியல் கட்சியான பாஜகதான்.
நாடாளுமன்றத் தொகுதிகளை வரையறுப்பதில் இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் அளவுகோல், அதாவது மக்கள் தொகைக்கேற்பத் தொகுதிகள் என்ற அளவுகோல், தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுமானால், மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இந்தி பெல்டுக்கு வெளியே உள்ள, குறிப்பாக தென் மாநிலங்களுக்குள்ள மக்களவை உறுப்பினர்களின் விகிதம் வெகுவாக சரியும்.
2021ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் கூட்டாட்சி முறைக்கு ’ஒரு நபர்- ஒரு வாக்கு’ என்ற அளவுகோல் பொருத்தமானதா என்ற கேள்வியை எழுப்பியதை ஸ்க்ரோல் ஏடு சுட்டிக் காட்டுகிறது.
எனவே, இந்துத்துவத்தின் பிதா மகனான சாவர்க்கரின் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா என்பது எதிர்க்கட்சிகள் கூறி வரும் விமர்சனங்களையெல்லாம் தாண்டி இந்து ராஷ்டிரம் அமைக்கப்படுவதற்கான கால்கோள் விழா என்பதை அனைத்து இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் புரிந்து கொண்டு மேற்சொன்ன அளவுகோலை மாற்ற வேண்டும் என்று இப்போதிருந்தே போராட்டத்தை நடத்துவதும் பாசிசம் என்றால் என்பதை இந்தி பெல்ட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் எடுத்துக் கூறி, அதனால் ஆதாயமடைவது பார்ப்பன- பனியா சக்திகளேயன்றி அங்குள்ள உழைக்கும் மக்களான சூத்திரர்களும் தலித்துகளுமல்லர் என்பதை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.
இந்துத்துவக் கொள்கையின் மூல ஆசானாகிய சாவர்க்கரின் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கப்படும் என்பதற்கான அறிவிப்பேயன்றி வேறல்ல.
கட்டுரையாளர் குறிப்பு:
எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் பன்னீரோடு நெருக்கம் காட்டிய எடப்பாடி ஆதரவாளர்கள்!
‘மக்களுக்கான கல்விக் கொள்கையே சமத்துவத்தை உருவாக்கும்’: ஜவஹர் நேசன்