இழப்பும் துக்கமும்!

Published On:

| By Kavi

சத்குரு

கேள்வி: நெருக்கமான பிரியமான ஒருவரை இழந்து நிற்கும் தருவாயில், அவரை இழந்த துக்கத்தையும் துயரையும் ஒருவர் எவ்வாறு தாங்கிக்கொள்வது?

பதில்

நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் துக்கம் யாரோ ஒருவர் இறப்பதால் ஏற்படுவதல்ல. ஏதோ ஒரு உயிர் விட்டுச்செல்வது எந்த விதத்திலும் உங்களைப் பாதிக்காது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களை விடுகிறார்கள். உங்களின் நகரத்தில் மட்டும் பலர் இறந்து போகிறார்கள். அதனால் பலர் துக்கத்தில் இருக்கிறார்கள். எனினும் அந்த துக்கம் உங்களைப் பாதிப்பதில்லை. அது உங்களுக்குள் ஒரு வெறுமையை உருவாக்குவதில்லை.

பிரச்சனை என்னவெனில், ஒரு குறிப்பிட்ட உயிர் விட்டுச்செல்வது உங்கள் வாழ்வில் ஒரு வெறுமையை உருவாக்குகிறது. அடிப்படையில் உங்கள் துக்கத்திற்கான காரணம் உங்கள் வாழ்வின் அங்கமாக பல வழிகளில் இருந்த ஒருவர் இல்லாமல் போய்விடுவதுதான். உங்கள் வாழ்வின் ஒரு பகுதி வெறுமையாகிவிட்டது. அந்த வெறுமையை உங்களால் கையாள முடியவில்லை. இது எவ்வாறெனில், நீங்கள் ஒரு குழுவினராக ஒரு விளையாட்டை விளையாடுகிறீர்கள். தற்போது திடீரென ஒருவர் அதிலிருந்து விலகிவிட்டார். அதனால் அந்த விளையாட்டில் இப்போது ஒரு பிளவு ஏற்பட்டுவிட்டது. அதை உங்களால் கையாள முடியவில்லை.

யாரோ ஒருவரைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொண்டீர்கள். உங்கள் மனதில் பல திட்டங்களை வகுத்துள்ளீர்கள் – “நான் இந்த நபரை மணந்துகொள்ளப் போகிறேன், நான் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளப் போகிறேன், நான் அந்த குழந்தைகளை இவ்வாறு வளர்க்கப் போகிறேன்” என்றெல்லாம் பல்வேறு திட்டங்கள். ஆனால் தற்போது இந்த நபர் உங்கள் வாழ்க்கையில் இருந்து மறைந்துவிட்டப் பின்னர் திடீரென உங்கள் கனவுகள் எல்லாம் நொறுக்கப்பட்டு விட்டன. உங்களை எவ்வாறு கையாள்வது என்று உங்களுக்கே தெரியவில்லை. நீங்கள் ஒரு ஏமாற்றத்தில் ஆழ்ந்து போகிறீர்கள்.

உங்கள் மருட்சி நீங்குகிறது என்றால் பிழையான ஒரு எண்ணத்தை நீங்கள் நீக்குகிறீர்கள் என்று பொருள். உங்களின் மருட்சி அழியும் போது மாயை அகன்றுவிடுகிறது – உண்மையை ஒப்புக்கொள்ள இதுதான் தகுந்த தருணம். துரதிருஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் மிகுந்த துன்பமும், நாசம் விளைவிக்கும் செயல்முறையாகும் விதமாக தங்களுக்குள் இதை மாற்றிவிடுகிறார்கள்.

Loss and grief sadhguru

உங்கள் துக்கம் என்பது நீங்கள் முழுமையடையாமல் இருப்பதால் நிகழ்வது. துக்கம் என்பது ஒருவர் இறக்காத போதுகூட நிகழக்கூடும். மக்கள் தாங்கள் வெற்றிகரமாக இல்லாத காரணத்தினால் கூட துக்கமாக இருக்கலாம். மக்கள் தாங்கள் அடைய நினைத்ததை அடையாமல் போனதாலோ அல்லது அவர்களின் வீடு எரிந்து போனதாலோ அல்லது அவர்களின் கார் தொலைந்து போனதாலோ கூட துக்கமாக மாறலாம்.

