MS Swaminathan's contribution to agriculture
|

எம்.எஸ்.சாமிநாதன் வேளாண்மைக்கு ஆற்றிய பணிகள்!

நா.மணி

(27/10/2023 அன்று தூத்துக்குடி வ உ சி கல்லூரியில் பொருளாதாரத் துறையில் ஆற்றிய உரை)

இந்தியாவின் நெல் மனிதர். பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட, எம். எஸ். சாமிநாதன், 98 ஆண்டுகள் வாழ்ந்து, 28- 9- 2023 அன்று இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

அவருடைய பங்களிப்பை போற்றும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு வடிவங்களில், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எண்பதுகளிலேயே, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு மிக்க, நட்சத்திர அந்தஸ்து பெற்ற, அறிவியல் விஞ்ஞானியாக வலம் வந்தவர் எம். எஸ் சாமிநாதன்.

அவர் செல்லும் இடங்களில் எல்லாம், அவரிடம் பெறப்படும் ஆட்டோகிராஃப்கள், அணிந்திருக்கும் Tசர்ட்டில் கையெழுத்து கேட்பது, போன்ற நிகழ்வுகள் மூலம் இவற்றை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

நிபுணத்துவம்

வேளாண்மையில் அவருக்கிருந்த அளப்பரிய ஆற்றலை வேறு ஒரு உதாரணம் மூலம் புரிந்து கொள்ள முடியும். 1984 ஆம் ஆண்டு, எம்.எஸ் சாமிநாதன் அவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில், பன்னாட்டு நெல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தார்.

அப்போது, கோவை,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, இந்தியா வந்திருந்தார்.

“மணிலா திரும்புவதற்கு முன்பாக என்னை நீங்கள் பார்த்து செல்ல வேண்டும்” என்ற குறிப்பு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடமிருந்து வருகிறது. எம்.எஸ் சுவாமிநாதன் டெல்லி சென்று, பிரதமர் இந்திரா காந்தி அவர்களை சந்தித்தார்.

அவர், “நீங்கள் விமானம் ஏறுவதற்கு முன்பாக, வரவிருக்கிற மக்களவை தேர்தலுக்கான விவசாயிகள் சம்பந்தமான தேர்தல் அறிக்கையை எழுதி கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்”என்று அன்போடு கேட்டுக் கொண்டார்.

“தேர்தல் வருவதற்கு இன்னமும் நிறைய நாட்கள் இருக்கிறதே” என்று எம்.எஸ் சாமிநாதன் இந்திரா காந்தி அவர்களிடம் கேட்கிறார்.

“தேர்தல் முன் கூட்டியே வர இருக்கிறது” என்று கூறி, உடனடியாக எழுதித் தருமாறு கூறுகிறார். பிரதமர் இந்திரா காந்தி குறிப்பிட்டது போலவே, அடுத்த விமானத்தில் மணிலா செல்வதற்கு முன்பாக, தேர்தல் அறிக்கையை தயார் செய்து கொடுத்துவிட்டு சென்றார்.

Image

அவர் சென்ற அடுத்த ஏழு நாட்களில் இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டார். அடுத்த பொறுப்பிற்கு வந்த ராஜீவ் காந்தி, மணிலாவிற்கு தகவல் அனுப்பி வைக்கிறார். தேர்தல் அறிக்கை தயார் செய்து தர வேண்டும் என்று கோருகிறார்.

அது ஏற்கனவே தயார் செய்து கொடுக்கப்பட்டு விட்டது என சாமிநாதன் பதில் அளிக்கிறார். நின்ற இடத்திலேயே ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் வல்லமை அவருக்கு இருந்தது என்பது நிரூபணம்.

உலகம் முழுவதும் உள்ள சுமார் நூறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. அதேபோல் இந்தியாவின் பத்ம விபூசண் விருது உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.

எம்.எஸ். சாமிநாதனை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

இத்தகைய மனிதரை, இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற விதத்தில், வ உ சி பெயர் தாங்கி நிற்கும் இந்த கல்லூரி, இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது போற்றுதலுக்கு உரியது.

எம்.எஸ்.சாமிநாதன் பங்களிப்பை நாம் என்றென்றும் ஏன் நினைவு கூற வேண்டும். பசுமை புரட்சிக்கு வித்திடும் முன்பாக, நாட்டின் உணவு உற்பத்தி, உணவு கையிருப்பு என்னவாக இருந்தது?

இந்தியாவுக்கு மட்டுமே பங்களிப்பு செய்தவரா? சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்,உயிர் பன்மய பாதுகாப்பு பற்றிய அவரது அக்கறை என்னவாக இருந்தது? இத்தகைய முக்கியமான கேள்விகளுக்கு விடை அளிப்பதன் மூலம், எம்.எஸ்.சாமிநாதன் அவர்களை இளம் தலைமுறையினருக்கு ஓரளவு அறிமுகம் செய்ய முடியும்.

பட்டினியில் இருந்து உபரி

60களில், இந்திய மக்கள் தொகை சுமார் 44 கோடி. இவர்களுக்கான உணவு பொருட்கள் கையிருப்பு, ஒரு வாரம் கூட இல்லாத நிலை இருந்தது. இந்திய கடல் எல்லையில், ஏதேனும் கப்பல்கள் உணவு பொருட்களோடு சென்று கொண்டிருந்தால், அவற்றை கண்காணித்து, அது பற்றிய செய்தி உடனடியாக உணவு அமைச்சர் மூலம் பிரதமருக்கு தெரிவிக்கப்படும்.

 

அங்கிருந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜான்சன் அவர்களுக்கு சென்று சேரும். ஆங்கிலத்தில் SOS ( save our soul)என்று கூறப்படும், “எங்கள் உயிரை காப்பாற்றுங்கள்” என்ற வேண்டுகோளோடு, அந்தக் கப்பலுக்கு செய்தி சென்று சேர்ந்து, அந்த உணவு கப்பல்கள் இந்திய கடற்கரையை நோக்கி திருப்பி விடப்படும்.

இப்படித்தான் நமது இந்திய குடிமக்கள் வயிறு ஓரளவு நிரம்பிக் கொண்டிருந்தது. கப்பலின் வருகையைப் பொறுத்து நமது வயிறும் திரும்பிக் கொண்டிருந்தது. இந்நிலை தொடர்ந்தால், வங்கப் பஞ்சம்போல் மக்கள் செத்து மடியும் சூழல் ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய சூழ்நிலையை போக்கி, தனக்கு இருக்கும் அறிவை பயன்படுத்தி, உணவு உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்தார்.

இப்படியொரு செயல்பாட்டை முன்னெடுக்கக் காரணமாக அமைந்தது, காந்தியும் நேருவும்.எம்.எஸ். சாமிநாதன் சிறுவனாக இருக்கும் போது, மகாத்மா காந்தி, கும்பகோணம் வந்து, அவரது வீட்டில் இரண்டு முறை தங்கியிருக்கிறார். அவரது மனதில் அந்த ஆதர்ஷ நாயகனின் பிம்பம் வினையாற்றிக் கொண்டேயிருந்தது.

படித்து பெரியவனாகி சாதனைக்கு தயார் நிலையில் இருக்கும் போது தான் உணவுப் பஞ்சத்தை சந்திக்க நேர்ந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, ” நாடு எதற்கு வேண்டுமானாலும் காத்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் வேளாண்மைக்காக காத்திருக்க முடியாது” என்ற அறைகூவல் விடுத்தார்.

இதனை ஒட்டியே, 1966 இல் நோபல் பரிசு பெற்ற, நார்மன் பொல்லாக் உருவாக்கிய, கோதுமை உற்பத்தியில் வீரிய ரக வித்துக்களை, 18000 டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்தியா எங்கும் எடுத்து செல்லப்பட்டு,விநியோகம் செய்யப்பட்டு விதைக்கப்பட்டது. அதன் பின்னர், அப்படியொரு உணவு பற்றாக்குறை, நம் நாடு சந்திக்காத நிலையை உருவாக்கினார். அதுமட்டுமின்றி, உணவு பற்றாக்குறையிலிருந்து உணவு தன்னிறைவு. அதிலிருந்து உணவு உற்பத்தியில் உபரி நாடு என்ற நிலையும் எட்டி இருக்கிறோம்.

பசுமைப் புரட்சியின் பாதகங்களை முதலில் உரைத்தவர்

வீரிய ரக வித்துக்கள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நவீன தொழில்நுட்பங்கள் கருவிகள் அடங்கிய கலவையே பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது. பசுமைப் புரட்சிக்கு பசுமை புரட்சி என்று வித்திட்டவர் வில்லியம் கார்டு. பசுமை புரட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட வேளாண்மை யுக்தியின் மூலம், உற்பத்தியும் உற்பத்தி திறனும் வேகமாக அதிகரிக்க தொடங்கியது. 1966 ஆம் ஆண்டு, 8.2 கோடி டன்னாக இருந்த இந்திய உணவு உற்பத்தி, அடுத்த 10 ஆண்டுகளில் 10.8 கோடி டன்னாக உயர்ந்தது. 2022 33 கோடி டன்னாக இது அதிகரித்துள்ளது. 1960 முதல் 2023 வரை, உணவு பொருள் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

இத்தகைய உற்பத்தி பெருகுவதற்கு முன்னரே, பசுமை புரட்சிக்கு வித்திட்டு இரண்டே இரண்டு ஆண்டுகளில், 1968 ஆம் ஆண்டு, 55வது இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் எம் எஸ் சாமிநாதன். அப்போது அவர், “நாம் இப்போது அமலாக்கம் செய்து கொண்டிருக்கும் பசுமை புரட்சி, அறிவியல் பூர்வமானது அல்ல. இதன் விளைவாக, மண், உப்பு மண்ணாக மாறுவதற்கும், நிலத்தடி நீர் குறைவதற்கும், உயிரி பன்மயம் சூறையாடப்படுவதற்கும், பூச்சிக்கொல்லிகளை தொடர்ந்து கையாளும் குடும்பங்கள் புற்றுநோய்க்கு ஆளாவதற்கும், பெரும் வாய்ப்பு இருக்கிறது.

பசுமைப் புரட்சியின் பாதக விளைவுகளை முறையாக கண்டறிய வேண்டும். பசுமைப் புரட்சி என்பது பேராசை புரட்சியாக மாறிக்கொண்டு வருகிறது. பசுமை புரட்சி நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு ஏற்றது அல்ல. தீவிர உணவு பற்றாக்குறையிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, ஒரு தற்காலிக ஏற்பாடு. பசுமை புரட்சி, மண் ஆரோக்கியம், தரமான பாசன வசதி, உயிரிப் பன்மயத்தை புனரமைத்தல், ஆகியவற்றுக்கு தீர்வு தேடப்படவில்லை என்றால், பசுமை புரட்சியால் நீடித்த நிலைத்த வளர்ச்சியை எட்ட முடியாது. எனவே, பசுமை புரட்சி அல்ல, “என்றென்றும் பசுமைப்புரட்சி இருக்கும் நிலையை அடைய வேண்டும்’ என்று அவர் பேசினார். பசுமைப் புரட்சியின் தந்தை என வர்ணிக்கப்பட்ட, எம்.எஸ் சாமிநாதன், அதற்கு வித்திட்ட ஒரு சில ஆண்டுகளிலேயே ஆற்றிய உரை இது.

மேலும் அவர், “என்றென்றும் பசுமையாக இருக்கும் வேளாண்மையை நோக்கி செல்லும் போது, சூழல் மண்டலத்தின் ஒவ்வொரு பாகமும் பயன் பெறுவதாக பாதுகாக்கப்படுவதாக இருக்க வேண்டும். மிகக் குறைந்த இயற்கை வளங்களை வைத்துக்கொண்டு, மிகச்சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்ற நிலை வர வேண்டும். காலநிலை மாற்றம் காரணமாக, வேளாண்மை உற்பத்தி பொருள்களின் விலைகள் உயரும். நாம் அதற்கு தக்க வேளாண்மை ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்” என்றும் அவர் கூறினார். பசுமைப் புரட்சியில் இருந்து என்றென்றும் பசுமையை நோக்கிய திட்டங்களை ஆட்சியாளர்கள் முன்னெடுத்து இருக்க வேண்டும். அதற்கு பதிலாக எம்.எஸ் .சாமிநாதன் அவர்களை குறை சொல்லி பயனில்லை. அவர் தெளிவான பார்வை கொண்டவராகவே என்றென்றும் இருந்தார்.

விவசாயிகள் ஆணையம்

பசுமை புரட்சிக்கு பின்னர், எம்.எஸ்.சாமிநாதனின் மிகப்பெரும் பங்களிப்பு, 2004 ஆம் ஆண்டு அவர் தலைமையேற்று, ஆராய்ச்சி செய்து, சமர்ப்பித்த விவசாயிகள் ஆணைய பரிந்துரைகள்,18-11-2004 ஆம் ஆண்டு முதல் 4-10- 2006 ஆம் ஆண்டு வரை, இரண்டு ஆண்டு காலம், இந்தியா முழுவதும் சென்று, கருத்து சேகரித்து, 44 கூட்டங்களை நடத்தி, இந்த அறிக்கையை அவர் தயார் செய்தார். இக்குழு பரிந்துரைகள் ஏற்கப்படும் வரை, எம் எஸ் சாமிநாதன் விவசாயிகளோடு என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். நாடு சுதந்திரம் பெற்றது முதல், விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட முதல் விவசாயிகள் குழு இதுவே. 90களில் அதிகரித்து வந்த விவசாயிகள் தற்கொலைக்கு, காத்திரமான தீர்வுகளை இந்த குழு முன்வைத்தது.

விவசாயிகளின் விடியலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கொடுக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கியமானவை, அடக்கச் செலவோடு 50 விழுக்காடு வருவாய் உத்தரவாதம் செய்து விலை தீர்மானம் செய்யப்பட வேண்டும். அனைத்து வேளாண்மை உற்பத்தி பண்டங்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு தேவை. உச்சவரம்புக்கு மேல் உள்ள நிலங்கள், நிலமில்லா விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். மாநில விவசாயிகள் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளின் அனைத்து வகை தேவைகளுக்கும் நான்கு விழுக்காடு வட்டியில் நிறுவன கடன்கள் கிடைக்க உத்தரவாதம் செய்ய வேண்டும். இந்தப் பரிந்துரைகளில் மிக மிக முக்கியமானவை, “விவசாயிகளின் முன்னேற்றத்தை, விவசாய உற்பத்தி, உற்பத்தித்திறன் ஆகியவற்றை கொண்டு மதிப்பிடக் கூடாது. மாறாக, விவசாயிகளின் வருமானம் எந்த அளவுக்கு உயர்கிறதோ, அதை கணித்து, அதன் அடிப்படையில், தான் விவசாயம் முன்னேறுகிறது.

பெண் விவசாயிகள் மசோதா

எம் எஸ் சாமிநாதன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, அவர் கொண்டு வந்த தனிநபர் மசோதா, விவசாயிகள் நிலத்தின் மீது அவருக்கு இருந்த அக்கறையை ஸ்தூலமாக வெளிக்காட்டுவது. 2011 ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த தனிநபர் மசோதாவில், பெண் விவசாயிகளை அதிகாரப்படுத்தும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. பெருமளவு வேளாண் பணிகளை பெண்களே முன்னெடுக்கிறார்கள்.

ஆனால், பெண்களுக்கு நில உரிமை இல்லாததால், அதில் வரும் வருமானமும் சட்டப்படி பங்கின்றி, தேசிய வருமானத்தில் பங்களிப்பின்றி போகிறது. எனவே, உழும் நிலத்திலும் உரிமை வேண்டும் என்று அவர் கொண்டு வந்த மசோதா கூறுகிறது. எம் .எஸ்.சாமிநாதன். 2001 ஆம் ஆண்டு விதை மற்றும் பயிர் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

இயற்கை பாதுகாப்பு

இயற்கை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தார் எம் எஸ் சாமிநாதன். இந்திய அளவிலும் உலக அளவிலும் இதற்கு நிறைய உதாரணங்களை கூற முடியும். கேரளாவில் பசுமை பள்ளத்தாக்கு பாதுகாக்கும் போராட்டம். இந்திய பசுமை போராட்டங்களில் மிக முக்கிய இடத்தை பிடித்த போராட்டம். இந்த போராட்டங்களின் போது, அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களிடம் சென்று,பசுமை பள்ளத்தாக்கின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். அங்கு அமைய இருந்த நீர் மின்சார திட்டம் கைவிடப்படுவதற்கு உதவி செய்தார். தொடங்கப்பட்ட போராட்டத்தை நேரடியாக ஆதரித்தார். மாங்குரோவ் காடுகளை பாதுகாக்கவும் வளர்க்கவும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். “மரபணு மாற்றப்பட்ட விதைகள் இல்லாத இந்தியா” என்ற மிகச்சிறந்த நூலை தொகுத்து, அதற்கு முன்னுரை கேட்டபோது, மறுக்காமல் அந்த முன்னுரையை அளித்து அதற்கு காத்திரமான ஒரு முன்னுரையை எழுதிக் கொடுத்தார்.

இயற்கை பாதுகாப்பில் மக்கள் பங்கேற்பு, மற்றும் பங்களிப்பு இரண்டையும் உணர்ந்தவராக அவர் இருந்தார். மரபணு பாதுகாப்பு, கட்டுப்படுத்துவதில், மக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்று என்பதே அவரது கருத்து கண்மூடித்தனமாக அறிவியல் தொழில்நுட்பத்தை மட்டுமே அவர் ஆதரிக்கவில்லை ஒருவேளை அப்படி நம்பினால் அது இயற்கையின் பேரழிவுக்கு வித்திடும் என்பதையும் எம்.எஸ். சாமிநாதன் சுட்டிக்காட்ட தவறவில்லை. ” எந்த ஒன்றையும் செயல் வழியில் கற்றுக் கொள்வது. வெற்றி பெறும் வரை தொடர்ந்து அதனை மேற்கொள்வது”. “ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய செயல்களை அதில் நிபுணத்துவம் அடையும் வரை செய்ய வேண்டும் ” என்பது அவருக்கு மிகுந்த பிடித்தமான செயல்பாடுகள். இளம் தலைமுறை இந்த தாரகமந்திரத்தை மனதில் நிறுத்தி வார்த்தைகளை நிறுத்தி வாழ்க்கை பயணத்தை துவக்க வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு

MS Swaminathan's contribution to agriculture by Professor N Mani

நா. மணி

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.‌

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

53 மின்சார ரயில்கள் ரத்து: கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

ஆப்கான் வீரர் ரஷீத் கானுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கினாரா ரத்தன் டாடா?

ஹெல்த் டிப்ஸ்: இனி நெய் சாப்பிடும் போது இந்த 3 விஷயங்களை மறந்துடாதீங்க!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts