நா.மணி
சேலையை கட்டியது முதல், வீட்டிற்கு வந்து அதனை மாற்றிக் கொள்ளும் வரை, பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்ளவே பெரும்பாடு படுகிறார்கள்.
இந்திய மக்கள் தொகை சுமார் 140 கோடி. அதில் பெண்கள் சரிபாதி. அதிலும் பாதிபேர் தான் சேலை உடுத்தும் நிலையிலும் வயதிலும் இருக்கிறார்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும், இன்றைய நிலையில் சுமார் 35 கோடி பெண்கள் நாள் தோறும் சேலை அணிந்து கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் இந்த அவஸ்தையை அனுதினமும் அனுபவித்து வருகிறார்கள். இப்படி எத்தனை கோடி பெண்கள், எத்தனை நூற்றாண்டுகள் இந்தக் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.
கலாச்சாரமாக மாற்றப்பட்ட கஷ்டங்கள்
மிக எளிதாக, அத்துணை துன்ப துயரங்களையும் பண்பாடாக பரிணமிக்க செய்து விட்டோம். ஒவ்வொரு கணமும் சரிசெய்து கொள்ள வேண்டிய சங்கடத்தை வெகு இயல்பாக மாற்றி விட்டோம். பிறகென்ன ? அது பண்பாடு கலாச்சாரம் ஆக மலர்ந்த பிறகு, அதனை மிகவும் இயல்பான பழக்கமாக மாற்றி விட்டோம். இப்போது அது பழகிப் போய்விட்டது. அனிச்சை செயலாக மாறிவிட்டது.
எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவையோ அங்கெல்லாம் இழுத்து இழுத்து விட்டுக் கொள்வது தன்னை அறியாத ஓர் தற்காப்பு கலையாக மாற்றம் அடைந்து விட்டது. அது பாரம் என்பதே தெரியாமல் போய்விட்டது. அந்தக் கஷ்டத்தின் இயல்பான பாதுகாவலர்களாக பெண்களே மாறி விட்டனர். அந்தப் பாரம் தெரியாவண்ணம் மறைத்து விட்டோம்.
ஆனால், வெள்ளைக்காரன் வந்தவுடன் ஆண்கள் மட்டும் வேட்டியை கழட்டி எறிந்து விட்டு, கால்சட்டை, கை சட்டை மாற்றிக் கொண்டார்கள். கோட்டு சூட்டு எல்லாம் தரித்து கொண்டார்கள். இது தான் ஆண்களின் கலாச்சாரம் என்று கூறிவிட்டு தனக்கு தோதான உடைகளை அணிந்து கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
பெண்கள் சேலையிலிருந்து இம்மியளவும் பிசகாமல் பார்த்து கொண்டது சமூகம். எந்த வேலை செய்தாலும், சேலை உடுத்திக் கொள்ளவும் மறைத்துக் கொள்ளவும் பழக்கப் படுத்தி விட்டோம். அதனைப் பண்பாடாக்கி விட்டதால், அதுவே போற்றுதலுக்கு உரிய கலாச்சாரமாக நிலை நிறுத்தி விட்டோம்.
இப்போது பெண்கள் தங்களுக்கு ஏற்ற ஆடைகள் அல்லது சுடிதார் அணிந்து கொள்ளலாம் என்று உத்தரவு போட்டால் கூட, சட்டத்தை சத்து இல்லாமல் செய்யும் சக்தியை பெற்று விட்டோம்.
சேலையில் பெண்களை சுற்றி கட்டி வைத்து விட்ட பின்னர், அவர்கள் படும் அவஸ்தைகள் என்னென்ன? வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தை எடுக்கும் போதே இயல்பாக ஏற முடியாது. இயல்பாக அமர முடியாது. அதற்கென்று தனித்துவமான பழக்கத்தை கைக் கொள்ள வேண்டும். ஆண்கள் போல் வண்டியேற முடியாது. வண்டியிலிருந்து இறங்க முடியாது.
இது மழை காலம். மழையில் இயல்பாக நடக்க முடியாது. ஒருகையில் சேலை மறுகையில் கைப் பையோ குடையோ. கவனம் தேவை நடந்து செல்ல. வகுப்பறையில் கையை தூக்கி எழுதும் போதும் கவனம் தேவை. ஏதேனும் தன்னையும் அறியாமல் விலகி விட்டதோ என்று சரி செய்து கொள்ள வேண்டும். வெய்யில் காலத்தில் வியர்த்துக் கொட்டும். இருக்கமான ஆடைகள் எப்படி இருக்கும் என்பதை அனுபவிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.
அவர்களுக்குதான் அதுவும் பழகிவிட்டதே!, மாலை நேரம். விளையாட்டு நேரம். விளையாட்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மிகவும் வினையமாக நடந்து கொள்ள வேண்டும். இயல்பாக விளையாட்டு சொல்லித் தர முடியாது. குறைந்த பட்சம் மாணவர்களை ஹேன்ஸ்அப் என்று கூறிக் கொண்டே படக்கென்று ஆசிரியர் கைகளை மேலே கொண்டு செல்ல முடியாது.
காலையில் புறப்படும் போது எத்தனை நேர்த்தியாக எத்தனை இடங்களில் பின்னை குத்தி உடலை மறைத்து இருந்தாலும் ஆடை எங்கேனும் விலகி விடுமோ என்ற அச்சத்தோடு வேலைக்கு செல்லும் பெண்கள் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். என்ன வேலை செய்து கொண்டே இருந்தாலும் கவனம் முழுவதும் உடலின் மீதே இருந்து கொண்டு இருக்க வேண்டும். இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் விடை கிடைக்க இருக்கிறது, எவ்வளவு பெரிய மகிழ்ச்சி!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆதி மனிதன், தன்னை ஆண் பெண் என்று பாகுபடுத்தி பார்த்துக் கொள்ளும் காலத்திற்கு முன்னர், ஆடைகளை தங்கள் பாதுகாப்புக்காகவே அணிந்து கொண்டு இருக்க வேண்டும். அது இலைகளோ தழைகளோ மரப்பட்டைகளோ, தோல் ஆடைகளோ எதை ஆடையாக அணிந்து கொண்டாலும் அது பொதுவானதாகவே இருந்திருக்கக் கூடும்.
எப்போது ஆடை வேறுபாடுகள் தோன்றியிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்? உழைத்து உண்டு வாழும் ஒரு கூட்டமும், பிறர் உழைப்பை உண்டு வாழும் கூட்டமும் உருவான பிறகு ஆடையில் வேறுபாடுகள் தோன்றி இருக்கலாம். பாலின சமத்துவம் இன்மையும் வர்க்க வேறுபாடும் தோன்றிய பிறகே ஆடை வடிவமைப்பு வேறுபாடுகள் வந்திருக்க வேண்டும்.
ஆணாதிக்க சமூகம் உருவாகும் போது, ஆண் தனது சமூக அந்தஸ்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், தனது சாதனைகளை பறைசாற்றவும் அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்தவும் ஆடையை ஓர் கருவியாக, தனித்துவமான கருவியாக தொடங்கி இருக்கலாம்.
பெண்கள் மீது குற்றம் சுமத்துதல்
பெண்ணை, தனது சமூக பொருளாதார சுரண்டலுக்கு ஏற்ற கருவியாக, எப்படி மாற்றுவது என்பதை சிந்தித்து அதற்கான பணிகளை மதம் பண்பாடு அரசியல் கலாச்சாரம் தத்துவம் போன்ற வடிவங்களில் உட்புகுத்தும் தந்திரங்களை கையாண்டு பெண்களுக்கான ஆடைகள் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும். வீட்டில் பூட்டி வைக்கப்பட்ட பெண்களுக்கு இந்த ஆடைகள் இடையூறாக இருந்தனவா? எப்படி வாழ்ந்தார்கள்? அவையும் ஆய்வுக்கு உரியவை.
ஆனால், புதுமைப் பெண்கள் ஆன பிறகு, கல்வி, வேலை, கலை, அறிவியல், தொழில்நுட்பம், பெண்கள் மீதான அத்து மீறல்கள், பாலியல் சீண்டல்கள், அதனினும் கொடிய செயல்கள் ஆகியவற்றில் ஈடுபடும் போது ஆடைகளையே ஆணாதிக்க சமூகம் துணைக்கு அழைத்துக் கொள்கிறது.
பச்சிளம் குழந்தைகள், வயது மிக முதிர்ந்து வறுமையில் வாடிக் கிடக்கும் பெண்களை இந்தக் காமுகர்கள் ஏன் விட்டு வைக்கவில்லை என்பதற்கு பதில் தேட முயற்சி செய்ய மாட்டார்கள்.
இன்று வரை பெண்ணின் ஆடையில் ஆண் கவனம் கொள்ள அதுவும் சேலையில் சுருட்டி வைக்கவும் வலுவான காரணமாக பசப்பி வருகின்றனர். பெண்களின் ஆடை மட்டுமா? முடியைக் கூட துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். என்னதான் பெண் பாதுகாப்பாக நடந்து கொண்டாலும் ஆண்கள், பெண்கள் மீதே குறைகளைக் தேடிக் கண்டறிந்து சுமத்திட திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள்.
