பாஸ்கர் செல்வராஜ்
ஹெஸ்புல்லா தலைவர் நசரெல்லாவையும் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப்படையின் துணைத்தலைவரையும் இசுரேல் குண்டுவீசி கொன்றதை அடுத்து இஸ்ரேலிய இராணுவ நிலைகளின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
முன்பு ஈரானிய தூதரக தாக்குதலுக்குப் பதிலடியாக சொல்லிவைத்துக் கொண்டு வானவேடிக்கை காட்டிய ஈரான் இம்முறை இசுரேலின் மீது இருநூறு ஏவுகணைகளை வீசி முக்கிய இராணுவ நிலைகளைத் தாக்கி குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தியது. இதுவரை அதுகுறித்த தகவல்களை வெளியிட விதிக்கப்பட்ட தடையை இசுரேல் நீக்கவில்லை.
ஈரானிய தாக்குதலில் அடிபட்ட இசுரேல்
முன்பு தொண்ணூறு விழுக்காடு ஏவுகணைகளை இடைமறித்த மேற்குலகம் இந்தமுறை தொண்ணூறு விழுக்காடு ஏவுகணைகளை இடைமறிக்கத் தவறியது. அடிபட்ட இசுரேல் நிச்சயம் பதிலடி கொடுப்போம்; எப்போதும் போல எதிரியை இருமடங்கு விலையைக் கொடுக்க வைப்போம் என்று அறிவித்தது.
இசுரேலின் மீதான தாக்குதல் எங்களின் வலிமையின் ஒரு பகுதிதான்; மீண்டும் தாக்கும் பட்சத்தில் இசுரேல் இதைவிட வலிமையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரான் எச்சரித்தது. ஈரானின் அணு ஆராய்ச்சி மையம் அல்லது எண்ணெய் ஏற்றுமதி முனையங்களை இசுரேல் தாக்கலாம் என்று செய்திகள் உலவியது. அப்படியான தாக்குதலுக்கான தனது இசைவின்மையை அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்.
இசுரேல் ஈரானைத் தாக்கும்பட்சத்தில் தாக்குதலுக்குத் தனது வான்வெளியை அனுமதிக்கும் நாடுகளையும் தாக்குவோம்; மற்றவர்களும் எரிபொருளை ஏற்றுமதி செய்யமுடியாது; அமெரிக்க இராணுவ நிலைகளும் தப்பாது என தொடர்ந்து அறிவித்து தனது பதிலடி என்ன என்பதை ஈரான் தெளிவுபடுத்தி பின்வாங்க வைக்க முயன்றது. இதனிடையில் இசுரேலின் தாக்குதல் திட்டத்தை ஈரானுக்குக் கசியவிட்டது அமெரிக்கா.
இது இசுரேலிய-அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தது. இறுதியாக இஸ்ரேலிய தாக்குதல் நடக்கப்போவதை முன்னேரே அறியப்பெற்ற ஈரான் ஆயிரம் ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்து போருக்கு ஆயத்தமாக இருக்கும் அதேவேளை தாக்குதலின் பாதிப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் போரைத் தவிர்க்குமாறு தனது இராணுவத்துக்கு ஆணையிட்டது.
பதிலுக்கு ஈரானைத் தாக்கிய இசுரேல்
ஈரானிடம் இருப்பது போன்று நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் இசுரேலிடம் இல்லை. இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் செல்லும் போர்விமானங்கள் மற்ற ஜோர்டான், சிரியா, ஈராக் சவுதி நாடுகளின் வான்வெளியில் நுழையாமல் ஈரானைத் தாக்க முடியாது. கடலைச் சுற்றிக்கொண்டு வந்து தாக்க இடையில் எரிபொருள் நிரப்ப சிறப்பு விமானங்கள் வேண்டும்.
ஜோர்டான், ஈராக் வழியாக எதிர்பார்த்தபடியே ஈரானிய இராணுவ உற்பத்தி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது இசுரேல். தலைநகரில் ஈரானின் அல்லது ரசியாவின் S-300 அல்லது சமீபத்தில் ரசியா ஈரானிய பாதுகாப்புக்கு அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் இதைவிட வலுவான S-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் இசுரேலிய ஏவுகணைகளை இடைமறிக்கும் காணொளிகள் அவற்றின் வலுவைக் காட்டுவதாக இருந்தது. அதனாலேயே அவற்றைக் குறிவைத்து இசுரேல் தாக்கி இருக்கிறது.
அதில் அந்த எதிர்ப்பு அமைப்புகளை இயக்கிய நால்வர் இறந்ததாக ஈரான் அறிவித்து இருக்கிறது. அது ஈரானின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் ஓட்டைகளைக் காட்டுவதாக இருந்தது. இது தவிர்த்து ஏவுகணை உற்பத்தி நிலைகளை அழித்திருப்பதாக இசுரேல் கூறுகிறது.
ஆனால் அப்படியான சேதம் விளைந்ததாக உறுதிப்படுத்தும் செய்திகள் இல்லை. இந்தத் தாக்குதலை பூமிக்கடியில் உள்ள இராணுவக் கண்காணிப்பு மையத்தில் அமர்ந்து பார்த்த இஸ்ரேலிய அதிபரின் முகத்தில் ஈயாடவில்லை. எதிர்பார்த்த அளவு தாக்குதல் வெற்றி பெறவில்லை போலிருக்கிறது.
இப்படி ஒருவர்மாறி ஒருவர்மீது தாக்குதல் நடத்துவதும் அது மேற்காசியப் போராக வெடித்து உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஊடகங்கள் கிளறுவதும் வாடிக்கை ஆகியிருக்கிறது. ஒவ்வொரு தாக்குதலின் போதும் இராணுவ தொழில்நுட்ப அரசியல் நகர்வுகள் குறித்த தகவல்களைத் திரட்டி கட்டுரை எழுதுவதும் அடிப்படையில் எந்த பலனும் அற்றது.
நாள்தோறும் ஹமாஸ் காசாவை ஆக்கிரமித்திருக்கும் இசுரேலிய இராணுவத்தை வெளியேற்ற ஓரிருவரைக் கொல்வதும் பதிலுக்கு ஹமாசை ஒழிக்கிறேன் பேர்வழி என்று இசுரேலியா போர்விமானங்கள் குண்டுவீசி கொத்துக்கொத்தாக மக்களைக் கொல்வதும் தினசரி நிகழ்வாக மாறியிருக்கிறது. இப்படி அணையா நெருப்பாக ஓராண்டாகத் தொடரும் இந்தப்போர் எப்போது முடியும் என்ற அயர்ச்சி கலந்த கேள்வி எல்லோரின் முன் நிற்கிறது. இதற்கான சுருக்கமான விடை போரின் நோக்கத்தை அடையும்வரை போர் ஓயாது என்பதுதான். எனில் போரின் நோக்கம்தான் என்ன?
போரின் நோக்கம்
ஐநா மன்றத்தில் பேசிய இசுரேலின் அதிபர் நெதன்யாகு இசுலாமிய எதிர்ப்பியக்கத்தைச் சாபம் என்றும் இசுரேல் வழியான இந்தியா-மத்தியக்கிழக்கு-ஐரோப்பிய பொருளாதாரத் தடத்தை (ஐஎம்இசி IMEC) வரம் என்றும் காட்டும் இரு பாதகைகளைக் காட்டி போருக்கான காரணத்தையும் நோக்கத்தையும் தெளிவுபடுத்தினார். இந்தப்போர் அடிப்படையில் எரிபொருள் வணிக பாதைகள் தொடர்பானது என்று மின்னம்பலத்தைப் படித்து வருபவர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான்.
ஹமாஸ் தாக்குதலின் போதே இது சீனாவின் ஒபிஒஆர்(OBOR) ரசியாவின் ஐஎன்எஸ்டிசி(INSTC) வணிகப்பாதைகள் ஈரான் வழியாக செல்வதற்கு மாற்றாக அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட ஐஎம்இசி(IMEC) திட்டத்திற்கு எதிரானது; அதனைத் தடுத்து பாலஸ்தீன நாட்டு உருவாக்கக் கோரிக்கையை உலகின்முன் கொண்டுவந்து தனிநாடு அமைவதை உறுதிசெய்யும் நோக்கம் கொண்டது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.
ஏனெனில் போர் ஏதோ கோபத்தில் கண்ணை மூடிக்கொண்டு களத்தில் இறங்கி எதிரியை அடித்து நொறுக்கும் காரியமல்ல. போர் ஆயுதத்ததின் வழியாக முன்னெடுக்கப்படும் அரசியல். முக்கிய பொருளாதார நலனை நோக்கமாக வரையறுத்துக் கொண்டு அதனைக் கைப்பற்றுவதையோ கைப்பற்றியதைக் காப்பாற்றுவதையோ இலக்காகக் கொண்டு அதனை அடையும் செய்முறை, வழிமுறைகளை வகுத்துக் கொண்டு நாட்டைத் தன்பின்னால் அணிதிரட்டி உயிர்களைப் பலிகொடுத்து இலக்கை அடையப் போராடுவது.
வணிக வரலாறு
இப்படி உயிர்களைப் பலிகொடுத்து மேற்காசியப் பகுதியில் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் போர்களின் நோக்கம் ஒன்றுதான். ஆசிய ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளங்களையும் அவற்றை ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு செல்லும் வணிகப் பாதைகளையும் கைப்பற்றிக் கட்டுப்படுத்துவதே அப்போர்களின் நோக்கம். பயிரிடத்தக்க நிலம், எரிபொருள், கனிமவளம் உள்ளிட்ட இயற்கை வளம் குறைவாகப் பெற்ற ஐரோப்பா இந்த இயற்கை வளமும் அவற்றைப் பொருள்களாக மாற்றும் மனிதவளமும் கொண்ட ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் இருந்துதான் பெறவேண்டும்.
அப்படிப்பெற அந்தப் பொருள்கள் இக்கண்டங்களுக்கு இடையில் இருக்கும் மத்தியத் தரைகடலைத் தாண்டவேண்டும். ஆப்பிரிக்க கண்ட முனையில் எகிப்தும் ஆசிய கண்டமுனையில் துருக்கியும் இவ்விரண்டு பகுதிகளுக்கும் இடையில் பாலஸ்தீனம், இஸ்ரேல், சிரியா, லெபனான் நாடுகளும் இருக்கின்றன.
பண்டைய சிந்துவெளி, காவிரி, வைகை சமவெளி நாகரிக காலத்தில் பொருள்கள் இங்கிருந்து இம்மூன்று ஆறுகளின் வழியாக அரேபிய மற்றும் வங்கக் கடலை அடைந்து அங்கிருந்து நாகரிகம் செழித்த எகிப்துக்கு செங்கடல் மற்றும் நைல் ஆற்றின் வழியாகச் சென்று மத்தியத் தரைக்கடலை அடைந்தன அல்லது பாரசீக வளைகுடாவை அடைந்து அங்கிருந்து சுமேரிய நாகரிகம் செழித்த யூப்ரடீஸ் ஆற்றின் வழியாக மத்தியத் தரைக்கடலை அடைந்தன அல்லது நிலவழியாக இந்தியா, சீனாவில் இருந்து ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள், யூரேசிய எல்லைப் பகுதியில் உள்ள நாடுகள் வழியாக ஐரோப்பிய நாடுகளை அடைந்தன.
நிலம், நீர் ஆகிய இரண்டு வழிக்கும் ஈரான் முக்கியம் என்பதால் இந்த வணிகத்தின் முக்கிய புள்ளியாக இப்போதுவரை விளங்கி வருகிறது. அதேபோல எகிப்து, துருக்கி, பாலஸ்தீனம், லெபனான் நாடுகள் அன்று முதல் இன்றுவரை முக்கிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக இருந்து வருகின்றன. பொருள் வணிகத்துடன் இப்போது இந்தப் பகுதிகளில் குவிந்திருக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள் உற்பத்திக்கு முக்கியமான தளத்தகை சரக்காக இருப்பது (strategic commodity), இவற்றின் முக்கியத்துவத்தை மேலும் கூட்டி இருக்கிறது.
வணிகப்போர்களின் வரலாற்றுத் தொடர்ச்சி
ஆக வரலாற்றிலும் சரி இப்போதும் சரி மேற்காசியப் பகுதியிலும் யூரேசியப் பகுதியிலும் நடக்கும் போர்கள் அடிப்படையில் ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய கண்டங்களின் இயற்கை வளத்திற்கும் இந்தக் கண்டங்களுக்கு இடையிலான வணிகத்தைக் கட்டுப்படுத்துவதற்குமான போர்களாக இருக்கிறது.
அன்றைய போர்களின் மையம் விவசாய உற்பத்திக்கு அடிப்படையான நிலமும் நீரும் அமையப்பெற்ற பகுதிகளும் அந்தப் பொருள்களைக் கொண்டுசெல்லும் வழிகளுக்குமானதாக இருந்தது. அன்றைய விவசாய உற்பத்திப் பெருக்கத்துக்கும் அதனைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்கள் செய்வதற்கும் அடிப்படையான இரும்பு உற்பத்தியைக் கைக்கொண்ட கிரேக்க, ரோமப் பேரரசுகள் உலக ஆதிக்கம் பெற்றன.
இன்றைய ஏகாதிபத்திய காலகட்ட தொழிற்துறை உற்பத்திக் காலத்தில் உற்பத்திக்கான கனிமவளங்கள், தொழில்நுட்பங்கள், சந்தைபடுத்தும் நவீன வணிக, இராணுவ நுட்பங்கள் முக்கியமாக எரிபொருள் உற்பத்தி என அனைத்தையும் ஒருங்கே பெற்ற அமெரிக்கா உலக ஆதிக்கம் பெற்றது. அன்றைய இரும்பு உருக்குத் தொழில்நுட்பங்கள் மற்ற நாடுகளுக்கும் பரவி பேரரசுகளின் பொருளாதார சுமைகூடி நலிந்தபோது மற்றவர்கள் தனக்கான பங்கை அடைய அப்பேரரசுகளைத் தாக்கி உடைத்தார்கள்.
அதேபோல இப்போதும் இராணுவ, உற்பத்தி, தகவல் தொழில்நுட்பங்கள் பரவி அமெரிக்காவின் பொருளாதார சுமைகூடி நலிந்து நிற்கிறது. அன்றுபோலவே அவரவர் அடைந்திருக்கும் இயற்கைவளம், தொழில்நுட்ப வலிமையைப் பொறுத்து தனக்கான பங்கை அடைய அமெரிக்க ஏகாதிபத்திய பேரரசை உடைக்க இன்றும் முற்படுகிறார்கள். அன்றைய பேரரசுகளைப்போல அமெரிக்கா தான் அடைந்த ஆதிக்கத்தை விடாமல் தக்கவைக்கப் இன்று போராடிக் கொண்டிருக்கிறது. அது மேற்காசியாவிலும் யூரேசியாவிலும் இசுரேல்-ஈரான்-லெபனான்-பாலஸ்தீனப் போராகவும் உக்ரைன்-நேட்டோ-ரசியப் போராகவும் வெடித்து நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த இரண்டு போர்களையும் எந்தத் தொடர்புமற்றதாக உக்ரைனியப்போரை ரசியாவின் ஆதிக்கப் போராகவும் அல்லது நேட்டோ அமெரிக்க நாடுகளின் ஆதிக்கப் போராகவும் நம்முன் கடை விரிக்கப்படுகிறது. அதேபோல பாலஸ்தீனப்போரை இசுரேலின் பாதுகாப்புக்கான போராகவும் அல்லது அடாவடி ஆதிக்கப் போராகவும், ஈரானிய ஆதரவு தீவிரவாத இயக்கங்களின் தாக்குதலாகவும் அல்லது அவர்களின் விடுதலைக்கான போராகவும் தனித்தனியாகத் பிரித்துச் சொல்லப்படுகிறது.
ஆனால் இரண்டு போர்களும் அடிப்படையில் அமெரிக்க ஆதிக்கத்தைத் தக்கவைக்கவும் உடைக்கவுமான போர்கள். அதன் நோக்கம் இன்றைய தொழிற்துறை உற்பத்திக்கு அடிப்படையான எங்கும் கிடைக்காத எரிபொருள் கனிமவளங்களைக் கைப்பற்றவும் அவற்றைக் கொண்டு செல்லும் பாதைகளைக் கட்டுப்படுத்தவுமான போர்கள். ஆதிக்கத்தைத் தக்கவைக்க போராடும் அமெரிக்க-நேட்டோ அணிகளும் உடைக்க முற்படும் சீனா-ரசிய அணியினரும் தங்களது நோக்கத்தை எட்டும்வரை இந்தப் போர்கள் முடியாது; தொடரும்.
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய்யை முந்திய அல்லு அர்ஜுன் !