தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவரது வருகையால் மீண்டும் நெப்போட்டிஸம் என்ற வார்த்தை கடந்த சில நாட்களாக விவாத மேடைகளில் உச்சரிக்கப்பட்டு வருகிறது.
நெப்போட்டிஸம் என்பது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தன்னுடைய குடும்பத்தினருக்கோ, உறவினர்களுக்கோ அவர்களுக்கு தேவையான பதவியை, வசதிகளை, சலுகைகளை பெற்று தருவதே. நெப்போட்டிசம் என்பது உலகில் புதியதாக தோன்றிய விவகாரம் அல்ல.
ஆதிகாலத்தில் தோன்றிய முதல் தலைமுறை முதல் தொடர்ந்து வந்த மன்னராட்சி, பின்னர் வந்த மக்களாட்சி வரையிலும் இது நடந்துகொண்டே தான் இருக்கிறது. ஒருவகையில் கடந்த நூற்றாண்டுவரை நமது வழக்கத்தில் இருந்த குலத் தொழில் முறை கூட அதிகாரப்பூர்வமான நெப்போட்டிசம் தான்.
உலகின் பல பகுதிகளில் பேசப்பட்டு வரும் இந்த நெப்போட்டிசம், இந்தியாவிலும் பன்னெடுங்காலமாக நடந்து கொண்டே தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் ’காந்தி’ குடும்பம் முதல் மத்திய பாஜக அமைச்சர் அமித் ’ஷா’ குடும்பம் வரையிலும் நெப்போட்டிஸத்திற்கான உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக தான் நெப்போட்டிஸம் என்ற வார்த்தை அதிகளவில் சர்ச்சைக்குரிய வார்த்தையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பின் தான் இந்தியாவில் நெப்போட்டிஸம் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன.
சுஷாந்த் மரணத்திற்கு நெப்போட்டிஸம் காரணமா?
பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவர் நடித்தது மொத்தம் 12 படங்கள் தான். ஆனால் எம்.எஸ் தோனி : தி அண்டோல்டு ஸ்டோரி மூலம் இந்தியா முழுவதும் மிக பிரபலமான நடிகராக அறியப்பட்டார். அதன் பிறகு வித்தியாசமான கதையம்சம் கொண்ட அவரது முந்தைய படங்களை பார்த்து ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், சுஷாந்தின் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு இந்திய அளவில் பிரதிபலித்தது.
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மர்மமான முறையில் சுஷாந்த் சிங் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மர்மமான இந்த மரணம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் சுஷாந்தின் மரணத்திற்கு மன அழுத்தம் காரணமாக கூறப்பட்டது. எனினும் கங்கனா ரனாவத் உட்பட சில பாலிவுட் நடிகர், நடிகையர்களும் சுஷாந்தின் மரணத்துக்கு பாலிவுட்டில் நடக்கும் வாரிசு அரசியல் (நெப்போட்டிஸம்) தான் காரணம் என குற்றம் சாட்டினர்.
பாலிவுட் திரையுலகம் திறமையானவர்களை விட ஸ்டார் நடிகர்களின் வாரிசு நடிகர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதிலேயே குறியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சுஷாந்த் மரணத்தில் பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், பாலிவுட் உச்ச நட்சத்திரங்களான சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் அமீர்கான் ஆகியோரின் பெயர்கள் கூட அடிபட்டது.
அதுமுதல் இந்த கான் நடிகர்களின் படங்கள் எப்போது வந்தாலும் அதனை புறக்கணிக்குமாறு டிவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இப்போது அமீர்கான் நடிப்பில் வரும் 11ம் தேதி வெளியாக உள்ள லால்சிங்சத்தா திரைப்படத்திற்கு கூட #BoycottLaalSinghChaddha என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதேவேளையில் இதற்கு பின்னால் பாலிவுட்டில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த கான் நடிகர்களின் ஆதிக்கத்தினை தடுக்கும் வகையில் வெறுப்பினை விதைக்கும் காவி அரசியலின் முயற்சி என்றும் இது பார்க்கப்படுவது வேறுகதை.
கோலிவுட் – நெப்போட்டிஸம் – மீராமிதுன்!
பாலிவுட்டில் ஆரம்பித்த இந்த நெப்போட்டிஸம் குறித்த சர்ச்சை இந்தியாவின் மற்ற திரையுலகிலும் பரவியது. வாரிசு நடிகர்கள் அதிகமாக இருக்கும் தெலுங்கு, தமிழ் மலையாள திரையுலகிலும் நெப்போட்டிஸம் விவாத பொருளாக மாறியது. கோலிவுட்டில் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, அருண் விஜய், ஜீவா, உதயநிதி ஸ்டாலின், விக்ரம் பிரபு, சிபிராஜ், ஷாந்தனு, துருவ், கெளதம் கார்த்திக் என எண்ணற்ற வாரிசு நடிகர்கள் உள்ளனர்.
