காசி தமிழ்ச் சங்கத்தில் அரசியல் இல்லை என ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் காசிக்கும் (வாரணாசி), தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதேநேரத்தில், இந்நிகழ்ச்சி குறித்து இருவேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இரு வேறு கருத்துகள்
தமிழ்நாட்டுக்கும் வாரணாசிக்கும் இருக்கும் நீண்டகாலப் பண்பாட்டுத் தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சி என ஒரு தரப்பினரும், மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்கள், போட்டித் தேர்வுகள், அலுவல்பூர்வ தொடர் பாடல்கள் உள்ளிட்டவற்றில் இந்தியை முன்னிறுத்தும் நரேந்திர மோடி அரசு தமிழை வைத்து பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது என இன்னொரு தரப்பினரும் கருத்து கூறுகின்றனர்.
என்றாலும், இதன் தொடக்க விழா, கடந்த நவம்பர் 19ஆம் தேதி வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில், அறிஞர்கள் இடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் பிரதிநிதிகள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் விதமாக, தமிழகத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் காசிக்கு மொத்தம் 13 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து தமிழகத்திலிருந்து பலர் அதில் பங்கு பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இருந்து 2,592 பேர் பயணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
தமிழக அரசு பதில்
இதுதொடர்பாக தமிழக அரசின் பங்கேற்பும் உதவியும் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தச் செய்திக்குப் பதிலளித்த மத்திய கல்வி அமைச்சகம், ’காசி தமிழ் சங்க நிகழ்ச்சிக்கான கடிதம் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு தமிழக அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
தமிழ் மொழி தொடர்பாக இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடக்கும்போது, அதில் தமிழ்நாடு அரசு பங்கேற்காதது குறித்து பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் இதுதொடர்பாக ”எந்த தகவலும் வரவில்லை” என்று தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து தொழில்துறை ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “காசியில் நடக்கும் தமிழ் சங்கமத்திற்கு என்னுடைய ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறைக்கு எந்த அழைப்பும், கடிதம் வாயிலாக வரவில்லை. மின்னஞ்சல் வழியாகவும் எந்த அழைப்பும் வரவில்லை.
அரசு விழாவா… அரசியலா?
என்னுடைய மின்னஞ்சல் மட்டுமல்லாது, தமிழ் வளர்ச்சித் துறையின் மின்னஞ்சலும் பரிசோதிக்கப்பட்டுவிட்டது. அதிலும் அழைப்பு ஏதும் வரவில்லை. அவர்கள் யாருக்கு அழைப்பு அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை” என்று தெரிவித்தார். மத்திய அரசு நடத்தும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு அரசுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து அரசியல்வாதிகளும், நெட்டின்சன்களும், ‘இது அரசு விழாவா அல்லது அரசியல் விழாவா’ எனக் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படாதது குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி பீட்டர் அல்போன்ஸ், ”காசியில் தமிழ் சங்கமம் என்ற பெயரில் மத்திய அரசு விழா நடத்துகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஆளுநர் ஆர்.என்.ரவி அறியட்டும்
சிறுபான்மையினரும் அந்த விழாவில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழர்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்கிறது இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தி.க. தலைவவர் கி.வீரமணி, “காசிக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது’ என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆயிரம் ஆண்டு களல்ல, அதற்கும் முந்தையது என்று வரலாறு இருக் கிறது. அது, ஆணவம் பேசிய வடவர்களை அடக்கித் திரும்பிய வரலாறு!
கடந்த நூற்றாண்டிலும் இந்தத் தொடர்புக்கு ஒரு வரலாறு உண்டு. மகான்கள் வாழும் புண்ணிய பூமி என்று சொல்லப்பட்ட காசிக்குச் சென்று, அங்கும் மதத்தின் பெயரால் கயவர்களே உலவுகிறார்கள் என்று கண்டு திரும்பிய பெரியார் தான், இந்து மதத்தின் புரட்டுகளை எடுத்துச் சொல்லி மக்கள் மத்தியில் வெளுத்து எடுத்தார். இந்தத் தொடர்புகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறியட்டும்” என தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆள்பிடிக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி உண்மையில் கலாசாரம், இதர நல்லெண்ண நிகழ்வுகளுக்காக அல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது” என பதிவிட்டிருந்தார்.
100 சதவிகிதம் அரசியலே
கே.பாலகிருஷ்ணன் ட்விட்டர் பதிவுக்கு விகடன் நிறுவனத்துக்கு பதிலளித்த தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “இந்த நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கையைப் போன்றுதான் இருக்கிறது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
தேசியம், தெய்வீகம் என்ற இரண்டும்தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை. ஆனால் தேசியமும் கூடாது, தெய்வீகமும் கூடாது என்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கை” என தெரிவித்திருந்தார்.
இத்துடன் நிற்காத இந்த கருத்து மோதல் தினத்தந்தி தொலைக்காட்சியின் விவாதத்தின்போதும் எதிரொலித்தது. அதில் பேசிய நடிகையும் அரசியல் விமர்சகருமான கஸ்தூரி, “காசி தமிழ் சங்கமம் 100 சதவிகிதம் அரசியலே” என்ற ஆணித்தரமான வாதத்தை வைத்தார்.
அரசியல் இல்லை
இந்த நிலையில்தான் காசி தமிழ் சங்கமத்தில், காசி தமிழ்நாடு வணிக பாடம் எனும் வர்த்தக இணைப்புக்கான ஒரு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, “காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மிகம் இருக்கிறது, தொன்மையான கலாசாரத்துடன் நாட்டை காசி பிணைத்திருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் காசிக்கு வர வேண்டும் என்று விரும்புவது இயற்கைதான்.
இந்த விருப்பத்தை நிறைவேற்ற மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக காசி தமிழ் சங்கமம் நிகழ்வை திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்குரியவர்” எனத் தெரிவித்தார்.
இதனால், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: எதிர்ப்புக்கு பணிந்த ஆளுநர்!
உலக எய்ட்ஸ் தினம்: கொட்டும் மழையில் விழிப்புணர்வு மாரத்தான்!