ஒரு குழந்தை தன்னுடைய பொம்மை தொலைந்து போனால் கூட துக்கமாக இருக்கக்கூடும். அந்த குழந்தை தன் பெற்றோர்களை விட அந்த பொம்மையின் இழப்பை பெரிதாகக் கருதக்கூடும். தன்னுடைய நாய்க்குட்டி தொலைந்து போனால் தன் தாத்தாவை இழந்ததைக் காட்டிலும் பெரிதாக துக்கப்படக்கூடும். நான் இத்தகைய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். மக்கள் இவற்றால் மிக அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனால் இதுதான் மனித இயல்பு. அந்த குழந்தைக்கு தன் நாய்க்குட்டியிடம் இருக்கும் பந்தம் தன் தாத்தாவோடு கொண்டிருக்கும் பந்தத்தைவிட மிக ஆழமானது.

ஒருவரை நீங்கள் இழந்து போவதால் எதனால் முழுமையற்றவராக உணருகிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் ஆராய வேண்டும். இந்த உயிர் முழுமையானதாகவே இங்கு வந்திருக்கின்றது. இந்த உயிரை அதன் தன்மையிலேயே நீங்கள் உணர்ந்து கொண்டால் முழுமையற்று இருப்பது என்பது பற்றிய கேள்வியே அங்கு எழாது. இந்த உயிர் முழுமையானது. முழுமையற்ற உயிர் இருக்கின்றதென்றால் படைத்தவன் மோசமான வேலையை செய்திருக்கிறான் என்று அர்த்தம்.

அவ்வாறில்லை, இது மிகவும் மகத்தான வேலை – பெரும்பாலான மக்கள் உணர்ந்து கொள்வதற்கெல்லாம் அப்பாற்பட்டது இது. இது மிக அற்புதமான வேலையும் கூட. உயிரை அதன் தன்மையில் நீங்கள் உணர்ந்திருந்தால் எதுவும் உங்களுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தாது. ஏனெனில் இது முழுமையான உயிர். இதை நீங்கள் உங்கள் தொழிலைக் கொண்டோ, உங்கள் காரைக் கொண்டோ, உங்கள் வீட்டைக் கொண்டோ, உங்கள் குடும்பத்தைக் கொண்டோ, வேறு எதைக் கொண்டும் நிரப்ப முடியாது.

இந்த உயிர் பலவற்றோடு தொடர்பு கொள்ளலாம், உறவு கொள்ளலாம், உடன் இருக்கலாம் அல்லது உள் வாங்கலாம். எனினும் அது தானாகவே ஒரு முழுமையான உயிர். அதன் தன்மை அவ்வாறானதே. இத்தகைய ஒரு அனுபவ நிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் எதை இழந்தாலும் சரி – உங்கள் வேலை, பணம் அல்லது உங்களுக்கு பிரியமான ஒருவர் – எதை இழந்தாலும் நீங்கள் துக்கமடைய மாட்டீர்கள்.

மனிதர்களைப் பொறுத்தவரையில், ஒருவரை அவரது இறப்பினால் நாம் இழந்துவிட்டால், அந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நாம் இழந்த உடமைகளை திரும்பப் பெற இயலும், இழந்த பதவிகளை திரும்பப் பெறலாம், பணம் மற்றும் செல்வத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் ஒரு மனிதரை இழந்தால் அதை ஈடுசெய்ய முடியாது. அந்த வகையில் அது மிக ஆழமான துக்கமாக இருக்கும்.

இவ்வாறு நிகழ்வதற்கான காரணம் நம் தன்மையை நாம் படத்தொகுப்பு போல உருவாக்கியுள்ளோம். நாம் எதை வைத்திருக்கிறோம், நம் பதவிகள், நாம் கொண்டுள்ள உறவுகள் மற்றும் நம் வாழ்வில் உள்ள மனிதர்கள் ஆகியவற்றை வைத்தே நாம் யார் என்பது அமைகிறது. இதில் ஏதோ ஒன்றை நாம் தொலைத்துவிட்டால் நம் தன்மையில் அது ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிடுகிறது. அதனால்தான் நாம் துன்பப்படுகிறோம்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்

மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்!

ஈரோட்டில் முகாமிட்ட சபரீசன்

நீங்கள் விலைக்கு வாங்குவதையும் பேசியிருக்கலாமே? – மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி