மகளிர் உரிமைத்தொகை: நீடிக்கும் குழப்பங்களும்… தீர்வுகளும்! 

சிறப்புக் கட்டுரை

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், சேர்சேட் என்று குழுமியிருந்த பெண்கள் தங்களது போனில் சாதாரண மெசேஜ் பாக்ஸை அடிக்கடி திறந்து பார்த்து வருகின்றனர்.

அக்கா மெசேஜ் வந்துடுச்சா?

தங்களை சுற்றியுள்ள பெண்களிடமும், ’அக்கா உனக்கு மெசேஜ் வந்துடுச்சா?’, ’ஒருவாயா? ஆயிரமா?’, ’தங்கச்சி கவர்மெண்ட்ல இருந்து ஆயிரம் வந்திருக்கு’, ‘எப்போ வரும் இந்த மெசேஜ்?’ ஒரு வேள மெசேஜ் வராமல் நேரா அக்கவுண்ட்ல அமெளண்ட் ஏறிருக்குமோ?’ என்று கேள்விகளை எழுப்பியபடியே உள்ளனர்.

சிலர் அரசின் உரிமைத் தொகை பெறுவதற்காக, தங்களது பட்டன் மொபைலில் குவிந்து கிடக்கும் அரத பழசான மெசேஜ்களை டெலிட் செய்தும் வருகின்றனர்

அரசு அறிவித்தபடி கலைஞர் மகளிர் உரிமைத் தொகையும் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அதில் நீடிக்கும் குழப்பங்களையும், பிரச்சனைகளையும் இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக அறிவித்திருந்தது.

மகளிர் இலவசப் பேருந்து திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவை பெண்களிடம் வரவேற்பினை பெற்ற நிலையில், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆன பின்னரும்,  மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்த நிலையில் இந்த ஆண்டே திட்டத்தைத் துவங்க அரசு முடிவுசெய்தது.  கடந்த பட்ஜெட் தாக்கலின்போது முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என்று அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களில் பொது விநியோகத் திட்டத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நலத் திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றன.

மூன்று கட்டங்களாக நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் சுமார் 1 கோடியே 65 இலட்சம்  விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

செயல்பாட்டுக்கு வந்த திட்டம்!

அதில் தகுதி வாய்ந்த 1 கோடி குடும்ப தலைவிகள் சேர்க்கப்படுவார்கள் என்று  அறிவிக்கப்பட்டது. எனினும் சுமார் ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் குடும்பத் தலைவிகள் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணியானது அறிவிக்கப்பட்ட ஒருநாளுக்கு முன்னதாகவே செப்டம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு பயனாளிகளின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இத்திட்டத்தை’  முதல்வர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர்  அண்ணாவின் 115வது பிறந்த நாளான நேற்று (செப்டம்பர் 15) அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

ஏ.டி.ஏம் கார்டும் வழங்கப்படுகிறது!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து தேர்வாகியுள்ள பெண்களுக்கு அதற்கான ஏடிஎம் கார்டுகளும் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

வங்கிக் கணக்கு வைத்திருந்தும் அது பயன்பாட்டில் இல்லாதோர், பான் அட்டை இல்லாதவர்கள், ஆதார்-பான் எண்ணை இணைக்காததால் ஏடிஎம் கார்டு வங்கியில் கிடைக்கப் பெறாதவர்கள் ஆகியோருக்கு தபால் நிலையங்களிலும், கூட்டுறவு வங்கிகளிலும் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அந்த முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு  இந்த பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது.

அந்த கார்டில் மகளிர் உரிமைத்தொகை திட்ட புகைப்படத்துடன் பயனாளியின் பெயர், அவர்களுக்கான பிரத்யேக 16 இலக்க எண்கள், கார்டு காலாவதியாகும் மாதம் ஆண்டு ஆகியவை இடம்பெற்றிருக்கும். இது ஒரு வழக்கமான டெபிட் கார்டு போன்றே இருக்கும்.

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கான இறுதிப்பட்டியல் அரசு சார்பில் வெளியிடப்படாத நிலையில், உரிமைத் தொகை பெற விண்ணப்பித்த குடும்ப தலைவிகள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. இதற்கு அரசு தரப்பில் இருந்தே விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தின் முடிவு நிலை எப்போது தெரியவரும்? குறுஞ்செய்தி அனுப்பப்படுமா? 

