தமிழ் சினிமா வரலாற்றில், மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத படமாக இடம்பெற்று விட்ட படம் எம்.ஜி.ராமச்சந்திரன் இரட்டை வேடங்களில் நடித்து இயக்கி தயாரித்த நாடோடி மன்னன்.
எம்.ஜி. ஆர் நடித்த திரைப்படங்களில் இன்றளவும் தலைமுறை கடந்து ரசித்து பார்க்ககூடிய படங்களில் நாடோடி மன்னன், அடிமை பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரைவீரன், மகாதேவி, உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களாகும்.
அவற்றில் நாடோடி மன்னன் படம் 1958ல், இதே ஆகஸ்ட் 22ல் வெளியானது சரியாக.. இன்றோடு அறுபத்தி ஐந்து ஆண்டுகள்..அந்த படம் பற்றிய தகவல்களை இன்றைய தலைமுறைக்கு பகிரவே இந்த கட்டுரை.
நாடோடி மன்னன் கதை என்ன?
ஒரு புரட்சிகரமான இளைஞர் மன்னர் ஆட்சியை ஒழித்து மக்களாட்சியை கொண்டுவர வேண்டும் என்று போராடுவார். அவர் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு போராடிய நிலையில் சிறையில் அடைக்கப்படுவார். அவரது சிறை அருகிலேயே நாயகியும் இருப்பார்.
இந்த நிலையில் மன்னருக்கு திடீரென மயக்கம் ஏற்பட மன்னரின் முகச்சாயலில் இருக்கும் சிறையில் இருக்கும் நாடோடியை ஒரே ஒரு நாள் மன்னனாக நடிக்கும்படி மந்திரி கேட்டுக் கொள்வார். நாட்டின் மன்னனாக அவர் நடிக்கும் போது திடீரென உண்மையான மன்னன் ஆகவே மாறி விடுவார் என்பது தான் கதையின் டுவிஸ்ட்.
இந்த நிலையில் மன்னரை கன்னித்தீவுக்கு வில்லன்கள் கடத்தி விட இளவரசி ரத்னாவையும் அதே வில்லன்கள் கடத்திவிட மன்னரையும் இளவரசியையும் ஹீரோ எப்படி மீட்டார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
மன்னன் மார்த்தாண்டன் மற்றும் புரட்சி வீரன் வீராங்கன் ஆகிய இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார்.
நாயகியாக பானுமதி மற்றும் சரோஜாதேவி நடித்திருப்பார்கள். சந்திரபாபு காமெடி இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது.
மேலும், இந்த படத்தில் பி.எஸ்.வீரப்பா மற்றும் எம்.என்.நம்பியார் ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்திருப்பார்கள். அதிலும் எம்.ஜி.ஆர் உடன் நம்பியார் போடும் வாள் சண்டையின் போது அரங்கம் அதிர்ந்தது.
திரையுலகில் எம்ஜிஆரும் மறைந்த முதல்வர் கலைஞரும் ஒரே நேரத்தில் ஏற்றம் பெற காரணமாக இருந்த படங்கள் 1950ல் வெளிவந்த மருதநாட்டு இளவரசியும், மந்திரி குமாரியும்..
அதன்பிறகு 1953ல் படம் தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு எம்.ஜி.ஆர் வந்தபோது, கதை வசனத்திற்கு கலைஞர் தயாராக இருந்தார். ஆனால் படத்தயாரிப்பு கைகூட வில்லை. பிறகு மலைக்கள்ளன், மனோகரா படங்களின் வெற்றிகளால் அந்தப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞரின் திரையுலக மார்கெட் உச்சத்தில் இருந்த காலம்.
அதேவேளையில் மலைக்கள்ளன், குலேபகாவலி, தாய்க்குப்பின்தாரம் மதுரைவீரன், அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற தொடர் வெற்றிகளால் எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக உச்சம் தொட்டார்.
இரண்டாம் முறையாக சொந்தப்படம் தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு எம்.ஜி.ஆர் வந்தபோது அவரின் செயல்பாடுகள் முற்றிலும் விநோதமாக இருந்தன.
திராவிட முன்னேற்ற கழக கட்சியின் கொடியை தாங்கிப்பிடிக்கும் தயாரிப்பு நிறுவன லோகோவை வைத்து நாடோடி மன்னன் படத்தின் முதல் காட்சியாக திரைப்படத்தில் இடம்பெற வைத்தவர் அன்றைக்கு தமிழ் சினிமாவுக்கு வசனம் எழுதுவதில் உச்சத்தில் இருந்த தனது நண்பர் கலைஞரை ஒப்பந்தம் செய்யவில்லை.
அதற்கு காரணம் தாம் நினைத்த வசனங்களை படத்தில் வைப்பது என்பது கலைஞரிடம் வசனம் எழுத கொடுத்து விட்ட பிறகு டிக்டேட் செய்ய முடியாது என்பதில் எம்.ஜி.ஆர் தெளிவாக இருந்தார்.