இதனால் 2020ம் ஆண்டு கோலிவுட்டிலும் நெப்போடிஸம் குறித்த சர்ச்சை எழுந்தது. அப்போது தமிழ் சினிமாவில் நிலவும் நெப்போட்டிஸம் குறித்த கருத்துகளை சர்ச்சையாக பதிவிட்டு மொத்த சமூகவலைதளங்களிலும் நிரம்பியவர் நடிகையும், பிரபல மாடலுமான மீராமிதுன்.
இங்கு எண்ணற்ற வாரிசு நடிகர்கள் உள்ள நிலையில் விஜய் மற்றும் சூர்யாவை மட்டுமே டார்கெட் செய்த மீராமிதுன் அவர்களை நெப்போட்டிஸம் ப்ராடெக்ட்ஸ், கோலிவுட் மாஃபியா என்று குற்றஞ்சாட்டினார். அதோடு அவர்களுக்கு ஆதரவாக தான் கோலிவுட் மாபியாவே இயங்குகிறது என்றும் குறிப்பிட்டார். இதற்கு அவர்களது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் விடாமல் விஜய்யின் மனைவி சங்கீதா, அவரது மகன் சஞ்சய் மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோர் குறித்து அவதூறாக விமர்சித்தார். அதோடு பிரபல இயக்குநரான மணிரத்னமும் தனது படத்தில் வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பளித்து நெப்போட்டிஸத்தை வளர்ப்பதாக குற்றஞ்சாட்டினார். அவர் தெரிவித்த கருத்துகள் கோலிவுட்டில் கடும் சர்ச்சையையும், அதிருப்தியையும் கிளப்பியது. இதனையடுத்து, சினிமாவை தாண்டி விஜய், சூர்யா இருவரும் மக்களுக்கு பல நல்ல விஷயங்கள் செய்து வருகின்றனர்.
விளம்பரத்திற்காக அவர்களை இழிவாக பேச வேண்டாம் என்று மீராமிதுனை கோலிவுட்டின் மூத்த இயக்குநர் பாரதிராஜா கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து வனிதா, சனம் ஷெட்டி உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் மீராமிதுன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களையும் இழிவாக பேசி ட்விட் செய்தார் மீராமிதுன்.
’நெப்போட்டிஸம்’ தாண்டி தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவமரியாதையான கருத்துகளை வெளியிட்டதால் மீராமிதுனுக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை.
அதிதி ஷங்கர் வருகையும் – ஆத்மிகாவின் டிவிட்டும்!
மீராமிதுன் கைது நடவடிக்கைக்கு பிறகு நெப்போட்டிஸம் குறித்து தமிழ் சினிமாவில் அவ்வளவாக விவாதிக்கப்படவில்லை. இந்நிலையில் விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் அதிதி ஷங்கரின் வரவால் நெப்போட்டிஸம் குறித்த பேச்சு சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.
முன்னணி இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. மருத்துவம் படித்துள்ள இவர், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் அறிமுகமாகிறார். இப்படம் வரும் 12-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள மாவீரன் படத்தில் கமிட் ஆகியுள்ளார் அதிதி. இப்படத்தில் அவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 3ம் தேதி படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டது.
அதற்கு அடுத்த மறுநாளே, நெப்போட்டிஸத்தை தொடர்புபடுத்தி நடிகை ஆத்மிகா டிவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து மறைமுகமாக அதிதி ஷங்கரை தாக்குவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவரது பதிவில், , ”செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஏணி வழியாக எளிதாக செல்ல முடிகிறது, ஆனால் மற்றவர்களுக்கு… ‘பாத்துக்கலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. கோவையைச் சேர்ந்த இவர் விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். அதன்பின்னர் வைபவுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள காட்டேரி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே ஆத்மிகா நடித்த நரகாசூரன், கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்கள் கிடப்பில் உள்ளன. அதேவேளையில் அடுத்தடுத்து நடிக்க படங்கள் இல்லாத நிலையில் தவித்து வருகிறார்.
இந்நிலையில் ஆத்மிகாவின் டிவிட்டர் பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலானது. அந்த பதிவில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. எனினும், முதல் படம் ரிலீஸ் ஆவதற்குள் அடுத்தப்படம், அதுவும் கோலிவுட்டில் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஒப்பந்தமாகி உள்ள நிலையில், அவரை டார்கெட் செய்து தான் ஆத்மிகா இந்த பதிவை செய்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
நெப்போட்டிஸம் எங்கு ஆரம்பிக்கிறது?
தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை முன்பை விட இப்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்தவர்களை வரவேற்கும் கலையுலகம், தனது சொந்த குடும்பத்தில் ஒருவர் ஆசைப்படும் போது வேண்டாமென்றா தள்ளி வைக்கும்? ஆனால் அங்கு தான் நெப்போட்டிஸத்தின் ஆரம்ப புள்ளி உருவாகிறது.
கிராமத்தில் இருந்து எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் பெரும் கனவுகளுடன் வருபவருக்கும், நடிகர் வீட்டு குடும்பத்தின் வாரிசுக்கும் தமிழ் திரையுலகில் ஒரே அளவில் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றே பதில் வரும். இங்கு சினிமா ஆசையுடன் வீடு தாண்டி வந்த சென்னைக்கு ஓடி வரும் பாமரனுக்கு வாய்ப்புகள் பாரபட்சமின்றி மறுக்கப்படுவதும், திரையுலக வாரிசுகளுக்கு சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்படுவதும் தான் நெப்போடிஸம் ஆரம்பமாகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தலையில் பொதிந்த கனவுகளுடன் தலைநகர் நோக்கி வந்தவர்களை சென்னை நன்கறியும். அதில் பலர் எந்தவிதமான வாய்ப்பும் கிடைக்காமல் பொத்தி வைத்த கனவுகளை தண்ணீரிலும், கண்ணீரிலும் கரைத்து விட்டு மீண்டும் ஊருக்கே சென்றவர்களை மெரினா கடற்கரை அறியும்.
ஆனால் மறுக்கப்படும் வாய்ப்புகளை எல்லாம் ஏச்சுக்கும், பேச்சுக்கும், கேலிக்கும் கிண்டலுக்கும் நடுவில் தூக்கி தூரம் வைத்துவிட்டு தங்களது திறமையால் சாதித்து காட்டியவர்கள் கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும், பாரதிராஜா, பாலா போன்ற இயக்குநர்களும் என பட்டியல் நீளும்.
உண்மையில் நெப்போடிஸத்தால் திரையுலகில் எளிதில் வாய்ப்பு கிடைத்து வென்றவர்களை விட தங்களது திறமையால் தனி சாம்ராஜ்யம் அமைத்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். அவர்கள் பலருக்கும் முதலில் வாய்ப்பு எனும் கதவு அவர்களது முகத்திற்கு முன்னால் ஓங்கி அடைக்கப்பட்டிருக்கும் என்றால் யாரும் மறுக்கமுடியாது.
எது ஜெயிக்கும் நெப்போட்டிஸமா? திறமையா?
முன்னமே சொன்னது போன்று இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில் உள்ள சினிமா துறைகளிலும் வாரிசு நடிகர்கள் வரவு அதிகமாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் இன்றைய தலைமுறை ஹீரோக்களான ராம்சரண், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், நாக சைதன்யா என எல்லோருமே வாரிசு நடிகர்கள் தான்.
மலையாளத்தில் துல்கர் சல்மான், பிரணாவ் மோகன்லால், பகத் பாசில் ஆகியோரும் வாரிசு நடிகர்களே. அதேபோன்று கோலிவுட்டிலும் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட எண்ணற்ற நடிகர்கள், நடிகைகள் பலரும் தங்களது குடும்பத்தினர் உதவியுடன் சினிமாவுக்கு வந்துள்ளனர்.
எனினும் நெப்போட்டிஸத்தால் வந்தவர்கள் அனைவரும் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளார்களா என்பது கேள்விக்குறி தான். வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்புகள் வேண்டுமானால் எளிதாக கிடைத்துவிடலாம். ஆனால் திரையில் ஜொலித்து மக்கள் மனதை ஜெயிக்க திறமை மிக அவசியமாகிறது.
நெப்போட்டிஸம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா இன்று திரையுலகை வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள் என்றால், அதற்குபின் அவர்களது அபார திறமையும், கடும் உழைப்பும் உள்ளது. புகழ்மிக்க நடிகரின் மகனாக, மகளாக இருந்தாலும் பல நடிகர்களின் தங்களுடைய படத்தின் வெற்றிக்காக போராடி வருவது கண்கூடாக தெரியும்.
இன்று நாம் சந்திக்கும் அனைத்து துறைகளிலும் நெப்போட்டிஸம் காணப்பட்டாலும், சினிமா போன்ற கலைத்துறைகளில் திறமை இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். அதனை வளர்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்று. அதே நேரத்தில் எந்த பின்புலமும் இன்றி திரைத்துறை நோக்கி வருபர்களுக்கு அவர்களது திறமைக்கு மதிப்பளித்து வாய்ப்பளித்தால் நெப்போட்டிஸம் போன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இனி தமிழ் சினிமாவில் கேட்காமல் தடுக்க முடியும்!
–கிறிஸ்டோபர் ஜெமா
திருச்சிற்றம்பலம்: தனுஷ் கேரக்டர் என்ன?
Well write up. Thank you Christopher Jema.