மின்னம்பலம்.காம் என்னும் ஒரு மொபைல் பத்திரிகை ஆரம்பிப்பதற்கான விவாதங்களில் ஒரு சில முறை பங்கெடுத்துக் கொண்டதால் எனக்கும் மின்னம்பலத்துக்கும் உள்ள உறவானது அதன் கருவிலிருந்தே தொடங்கிவிட்டது.
நண்பர்கள் பிபிசி எல்.ஆர்.ஜகதீசன், அயன்புரம் பன்னீர்செல்வன் ஆகியவர்களின் அறிமுகத்தால் நிறுவன ஆசிரியர் காமராஜிடம் ஆரம்பம் முதலே மின்னம்பலத்தின் தொழில்நுட்பம் குறித்த உரையாடல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறேன். ஓர் ஊடக ஆய்வாளராக, மின்னம்பலம் எனக்கு ஓர் ஆய்வுப் பொருளும்கூட.
நிற்க.
எனக்குத் தெரிந்து மொபைலில் மட்டுமே படிக்க என ஒரு “பத்திரிகை” வெளிவருகிறதென்றால் அது மின்னம்பலம் மட்டுமே என நினைக்கிறேன். அதாவது, செயலிகளாக இல்லாமல், மொபைல் (தொடு)திரைக்கு ஏதுவாக மொபைலுக்கு மட்டுமே பத்திரிகை தயாரிக்கப்பட்டதில் மின்னம்பலத்துக்கே முதலிடம். ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாம் செயலிகள் வடிவத்தில் உள்ளன. அல்லது மொபைல் திரைக்கு ஏற்றவாறு (screen optimisation) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மொபைல் பத்திரிகையாக மின்னம்பலமே இருப்பதை ஒரு முக்கிய ஊடக நிகழ்வாகவும் பார்க்கிறேன்.
வளரும் நாடுகளில் செயலிகள் பரவலாகப் புழக்கத்தில் இல்லாததாலும், வாட்ஸ்அப் போன்ற பகிர்வுகளில் (மின்னம்பலம்) பத்திரிகை முகவரி பகிரப்படும்போது, பயனர் அதன்மேல் அழுத்தினால் எளிதாக ஒரு மொபைல் திரையில் படிக்க ஏதுவாக மின்னம்பலம் இருப்பது ஒரு சீரிய நுகர்வு யுக்தியாகும். மின்னம்பலத்தின் வாசகர்களைத் தகவல் தொழில்நுட்பக் காலத்துக்கு அழைத்துச்செல்லும் யுக்தியும்கூட. ஊடக ஆய்வாளர் மார்ஷல் மக்லூகனின் “வடிவமே செய்தி” (medium is the message) என்ற விதியோடு ஒட்டிப்போவதை இது நினைவுபடுத்துகிறது. ஆனால், அது மட்டும் மின்னம்பலத்தின் பலமல்ல. வடிவம் என்பது வாசகனை உள்ளே அழைத்து வருவதற்கான ஒரு வாசல் மட்டுமே. மின்னம்பலத்தின் பலம் செய்தித் தேர்விலும் உள்ளது.
இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ‘எனது பார்வையில்’ என்ற தொடரில் பலரும் சொல்லியிருக்கின்றனர். எனது பங்காக, இரண்டுவிதமான தொடர்களை நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். முதலில் ஜெயரஞ்சனின் பொருளாதாரக் கட்டுரைகள். ரஞ்சனின் நடையும் அவரது ஆழ்ந்த அறிவும் இக்கட்டுரைகளின் வெற்றிக்குக் காரணம் என்பதில் மறுப்பேதுமில்லை. அதேசமயத்தில், இக்கட்டுரைகளின் வடிவமும் மின்னம்பலத்தின் வடிவமும் இணக்கமுடன் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ரஞ்சனின் கட்டுரைகள் சொல்லவந்த பொருளை எளிதாகவும் சுருக்கமாகவும் சொல்வதற்கு மின்னம்பலப் பொருளடக்க வடிவமும் ஒத்துழைத்தது. அதாவது ஓர் ஆய்வுக் கட்டுரைக்குத் தேவையான பொருளடக்கத்தோடு, ஆடம்பரமின்றி ஒரு சராசரி வாசகரை அடைய மின்னம்பலத்தின் வடிவத்தையும் ஒரு பின்புலமாக நான் பார்க்கிறேன்.