படத்தில் ஆட்சிக்கு வந்த மன்னனாக எம்.ஜி.ஆர் அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சி கள் முழுக்க முழுக்க அவரின் சிந்தனைகள்.
அதனால் வசனம் எழுத கவிஞர் கண்ணதாசனை ஒப்பந்தம் செய்தார்.
அவருக்கு துணையாக ரவீந்தரையும் இணைத்தார்.
படத்திற்கு கண்ணதாசன் பாடல் எழுதவில்லை வேறு எட்டு பேர் எழுதினார்கள். எல்லா பாடல்களும் ஹிட்டானது. ஆனாலும் ஒற்றை ஆளாய் பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மட்டுமே பேசப்பட்டார்.
முதன்முறையாக இரட்டைவேடம், படத்தயாரிப்பு, இயக்கம் என்பதையெல்லாம் நாடோடிமன்னன் படம் என்றாலே எங்கும் எம்.ஜி.ஆர் எதிலும் எம்.ஜி.ஆர் என்ற பெயர் மட்டுமே பேசும்படி பார்த்துக்கொண்டார்.
பராசக்தி, மனோகரா என்றால் ஏவி.எம்.மோடு சிவாஜி கணேசன், கலைஞர் நினைவுகூறப்படுவார்கள் மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் என்றால் மாடர்ன் தியேட்டர்ஸ், பட்சி ஸ்ரீராமுலு, கலைஞர், எம்ஜிஆரும் நினைவுகூறப்படுவார்கள்
ஆனால் நாடோடி மன்னன் என்றால் அதன் வெற்றியில் தாம் மட்டும் தான் நினைக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு அதனை சாதித்தும் காட்டினார் எம்.ஜி.ஆர்.
”என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை”
எம்.ஜி.ஆர் திரைப்பட வரலாற்றில் அவருக்கு நம்பர் ஒன் மாஸ் வசனம் இதுதான். நாடோடி மன்னன் (1958) வசனம் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
“சொன்னாலும் புரிவதில்லை மண்ணாளும் வித்தைகள்” படத்தில் P.S.வீரப்பா பேசும் இந்த வசனம் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது
“நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களிலிருந்து மாளிகையை பார்க்கிறவன்”
” இருளை போக்கும் விளக்கிற்கு, தன் நிழலைப்போக்கும் சக்தி இல்லை”
“சாதிக்கமுடியாத சாதனைகளெல்லாம் சோகத்தால் துவண்டு போனவர்கள் செய்துமுடித்தவைதான் வீராங்கா..”
நாடோடி மன்னன் வெற்றிக்கு அடிநாதமாக இருந்த வசனங்கள் இவை படத்திற்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய கண்ணதாசனுக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு அற்புதமான வெற்றி கூட்டணி இந்தப் படத்தில் இருந்தது.
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட தியேட்டர்களில் 100 நாள் என வெற்றிக்கொடி நாட்டி ஒரு கோடி ரூபாயை முதன் முதலில் வசூலித்த திரைப்படம் மதுரை வீரன். படத்திற்கு வசனகர்த்தா கண்ணதாசன்.
எம்ஜிஆரின் முதல் சொந்தப் படம் நாடோடி மன்னன்.. வசனகர்த்தா கண்ணதாசன்.
அரச கதைகளில் மட்டுமே நடிப்பது என்று இருந்த எம்ஜிஆருக்கு முதன் முதலில் சமூக படமாக பெரும் வெற்றியை தேடிக் கொடுத்த படம், திருடாதே.. இதற்கும் வசனம் கண்ணதாசன்தான்..
“அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி” என்ற வசனத்தை எழுதியவர் கண்ணதாசன் இதே மகாதேவி படத்தில்(1957)யில் “கருணாகரா, கோட்டையை கைப்பற்று” என்ற வசனத்தை எழுதியவரும் அவரே.
நாடோடி மன்னன் படத்திற்கு அப்போதே 18 லட்சம் ரூபாய் எம்ஜிஆர் செலவு செய்தார்.
பிரம்மாண்டமான வெற்றி பெற்ற நாடோடி மன்னன் படத்தின் வசூலை முறியடித்த படம் எம்.ஜி.ஆர் இயக்கத்தில் உருவான ’உலகம் சுற்றும் வாலிபன்’ தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்காக தன்னுடைய சொத்து அனைத்தையும் விற்று விட்டதாகவும் இந்த படம் வெற்றியடைந்தால் நான் மன்னன், தோல்வி அடைந்தால் நான் நாடோடி என்று படம் ரிலீஸுக்கு முந்தைய நாள் பத்திரிகையாளர்களிடம் அவர் பேட்டி கொடுத்தார்
எம்.ஜி.ஆர் இந்த படத்தை இயக்கினார் என்றதும் கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இந்த படத்தை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தனர்.
