கோவி.லெனின்
12 மணி நேரம் வேலை என்ற சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சிகளே வெளிநடப்பு செய்து, கண்டனம் தெரிவித்தன.
ஊடக விவாதங்களில் எதிர்ப்பு அனல் பறந்தது. சமூக வலைத்தளங்களில் ஒரே கிழி கிழி..
எல்லாத் தொழிற்சாலைகளுக்கும் இது பொருந்தாது என்றது அரசுத் தரப்பு. பொருந்தக் கூடிய இடங்களில் உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று விளக்கம் தரப்பட்டது.
ஊகும்.. எதுவும் எடுபடவில்லை. எதிர்ப்பு அடங்கவில்லை.
அரசு அதிகாரிகளுடனான தொழிற்சங்கத்தினர் சந்திப்பில் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வே தன் எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்தது.
கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கும் நேரத்தில், பா.ஜ.க.விடமிருந்து ஆதரவுக் குரல் மெல்ல கேட்கிறது.
இது சரியாத் தெரியலையே என உஷாரானார் முதல்வர். 12 மணி நேர வேலை தொடர்பான சட்டமுன்வடிவின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்படுகிறது என முதல்வர் அறிவித்தார். அந்த அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்காலங்களில் தொழிலாளர் நலன் காக்க மேற்கொண்ட திட்டங்களைப் பட்டியலிட்டிருந்தார்.
ஒரு சில மாநிலங்களில் 12 மணி நேர வேலைக்கான சட்டம் இருந்தாலும் இங்கே ஏன் எடுபடவில்லை.
அதுதான் தமிழ்நாடு.
மே தினத்தை நூறாவது ஆண்டாகக் கொண்டாடும் பெருமைமிகு மாநிலம்.
மேற்கத்திய நாடுகளின் தொழில் புரட்சிக்குப் பிறகு தொழிலாளர் வர்க்கம் தங்கள் வேலை நேரம் 8 மணி நேரமாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திப் போராடி வந்தது. இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா என பாட்டாளி மக்கள் தங்கள் உரிமைக்கு குரல் கொடுத்தனர். 1886ல் மே மாதத்தில் அமெரிக்காவின் சிகாகோவில் தொழிலாளர்கள் நடத்திய பேரணியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடும் தொழிலாளர்கள் உயிர்ப்பலியும் உலகெங்கும் மே தினத்தை எழுச்சிகரமாக கடைப்பிடிக்க வைத்தது.
8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் அவரவர் சொந்தப் பணி என்கிற வரையறை உருவானது.
ரஷ்யாவில் ஜார் மன்னனுக்கு எதிரான புரட்சியும், சோவியத் யூனியன் என்கிற மாபெரும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் உருவானதும் உலகத் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. இந்தியாவில் அதன் ஆதரவு அலை வீசியது. அதிலும் தமிழ்நாட்டில் அது எப்போதும் ஓயாத அலைதான்.
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் எனப் போற்றப்படும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் 1924ஆம் ஆண்டு சென்னையில் மே தினத்தைக் கொண்டாடினார்.
இந்திய அரசியல் சட்டத்தை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் , தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பதை உறுதி செய்தார்.
தமிழ்நாட்டில் ஆட்டோ ஸ்டாண்ட் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை மே தினக் கொண்டாட்டத்தைக் காண முடியும்.
இந்த மண்ணில் பெரியாரின் பெருமையைப் பேசுபவர்கள் நாத்திகர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சுயமரியாதையும் மனிதநேயமும் கொண்ட மனிதனாக இருந்தால் போதும்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உழைப்பின் அருமையை உணர்ந்த மனிதனாக இருந்தாலே போதும்.
பெரியாரின் இயக்கம் மே தினக் கூட்டங்கள் நடத்தி தொழிலாளர்களின் உரிமையையும் சமூக நீதியையும் பேசியது. அண்ணாவின் இயக்கம் மே நாள் நிகழ்ச்சிகளை நடத்தி தொழிலாளர்களின் பக்கம் நின்றது.
பெரியாரையும் அண்ணாவையும் சந்திக்காமல் இருந்திருந்தால் நான் கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன் என்றவர் கலைஞர். அவர் ஆட்சியில் மே தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகள் சார்பிலும் மே நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
எல்லாக் கட்சியின் பிரமுகர்களும் சிவப்பு சட்டை அணிந்து கொள்ளும் மே 1, செங்கொடி இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு முந்தைய காலப் போராட்டங்களுக்கான வெற்றித் திருநாள். அடுத்த கட்டப் போராட்டங்களுக்கு ஆயத்தமாகும் நாள்.
அன்றைய ஜீவானந்தம் முதல் இன்றைய நல்லகண்ணு, சங்கரய்யா வரை தோழர்களின் கட்சி அலுவலகங்களில் செங்கொடிக்கு செவ்வணக்கம் செலுத்தி, பாட்டாளிகளின் உரிமைக் குரலாய் ஒலிப்பது வழக்கம்.
இப்படிப்பட்ட மண்ணில் 12 மணி நேர வேலை என்ற சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்புக் குரல்கள் பலமாக ஒலிப்பது இயல்புதானே.
இந்த மண்ணின் இயல்புக்கு மாறான அரசியல் கட்சியான பா.ஜ.க. மட்டுமே தனி ஆவர்த்தனம் செய்தது. இது முதலாளிகளின் உலகம் என்பதில் உறுதியாக இருக்கிறது அந்தக் கட்சி.
கார்ப்பரேட்டுகளின் காலத்தில் காம்ரேடுகள் என்ன செய்துவிடுவார்கள் என்ற சிந்தனை, உலகமயம்-தாராளமயம்-தனியார்மயம் என்பதன் மூலமாக 30 ஆண்டுகளுக்கு முன்பே விதைக்கப்பட்டுவிட்டது.
சோவியத் யூனியன் சிதைந்து பல நாடுகளானதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் வீழ்ந்ததும் முதலாளித்துவத்தின் கொண்டாட்ட காலமாக மாறியது. உலகம் அவர்களின் சுரண்டல் பூமியானது.
இந்தியாவும் உலகத்தில்தான் இருக்கிறது. தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது. தப்பிக்க முடியுமா?
கோவையிலும் திருப்பூரிலும் வலுவாக இருந்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் கரைந்து போயின.
சென்னை, மதுரை என மற்ற நகரங்களிலும் இதே நிலைதான்.
ஐ.டி. கம்பெனிகளில் 8 மணி நேரம் மட்டுமா வேலை பார்க்கிறார்கள்?
தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்றா ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள் நினைக்கிறார்கள்?
அவர்களின் உரிமைகளை எடுத்துச் சொல்வதற்கு தொழிற்சங்கங்கள் உண்டா?
ஐ.டி. துறையில் மட்டுமல்ல, அநேக துறைகளிலும் இந்த நிலைமைதான்.
உரிமைக்கான ஒரு சின்ன போராட்டம் என்றாலும் நியூசென்ஸ், நான்சென்ஸ் என்று நினைக்கிற தலைமுறை அதிகமாகிவிட்டது.
வீக்எண்ட் கொண்டாட்டங்களுக்கு நேரம் கிடைத்தால் போதும். அதற்கு செலவு செய்யக்கூடிய அளவுக்கு ஊதியம் தந்தால் போதும் என்பதே இன்றைய மனநிலை.
EMI வாழ்க்கையில் ESI போன்ற தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களைக் கூட அறிவதில்லை. அறிந்து கொள்ள நேரமும், ஆர்வமும் இல்லை.
மே தினம் வெறும் கொண்டாட்டமல்ல. உரிமைகளைப் பேசுகிற நாள். அதை பேசத் தெரியாதவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிற நாள். பேசுவோம். பேச வைப்போம்.
1000வது போட்டி: மும்பையிடம் மேட்ச் பிக்சிங்கில் தோற்றதா ராஜஸ்தான்?
மாநில தேர்தலும், தேசிய கட்சிகளும்: கர்நாடகா புலப்படுத்தும் மக்களாட்சி காட்சிகள்!