இதை ரஞ்சனே என்னிடம் பலமுறை வேறுவேறு மொழிகளில் சொல்லியிருக்கிறார். உதாரணமாக எனது தொடர்கள் வெளிவந்தபோது, “நிறைய சொல்ல வேண்டாம், முரளி. ஒரு தொடரில் ஒரு விஷயத்தை விளக்குங்கள். ஆனால், நம்மால் தொடர்ந்து நீண்ட நாள் பல விஷயங்களைச் சொல்ல மின்னம்பலத்தில் வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார் (நான் அந்த அறிவுரையைக் கேட்டேனா என்பதை ரஞ்சன்தான் விளக்க வேண்டும்!). எனது தொடர்களில் உலகமயமாக்கல், மேற்கில் வலதுசாரி அரசியல் எழுச்சியின் பின்னணி, தகவல் தொழில்நுட்ப முதலீட்டியம், ஊடக அரசியல் எனப் பல ஆய்வுப்பொருள்களுக்கு இடையே நிலவிவரும் நுண்ணிய உறவுகளை எழுத முயற்சித்தபோது மின்னம்பலத்தாரர்கள் எனக்குத் தொடர்ந்து ஆதரவையும் உற்சாகத்தையும் அளித்தனர். இப்படிப்பட்ட கட்டுரைகளை அறிமுகப்படுத்துவதில் தயக்கமே காட்டாமல், தொடர்ந்து எழுதவும் கேட்டுக்கொண்டனர். இக்கட்டுரைகளை வாரப் பத்திரிகைகளில் எழுதியிருக்க முடியாது என்பதே எனது ஊகம். இது இரண்டாவது உதாரணம்.
உலகில் உள்ள எல்லா இணையதள செய்தித்தளங்களுக்கு உள்ள சவால் மின்னம்பலத்துக்கும் உள்ளது: வருவாய் ஈட்டுவது. பத்திரிகை தளங்கள் இலவச பொது நூலகங்களல்ல (அவைகூட மக்கள் வரி கொண்டுதான் நடத்தப்படுகின்றன). ஆனால், சந்தையின் போட்டியானது வாசகர்களிடம் இலவசமாகச் செய்திகளைக் கொண்டுசேர்க்கும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது. விளம்பர வருவாய்களை மட்டுமே நம்பி இணைய ஊடகத் தொழில் நடப்பது கடினம். இது, மின்னம்பலத்துக்கு முன் உள்ள ஒரு சவால். செய்தித்தாள்களை விலை கொடுத்து வாங்கும் வாசகர், இணையத்தில் அதைச் செய்ய தயாராயில்லை. தமிழ்நாடு தாண்டி வாழும் வெளிநாடு வாசகர்களுக்கு ஏற்ற தனிப்பிரதியோ, சிறப்புச் செய்திகளோ (premium content) ஒரு யுக்தியாக மாற வாய்ப்புள்ளதா என மின்னம்பலத்தாரர்கள் யோசிக்கலாம். பரீட்சார்த்த முறையில் சில சோதனைகளைச் செய்து பார்க்கலாம்.
மேலும் சில தனிப்பட்ட ஆலோசனைகள்:
தற்சமயம் மின்னம்பலத்தின் பொருளடக்கங்கள் வீட்டுத் திண்ணையில் வரிசையாகப் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் பலம், வாசகர் உடனடியாகத் தனக்குத் தேவையான செய்திப்பொருளைக் கண்டுகொள்ள முடிவதேயாகும். வரும் காலத்தில் திண்ணையில் அனைத்து செய்தியையும் பரப்பாமல் ஓர் அலமாரிக்குள் அடுக்கிவைக்கும் முறையைக் கையாளலாம் என நினைக்கிறேன். அதாவது, செய்திகளைப் பிரித்துத் தொகுத்து அடுக்கி வாசகருக்கு அளிக்கும் காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன்.
வாசகர் நேரடியாக மின்னம்பலத்துக்கு கருத்து தெரிவிக்க வழி ஏற்படுத்த வேண்டும். தற்சமயம் இது ‘எங்களைப் பற்றி’யில் ஒளிந்துள்ளது.
சிறப்புக் கட்டுரைகள் ஒலி வடிவத்தில் படிக்கப்பட்டால் வாட்ஸ்அப்பின் மூலம் மேலும் பலரைச் சென்றடைய வழி செய்யும்; விளம்பரத்துக்கும் ஏதுவாகும்.
வாட்ஸ்அப் உதவியோடு மாவட்ட ரீதியான மக்கள் செய்தியாளர்களை (citizen reporters) நியமிக்கலாம்.
தொடர்ந்து வீறுநடை போட மின்னம்பலத்துக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், ஆதரவும்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
முரளி சண்முகவேலன்
ஊடக மானுடவியலாளர், லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
எதிர்த்து நிற்கும் தொழிலாளர்கள்! – முரளி சண்முகவேலன்