தேசிய புள்ளியியல் தினமும் புள்ளியியலின் முக்கியத்துவமும்!

இந்தியா சிறப்புக் கட்டுரை

பேராசிரியர். எஸ். மாதேஸ்வரன்

இன்று தேசிய புள்ளியியல் தினம். கடந்த முப்பது ஆண்டுகளாக பொருளாதார அளவியலை ( Econometrics) முதன்மை பாடமாக கற்பித்து வருபவனாகவும், குடிமை தேர்வுகளில் ஒன்றான, இந்திய புள்ளியியல் பணி ( Indian Statistical Service) அலுவலர்களுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக பயிற்சி ஒருங்கிணைப்பாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றிவரும் எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த தேசிய புள்ளியியல் தினம் ஓர் சிறப்பு நாள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 29 ஆம் தேதி தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமைக்குரிய புள்ளியியல் நிபுணர் பிரசன்ன சந்திர மஹலநோபிஸ் அவர்களின் பிறந்த நாளே தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1931 ஆம் ஆண்டு அவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை உருவாக்கினார். அது இந்திய புள்ளியியல் உலகமாகவே பின்நாளில் வளர்ச்சி அடைந்துள்ளது. மஹலநோபிஸ் அவர்களின் புள்ளியியல் திறனும், அதன் மீதிருந்த தாகமும், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான ஐந்தாண்டு திட்டங்களை, வரைபடம் போல் அவரால் உருவாக்க முடிந்தது. சிறந்த முடிவுகளை மேற்கொள்ள புள்ளியியல் பெரும் ஆயுதமாக பயன்படுகிறது.

National Statistics Day 2023

சிக்கலான புள்ளிவிவரங்களிலிருந்து வளர்ச்சிக்கான கூறுகளை அடையாளம் காணவும் அதிலிருந்து அறிவார்ந்த முடிவுகளை எடுக்கவும் புள்ளியியலே பயன்படுகிறது. இன்றைய உலகில் ஏராளமான புள்ளிவிவரங்கள் கிடைக்கிறது. அவற்றை நமக்கு ஏற்றவாறு செதுக்கி பயன்சார் தரவுகளாக மாற்றிக் கொள்ள புள்ளியியலே பயன்படுகிறது.

தனிநபர்கள், தொழில் வர்க்கம் புரிவோர் கொள்கை வகுப்பாளர்கள் என எல்லோருக்கும் முடிவுகளை மேற்கொள்ளவும் வழிமுறைகளை கண்டறியவும் அடிப்படை ஆதாரமாக இருப்பது புள்ளியியல் பகுப்பாய்வுகளே‌.

குன்றாத வளர்ச்சி இலக்குகளை அடையவும், அளவிடவும் புள்ளியியல் தேவை. சமூக பொருளாதார வளர்ச்சியை கண்காணிக்கவும், குன்றாத வளர்ச்சி குறியீடுகளை நோக்கி நகர்த்தவும் புள்ளியியல் பெரும் பங்கு வகிக்கிறது.

புள்ளியியல் பங்கு

புள்ளிவிவரங்கள் மூலம் வளர்ச்சியில் ஏற்படும் இடைவெளிகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப வளங்களை ஒதுக்கீடு செய்ய இயலும். மக்களின் வாழ்வு மேம்படவும் சமவிகித வளர்ச்சியை எட்டவும் புள்ளிவிவரங்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

தனிநபர்கள் வணிக நிறுவனங்கள் முன்னேற்றம் காண ‌தேவையான முடிவுகளை மேற்கொள்ளவும் புள்ளியியல் உறுதுணையாக அமைகிறது. சந்தை ஆராய்ச்சி, நடத்தை இயல் பகுப்பாய்வு, தேவை முன்கணிப்பு போன்றவையும் புள்ளிவிவரங்களை நம்பியே உள்ளது. சிறு குறு தொழில் முனைவோர் சந்தையின் போக்குகளை அறியவும், தங்களுக்கான வாடிக்கையாளர்களை அடையாளம் காணவும் அதனை ஒட்டிய உத்திகளை வகுக்கவும் தேவை புள்ளியியல்.

இதனைத் தாண்டி, கல்வி, சுகாதாரம், தனிநபர் நிதி போன்றவற்றை திட்டமிடவும் திட்டமிட்ட இலக்குகளை செவ்வனே அடையவும் புள்ளியியல் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேசிய புள்ளியியல் தினம், புள்ளியியல் திறன்கள் மற்றும் புள்ளியியல் அறிவுத் தேவையை பொது மக்களுக்கு எடுத்துக் கூறும் நாளாகும். புள்ளியியல் அறிவை வளர்த்துக் கொள்ளவும், அதனை எப்படி பயன்படுத்துவது, புள்ளிவிவரங்களை எவ்வாறு நுட்பமான முறையில் பகுப்பாய்வு செய்வது?, புள்ளியியல் முடிவுகளை எவ்வாறு பொருத்தி பார்ப்பது? அதன் அடிப்படையில் எப்படி முடிவுகளை மேற்கொள்வது? போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முக்கியத்துவத்தை உணர்த்தும் நாளாகவும் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது சமூகத்தில் புள்ளியியலின் பங்கை புரிந்து கொள்ளவும், கொள்கை முடிவுகள் மேற்கொள்வதில் புள்ளிவிவரங்களின் பங்கை வலியுறுத்தும் நாளாகவும் இதனைக் கொண்டாட வேண்டும்.

குன்றாத வளர்ச்சி

2023 ஆம் ஆண்டிற்கான, ‘தேசிய புள்ளியியல் தின’ பேசு பொருள் “குன்றாத வளர்ச்சி இலக்குகள்”. குன்றாத வளர்ச்சி இலக்குகளை எட்ட போதுமான விவாதங்களை செரிவாக்கவும் புள்ளிவிபர இடைவெளியை நிரப்பவும், குன்றாத வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் உள்ள கால இடைவெளியை இட்டு நிரப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் இந்த பேசு பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குன்றாத வளர்ச்சி என்ற கருத்தாக்கம் 1987ஆம் ஆண்டு பிரண்ட்லேண்டு கமிசன் அறிக்கை மூலம் முன் மொழியப் பட்டது. ” வளர்ச்சி என்பது எதிர்கால சந்ததியின் தேவைகளை பாதிக்காத வகையில் நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது” என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது. குன்றாத வளர்ச்சியை அடைய சமூக பொருளாதார சூழலியல் தேவைகள் ஒருங்கிணைக்கப்பட ‌ வேண்டும்.

இந்த நோக்கில் தான் ஐக்கிய நாடுகள் சபை ஆயிரத்தாண்டு இலக்குகளை வடிவமைத்தது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு, குன்றாத வளர்ச்சிக்கான பேசு பொருளை, முன்னெடுக்கும் போது உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான வரையறை ஒருங்கிணைக்கப்பட்டது. “நமது உலகை மாற்றி அமைப்போம்: 2030 ல் குன்றாத வளர்ச்சி” என்ற தலைப்பிலான ஆவணத்தை, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியன்று நடந்த, 70 வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமலாக்கம் செய்தது. 169 இலக்குகளை உள்ளடக்கிய, 17 குன்றாத வளர்ச்சி இலக்குகளை அது வரையறை செய்தது.

குன்றாத வளர்ச்சி இலக்குகளே அனைவருக்குமான வளர்ச்சியை எட்டுவதற்கான வரைபடம். 1/1/2016 முதல் குன்றாத வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பயணம் நடைமுறைக்கு வந்தது. குன்றாத வளர்ச்சி இலக்குகள் உலகில் உள்ள அனைவருக்குமானது. குன்றாத வளர்ச்சி இலக்குகள் ஒன்றோடொன்று தொடர்புடையது. பகுக்க முடியாதது. எனவே ஒவ்வொரு இலக்கும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். ஒருவர் கூட விட்டு போய்விடக் கூடாது.

மக்கள், புவிக்கோளம், மகிழ்ச்சி, அமைதி மற்றும் பங்கேற்பு ஆகிய ஐந்து தூண்கள் அடைய வேண்டும் என்பதே இதன் பேரிலக்கு. இதனை ஆங்கிலத்தில் 5Ps அல்லது 5 pillars People, Planet, Prosperity, Peace and Participation என்று அழைக்கின்றனர். 2030 வரை குன்றாத வளர்ச்சி இலக்குகளில் ஏற்படும் முன்னேற்றத்தை நடைமுறை ஆக்கம் செய்வதும், மதிப்பீடு செய்வதும் அந்தந்த நாடுகளின் பொறுப்பு.

இந்திய அரசு ‘எல்லோரின் ஒத்துழைப்பு’ ‘எல்லோரின் வளர்ச்சி’. ‘எல்லோரின் நம்பிக்கை’ ‘எல்லோரது முயற்சி” என்ற முழக்கங்களை உருவாக்கியுள்ளது. இது குன்றாத வளர்ச்சி இலக்குகளோடு ஒத்திசைந்து செல்வதாக உள்ளது. இதன் அடிப்படையில், குன்றாத வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்ற, தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு தேசிய குறியீட்டு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. அதனை, தேசிய அளவில் இந்திய அரசும், மாநில அளவில், அந்தந்த மாநில அரசும் அமலாக்கம் செய்யும்.

இந்தியாவை போன்ற நாடுகளில் குன்றாத வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் மூலமே அடையமுடியும். வேற்றுமைகள் நிறைந்த நம் நாட்டில் உள்ளூர் மட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சவால்கள் இருக்கும். அதனை உள்ளூர் மட்டத்தில் தான் தீர்க்க முடியும். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியதாக குன்றாத வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்ற முயலவேண்டும். பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உள்ளூர் மட்டத்தில் மேற்கொள்வதன் மூலம் பல்வேறு படிப்பினைகள் பல்வேறு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பெற முடியும். அவை,வெவ்வேறு பகுதி பிரச்சினைகளை தீர்க்கவும், இதர நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்கவும் கூட பயன்படலாம்.

நிதி ஆயோக் இந்தியாவுக்கான உள்ளூர் மயமாக்கலுக்கான மாதிரியை உருவாக்கியுள்ளது. 1. நிறுவனங்களின் மீதான உரிமையை உருவாக்குதல் 2. தீவிர கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்யும் முறையை உருவாக்குதல் 3. குன்றாத வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றும் திறனை அதிகரித்தல், திட்டமிடல் மற்றும் கண்காணித்தல் 4. முழுமையான சமூகத்தை உருவாக்கும் அணுகுமுறையை உருவாக்குதல் ஆகியவற்றின் மீது ஏக காலத்தில் கவனம் செலுத்தும் உள்ளூர் மய மாதிரி அணுகுமுறை.

வரும் ஆண்டுகளில், மத்திய அரசு, பங்கேற்பாளர்களோடு இணைந்து, உள்ளூர் மயமாக்கும் முறையை, அதனை கண்காணிக்கும் முறை, ஒருங்கிணைக்கும் விதம் ஆகியவற்றை பலப்படுத்த வேண்டும். குன்றாத வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றும் பணிகளை முடுக்கி விட வேண்டும். இந்த உள்ளூர் மயமாக்கும் முயற்சியில் விளிம்பு நிலை மக்களையும் இணைத்துக் கொள்வதை உத்திரவாதம் செய்தல் அவசியம்.

பேராசிரியர் மஹலநோபிஸ் விட்டுச் சென்றுள்ள புள்ளியியல் என்னும் ஆற்றல் மிக்க கருவி, தொடர்ந்து வளர்ச்சிக்கான உருமாற்ற சக்தியாக பயன்பட வேண்டும்.தேசிய புள்ளியியல் தினத்தை கொண்டாடும் இந்தத் தருணத்தில் நம்பகமான, துல்லியமான புள்ளிவிவரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். புள்ளிவிபர அறிவாற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். நம் நாட்டிலும், அதனை தாண்டியும், சரியான முடிவுகளை மேற்கொள்ள புள்ளியியல் மூலைக்கல்லாக பயன்பட வேண்டும்.

குறிப்பு: பெங்களூரில் உள்ள,தென்னிந்திய இந்திய தேசிய மாதிரி கூறெடுப்பு ( NSSO) நிறுவனத்தில் தேசிய புள்ளியியல் தினமான ஜுன் 29 ஆம் தேதி அன்று பேராசிரியர் மாதேஸ்வரன் ஆற்றிய உரை.

தமிழில்: நா.மணி

பேராசிரியர் எஸ். மாதேஸ்வரன், தமிழ் நாட்டை சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சமூக பொருளாதார மாற்றத்திற்கான ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார். கர்நாடக அரசின் மிக உயரிய விருதான கெம்பேகௌடா விருதைப் பெற்றவர். கர்நாடக அரசின் திட்டக் குழு உறுப்பினர்.

மணிப்பூருக்கு புறப்பட்டார் ராகுல் காந்தி

களைகட்டிய பக்ரீத் பண்டிகை!

வாக்னர் கிளர்ச்சி: ரஷ்ய ராணுவ தளபதி கைதா?

விமர்சனம்: மாமன்னன்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *