கிருஷ்ணா ஒரு ரோல் மாடல்!

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

திருடன், போக்கிரி… என ஒரு சிலர் அந்தப் பக்கமிருந்து வசை பாட, காதலன், கடவுள், தலைவன் என வேறு சிலர் இந்தப் பக்கமிருந்து உருகுகிறார்கள். இந்த மாயவனின் உண்மை சொரூபம்தான் என்ன? பாலகிருஷ்ணன் பற்றி சத்குரு…

கிருஷ்ணனின் குழந்தைப்பருவம் இவ்வளவு கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம் என்ன?

பாரதத்தின் வடக்குப் பகுதி மக்கள் தங்கநிற மேனியர்களாக பளிச்சென்று இருப்பவர்கள். பாலகிருஷ்ணனோ, வசீகரமான கருநீல வண்ணன். கற்பனைக்கெட்டாத ஆணழகன்.

அந்த அழகனின்பால் மக்கள் ஈர்க்கப்பட்டார்கள். அதனாலேயே, அவனது பயங்கரமான குறும்புகளை எல்லாம் பொறுத்துக் கொண்டார்கள். கண்டும் காணாதவர் போல் நடந்துகொண்டார்கள். அவனது அழகைப்பற்றி எத்தனை பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன! எத்தனை வர்ணனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன!

அந்த அழகுக் கண்ணன் வாழ்ந்த கோகுலத்தின் உயிர்த்துடிப்பை அனுபவிக்க வேண்டுமெனில், அடுத்தவரை நோக்கும்போது இதயமெல்லாம் நிரம்பி வழியும் அன்புடன் பாருங்கள்! ஒவ்வோர் அடியை எடுத்துவைக்கும்போதும் ஆனந்தமயமாக எடுத்து வையுங்கள்!

உங்கள் வாழ்க்கையில் மகத்தானதொரு விஷயம் நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்! நெஞ்சம் முழுக்கக் கொள்ளை மகிழ்ச்சி! யாரும் கவனிக்காத தனிமையில் உங்களுடைய நடை எப்படி இருக்கும்? அப்படித்தான் நடக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தவருடனோ, நண்பர்களுடனோ யார் கையையாவது கோத்துக்கொண்டு, சந்தோஷமாக, ஆனந்தமாக, எந்தக் கவலையும் இன்றி நடந்து பாருங்கள்.

இந்தப் பாடலை இணைந்து பாடுங்கள். கோகுலத்தில் இருப்பது போன்றதொரு உணர்வை அனுபவிப்பீர்கள். கொஞ்சம் கொஞ்சமாய் உருகி, அமைதியான, ஆனந்த, உன்மத்த நிலையை எய்துவீர்கள்!

வேதனையான உண்மை என்னவெனில், வாழ்க்கையில் மக்கள் பத்து நிமிடங்கள்கூட ஆனந்தமாக நடை பயிலுவதில்லை. தங்களை நேசிப்பவரின் எதிரில் அமர்ந்து ஒரு கண நேரத்துக்குக்கூட நெஞ்சு நிறை அன்புடன் நோக்குவதில்லை.

ஓர் அன்பான பார்வை! ஓர் ஆனந்தமான நடை! எதுவுமே இன்றி வாழ்க்கையே கழிந்துபோய்விடுகிறது. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு கோகுலத்தில் அனுமதி கிடையாது. கோகுலவாசிகள் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதும் ஆனந்தமாக ஓடியாடித் திரிபவர்கள். அன்புமயமானவர்கள். ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் நிறைந்தவர்கள்.

கருப்புசாமி என்று ஓர் ஆசாமி. ஒரு நாள் இறந்து போனான். அவனது மனைவி நீலி பிணத்தின் தலைமாட்டில் உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தாள். செய்தி கேள்விப்பட்டு கருப்புசாமியின் முதலாளி துக்கமான முகத்துடன் சாவு வீட்டுக்கு வந்தார்.

“என்ன ஆயிற்று? எப்படித் திடீரென இறந்துபோனார்?” என்று கேட்டார்.

நீலியும் மூக்கை உறிஞ்சியபடி, “கம்புச் சண்டையில் போய்விட்டார்,” என்று கூறினாள்.

“என்னது? கம்புச் சண்டையிலா?” திகைத்துப்போய் முதலாளி பின்னால் சரிந்தார்.

சற்று நேரம் கழித்து நீலியின் மாமா ஒருவர் வந்தார். “அடடே! போன மாதம்கூடப் பார்த்தேனே. நன்றாகத்தானே இருந்தான்! உன் புருஷன் எப்படி இறந்து போனான்?” என்று கேட்டார்.

“கம்புச் சண்டையில்” என்று நீலி சொன்னவுடன் அவளது மாமாவும் திகைத்துப் போய்ச் சரிந்தார்.

கருப்புசாமியின் அக்கா வந்தாள். “தம்பி எப்படி இறந்தான்?” என்று கேட்டாள்.

“கம்புச் சண்டையில்” என்று மற்றவர்களிடம் கூறியது போலவே அவளிடமும் கூறினாள் நீலி.

“ஏய்! ஏன் இப்படி அபாண்டமாகச் சொல்கிறாய்? தம்பி காலரா கண்டுதான் போனான் என்று உனக்குத் தெரியும்தானே? கம்புச் சண்டையில் போனான் என்கிறாயே! இது உனக்கே அடுக்குமா?”

“அடியேய்! என் புருஷன் கழிசடையாகவே இருந்து, கழிசலிலேயே போய்ச் சேர்ந்தான் என்ற உண்மையைக் காட்டிலும், ‘அந்த ஆள் ஏதோ ஓடி, ஆடி கம்புச் சண்டை போட்டாவது போய்ச் சேர்ந்தான்’ என்று ஊர் நினைத்துக் கொள்ளட்டுமே” என்று ஆத்திரத்துடன் கத்தித் தீர்த்தாள் கருப்புசாமியின் பெண்டாட்டி!

நீங்கள் கருப்புசாமி மாதிரி வாழவும் வேண்டாம். அவரைப் போல் சாகவும் வேண்டாம். ஆனந்தமான கணங்களை அறிந்துகொள்ளாமல் இருப்பது மனித வர்க்கத்துக்கே எதிரான ஒரு குற்றம். ஆனந்தமாக, அன்பாக இருப்பது அப்படி ஒன்றும் இயலாத செயலும் இல்லை! கைக்கெட்டாத அபூர்வமான அதிசயமும் அல்ல!

கிருஷ்ணன் தன் வாழ்நாள் முழுக்கக் கொண்டாட்டமும் கோலாகலமுமாக இருந்தான்; சுற்றி என்ன நிகழ்ந்தாலும் அவற்றால் பாதிக்கப்படாமல் துள்ளித் திரிந்தான் இடர்கள் நிறைந்த அவனது வாழ்க்கை சின்னஞ்சிறு பருவத்திலேயே எவ்வளவோ மோசமான சூழ்நிலைகளைச் சந்தித்தது. பிறந்த தருணம் முதற்கொண்டே அவனைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவனைக் கொல்வதற்கு எண்ணிலடங்கா கொலைகாரர்கள் வந்தார்கள். ஆயினும் பல்வேறு முறைகளில் அவன் உயிர் பிழைத்துக் கொண்டான்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கொலை முயற்சிகளின் போதும்கூட அவன் நடனம், மகிழ்ச்சி, ஆனந்தம், அன்பு ஆகியவற்றின் கலவையாகத்தான் இருந்தான்!

போர்க்களத்தில், எதிரியின் தலையைச் சீவுகின்ற தருணத்தில் இருந்தாலும் அவன் இதழ்களில் புன்னகை! அன்பு நிறை சூழல், ஆனந்தம் நிறை சூழல், பயங்கரமான சூழல் என்று எந்த நிலையில் இருந்தாலும் முகத்தில் மாறாத புன்னகை இருந்து கொண்டே இருந்தது! தேவையான சந்தர்ப்பங்களில் கடுமையானவனாக மாறத்தான் செய்தான். தேவை ஒழிந்த மறுகணமே, அவன் இதழ்களில் மறுபடி புன்னகை! ஆனந்தம்!

பயங்கரமான அத்தனை தருணங்களையும் சிரித்தபடியே எதிர்கொண்டான். புன்னகையுடனேயே சந்தித்தான். துரதிருஷ்டவசமாக மக்கள் இதை ஒரு தெய்வீகக் குணமாகக் காணத் தொடங்கிவிட்டார்கள்.

புன்னகை என்பது தெய்வீகம் அன்று. மனிதனின் இயல்பு! மனிதனுக்கே உரிய குணம். ஆனால் இன்று? மக்கள் புன்னகையை ஒரேயடியாக இழந்துவிட்டார்கள். அதை மூட்டை கட்டி சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டார்கள். தங்களுடைய ஆனந்தத்தை எல்லாம் சொர்க்கத்துக்கு ஏற்றுமதி செய்துவிட்டார்கள்.

ஆனந்தமும் புன்னகையும் சொர்க்கத்தில்தான் கிட்டும் என்று தங்களைத்தானே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்!

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

“அரசாணை வெளியிடாதது தவறில்லை” – அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்!

விலையேற்றத்தில் தங்கம், வெள்ளி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.