’நாடோடி மன்னன்’ படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்ததாகவும், சொந்த படம் என்பதால் அவர் எந்தவிதமான சிக்கனத்தையும் கடைபிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
மேலும், படப்பிடிப்பின் போது தனக்கு திருப்தி ஏற்படும் வரை எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர் பிடிவாதமாக இருந்ததாகவும் , குறிப்பாக பானுமதி இந்த படத்தில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறப்படுவது உண்டு.
இந்த நிலையில் தான் பானுமதிக்கும் எம்.ஜி.ஆர்க்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகபடத்திலிருந்து
பாதியிலேயே அவர் விலகி கொண்டார். அதனால் அவரது கதாபாத்திரத்தை இடைவேளை முன் சாகடித்துவிட்டு இரண்டாம் பாதியில் சரோஜாதேவியை நாயகியாக நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 18 லட்ச ரூபாய் என்ற நிலையில் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது.
மேலும், இந்த படம் முதல் பாதி கருப்பு வெள்ளையாகவும் இரண்டாம் பாதியின் சில நிமிடங்களுக்குப் பின் கலர் படமாகவும் இருக்கும் என்பதால் முதன் முதலில் தமிழில் வெளியான கலர் படம் நாடோடி மன்னன் என்ற பெருமையும் உண்டு.
மூன்றே கால் மணி நேரம் ஓடும் இந்த படம் ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் இருந்ததுதான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.
நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய கண்ணதாசன் ஒருநாள் காலையில் படப்பிடிப்பிற்கு வந்து உரையாடலை எழுதித் தருமாறு கண்ணதாசனிடம் எம்ஜிஆர் கூறியுள்ளார்…
மறுநாள் தாமதமாக காலை 9 மணிக்கு வரவேண்டிய கண்ணதாசன்நண்பகல் 12 மணிக்கு வந்துள்ளார்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம் பாடல் எழுத சொல்லியிருந்தார் எம்ஜிஆர். தாமதமாக வந்த கண்ணதாசனிடம் அவர் எழுதி கொடுத்த அந்தப்பாடலைப் படித்துப் பார்த்து, தேவையென்றால் வரிகளை மாற்றிக் கொள்ளலாம் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
ஆனால், கண்ணதாசன் ‘பட்டுக்கோட்டை அண்ணன் எழுதிய பாடலை நான் மாற்றவே மாட்டேன்’ என பதறிப் போய் கூறியுள்ளார்.
அப்படி படத்தில் இடம் பெற்ற பாடல்தான் ’தூங்காதே தம்பி தூங்காதே’. இந்தப்பாடல் தனக்காகவே எழுதப்பட்டதாக சிலாகித்து கண்ணதாசன் கூறியதாக சொல்வார்கள்
தயாரிப்பாளர் ஒருவரிடம் “காடு வெளஞ்சென்ன மச்சான்…” என்ற பாடலை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடிகாட்டியது, ஆர்.எம். வீரப்பனுக்குப் பிடித்துப் போனதால் எம்ஜிஆரிடம் அவரை அறிமுகப்பட்டு நாடோடி மன்னனில் அந்தப் பாடல் இடம் பெற்றது.
நாடோடி மன்னன் படத்தின் செய்திகளை புகைப்படங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் எனும் புகைப்பட கலைஞர் செய்தியாளர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தொடர்பாளராக பணியாற்றினார்.
அவரை கௌரவிக்கும் வகையில் பட விளம்பரத்தில், டைட்டில் கார்டில் பொதுஜன தொடர்பு பிலிம் நியூஸ் ஆனந்தன் எனும் பெயரை இடம்பெற செய்தார் எம்.ஜி.ஆர்
அதனை அடிப்படையாக கொண்டே தமிழ் சினிமாவில் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் (PRO) என்கிற தொழில் உருவானது.
தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப கலைஞர்களாக பத்திரிகை தொடர்பாளர்கள் இருப்பதற்கு நாடோடி மன்னன் படம் மூலம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்
3 மணி நேரம் 15 நிமிடம் திரையில் ஓடக்கூடிய நாடோடி மன்னன் படத்தை போன்று மும்மடங்கு (சுமார் 10 மணிநேரம்) படம்பிடிக்கப்பட்டிருந்தது.
அதனை ஐந்து படத்தொகுப்பாளர்கள் எடிட்டிங் செய்த பின் இறுதியாக எம்.ஜி.ஆர்.மறு எடிட்டிங் செய்த படம்தான் திரைக்கு வந்ததாக தகவல்கள் உள்ளன.
தொகுப்பு : இராமானுஜம்
சென்னை தினம்: ஆளுநர் வாழ்த்தில் சர்ச்சை!
”நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற”- வைரமுத்து