நிராகரிக்கப்பட 56.60 லட்சம் பேரின் விண்ணப்பங்களுக்கான முடிவு நிலை வரும் 18ஆம் தேதி முதல்‌ உங்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்‌.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எப்போது, எங்கு, எப்படி மேல்முறையீடு செய்யலாம்?

குறுஞ்செய்தி வந்த 18ஆம் தேதியில் இருந்து அடுத்த 30 நாட்களில்‌ அருகில் உள்ள இசேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம்‌.

தனி நபர்கள் மூலம் பெறும் புகார்களுக்கு வருவாய் கோட்டாட்சியரே விசாரணை அலுவலராகச் செயல்படுவார்.

இணையம் மூலம் பெறப்பட்ட மேல்முறையீடுகள் அரசு தகவல் தரவுகளோடு ஒப்பிடப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டு அதுவும் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் பயனர் குறித்த கள ஆய்வு தேவைப்படும் எனில், அதுவும் மேற்கொள்ளப்படும். அந்தக் கள ஆய்வுக்கான முடிவுகள், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வாயிலாக சரிபார்க்கப்படும்.

விடுபட்டவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாமா?

இது குறித்து பின்னர்‌ அரசால்‌ அறிவிக்கப்படும்‌.

கைப்பேசி எண்ணை எப்படி திருத்தம் செய்வது?

இதற்கான வசதி இணைய தளத்தில்‌ வழங்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி வரவில்லை என்றால் என்ன செய்வது?

குறுஞ்செய்தி பெறாதவர்கள் நேரடியாக கோட்டாட்சியர் அலுவலத்தை அணுகி உரிமைத் தொகை நிராகரிக்கப்படதன் காரணங்களை கேட்டறிந்து மீண்டும் மேல்முறையீடு செய்யலாம்.

குறுஞ்செய்தி வரப்பெற்றது ஆனால் பணம் வங்கி கணக்கில் வரவில்லை.. என்ன செய்வது?

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து புதுப்பித்தால் குறுஞ்செய்தி தொடர்புடைய மொபைல் எண்ணுக்கு வந்து சேரும்.

எனக்கு இன்னும்‌ ஏடிஎம் கார்டு வரவில்லையே?

உங்களுக்கான ஏடிஎம் கார்டு வங்கியிலிருந்து வரும். அதற்கான தகவலினை உங்களை தொடர்பு கொண்டு தெரிவிப்பார்கள். அதனை ஆக்டிவேட் செய்ய உங்கள் வங்கி கிளையினை அணுகவும்.

மாதம்தோறும் உரிமைத் தொகை எப்போது வரவு வைக்கப்படும்?

ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் நடப்பதால் தொழில்நுட்ப பிரச்சனைகளைத் தடுப்பதற்காக 15 ஆம் தேதியில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்.

மேல் முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகையை யார் யார் பெற முடியாது என்று அரசு நிர்ணயித்த தகுதிகள் என்னென்ன?

ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர்கள்

ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள்/ வருமான வரி செலுத்துபவர்கள்

ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கும் அதிகமான புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள்.

ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்கள்

வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்

ஊராட்சி மன்ற தலைவர்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.

சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்கள்.

ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.

ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெறுபவர்கள்.

சமூகப் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியமும், அரசிடமிருந்து ஓய்வூதியமும் பெறும் குடும்பங்கள்.

உரிமைத் தொகையை பறிக்கும் வங்கிகள்!

இதையெல்லாம் தாண்டி தற்போது அரசிடம் இருந்து உரிமைத் தொகையை பெற்றுள்ள குடும்பத் தலைவிகள், தங்களது குடிகார கணவர்களிடம் இருந்து அதனை எப்படி பாதுகாப்பது என்று குழம்பி போயுள்ளனர்.

ஆனால் உரிமைத் தொகை அவர்களின் கைக்கு வருவதற்கு முன்னதாகவே பறிக்கப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம் குறைந்தபட்ச வைப்புத்‌ தொகை, சேவைக்கட்டணம் என்ற பல்வேறு காரணத்திற்காக பெறப்பட்ட உரிமைத் தொகையான ரூ.1000லிருந்து வங்கிகள் தங்களது அபராதத்‌ தொகையை வசூலித்துள்ளன.

உரிமைத்தொகையைப்‌ பெற்ற பல பெண்கள்‌ கிராமப்புற மற்றும் ஏழ்மை நிலையில்‌ இருப்பதால்‌, அவர்களில் பலர் தங்கள்‌ வங்கிக்‌ கணக்கில்‌ குறைந்தபட்ச வைப்புத்‌ தொகையைப்‌ பராமரிப்பதில்லை.

இந்த நிலையில் உரிமைத் தொகை வழங்கப்படுவதை பயன்படுத்தி, தற்போது ரூ.1,000 வரவு வைக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்‌ அபராதத்‌ தொகையை வங்கிகள்‌ எடுத்துள்ளன.

இதுகுறித்து வங்கி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், ரிசர்வ்‌ வங்கியின்‌ உத்தரவின்படி, ஜன்தன்‌ வங்கிக்‌ கணக்கு அல்லாத இதர சேமிப்புக்‌ கணக்குகளில்‌ குறைந்தபட்ச பராமரிப்புத்‌ தொகை இல்லையெனில்‌, அபராதம்‌ விதிக்க வங்கிகளுக்கு அனுமதி உள்ளது. தற்போது கணக்குகள்‌ அனைத்தையும்‌ கணினிமூலம்‌ ஆன்லைனில்‌ வங்கிகள்‌ பராமரிப்பதால்‌, ஏற்கெனவே ‘புரோகிராமிங்‌’ செய்தபடி, தாமாகவே அபராதம்‌, சேவைக்கட்டணம்‌, குறுஞ்செய்தி கட்டணம்‌, பராமரிப்புக்‌ கட்டணம்‌, சிலருக்கு ஜிஎஸ்டி கட்டணமும்‌எடுத்துக்‌ கொள்ளப்படும்‌.

மேலும் வங்கிக்‌ கணக்கு தொடங்கும்போதே இதற்கு வாடிக்கையாளர்களிடம்‌ ஒப்புதல்‌ கையொப்பம்‌ பெறப்பட்டதன் அடிப்படையிலேயே உரிமைத்‌ தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டவுடன்‌, அபராதத்‌ தொகை பிடித்தம்‌ செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு பகுதி அளவு பணம்‌ எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், “இந்த பிரச்சனையில் அரசு தனிக்‌ கவனம்‌ செலுத்தி, பிடித்தம் செய்யப்பட்ட உரிமைத்தொகை கிடைக்க ஆவண செய்ய வேண்டும்‌. இல்லையென்றால் உரிமைத் தொகை அளித்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்” என்று அதிருப்தியுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

பணம் பறிக்க காத்திருக்கும் மோசடி பேர்வழிகள்!

வங்கிகள் தான் உரிமைத் தொகையிலும் கைவைத்துள்ளது என்றால், சில மோசடி பேர்வழிகள் இந்த உரிமைத் தொகை வழங்கப்படுவதை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க வலைவரித்து வருகின்றனர்.

இதுகுறித்து புகார்கள் எழுந்த நிலையில், மகளிர் உரிமை தொகை ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டை வேறு யாருடனும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி அழைப்புகளில் ஏடிஎம் விவரங்களை வழங்க வேண்டாம் என்றும் வங்கிகளில் இருந்து கேட்பதாக கூறி OTP அல்லது வங்கி விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்ததில் இருந்தே பல குடும்ப பெண்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வர ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் முதல் உரிமைத்தொகையை பெறுவதற்கே இத்தனை இடர்பாடுகள், குழப்பங்கள் நீடிப்பது பெண்கள் மத்தியில் அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அவர்கள் கோரும் குறைகளை விரைவில் நிவர்த்தி செய்து, நீண்டகாலம் பயன்பெறக் கூடிய  திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே கோடிக்கணக்கான தாய்குலத்தின் எதிர்பார்ப்பு!

கிறிஸ்டோபர் ஜெமா

உலகக்கோப்பை: எச்சரிக்கும் தென்னாப்பிரிக்கா… பின்வாங்கும் ஆஸ்திரேலியா…

ஜவான்: பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி எப்போது?

 

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *