நடிகமணி டிவிஎன் -100

சிறப்புக் கட்டுரை

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

நடிகமணி டி.வி.என் (நாராயணசாமி) திராவிட அரசியல் மற்றும் தமிழக திரை உலகிலும் முக்கியமான அடையாளமாக 1940, 1950, 1960, வரை திகழ்ந்தார்.

இவர்தான், எம்ஜிஆர் யானை கவுனி காவல் நிலையம் அருகில் ஆரம்பத்தில் குடியிருந்த பொழுது அவரை அழைத்துச் சென்று அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர்.

அண்ணாவின் உறுதுணை டி.வி.என்

டி.வி.என் பற்றி அண்ணா, பல கட்டங்களில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் டி.வி.என் என்று சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். கலைஞருக்கும் நெருக்கமானவர். நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இலட்சிய நடிகர் எஸ்.எஸ் ராஜேந்திரன், கே.ஆர் ராமசாமி போன்ற அன்றைய திரைத்துறை சார்ந்தவர்கள் எல்லாம் டி.வி.என் தங்களின் மூத்தவர் என்றும் மதித்ததுண்டு.

யார் இவர்?

டி.வி.என் தெற்கே, எங்கள் கரிசல் காட்டில் பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு அருகே ஒரு சின்ன குக்கிராமம் சிந்தலைக்கரை-துரைசாமிபுரத்தில் பிறந்தார். அந்த கிராமத்தில் 50 வீடுகள் தான் இருக்கும் அதிலும் பிரதான ஒரே தெரு தான் அமைந்திருக்கும்.

நான் 1989 லும், 1996 லும் கோவில்பட்டி தொகுதியில் திமுக-மதிமுக சட்டமன்ற தேர்தல் வேட்பாளராக போட்டியிட்ட பொழுது எனக்கு ஆதரவாக சில நாள் அங்கே தங்கி எனக்கு ஆதரவாக பணி ஆற்றினார்.

அதுபோலவே சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் வைகோ போட்டியிட்ட பொழுது (1998-99) அவர் அவருடைய காண்டசா காரை எடுத்து வந்து அந்த தொகுதியில் வைகோவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்,

அருமையான மனிதர். நான் என்றைக்கும் மதிக்கக் கூடிய ஆளுமை. அவரை முதன் முதலாக சென்னையில் மாணவர் காங்கிரஸில் காமராஜரோடு பயணிக்கும் போது சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தம்பி, நீங்கள் அரசியலில் நன்கு வர வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி கூறுவார்.

அவருடைய மருமகன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு.ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் எங்கள் குருஞ்சாக்குளம் கிராமத்து அருகில் உள்ள மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தன்னுடைய அயராத உழைப்பு, படிப்பு ஆகியவைகளால் பிற்காலத்தில் தமிழகத்தின் பல முக்கிய துறைகளுக்கு அரசின் பிராதன செயலாளராக திகழ்ந்தவர். தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முக்கிய ஆளுமையுள்ள நபராக தலைமை செயலகத்தில் திகழ்ந்தவர்.

டிவிஎன் வேண்டி விரும்பி தன்னுடைய மகள் திருமதி ராணி அவர்களை திரு ஜி.ராமகிருஷ்ணனுக்கு 1.9.1974 அன்று திருமணம் செய்து வைத்தார். அந்த திருமணம், அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. எல்லாம் நினைவுகள். சிவாஜி கணேசனும் அந்த திருமணத்தின் நேரம் 10 மணி தான் என்றாலும் உரிமையோடு காலை 7 மணிக்கு வந்து சிற்றுண்டி உண்டு அங்கு இருந்து திருமணத்தில் மதியம் வரை தங்கி அந்நிகழ்வுகளில் கலந்து விட்டு தான் சென்றார்.

தமிழக தலைவர்கள், திரைத்துறை சார்ந்தவர்கள் எல்லாம் திருமணத்திற்கு அன்று வந்ததுண்டு, அன்றைக்கு அண்ணா இல்லை.

டிவிஎன் எங்கள் மண்ணின் அடையாளம். எங்கள் மண்ணில், காமராஜர்,தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ராவணாகினா, கல்வி சாலைகள் அமைத்த எஸ்.ஆர்.நாயுடு, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடியான சோ. அழகிரிசாமி, கி.ரா அதற்கு முன்னோடியாக மகாகவி பாரதி, வ.உ.சி,நாவலர் சோமசுந்தர பாரதியாரும், விளாத்திகுளம் சாமிகள், உமறுப் புலவர், புலவர் கடிகை முத்துப் புலவர், நாகூர் முத்துப் புலவர், தேவநேய பாவாணர் என பலர் உலாவிய பூமி.

அது மட்டுமல்ல வீரமாமுனிவர், இசை மேதை முத்துசாமி தீட்சிதர் என பலர் வலம் வந்த கட்ட பொம்மன் வாழ்ந்த பூமி. ஆனால் அரசியலில் உயர்ந்த இடத்துக்கு இவ்வளவு ஆளுமைகள் பலர் இருந்தும் இன்னும் சிலர் இன்று வரமுடியவில்லையே என்று டி.வி.என் கவலையை அடிக்கடி என்னிடம் சொல்லுவார்.

கிராம முன்சீப் வீரப்ப நாயுடு-வேலம்மாள் தம்பதிகளுக்கு 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21 ஆம் நாள் மகனாக பிறந்தார் டி.வி நாராயணசாமி. எட்டயபுரத்தில் நாடகக் கலையை வளர்த்த எட்டயபுரம் இளைய மன்னர் காசி விஸ்வநாத பாண்டியனின் தேவராஜ ஜெகதீச பாலகான சபாவில் தனது பத்தாவது வயதில் சேர்ந்து இளம் நாடக கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார் நாராயணசாமி.

பின்,மேனகா திரைப்பட காலத்தில் அவ்வை சண்முகம் மூலம் இவர் நடிகனாக உருவாக்கப்பட்டார். டி.கே.எஸ். நாடகக்குழுவில் இருந்தபோது, 1940 இல் ஈரோட்டில் ‘குடியரசு’ அலுவலகத்தில் பெரியாரையும் அண்ணாவையும் டிவிஎன் சந்தித்தார்.

டி.கே.சண்முகம் நாடகங்களைப் குறித்து நல்ல விமர்சனங்கள் எழுதினார் அண்ணா. அதனைப் படித்துப் பார்த்த இளைஞர் டிவி நாராயணசாமி அண்ணாவிடம், ‘உங்கள் எழுத்து கலை நயத்தோடு இருக்கிறது. நீங்கள் நாடகம் எழுதி அதில் நான் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்றார்.

அண்ணா ‘காஞ்சி திராவிட நடிகர் கழகம்’ துவங்கி ‘ஓர் இரவு’ நாடகம் பல மாதங்கள் நடந்தது. ஐம்பதாவது நாள் நாடக விழாவில் டிவிஎன் குறித்து அண்ணா பேசியபோது;

“தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் சேர்ந்து இலட்சியங்களைப் பரப்பும் எழுத்தாளனாக, பேச்சாளனாக இருந்து வந்த என்னை முதன் முதல் கலை உலகைப் பற்றியும் சிந்திக்க வைத்தவர் நடிகமணி டிவிஎன் என்றார்.

“கலை உலகத் தங்கங்கள் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., இலட்சிய நடிகர் போன்றவர்களை எஸ்.எஸ்.ஆர் என்னிடம் கொண்டு வந்து சேர்த்த பெருமை நண்பர் டிவிஎன் க்கு உண்டு என அடிக்கடி அண்ணா இவரை பற்றி பேசுவார் கூட்டங்களில்.

நாடகக் கம்பெனியில் இருந்து வெளியேறிய டி.வி.என் ஈரோட்டில் இருந்து கும்பகோணம் சென்றார். அண்ணாவை சந்தித்தார். திராவிட மாணவர் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொண்டார். 1944 பிப்ரவரி 19 இல் நாவலர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் ‘நம்மோடு கலந்து விட்டார். நமக்கென்று கிடைத்திட்ட நடிகமணி டிவிஎன். அவரை இம்மாணவர் மாநாட்டில் அறிமுகப்படுத்துவதில் நான்மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பேசினார் அண்ணா.

சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலைமையில் வி.பி.ஹாலில் நடைபெற்ற சந்திரோதயம் நாடகத்தில் சீர்திருத்த வாலிபனாக அண்ணாவுடன் நடித்தார்.டிவி நாராயணசாமியை தந்தை பெரியாரும், கலைவாணரும் பாராட்டினார்கள்.

திரையில் டிவிஎன் நடிப்பதற்கு உதவ கலைவாணரை அண்ணா கேட்டுக் கொண்டார்.ஜூபிடர்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாய்ப்பினைப் பெற்றுத் தந்தார். நாடகம், திரைப்படம் நடித்த நேரங்கள் போக மற்ற நேரங்களில் அண்ணாவுடன் நாடகங்களில் நடித்தார். கழகக் கூட்டங்களில் பேசினார்.

டி.வி.என் நாகைக்கு செல்வதை அறிந்த இளைஞர் மு.கருணாநிதி திருவாரூர் ரயிலடியில் தனது நண்பர் தென்னன் உடன் டி.வி.நாராயணசாமியை சந்தித்து ‘திருவாரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் பேச வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.விழாவில் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.இளைஞர் கருணாநிதி, டி.வி.என்னை அங்குள்ள ராயல் சோடா கம்பனியில் தங்க வைத்தார்.

அப்போது கலைஞர் எழுதி இருந்த ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ என்ற சமூக சீர்திருத்த நாடக வசனத்தை “உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது ” என்று கூறி பின் கருணாநிதியின் ஆர்வம் குறித்து அண்ணாவிடம் கூறினார்.

சென்னை பிராட்வேயில் இருந்த முல்லைப் பதிப்பகம் முத்தையாவின் அலுவலகத்தில் தங்கிய பாரதிதாசன் அண்ணாவுடன் நாள்தோறும் சந்தித்து பேசுவார். பவளக்காரர்தெரு,தேவராஜன் தெரு,பிராட்வேயில் இருந்த இரா.செழியன் அறையில் அண்ணாவுடன் டிவிஎன் இருப்பார்

முல்லை பதிப்பகத்தில்தான் கவிஞர் கண்ணதாசனை முதன் முதலில் சந்தித்தார் டி.வி.என். விபூதி குங்குமத்தோடு காட்சி அளித்தார் கண்ணதாசன்,கழகத்தில் சேர உதவினார் டிவிஎன்.கண்ணதாசன் தென்னிந்திய நடிகர் சங்க விழாவில் பேசுகிறபோது டி.வி.நாராயணசாமியை, ‘எனது அரசியல் குரு, வழிகாட்டி’ என்றார்.

தந்தை பெரியாரின் தீவிர தொண்டர் எம்.கே.டி.சுப்ரமணியம்,பின் எம்.கே.டி.எஸ் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சக்தி மிகுந்த பேச்சாளர்,ஜவஹரிஸ்ட் ஏட்டின் ஆசிரியர்,கலைஞர் சென்னையில் இவரின் கூட்டத்தில் தான் முதன் முதலில் மேடை ஏறினார் என்பதை எம்.கே.டி.எஸ்யும் நானும் கலைஞரை சந்தித்தபோது கலைஞரே கூறினார்.

எம்.கே.டி சுப்ரமணியம்,தி.சு கிள்ளிவளவன்,தஞ்சை ராமமூர்த்தி நானும் பழ நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்தோம் என்பது வேறு விடயம்.எம்.கே.டி திருமணத்தை, அண்ணா கலந்து கொள்ள இயலாத காரணத்தால் தேனி சென்று அவரது திருமணத்தை டிவிஎன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்,

1945 ஆம் ஆண்டு சந்திரோதயம் நாடகத்திற்கு பிறகு, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தை எழுதிய அண்ணா, ‘உனக்காக ஒரு நாடகம் எழுதி உள்ளேன் அதை படித்துப்பார்’ என்று டிவிஎன்னிடம் கொடுத்து ,நாடகத்தை தயாரித்து அரங்கேற்றும் பொறுப்பை ஒப்படைத்தார். நடிகரை தேர்வு செய்யும் பணியில் டி.வி.என். மும்முரமாக ஈடுபட்டார்.

தன்னுடன் பாசமாக இருந்த எம்.ஜி.ஆரை நாடி அண்ணாவின் சிவாஜி நாடகத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். நடிப்பதற்கு ஒப்புதல் தந்துவிட்டு பின்னர், தன்னால் நடிக்க இயலாது என்று எம்.ஜி.ஆர். கூறியது டி.வி.என் க்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. எம்.ஜி.ஆரை மீண்டும் வலியுறுத்தியபோது, “டி.வி.என்.. என்னை மன்னித்து விடுங்கள்”. இப்போது நான் நடிக்க முடியாது’ என்றவுடன் நேராக காஞ்சிக்கு வந்து அண்ணாவை சந்தித்து செய்தியை கூறினார்.

ஆனால்,ஆனந்த விகடன் 18.01.1972 வார இதழில் ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் எம்.ஜி.ஆர்.. “அறிவுச் சூரியன் அண்ணாவை அறிமுகப்படுத்தி வைத்த நண்பர் நடிகமணி நாராயணசாமி” என்று எழுதியதிலிருந்து சில வரிகள்….

நடிகமணி டி.வி.நாராயணசாமி அவர்களைநான் முதலில் சந்தித்த இடம். நேரம் எனக்குச் சரிவர நினைவில் இல்லை. எனினும் வாழ்க்கைப் பாதையில் எனக்கு அவ்வப்போது இருளில் இருந்து விலக விளக்கொளி தந்த குறிப்பிடத்தக்கவர்களில் அவரும் ஒருவராவார்.

வெளிச்சம் தந்து சரியான பாதையில் செல்ல உதவியவர்கள் பலர் எனினும் டி.வி.என். என்னை என்றும் அணையாத, எல்லா உயிர்களையும் வாழ்விக்கும் ஒளி தந்து உயிர் ஊட்டும் சூரியனிடமே அல்லவா அழைத்துச் சென்றார்! அந்தச் சூரியனை எனக்கு உரிமையுமாக்கித் தந்துவிட்டவரும் அவர் அல்லவா?

அப்படிப்பட்ட சூரியனான பேரறிஞர் அண்ணா அவர்களை எனக்கு அண்ணனாக, ஆசானாக, வழிகாட்டியாகப் பெறும் பாக்கியத்தை. கிடைத்ததற்கரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர்தான் டி.வி.நாராயணசாமி அவர்கள் ஆவார்கள்”.

டிவின்,நாடகங்களில் அப்போது நடித்து வந்தார். சமுதாய சீர்திருத்தக் கருத்து களைக் கொண்ட நாடகங்களில் நடித்தார். பேரறிஞர் அண்ணா அவர்களால் எழுதப் பட்ட நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அண்ணாவும் நடிக்க… அவரோடு இணைந்து நடித்துக் கொண்டு இருந்தார். இப்படிப்பட்ட நடிகராக அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது… அண்ணாவும். டி.வி.நாராயணசாமியும் சேர்ந்து நடித்த ”சந்திரோதயம்’ என்ற நாடகத்தைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கலைவாணர் அவர்கள் இந்த நாடகத்துக்குத் தலைமை தாங்கினார். சென்னையில் மூர்மார்க்கெட் அருகில் வி.பி.ஹாலில்தான் அந்த நாடகம் நடந்தது. நாடகத்தில் டி.வி.என். அவர்களின் நடிப்பு பேச்சு முதலியவை எனக்கு மிகவும் பிடித்தன. அவருடைய உணர்ச்சிமிக்க நடிப்பைக் கண்டும். அழுத்தந்திருத்தமான உரையாடலைக் கேட்டும் மக்களின் கையொலி கொட்டகையையே அதிரும்படிச் செய்தது. இதுவும் அவரை என் உள்ளம் ஒரு சகோதரனாக ஏற்றுக் கொண்டதற்குச் சரியான ஒரு காரணமாக இருக்கலாம்”.

மீண்டும் டி.வி.என். சிவாஜி வேடத்திற்கு ஆள் தேடலானார். அப்போது நாடக நடிகர்களில் ஒருவரான டி.என்.சிதம்பரம் ‘ஏண்ணே! சிவாஜி வேடத்திற்கு நம்ம கணேசனை போட்டால் என்ன?’ என்றார். அதை ஏற்றுக் கொண்டு டி.வி.என். வி.சி.கணேசனிடம், ‘கணேசா,சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?’ என்று கேட்டார்.

கணேசன் நடிக்கிறேன் என்று உறுதியாக தெரிவித்தவுடன் அண்ணாவிடம் சென்று, ‘சிவாஜி வேடத்திற்கு வி.சி.கணேசனைப் போடலாம் அண்ணா’ என்றார், ‘கணேசன் பெண் வேடத்தில நடித்துப் பார்த்துள்ளேன்’ என்ற அண்ணாவிடம், ‘கணேசனை தயாரித்து விடலாம் அண்ணா’ என்று உறுதி அளித்தார்.டி.வி.என்

1945 டிசம்பர் 15 ஆம் நாள் சென்னை செயின்ட் மேரீஸ் மண்டபத்தில் சயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் தலைமையில் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகம் அரங்கேறியது காகப்பட்டராக நடித்த அண்ணாவையும், சந்திரமோகனாக நடித்த டிவிஎன் னையும் தந்தை பெரியார் பாராட்டி விட்டு, ‘சிவாஜியாக நடிச்ச பையன்.. என்றதும் அவர் பெயர் கணேசன்’ என பின்னால் இருந்து டி.வி.என். சொன்னார். ‘ஆமா, கணேசன், சிவாஜி கணேசன், நல்லா நடிச்சாரு! சிவாஜி மாதிரியே இருந்தாரு’ என கூறினார் பின் பெரியாரின் பாராட்டு மொழியே பட்டமாக அமைந்து சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார்.

‘பழைய நாடகங்கள், பழக்கப்பட்ட நாடகங்கள் நடத்தப்பட்டுவிட்டன. நாடகக்குழு தொடர்ந்து நடைபெற அண்ணா புதிய நாடகம் எழுதித்தர வேண்டும் என டி.வி.என்., அண்ணாவிடம் கூறினார். தொடர்ந்து ‘வேலைக்காரி’ நாடகமும் அரங்கேற்றும் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அண்ணாவின் சிந்தனையில் “ஓர் இரவு” நாடகம் உருப்பெற்றது.

1946 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் நாள் டி.வி.நாராயணசாமிக்கும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் தங்கை பாப்பம்மாளுக்கும் சுயமரியாதை திருமணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருச்சி திருவரங்கத்தில் நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணா, சொல்லின் செல்வர் ஈ.வே.கி.சம்பத், நாவலர் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார். தந்தை பெரியார் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதே மணமேடையில் எஸ்.எஸ்.இராஜேந்திரனுக்கும், திருவனந்தபுரம் பங்கஜ் குமாரிக்கும் சீர்திருத்த திருமணத்தை அறிஞர் அண்ணா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும் கலந்து கொண்டார்.

அண்ணாவின் விருப்பப்படி கே.ஆர்.ஆர். நாடகக்குழுவில் சேர்ந்து வேலைக்காரி, ஓர் இரவு, சந்திரமோகள் நாடகங்களில் நடித்தார் டி.வி.என். இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய ‘துளி விஷம் நாடகத்தில் ராஜகுரு வேடத்தில் நடித்து புகழ் பெற்றார் டிவி.என். நாடகத்தை, கண்டுகளித்த நடிகர் பி.யு. சின்னப்பா, ‘சபாஷ் : நாராயணசாமி’ எனக் கூறி மகிழ்ந்தார்.பின்,டிவிஎன் 1950 ஆம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த கலைஞரின் பராசக்தி திரைப்படத்தில் மேடைப் பேச்சாளராக நடித்தார்,

அடுத்து கலைஞர் கருணாநிதியின் அம்மையப்பன், மணிமகுடம் நாடகத்தில் எஸ்.எஸ்.ஆர்., டி.வி.என். இணைந்து நடித்தனர். திருச்சி இரண்டாவது திமுக மாநில மாநாட்டில் கலைஞர் தீட்டிய மணி மகுடம் நாடகத்தில் மன்னன் மணிமாற பூபதியாக தலைவன் எஸ்.எஸ்.-ஆரும், டி.வி.நாராயணசாமியும் நடித்து புகழ் பெற்றார்.

எம்.ஜி.இராமச்சந்திரன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் போன்ற கலை உலகத் தங்கங்களை நமது இயக்கத்தின்பால் நல்ல ஈடுபாடு கொள்ளச் செய்தது.

இவர்களையெல்லாம் அவ்வப்போது அறிமுகம் செய்து வைத்து, என்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெருமை, நண்பர் நாராயணசாமிக்கே உரியதாகும். எனவே அவர் நடிகமணி மட்டுமல்ல, நமது கழகத்திற்குக் கிடைத்த கொள்கை மணி!

அவர் மேலும் பல சிறந்த நாடகங்களைத் தயாரித்து நாட்டுக்கு அளிக்க வேண்டுமென்று நான் பெரிதும் விழைகிறேன்.அவரது முயற்சி வெற்றி பெற, மனமார வாழ்த்துகிறேன்.

(திருநெல்வேலி நகராட்சிப் பொருட்காட்சிக் கலை அரங்கில், எஸ்.எஸ்.ஆர். நாடகமன்றத்தின் “தென் பாண்டி வீரன்” நாடகத்திற்குத் தலைமை வகித்தபோது, பேரறிஞர்அண்ணா அவர்கள் ஆற்றிய உரை. 1962ஆம் ஆண்டு)

டி.வி.நாராயணசாமியும் தேர்தல் களமும்

1962 சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் டி.வி.என். போட்டியிட வேண்டும் என திமுகவினர் ஒருமனதாக பரிந்துரை செய்தனர். தேனி சட்டமன்ற தொகுதியில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போட்டியிட வேண்டும் என பலரும் அண்ணாவிடம் வலியுறுத்தினார்.

இந்நிலையில் அண்ணா, டி.வி.என்னிடம் எஸ்.எஸ் இராசேந்திரன் தேனி தொகுதியில் போட்டியிடுவதால் கழகம் தெற்கே வளர ஏதுவாகும். நீ தேனி தொகுதியில் எஸ்.எஸ்.ஆரோடு இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். இராசேந்திரன் சிறு வயதினன் அவனை பாதுகாப்புடன் கொண்டு செலுத்த உன்னால்தான் முடியும் என்றார்.

