– ரவிக்குமார்
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா சந்தித்த முதல் நிர்வாக சிக்கலாக மொழிவாரி மாநில உருவாக்கப் பிரச்சனையைக் குறிப்பிடலாம்.
மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற ஆலோசனை 1928 ஆம் ஆண்டு நேரு தலைமையிலான கமிட்டியால் முன்வைக்கப்பட்டபோதிலும் சுதந்திரத்துக்குப் பிறகு அதில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தவில்லை.
1948 ஜூன் 17ஆம் தேதி நியமிக்கப்பட்ட தார் கமிஷன், மாநிலங்களை மொழியின் அடிப்படையில் அமைப்பது நல்லதல்ல என்று நிராகரித்ததும்கூட அதற்கொரு காரணம் எனக் கூறலாம்.
மாநிலங்கள் பிரிப்பு
பூகோள அமைப்பு, பொருளாதாரத் தற்சார்பு, நிர்வாக வசதி, எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாநிலங்களைப் பிரிக்க வேண்டுமென தார் கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அதே ஆண்டு காங்கிரஸால் அமைக்கப்பட்ட நேரு, பட்டேல், பட்டாபி ஆகியோர் அடங்கிய குழுவும் மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது பிரிவினை கோரிக்கையை வலுப்படுத்திவிடும் என்று எச்சரித்தது. இதனால் இந்தப் பிரச்சனையை இந்திய ஒன்றிய அரசு ஒத்திப்போட்டது.
தெலுங்கு பேசும் மக்களுக்கென தனி மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திரு. ஸ்ரீராமுலு 1952 அக்டோபர் 19ஆம் நாள் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.
56 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்ட அவர் 1952 டிசம்பர் 10 ஆம் நாள் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து எழுந்த பதற்றமான சூழலின் காரணமாக மொழியை அடிப்படையாகக் கொண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தை ஒன்றிய அரசு உருவாக்கியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் எழுந்தன.
எனவே 1954ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு அதற்குத் தலைவராக நீதிபதி ஃபஸுல் அலியும் உறுப்பினர்களாக இருதயநாத் குன்ஸ்ரு மற்றும் கே.எம்.பணிக்கர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
அந்த ஆணையம் பதினாறு மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களை அமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் 1956ஆம் ஆண்டு பதினான்கு மாநிலங்களும் ஆறு யூனியன் பிரதேசங்களும் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டன.
அதன் பின்னர் 1971க்கும் 1987க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் வடகிழக்குப் பிராந்தியத்தில் பல புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 த்தில் மூன்று மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
பீகாரின் தென் பகுதியிலிருந்த மாவட்டங்களைச் சேர்த்து ஜார்கண்டும், மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி மாவட்டங்களை ஒருங்கிணைத்து சட்டீஸ்கரும், உத்தரப்பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டங்களை இணைத்து உத்தராஞ்சலும் ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்பட்டன.
அதன் பின்னர் 2014 இல் தெலுங்கானா உருவானது. இந்த மாநிலங்கள் மொழி அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. பிரதேசம், இனம் – இப்படி பல்வேறு காரணிகள் அவற்றுக்கு அடிப்படைகளாக இருந்தன.
மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது பிரிவினை எண்ணத்தை வலுப்படுத்திவிடும் என்று ஜவஹர்லால் நேரு முதலான தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
அம்பேத்கரும் கூட துவக்கத்தில் அப்படியான எண்ணத்தைத்தான் வெளிப்படுத்தினார். “மொழியின் அடிப்படையில் மாநிலம் உருவாக்கப்படும்போது அதன் ஆட்சிமொழியாக அந்த மாநிலத்தின் மொழி இருக்கக்கூடாது” என்றுகூட அவர் கூறினார். ஆனால் 1955ல் தனது கருத்தை அவர் மாற்றிக்கொண்டார்.
“ தமிழர்கள் ஆந்திரர்களை வெறுக்கிறார்கள், ஆந்திரர்கள் தமிழர்களை ஏன் வெறுக்கிறார்கள்? ஹைதராபாத்தில் உள்ள ஆந்திரர்கள் மகாராஷ்டிரர்களை வெறுக்கிறார்கள் மற்றும் மகாராஷ்டிரர்கள் ஆந்திரர்களை ஏன் வெறுக்கிறார்கள்? குஜராத்திகள் ஏன் மகாராஷ்டிரர்களை வெறுக்கிறார்கள், மகாராஷ்டிரர்கள் குஜராத்திகளை ஏன் வெறுக்கிறார்கள்? பதில் மிகவும் எளிமையானது.
இருவருக்குள்ளும் இயற்கையான விரோதம் இருப்பதல்ல அந்த வெறுப்புக்குக் காரணம். அவர்கள் எதிரெதிராக வைக்கப்பட்டு, அரசாங்கம் போன்ற பொதுவான விஷயங்களில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதுவே வெறுப்புக்குக் காரணம். இப்படி அவர்கள் எதிரெதிராக வைக்கப்பட்டிருக்கும் வரை, இருவருக்கும் இடையே சமாதானம் இருக்காது.” என்று அம்பேத்கர் கூறினார்.
அம்பேத்கரின் எச்சரிக்கை
பல மொழிகள் பேசுவோர் சேர்ந்து வாழும் மற்ற நாடுகளைப் போல இந்தியா இல்லாததற்குக் காரணம் அந்த நாடுகளில் உள்ள ஒற்றுமை உணர்வு இங்கு இல்லாததுதான் என்று சுட்டிக் காட்டினார். எனவே மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்படுவது சரி என அவர் வாதிட்டார்.
உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் முதலான மாநிலங்கள் பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. அவை எதிர்காலத்தில் மேலும் பல மாநிலங்களாகப் பிரியும் என அப்போது அம்பேத்கர் அனுமானித்தார்.
‘உத்தரப்பிரதேசத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். பீகாரை இரண்டாகப் பிரிக்க வேண்டும். மத்திய பிரதேசத்தையும் இரண்டு மாநிலங்களாக்க வேண்டும்’ என்றார். ஏறத்தாழ அவர் பிரித்துக் காட்டிய விதத்தில் தான் இன்றைய உத்தராஞ்சல், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருப்பெற்றுள்ளன.
சிறிய மாநிலங்களை உருவாக்கும்போது அங்கே சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் கவலையாக இருந்தது .
‘மொழி, மத அடிப்படையிலான சிறுபான்மையினர் மட்டுமின்றி சாதி அடிப்படையிலான சிறுபான்மையினரான பட்டியல் சமூக மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்கு அவர் கூடுதல் அழுத்தம் தந்தார்.
சிறிய மாநிலங்கள் என்பவை பெரும்பான்மை சாதியினரின் கொடுங்கோன்மைக்கு இட்டுச் சென்றுவிடக்கூடாது’ என்று அவர் எச்சரித்தார்.
மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த அண்ணல் அம்பேத்கரின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:
முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூட்டணி ஆட்சியிலிருந்து கூட்டாட்சிக்கு: முதலமைச்சரின் ‘போட்காஸ்ட்’ உரை குறித்து சில குறிப்புகள்!
ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் உதவித்தொகை!
விஜய்யா இருப்பது கஷ்டமா? ஈசியா?: அர்ஜுனின் கேள்வி!
நெல்லையில் கொடூரம்: பட்டியலின இளைஞர்களை தாக்கிய 6 பேர் கைது!