– முனைவர் டி.ரவிக்குமார், பாராளுமன்ற உறுப்பினர்
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அது தொடர்பான விசாரணையை ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் மத்திய புலனாய்வுக் குழுவிடம் ( சிபிஐ) ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட்டது போன்ற தோற்றத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் அரசின் நடவடிக்கையில் திருப்தி அடையாத மக்கள் நாடெங்கும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக மாணவர் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளாலும் அவை முன்னெடுக்கப்படுகின்றன.
என்.டி.ஏ மீது அவநம்பிக்கை!
2024 ஜூன் 19ஆம் தேதி அதற்கு முந்தைய நாள் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்தது. அந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் வந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. யுஜிசி நெட் தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிய விடப்பட்டதாகவும், பின்னர் அது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதென்றும் கல்வி அமைச்சகம் கூறியது. ஏற்கனவே நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் யுஜிசி – நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது இந்தத் தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வு முகமையின் ( NTA) மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு நீட் தேர்வின் மீது சந்தேகம் வந்ததற்கு முதன்மையான காரணம், குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவுகளில் 67 மாணவர்கள் 720 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணைப் பெற்றிருந்ததுதான். அதுவும் ஒரே மையத்தில் தேர்வெழுதிய பலர் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். அதுவரை இப்படி மதிப்பெண்கள் பெறப்பட்டதே இல்லை. 2023 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் இரண்டே இரண்டு பேர் தான் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். 2022 ஆம் ஆண்டில் ஒருவர் கூட அதிகபட்ச மதிப்பெண்ணைப் பெறவில்லை. அதுமட்டுமின்றி நீட் தேர்வு எழுதிய 23,33,297 மாணவர்களில் 1563 பேருக்குக் கருணை மதிப்பெண்கள் போடப்பட்டது பின்னர் தெரியவந்தது.
பிரச்சனை எழுந்தபின்னர் அவர்களுக்குப் போடப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்து விட்டதாகவும், அவர்கள் விரும்பினால் அவர்கள் மறு தேர்வில் பங்கேற்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அப்படி நடைபெற்ற மறுதேர்வில் பாதி பேர் கூடப் பங்கேற்கவில்லை. இது ஐயத்தை மேலும் அதிகப்படுத்தியது. வினாத்தாள் கசிவு, தன்னிச்சையாகக் கருணை மதிப்பெண்கள் போட்டது என ஒவ்வொன்றாக நீட் தேர்வின் முறைகேடுகள் வெளிப்பட ஆரம்பித்தன.
பல்வேறு தனிப் பயிற்சி மையங்களில் வினாத்தாள்கள் திட்டமிடப்பட்ட முறையில் முதல் நாளே லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. அப்படி விற்பனை செய்த ஒரு நபர், வினாத்தாள்களை விற்பதன் மூலம் 300 கோடி திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்திருந்தார் என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது.
தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் பதவியில் இருந்தவரை விலக்கிவிட்டு வேறு ஒருவரைக் கல்வி அமைச்சகம் நியமித்திருக்கிறது. அது மட்டுமின்றி இப்படித் தேர்வுகளில் முறைகேடு செய்பவர்களைத் தண்டிப்பதற்கென 2024 பிப்ரவரியில் அவசர அவசரமாக இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஜூன் 24 ஆம் தேதி விதிகளை வெளியிட்டுள்ளது.
சட்டம் சொல்வது என்ன?
The Public Examinations ( Prevention of Unfair means ) Act 2024 என்ற இந்த சட்டம் தேர்வுகள் தொடர்பான குற்றங்கள் எவை என்பதை வரையறுத்துள்ளது. எந்தவொரு நியாயமற்ற வழிமுறைகளிலும் ஈடுபடுவதை இது தடை செய்கிறது.
இதில் நியாயமற்ற வழிகள் எவை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது: (i) அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது வினாத்தாள் அல்லது விடைகள் அடங்கிய விசை ( answer key) கசிவு, (ii) தேர்வின்போது வேட்பாளருக்கு உதவுதல், (iii) கணினி வலையமைப்பு அல்லது வளங்களைச் சேதப்படுத்துதல், (iv) ஆவணங்களைச் சிதைத்தல் அல்லது தகுதிப் பட்டியல் அல்லது தரவரிசையை தமது விருப்பம்போல் இறுதி செய்தல், (v) பண ஆதாயத்திற்காகப் போலியாகத் தேர்வு நடத்துதல், போலி அனுமதி அட்டைகள் அல்லது போலியான கடிதங்களை வழங்குதல்.
இந்த சட்டம் பின்வருவனவற்றைத் தடைசெய்கிறது: (i) தேர்வு தொடர்பான இரகசியத் தகவல்களை உரிய நேரத்திற்கு முன் வெளியிடுவது, (ii) அங்கீகாரம் பெறாத நபர்கள் தேர்வு மையங்களுக்குள் நுழைவது. மேற்கண்ட குற்றங்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் உள்ள அனைத்துக் குற்றங்களும் பிணையில் வெளிவர முடியாதவை. துணைக் கண்காணிப்பாளர் அல்லது காவல் உதவி ஆணையருக்குக் குறையாத ஒரு அதிகாரி இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரிப்பார். ஒன்றிய அரசு விரும்பினால் இது தொடர்பான விசாரணையை எந்த மத்தியப் புலனாய்வு அமைப்புக்கும் மாற்றலாம்.
இந்த சட்டம் இயற்றப்பட்டு அதற்கான விதிகள் வெளியிடப்பட்டிருப்பது எதிர்காலத்தில் பயன்படலாமே தவிர ஏற்கனவே நீட் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு இது தீர்வாகாது. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அவ்வாறு ‘ரத்து செய்தால் உண்மையாகவே படித்துத் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள மாணவர்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடும்’ என ஒன்றிய கல்வி அமைச்சகம் கூறுகிறது. அது ஏற்புடைய வாதம் அல்ல.
நீட் தேர்வு தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளிவரும் உண்மைகள் பல மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் இந்த முறைகேடு நடந்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒரு சிலரை பதவி நீக்கம் செய்வதோ, சிபிஐ வசம் விசாரணையை ஒப்படைப்பதோ இதற்குத் தீர்வாகிவிடாது.
நீட் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஒப்புக்கு சில நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக ஒட்டு மொத்தமாக மருத்துவக் கல்வியை சீர்படுத்துவதற்கு ஒன்றிய அரசு முன் வர வேண்டும். ‘நீட் தேர்வு தேவையில்லை, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ எனப் பல ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. அதை இப்போது மேலும் பல மாநில அரசுகளும், கட்சிகளும் வழிமொழியத் தொடங்கியுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.
ஏனெனில், நீட் தேர்வு என்பது அனைத்துத் தரப்பினரின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த அனில் ஆர்.தவே என்ற ஒரே ஒரு நீதிபதியின் விருப்பத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்த ஒன்றாகும்.
மருத்துவக் கல்வி அதிகாரத்தை மையத்தில் குவிக்கும் நோக்கோடு பொது நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) 2010 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் 2012 ஆம் ஆண்டு ’நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் 90 மருத்துவக் கல்லூரிகள் அதை ஏற்கவில்லை. தாமே தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்திக்கொண்டதோடு உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன.
2013 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய பெரும்பான்மைத் தீர்ப்பின்மூலம் ’நீட்’ நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான இந்திய மருத்துவக் கவுன்சிலின் குறிப்பாணை ரத்து செய்யப்பட்டது. அந்தத் தீர்ப்பை வழங்கிய அன்றைய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெரும்பான்மைத் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகள் பதவி ஓய்வுபெற்ற பிறகு சிறுபான்மைத் தீர்ப்பளித்த அனில் ஆர்.தவே என்ற ஒரு நீதிபதி மட்டுமே பதவியில் இருந்த நிலையில் நீட் தேர்வு ரத்து என்னும் தீர்ப்பை எதிர்த்து மருத்துவக் கவுன்சில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை அவர் விசாரணைக்கு எடுத்தார்.
தீர்ப்பை வழங்கிய 2 நீதிபதிகள் ஓய்வு பெற்று அனில் ஆர்.தவே மட்டுமே எஞ்சியிருந்ததால் அவரோடு புதிதாக 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இதற்கான அமர்வு உருவாக்கப்பட்டது. நீட் தேர்வு வேண்டும் என சிறுபான்மைத் தீர்ப்பளித்திருந்த நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையில் உருவாக்கப்பட்ட அந்த அமர்வு 2013 ஆம் ஆண்டு நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு நீட் தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பை வழங்கியது. அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசும் அதைத்தான் வலியுறுத்தி வந்தது என்பதால் அந்தத் தீர்ப்பை வரவேற்று ஏற்றுக்கொண்டது.
நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும்போது அது எவ்வாறு சமத்துவமான வாய்ப்பை மறுக்கிறது என்பதைத் தமிழ்நாடு அரசு அமைத்த நீதிபதி பி.கலையரசன் குழு தனது அறிக்கையில் ஆதாரங்களோடு எடுத்துக் கூறியுள்ளது. பல்வேறு கல்வி வாரியங்களின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு; மாணவர்கள் சார்ந்துள்ள சமூகக் குழுக்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு; பெற்றோர்களின் வருமானம் அவர்களது கல்வி முதலானவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வு; பயிற்றுமொழி காரணமாக ஏற்படும் ஏற்றத்தாழ்வு பாலின ஏற்றத்தாழ்வு அரசுப் பள்ளிகளுக்கும் -தனியார் பள்ளிகளுக்கும், கிராமப்புற பள்ளிகளுக்கும் – நகர்ப்புற பள்ளிகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு- எனப் பல்வேறு அம்சங்களை அது சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆகவே நீட் தேர்வு வேண்டாம் என அது கூறியிருக்கிறது. கலையரசன் குழு கூறியவை உண்மைதான் என்பதை இப்போது அம்பலமாகியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் வெளிப்படுத்துகின்றன.
கல்வி அமைச்சரை மாற்ற வேண்டும்
இவ்வளவு முறைகேடுகள் நடந்ததற்குப் பிறகும் நீட் தேர்வை ரத்து செய்யமாட்டோம் என்று ஒன்றிய அரசு கூறுவது சரியானதல்ல. இந்தியா முழுவதும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் அல்லது எந்தெந்த மாநில அரசுகள் விரும்புகின்றனவோ அந்த மாநில அரசுகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குத் தர வேண்டும்.
தேசிய தேர்வு முகவை என்னும் அமைப்பு திறமையற்றது மட்டுமல்ல முறைகேடுகளுக்கு ஊற்றுக் கண்ணாகவும் இருந்திருக்கிறது என்பது அம்பலமாகியுள்ள நிலையில் பாஜக அரசால் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பை முற்றாகக் கலைத்து விடுவதே பொருத்தமானதாக இருக்கும்.
ஒரு தேசத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் கல்வியை அழித்தால் போதும் என்பார்கள். கல்வி மீது அக்கறையற்ற, நிர்வாகத் திறமை கொஞ்சமும் இல்லாத தர்மேந்திர பிரதான் என்பவர் கல்வி அமைச்சராக இருப்பதுதான் இந்தியாவின் கல்வித்துறையில் பல்வேறு சீர்கேடுகள் நடப்பதற்கு முதன்மையான காரணம். அவர் பதவி ஏற்கும்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் எல்லோரும் “ நீட்” “ நீட்” என்று கோஷம் எழுப்பிக் கேலி செய்தனர். அவரை மாற்றிவிட்டு கல்வியாளர் ஒருவரை அமைச்சராக நியமிக்க பிரதமர் மோடி முன்வரவேண்டும். இதுவே மக்களின் கருத்தாக உள்ளது.
கட்டுரையாளர் குறிப்பு:
முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தரம் உயர்வதற்கான வழிகள்
உயர்கல்வியில் மறுக்கப்படும் இட ஒதுக்கீடு!
23 லட்சம் யூனிட் மணல் கொள்ளை: டிஜிபிக்கு ஆதாரத்துடன் அமலாக்கத்துறை கடிதம்!
தொடர்ந்து சரியும் தங்கம் விலை – எவ்வளவு தெரியுமா?
IND vs ZIM: கேப்டனாக சுப்மன் கில்… யாருக்கெல்லாம் வாய்ப்பு?
உலகத் தரத்தில் கோவையில் செம்மொழிப் பூங்கா: பணிகள் விறுவிறு!