மதுரை முத்து, தேனியில் ரத்தினம் மற்றும் முக்கிய பிரமுகர்களைக் கூட்டி கலந்துரையாட திட்டமிட்டார். தேர்தல் பணியை முடுக்கி விட்டார். சட்டமன்ற தொகுதியில் உள்ள 108 கிராமங் களிலும் 1962 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ஆர் தேனி தொகுதியில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்து முடித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் தேனி பகுதி மிகவும் செல்வாக்கு பெற்ற எனது உறவினர் தேனி என்.ஆர்.டி என்ற என்.ஆர் தியாகராசன்(இவர் தேனி நகர் வளர்ச்சிக்கு வித்திட்டவர்) இருபத்தைந்து வாகனங்களில் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரை மாநகர் வீதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்த எஸ்.எஸ்.ஆர். முப்பத்தைந்து வாகனங்களில் மாவட்ட மாநாடு ஊர்வலம் போல் தேனியில் இருந்து மக்களோடு புறப்பட்டு ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேனி தொகுதி தேர்தல் குறித்து ஆங்கில நாளேடு ‘இந்து’ ‘இந்தியாவிலேயே தேனி தேர்தல் தனித்தன்மை படைத்தது’ என்று எழுதியது. ‘ஜனசக்தி’ தேனி தேர்தல் ‘அமெரிக்கன் மாடல் தேர்தல்’ என்று விமர்சனம் செய்தது. இந்த தேர்தலில் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் மிக செல்வாக்கான வேட்பாளர் தோல்வியைத் தழுவினார்.

1965 ஆம் ஆண்டு நாடு தழுவிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தேனாம்பேட்டை எஸ்.எஸ்.ஆர். இல்லமான அண்ணா இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி காங்கிரஸ் ஆட்சியில் டி.வி.என்., கைதாகி சிறை சென்றனர்.

கடந்த 1967 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்தபோது டி.வி.என். அவர்களை தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட திமுகவினர் ஒருமனதாக தேர்வு செய்து பரிந்துரை செய்தனர். அண்ணாவும் இதனை ஏற்றுக் கொண்டார்.ஆனால் தேர்தல் உடன்பாடு காரணமாக தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி அண்ணாவின் விருப்பப்படி விட்டுக் கொடுத்தார். தொகுதி தேர்தல் முகவராகவும், தென்சென்னை நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு உறுப் பினராகவும் இருந்து அண்ணாவும் மற்றவர்களும் வெற்றிபெற உழைத்தார். தேர்தலுக்கு முன் கூடிய விருகம்பாக்கம் தேர்தல் சிறப்பு மாநாட்டில் பேசிய அண்ணா அவர்கள் ‘டி.வி.என். கழகத்தின் வேர்’ எனக் குறிப்பிட்டார்கள்.

“தியாகராயர் நகரிலேதான் வேட்பாளராக நான் ‘நிற்பேன்’ என்று டி.வி.என்.அவர்கள், என்னிடம் சற்றே அழுத்திக் கூறியிருப்பாரேயானால், அவருக்குத் தியாகராயர் நகர் தொகுதியைத் தந்துவிட்டு, ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு – தம்பி கருணாநிதியின் சைதாப்பேட்டையை அளித்துவிட்டு, நான் நிற்பதாக முடிவு செய்யப்பட்ட தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தம்பி கருணாநிதியை நிற்க வைத்துவிட்டு, நான் தேர்தலில் நிற்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையாக நாடு முழுவதும் ஈடுபடுவதாக எண்ணியிருந்தேன்.அப்படியெல்லாம் நேர்ந்துவிடக் கூடாது என்று நண்பர் டி.வி.என்.அவர்கள், பேருள்ளத்துடன் ம.பொ.சிக்காக விட்டுக் கொடுத்துக்கழகத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டுக் கண்ணியம் காத்தார். அவருக்கு இந்த நேரத்தில் எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

(1967ஆம் ஆண்டு- தியாகராயர் நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத் தொடக்கக் கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.)

அண்ணாவின் விருப்பபடி டி.வி.என் 1968 முதல் 1974 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆகி கடமை ஆற்றினார்.

அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் சார்பில் கழகத் தலைவர் கலைஞரின் விருப்பப்படி டி.வி.என். போட்டியிட்டார்.வெற்றிபெற வேண்டிய இறுதிச் சுற்றில் 500 வாக்குகளுக்கும் குறைவாகப் பெற்று டி.வி.என். தோல்வி என அறிவிக்கப்பட்டது. சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் நீலநாராயணன்(பின்ன நாட்களில் திமுக அமைப்பு செயலாளர், குமரி மாவட்டத்தை சார்ந்தவர்)தேர்தல் முடிவை ஏற்க வேண்டாம் வழக்குத் தொடரலாம் என்றார்.

ஆனால்”ஜனநாயக முறைப்படி நான் தோற்று விட்டேன் இனி வழக்கு தொடுக்க அவசியமில்லை” எனக் கூறிவிட்டு தேர்தல் அதிகாரி முன் கையெழுத்திட்டார் டி.வி.என்.

டி.வி.என். தோழர்களை நோக்கி “அன்புள்ள தோழர்களே தியாகராயர் தொகுதியில் நாம்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். தமிழகம் எங்கும் திராவிட முன்னேற்றக்கழகம் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. நமது ஆட்சி அமைந்து விட்டது. ஆகவே அன்பர்களே, என் அருமைத் தோழர்களே அமைதி காத்திடுங்கள்” என கூறி கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.

காங்கிரஸ் நண்பர்களே! நீங்கள், எங்கள் ஆட்சி மலர்ந்துவிட்டது என்பதை எண்ணிடுங்கள். இந்தத் தொகுதியில் நீங்கள் பெற்ற வெற்றிக்காக ஆரவாரம் செய்யாமல் எங்கள் தோழர்களின் கைகளை இணைத்துக் கொண்டு அமைதியாக செல்லுங்கள். அனைவருக்கும் நன்றி”. டி.வி.என் னின் உருக்கமான பேச்சைக் கேட்ட திமுக கழகத் தோழர்கள் கண்களில் கண்ணீர் வழிய கலைந்து சென்றனர்.

இதை கேட்டுக் கொண்டிருந்த வெற்றி பெற்ற தி.நகர் காங்கிரஸ் வேட்பாளர் கே.எம். சுப்ரமண்யம் அருகில் வந்து டி.வி.என். அவர்களின் கையை பற்றிக் கொண்டு “டி.வி.என். சார் நீங்கள் ரொம்ப பெரியவர்.

நான் பிரச்சார கூட்டங்களில் மேடையில் உங்களைப் பத்தி ஏதோ உளறி இருப்பேன்.அதை எல்லாம் மனசில் வச்சுக்காம என்ன உங்க பெருந்தன்மை என்று கூற கை குலுக்கி விட்டு விடைபெற்றார்.

கடந்த 22.11.2000 ஆம் ஆண்டு முதுமை காரணமாக தனது 79 ஆவது வயதில் சென்னையில் காலமானார். கலைஞர் மற்றும் பல தலைவர்கள், கலை உலகப் பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் பெசன்ட் நகர் இடுகாட்டில் எரியூட்டப்பட்டது.அன்று அந்த நிகழ்வில் நான் பங்கேற்ற போது டிவிஎன் அனைவரின் அன்பை இப்படி பெற்றுள்ளார் என்ற பெருமிதம் என்னுள் ஏற்பட்டது.

பலர் டிவிஎன்னை பற்றி குறிப்பிட்ட வரிகள்!!!!

சந்திரோதயம் என்கிற சீர்திருத்த நாடகத்தில் நடித்த நம்முடைய நடிகமணி நாராயணசாமி கொள்கைப் பற்று கொண்டவர்-(பெரியார்)

நாராயணசாமியும் இராஜேந்திரனும் அவர்கள் திமுகவில் உறுதியானவர்கள் உண்மை யானவர்கள்.-(பெருந்தலைவர் காமராசர்)

திருவாரூர் வீதிகளிலே கொடிபிடித்த கை கருணாநிதியின் கை! சுவர்களிலே ஏணி வைத்து ஏறி போஸ்டர் ஒட்டிய கை, கருணாநிதியின் கை! இதோ மேடையில் வீற்றிருக்கிற நடிகமணிக்கு, திருவாரூர் கூட்டத்திற்கு வந்தபோது அவரை கிணற்றடிக்கு அழைத்துக் கொண்டு சென்று கிணற்றிலிருந்து வாளி வாளியாகத் தண்ணீர் இறைத்து ஊற்றி அவரது முதுகு தேய்த்து குளிப்பாட்டி விட்ட கை இந்தக் கை!-

முதலமைச்சர் மு.கருணாநிதி (ஶ்ரீ வில்லிபுத்தூர் பொதுக்கூட்டத்தில் – 1973)

என்னை முதன் முதலில் அறிஞர் அண்ணாவிடத்தில் அழைத்துச் சென்று இவர்தான் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி. நாராயணசாமி. புகழ் வரலாற்றுக்கு காரணமானவர்களை மறந்துவிடக் கூடாது. அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.-(முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் (காஞ்சியில் அண்ணா பிறந்த இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்த விழாவில் குடியரசு தலைவர் மாண்புமிகு சஞ்சீவி’ ரெட்டி முன்னிலையில் பேசியது)

“நீங்கள் நல்லவர்; தென்னாட்டுச் சிங்கம்!”-(பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் – 1962 சட்டமன்ற தேர்தலில் எஸ்.எஸ்.ஆருக்கு ஆதரவு கேட்டு அவருடன் டி.வி.என். சந்தித்தபோது கூறியது)

அண்ணாவுக்கு கிடைத்த உண்மையான நண்பர்!-(சிலம்புச்செல்வர் ம.பொ.சி.)

எல்லோருக்கும் நல்லவரான நாராயணசாமி இடத்தில் இந்த மலரினைத் தருகிறேன்.-(கவியோகி சுத்தானந்த பாரதியார்- மதுரை உலகத் தமிழ் மாநாட்டின் போது தேசியக் கவி பாஸ்கரதாஸ் மலர் வெளியீட்டு விழாவில்)

தமிழ்ப்பற்று மிக்க நடிகர் நாராயணசாமி-(முத்தமிழ்க் காவலர் –(கி.ஆ.பெ.விசுவநாதம்)

நீங்கள் நன்றாக தமிழ் பேசுகிறீர்கள்.-(ராஜா சர்.முத்தையா செட்டியார் -தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் டி.வி.என். பேசியதைக் கேட்டு கூறியது)

நாராயணசாமி எனக்கு சொந்தக்காரர். ஆனால் அவர் ஒரு கட்சி, நான் ஒரு கட்சி எனினும் அவர் சேவா மனப்பான்மை உடையவர். தன்னைத் தேடிச் செல்பவர்களை உபசரித்து அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து வருகிறார்.

எனக்கு வயதாகிவிட்டது. இந்தப் பகுதி மக்களை எல்லாம் டி.வி.நாராயணசாமிதான் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர் உயர்ந்த பதவிகளைப் பெற்று தொண்டு புரிய வேண்டும். என்று வாழ்த்துகிறேன்.- ( காங்கிரஸ் தலைவர் எஸ்.இராமசாமி நாயுடு எம்.எல்.ஏ..- 1968 இல் டி.வி.நாராயணசாமி, தங்கபாண்டியன் ஆகியோருக்கு சாத்தூரில் நடைபெற்ற எம்.எல்.சி. பாராட்டு விழாவில் பேசியது)

டி.கே.எஸ். நாடக சபையில் பகுத்தறிவுக் கொள்கை கொண்ட இப்படிப்பட்ட நடிகர் இருந்ததை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இவரது உணர்ச்சி மிக்க நடிப்பு நாட்டிற்கு பயன்படும். இவர் கலைத்துறையில் முன்னேற்ற மடைவார். இவரைப் பாராட்டுகிறேன்.-(கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்)

நீங்கள் தமிழ் வசனங்களை உங்கள் வாயால் உச்சரிக்கும்போது தமிழ் மேலும் இனிமையாக இருக்கிறது அய்யா.-( டாக்டர் மு.வரதராசனார் – பச்சையப்பன் கல்லூரியில் அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தில் டி.வி.என். நடிப்பைப் பார்த்துவிட்டு நேரில் புகழுரை)

நடிகமணி டி.வி.என் பேச்சைக் கேட்டால் தேவர் பேசுவதுபோல் இருக்கிறது.-(பி.கே.மூக்கையா தேவர். பார்வார்டு பிளாக் கட்சித் தலைவர்.)

அண்ணாவுக்கும் கலைவாணருக்கும் பாலமாக விளங்கியவர் டி.வி.என். அவர்கள்.-(திரைப்பட இயக்குநர் ப.நீலகண்டன்- கலைவாணர் நினைவு நாள் – சென்னை வாணி மகாலில் நடைபெற்ற விழாவில்). இப்படி பலரின் பாராட்டுக்களை பெற்றவர்.

டி.வி.என்.வகித்த பதவிகள்

  • தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பொருளாளர் ஆகிய பதவிகள் 1952 முதல் 1967 வரை.
  • 1968 – 1974 வரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்.

-அரசு பொது மருத்துவமனை ஆலோசனைக்குழுத் தலைவர்.

-அரசு குடும்பநலத்திட்டம் பிரச்சார நாடக தேர்வுக்குழு தலைவர்.

-நலிந்த கலைஞர்கள் மானியம் பெறுவதற்கான உயர்மட்டக்குழு உறுப்பினர் 1967 முதல் 1987 வரை.

  • தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் 1977 முதல் 1985 வரை.

-டில்லி, மத்திய சங்கீத நாடக சங்கப் பொதுக்குழு உறுப்பினர் 1977 முதல் 1985 வரை.

இப்படி பெருமை பெற்ற, நடிகமணி டிவிஎன் நூற்றாண்டில் அவரின் புகழை போற்றுவோம்.

நாளை (நவம்பர் 21) டி.வி.நாராயணசாமி நினைவு தினம்…

கட்டுரையாளர்: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்வழக்கறிஞர், அரசியலாளர்.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

1 thought on “நடிகமணி டிவிஎன் -100

Leave a Reply

Your email address will not be published.