ரூபக்ஜோதி போரா Myanmar Civil War
மியான்மர் உள்நாட்டுப் போரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பெரிய அளவிலான சண்டைகளால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?
மியான்மரில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைப் பதவி நீக்கம் செய்தபோது வன்முறை தொடங்கியது. இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்வினையாக, அரக்கன் இராணுவம் (AA), மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவம் (MNDAA), தாங் தேசிய விடுதலை இராணுவம் (TNLA) ஆகிய பெரிய இன ஆயுதக் குழுக்கள் ஒன்றிணைந்து ‘மூன்று சகோதரத்துவக் கூட்டணி’யை (Three Brotherhood Alliance – TBA) உருவாக்கின.
இந்தக் கூட்டணிப்படை இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடங்கியது. இன்று, அரக்கன் இராணுவம் வங்காளதேசத்துடனான மியான்மரின் எல்லையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கும் நிலையில் பல முனைகளில் சண்டை தீவிரமடைந்துள்ளது.
1948இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்தே மியான்மரில் இனக் கிளர்ச்சிகள் நடந்துவருகின்றன. இந்தப் போக்குதான் தற்போதைய மோதலின் போக்கையும் வரையறுத்துள்ளது. கச்சின் சுதந்திர இராணுவம் (KIA), ஷான் மாநில இராணுவம் (SSA), அரக்கன் இராணுவம் போன்ற இனக் கிளர்ச்சிக் குழுக்கள் பல தசாப்தங்களாக மத்திய அரசின் அதிகாரங்களுக்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. இருப்பினும், 2021இல் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு பொதுமக்களும் மியான்மரின் ஆயுதப் படைகளிலிருந்து வெளியேறியவர்களும் இணைந்து மக்கள் பாதுகாப்புப் படைகளை (PDF) உருவாக்கியது திருப்புமுனையாக அமைந்தது.
இனக் குழுக்களைச் சேர்ந்த போராளிகள் மட்டுமே வரலாற்று ரீதியாக அரசை எதிர்த்துவந்த நிலையில் இது பெரிய மாற்றமாக அமைந்தது. மக்கள் பாதுகாப்புப் படைகள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள TBA உட்பட, இராணுவ ஆட்சிக்குழுவை எதிர்த்துப் போராடும் பல்வேறு குழுக்களுடன் இணைந்து செயல்படுகின்றன. Myanmar Civil War
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இராணுவ ஆட்சிக்குழு தன் குடிமக்கள்மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இது கிளர்ச்சியை மேலும் தூண்டியதுடன் மியான்மர் மக்களை ஆபத்தான வன்முறைச் சுழலிலும் சிக்க வைத்தது.
ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்பு மியான்மரில் ஜனநாயக அரசாங்கத்துடனான உறவுகளை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியிருந்தது. இராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கின் எழுச்சியும், TBAவின் தாக்குதல்களை எதிர்கொண்டு நாட்டின் முழுப் பகுதியிலும் அதிகாரத்தை ஒருங்கிணைப்பதற்கான இராணுவத்தின் போராட்டமும் இந்தியா தன்னுடைய கிழக்கெல்லையில் எதிர்கொள்ளும் சவால்களை அதிகரிக்கச் செய்துள்ளது. Myanmar Civil War
நுழைவாயில்கள், முதலீடுகள், இன உறவுகள்

Myanmar Civil War
மியான்மரின் உள்நாட்டுப் போர் இந்தியாவுக்குப் பல இழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. முதலாவதாக, தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் (ASEAN) இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரே நாடான மியான்மர், தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாக உள்ளது. Myanmar Civil War
மியான்மரில் உள்நாட்டுப் போர் நடைபெறுவதால் இந்த எல்லையை மூடத் திட்டமிட்டுள்ளதாக இந்தியா கோடிகாட்டியுள்ளது. ஆனால் இந்தப் பிராந்தியத்தின் மலைப்பகுதியையும் அதிக அளவிலான மழைப்பொழிவையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் இது எளிதான காரியமல்ல. இந்தியா இந்தப் பகுதியை இரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர நடமாட்டப் பகுதி (Free Movement Regime – FMR) என அறிவித்திருந்தது. இப்பகுதியில் உள்ள இனங்களிடையே நெருங்கிய உறவுகள் நிலவுவதை ஒப்புக்கொள்ளும் வகையில் உருவான ஏற்பாடு இது.