பள்ளியில் படிக்கும் சிறுமியர்களுக்கு விடிவுகாலம் வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. பாவாடை தாவணிக்கு பதிலாக, சுடிதார். துப்பட்டாவுக்கு பதிலாக ஓவர் கோட் ஓர் ஆரோக்கியமான கலாச்சாரம்.
அதே பெண் குழந்தைகள் ஆசிரியர் எண்ணும் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டால் சேலை தான். ஒன்றாம் வகுப்பு முதல் பெண் குழந்தைகளுக்கு முழுக் கால் சட்டை பற்றிக் கூட யோசனை செய்யலாம். சின்னக் குழந்தைகள் தான் என்றாலும் வயது அறியா பருவம் முதலே பயிற்றுவிக்கப் படுகிறார்கள். குட்டை பாவாடை பலமுறை இழுத்து விட்டுத் தான் குழந்தைகள் அமர்கின்றன. இந்த சிரமங்கள் கூட களையப்பட வேண்டும்.
2019 ஆம் ஆண்டு கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக இருக்கும் போது பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை பின்வரும் தெளிவுரையை தருகிறது.
“நேர்த்தியான, பணியிடத்திற்கு ஏற்ற வகையில் சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் சுடிதார் உடைகளை பெண்கள் அணிந்து வரலாம்”.
இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னரும், சேலையே அணிந்து வர வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலைமை ஆசிரியர் முதல் பல நிலை அதிகாரிகள் அடக்கம்.
இதற்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் அவர்கள் தெளிவுரை தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். “அரசின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பெண் ஆசிரியர்கள் அணிந்து வரலாம்” என்று கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தின் பிறகு, “இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர் “அமைச்சரின் இந்த விளக்கத்திற்கு நன்றி. இனிமேலேனும் சௌகரியமான ஆடைகளை அணிந்து வரலாம்” என்று கூறியுள்ளார்.
இதே விசயத்தை சென்னையில் பணியாற்றி வரும் ஒரு முதுநிலை ஆசிரியரிடம் பத்திரிகையாளர் கேட்கிறார். “பாரம்பரிய உடையான சேலை சௌகரியமான ஆடைதான். ஆனால் மருத்துவக் காரணங்களுக்காக தான் விதிவிலக்கு வேண்டும்” என்கிறார்.
இங்கு மட்டுமல்ல, அஸ்ஸாம், பஞ்சாப், ஒடிசா, பிகார் என நாட்டின் பல பாகங்களிலும் பெண் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆண் ஆசிரியர் தாடி வைத்துக் கொள்ள கூடாது என்றும் பிகார் மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றன. சில இடங்களில் வெற்றி கண்டுள்ளனர்.
பல மாநிலங்களில் நேரடி அரசின் உத்தரவுகள் ஏதுமின்றி மறைமுக கட்டுபாடுகள் அவர்களை வழிநடத்தி வருகிறது. அரசு உத்தரவை இங்குள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் எப்படி எடுத்துக் கொள்ளும் எப்படி நடைமுறைப் படுத்தும் என்று தெரியவில்லை. அரசுப் பள்ளிகளில் கூட பகுதி நேர ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த மறைமுக சிக்கல்கள் இருக்கலாம். இவையும் களையப்பட வேண்டும்.
அமைச்சரின் விளக்கம், இந்தப் பிரச்சினையை ஒட்டிய ஊடக செய்திகள், சமூக ஊடக பதிவுகள் ஆசிரியர்கள் இவற்றுக்கு பிறகேனும் இதனை பெருவாய்பாக பயன்படுத்தி பெண் ஆசிரியர்கள் தங்கள் பணித் தளத்திற்கு ஏற்ற ஆடைகளை அணிந்து வலம் வர வேண்டும். இல்லையேல் சட்ட ரீதியாக கிடைத்த இந்த சுதந்திரம் கூட காலப் போக்கில் காவு கொள்ளப் படலாம்.
கட்டுரையாளர் குறிப்பு:
நா. மணி, பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத்துறை கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… ஆனால் மீண்டும் உள்ளே வர முடியுமா? – பகுதி 1
ரஜினிகாந்தின் முக்கிய முடிவு… தள்ளிப்போன லால் சலாம் ரிலீஸ்!
விருந்துல நல்லி எலும்பு கறி போடல… கூட்டுங்கடா பஞ்சாயத்தை… நின்று போன திருமணம்!