மலைவாழ் பழங்குடியினர்களும் “எல்லைக்கு இருபுறமும் 16 கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிக்கும்” இந்தியா அல்லது மியான்மரின் குடிமக்களும் “எல்லை நுழைவுச் சீட்டைக் காண்பித்து எல்லையைத் தாண்டிச் செல்ல” இந்த ஏற்பாடு அனுமதித்தது. இந்தச் சீட்டை வைத்துக்கொண்டு ஓராண்டிற்கு அவர்கள் எல்லை தாண்டிப் பயணிக்கலாம். ஒவ்வொரு பயணத்தின்போதும் இரண்டு வாரங்கள்வரை தங்கலாம். உள்நாட்டுப் போர் நடைபெறும் நிலையில் இந்த ஏற்பாட்டை இந்தியா ரத்துசெய்துள்ளது. Myanmar Civil War
இரண்டாவதாக, இந்தியா மியான்மரில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடுகளைச் செய்துள்ளது. குறிப்பாக உள்கட்டமைப்புத் துறையில். கலாடன் மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் காரிடார் திட்டம், இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை போன்ற திட்டங்களை மேற்கொண்டுள்ளது. மியான்மரில் நடக்கும் உள்நாட்டுக் கலவரங்களால் இந்தத் திட்டங்கள் தொடர்ந்து தாமதமாகிவருகின்றன. Myanmar Civil War
இவை தவிர, மியான்மரில் இந்திய அரசாங்கம் 2016இல் கட்டமைத்த சிட்வே நதித் துறைமுகம் போன்ற திட்டங்களும் உள்ளன. சிட்வே நதித் துறைமுகம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்காள விரிகுடாவைப் பயன்படுத்துவதற்கு உதவக்கூடியது. 1947இல் நிகழ்ந்த இந்தியப் பிரிவினையால் அதன் வடகிழக்கு மாநிலங்கள் – அவற்றில் நான்கு மியான்மருடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன – சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்டவையாகிவிட்டன. இந்நிலையில் சிட்வே துறைமுகம் இந்த மாநிலங்கள் வங்காள விரிகுடாவை அணுகுவதற்கு வழிசெய்கிறது.
மூன்றாவதாக, தென்கிழக்காசிய, கிழக்காசிய நாடுகளுடனான இந்தியாவின் வரலாற்று உறவுகளுக்கு மீண்டும் புத்துயிரூட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் “கிழக்குப் பகுதிச் செயல்பாட்டுக் கொள்கையின்” வெற்றிக்கு மியான்மர் முக்கியமானது. தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) விஷயத்தில் இந்தியாவுக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக தென்கிழக்காசியா, கிழக்காசியாவுடன் உறவுகளை வளர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.
இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளை இணைக்கும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சியில் (BIMSTEC) மியான்மர் முக்கிய உறுப்பினராக உள்ளது. சமீபத்தில் வங்காளதேசத்தில் இந்திய ஆதரவு அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மியான்மரிலும் தன் செல்வாக்கை இழப்பது இந்தியாவுக்குக் கூடுதல் சவாலை உருவாக்கும்.

Myanmar Civil War
நான்காவதாக, மியான்மரில் உள்ள பல கிளர்ச்சி அமைப்புகள் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அது மட்டுமின்றி, மியான்மரின் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த அகதிகள் மணிப்பூர், மிசோரம் மாநிலங்களுக்குள் கூட்டம் கூட்டமாக நுழைகிறார்கள். மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருவது இப்பகுதியில் சமூக-அரசியல் சூழலைப் பாதிக்கும்.
மணிப்பூர் ஏற்கெனவே இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியும் வசிக்கும் மெய்ட்டி இனத்தவர்களுக்கும் சுற்றுப்புற மலைகளில் வசிக்கும் குக்கி இனத்தவர்களுக்கும் இடையிலான இன மோதல்களில் சிக்கியுள்ளது. சில வன்முறை நிகழ்வுகளுக்கு அகதிகள்தான் காரணம் என்று மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.
சீனாவின் பங்கு Myanmar Civil War
இந்த விவகாரத்தில் சீனாவின் பங்கை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். சீனா இந்தப் பகுதியில் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற வகையில் நடந்துகொள்கிறது. மியான்மரின் அரசாங்கப் படைகளுடனும் எதிர்க்கட்சிக் குழுக்களுடனும் ஒரே சமயத்தில் அது நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கிறது. Myanmar Civil War
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கும் நிலையில் மியான்மரின் ஆளும் குழுவைப் பொறுத்தவரை, சீனாவின் ஆதரவு அதற்கு இன்றியமையாதது. தெற்கு சீனாவிலிருந்து மியான்மரில் உள்ள கியூக்பியு வரை செல்லும் எண்ணெய், எரிவாயுக் குழாய் போன்ற உள்கட்டமைப்பு முதலீடுகளையும் சீனா மியான்மரில் கொண்டுள்ளது. சீனாவிற்கு எப்போதும் சவாலாக இருந்துவரும் மலாக்கா நீரிணையைக் கடந்து செல்ல சீனாவுக்கு உதவக்கூடிய பாதை இது.
சீனா மியான்மரின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. மியான்மரில் அது மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து நடக்கும் வன்முறையால், சீனா தான் நிதியளித்து ஆதரிக்கும் பல உள்கட்டமைப்புத் திட்டங்களையும் நிறுத்திவைத்துள்ளது. எனவே, இந்தியாவைப் போலவே சீனாவும் இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது.
2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியான்மரின் இராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங், கிரேட்டர் மீகாங் துணைப் பகுதி மற்றும் அயேயாவாடி-சாவ் பிரயா-மீகாங் பொருளாதார ஒத்துழைப்பு உத்தி (ACMECS) உச்சி மாநாட்டிற்காக சீனாவில் உள்ள குன்மிங்கிற்கு அண்மையில் விஜயம் செய்தார். இராணுவ ஆட்சிக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திடமிருந்து, குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து சீனாவுக்கு அழுத்தம் வந்துள்ளது. Myanmar Civil War
கடந்த காலங்களில், வடகிழக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களுக்கு சீனா ஆதரவு அளித்துள்ளது. இந்த முறை அது மீண்டும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க விரும்பலாம். இந்திய அரசை இலக்காகக் கொண்ட பிராந்தியத்தில் உள்ள அனைத்துக் கிளர்ச்சிக் குழுக்களுடனும் இந்தியா போர்நிறுத்த ஒப்பந்தங்களில் வெற்றிகரமாகக் கையெழுத்திட்டுள்ளது. சீனா மீண்டும் இந்தத் தீயை மூட்டினால், அது இந்தியாவுக்குக் கூடுதல் சவாலாக இருக்கும்.
தொடர்புக்கான வழிகளும் ஒருங்கிணைப்பும்

இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இந்தியா இராணுவ ஆட்சிக்குழுவுடன் அதிகாரப்பூர்வமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. அது எதிர்க்கட்சிக் குழுக்களை அணுகுவது குறித்த பொது அறிக்கைகள் ஏதும் இல்லாததால் இந்தியா எதிர்க்கட்சிக் குழுக்களை அணுகுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தற்போதைய நிலை இந்தியாவுக்கு நன்மை பயக்கக்கூடியதல்ல. Myanmar Civil War
சமீபத்திய ஆண்டுகளில் வடகிழக்கு இந்தியப் பகுதிகளை மேம்படுத்தவும் பிற பகுதிகளுடன் தொடர்பை உருவாக்கவும் முதலீடு சார்ந்த பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதியுதவியுடன் இந்தியாவின் மிக நீளமான பாலம் இந்தப் பிராந்தியத்தில் கட்டப்படவிருக்கிறது. மியான்மரில் நடந்துவரும் வன்முறையால் இந்தப் பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது இந்தப் பிராந்தியத்தை எதிர்மறையாகப் பாதித்து ஓரிரு ஆண்டுகள் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை இந்திய அரசு நினைவில் கொள்வது நல்லது. Myanmar Civil War
எதிர்க்கட்சிக் குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நிச்சயமாக இராணுவ ஆட்சிக்குழுவுக்கு ஏமாற்றமளிக்கும் என்றாலும், இந்தியா தொலைநோக்குடன் சிந்திக்க வேண்டும். குறிப்பாக மிசோரம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட பின்னடைவைக் கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் மியான்மரின் ஜனநாயக சார்புத் தலைவர் ஆங் சான் சூகியின் நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி (NLD) கட்சியுடன் உறவு கொண்டிருந்த அதே நேரத்தில் இராணுவ ஆட்சிக்குழுவுடனும் இந்தியா நல்லுறவைப் பேணிவந்தது.
மியான்மர் ஆசியானில் உறுப்பினராக உள்ளது. இந்தியா மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழுவுடன் இணைந்து செயலாற்றுவதற்கு ஆசியானுடன் பயனுள்ள ஒருங்கிணைப்பு அவசியமானது. சீனா தலைமையிலான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் (BRI) இந்தியா இணையவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்தியாவின் “கிழக்குப் பகுதிச் செயல்பாட்டுக் கொள்கைக்கு” இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை போன்ற இணைப்புத் திட்டங்கள் முக்கியமானவை. மிசோரம், மணிப்பூர் போன்ற இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு மியான்மரிலிருந்து மக்கள் வருகிறார்கள். எனவே, மியான்மரில் அல்லது குறைந்தபட்சம் எல்லைப் பகுதிகளில் சண்டை முடிவுக்கு வருவதை உறுதிசெய்வது இந்திய நலனுக்கு முக்கியமானது. Myanmar Civil War
மியான்மர் இராணுவ ஆட்சிக்குழுவுடன் நெருங்கிய உறவைப் பேணுவதோடு, அரசாங்கப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் நெருங்கிய கூட்டாளியான ரஷ்யாவையும் இந்தியா இவ்விஷயத்தில் அணுகலாம்.
2024 ஜூலையில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், BIMSTEC நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்களின் சந்திப்பின்போது, நேபிடாவில் மியான்மரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அட்மிரல் மோ ஆங்கைச் சந்தித்தார். மியான்மரின் நிலைமை குறித்த இந்தியாவின் கவலைகளை அவர் அப்போது தெரிவித்ததாக அறியப்படுகிறது.
கடந்த காலத்தில் இந்தியா ஆங் சான் சூகியுடன் நெருக்கமாக இருந்தது. இராணுவ ஆட்சிக்குழுவுடன் தொடர்புகொள்வதற்கான வழிகளை உருவாக்கிக்கொள்வதற்கு இந்த நெருக்கம் தடையாக இல்லை. மியான்மரின் நிலைமையைக் கையாளும்போது புதுமையான ராஜதந்திரங்களையும், வழக்கத்துக்கு மாறான தீர்வுகளையும் இந்தியா நாட வேண்டியிருக்கும் என்பதுதான் முக்கியம். மியான்மரின் பல பகுதிகளில் இராணுவ ஆட்சிக்குழு தனது பிடியை இழந்துவருவதால், இராணுவ ஆட்சிக்குழுவுக்கு எதிரான பல்வேறு படைகளுடனும் தொடர்பில் இருப்பது இந்தியாவுக்கு நல்லது.
ரூபக்ஜோதி போரா, ஜப்பான் மூலோபாய ஆய்வுகளுக்கான மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சி உறுப்பினர்.
தமிழில்: அரவிந்தன்
நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம். இந்தக் கட்டுரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவைப் பற்றிய மேம்பட்ட ஆய்வுக்கான மையம்’ என்னும் (Center for the Advanced Study of India, University of Pennsylvania) அமைப்பு நடத்தும் இணையதளத்தில் வெளியானது.