கல்லணை, தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், திருவாரூர் தேர் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட டெல்டாவின் அடையாளங்களோடு… மறக்க முடியாத இன்னொன்றாக எழுந்து நிற்கிறது திருவாரூர் கலைஞர் கோட்டம்.
ஜூன் 20 ஆம் தேதி திருவாரூரில் நடந்த கலைஞர் கோட்டத் திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், “கலைஞர் கோட்டத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு ஆலோசனைகள் வழங்கிய அமைச்சர் எ.வ. வேலுவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்த்துப் பார்த்து செதுக்கியதைப் போல கண்ணும் கருத்துமாய் இந்த கலைஞர் கோட்டத்தை வடிவமைப்பதை கவனமுடன் மேற்பார்வையிட்டார் நமது வேலு அவர்கள். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ. வேலு பற்றி குறிப்பிட்டார்.
கலைஞர் கோட்டத்தின் வடிவழகையும், வனப்பையும், பிரம்மாண்டத்தையும், கம்பீரத்தையும் காணும்போது வேலுவை பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் கொஞ்சமும் மிகையில்லாதவை.
திருவாரூர் அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் கலைஞர் அருங்காட்சியகம், கலைக்கூடம், முத்துவேலர் நூலகம், இரண்டு திருமண அரங்குகள் உள்ளிட்ட அற்புதமான கட்டுமானப் பூங்காவாக அமைந்திருக்கிறது கலைஞர் கோட்டம்.
வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், திருவள்ளுவர் சிலை என பார்த்துப் பார்த்து தமிழ் பண்பாட்டுக் கலாச்சார சின்னங்களை எழுப்பியவர் கலைஞர். அப்படிப்பட்ட கலைஞருக்கு அவரது காலத்துக்குப் பின்னர் அமைக்கப்படும் கோட்டத்தின் பணிகளை யார் பொறுப்பில் விட்டால் சரியாக நிறைவாக முறையாக இருக்கும் என்று ஸ்டாலின் நினைத்தபோது அவரது தேர்வாக இருந்த ஒரே ஒருவர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு.
கலைஞரோடு உணர்வு பூர்வமாக ஒன்றி… கலைஞரை நினைத்தாலே கண் கலங்கிவிடும் வேலுவிடம் கொடுத்தால்தான் இது அற்புதமாக வடிவம் பெறும் என்று கருதியே அவரிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின்.
கலைஞர் கோட்டம் அமைப்பது என்ற எண்ணம் 2019 ஆம் ஆண்டே ஏற்பட்டுவிட்டாலும் திமுக ஆட்சி அமைந்த பிறகுதான் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. ஒரே நேரத்தில் மூன்று பெரும் பொறுப்புகள் வேலுவிடம் வந்தன.
சென்னையிலே கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையிலே கலைஞர் நூலகம், திருவாரூரிலே கலைஞர் கோட்டம். இந்த மூன்றையும் மிகக் குறுகிய காலத்தில் கொஞ்சம் கூட தரத்தில் சமரசம் இல்லாமல் பிரம்மாண்டப்படுத்தியிருகிறார் வேலு.
’ஏவினால்தான் வேல் பாயும், நான் ஏவாமலேயே பாயும் வேல்தான் எ.வ. வேலு’ என்று கலைஞர் சொல்லியிருக்கிறார். கலைஞரின் அந்த வார்த்தைகளை உயிர்ப்பிக்கும் வகையில் வேலு கலைஞர் கோட்டத்தில் செயல்பட்டிருக்கிறார்.
கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா ஜூன் 3 ஆம் தேதி தொடங்குகிறது. அதனால் இந்த ஜூன் மாதத்தில் கலைஞர் கோட்டம் திறக்கப்பட வேண்டும் என்று வேலுவுக்கு இலக்கு வைத்தார் ஸ்டாலின். இந்த அடிப்படையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கலைஞர் கோட்டப் பணிகளை கண்காணித்து கவனித்தார் வேலு.
முதலில் தனக்கு நன்கு அறிமுகமான மும்பையைச் சேர்ந்த வடிவமைப்பாளர் தம்பதியை சென்னைக்கு வரவழைத்தார் வேலு. கலைஞர் கோட்டம் என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்கி தமிழ் மக்களும் திமுக தொண்டர்களும் கலைஞர் மீது வைத்திருக்கும் பற்று குறித்தும் விளக்கினார்.
அதற்கேற்றபடி கலைஞர் கோட்டத்துக்கான இன்ஜினியரிங் டிராயிங் தயாரித்து வேலுவிடம் அளிக்கப்பட்டது. அதை வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனைகள் செய்து அவர் சொல்லிய திருத்தங்களை சேர்த்து மெருகேற்றி ஒ.கே. செய்தார் வேலு. இன்ஜினியரிங் டிராயிங் ஒப்புதல் பெற்ற பிறகு அதை அப்படியே 3D வடிவிலான மோஷன் வீடியோவாக வடிவமைத்து வேலுவிடம் கொடுத்தனர் மும்பை வடிவமைப்பாளர்கள்.
அதையும் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு எடுத்துச் சென்று அவரிடமே போட்டுக் காட்டி ஆலோசனைகள் செய்தார். ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு வேலு விளக்கம் கொடுத்தார். அதன் பின் வேலு கேட்ட கேள்விகளுக்கு வடிவமைப்பாளர்கள் விளக்கம் கொடுத்தனர். இப்படியாக 3D வடிவிலான மோஷன் வீடியோ ஒப்புதல் அளிக்கப்பட்டு அதன் பிறகே கட்டுமான வேலைகள் தொடங்கின.
கல், மண், மார்பிள், கம்பிகள், மரங்கள், பெயின்ட் என ஒவ்வொரு பொருளும் எ.வ. வேலுவின் பரிசோதனைக்கு பிறகே பயன்பாட்டுக்குச் சென்றன.
கலைஞர் கோட்டத்துக்காக மார்பிள்கள், பளிங்குக் கற்கள் வாங்குவதற்காக ராஜஸ்தானுக்கே சென்றார் வேலு. மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காக டெல்லி செல்லும்போது டெல்லியில் அரசு வேலையை முடித்துவிட்டு அப்படியே ராஜஸ்தான் சென்றுவிடுவார். அங்கே கற்களின் ஒவ்வொரு வகையையும் ஆய்வு செய்து அவற்றின் தரத்தை சோதித்து அதன் பிறகு ஒ.கே. செய்திருக்கிறார். அங்கிருந்து கற்கள் இங்கே வந்த பிறகும் அதை ஒருமுறை பரிசோதனை செய்துதான் கட்டுமானத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார் வேலு.
மார்பிள் பளிங்குக் கற்கள் இப்படியென்றால்… அடுத்து செங்கல். சாம்பிள் செங்கல்லை எடுத்து வரச் செய்து ஒரு பக்கெட்டில் கொஞ்சம் ஊற வைப்பார் வேலு. கொஞ்ச நேரம் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு காத்திருப்பார். அதன் பின் அந்த செங்கல்லின் எடை, அந்த தண்ணீரின் எடை இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து செங்கல்லின் தரத்தை முடிவுசெய்வார். கம்பி, மணல் எல்லாம் இப்படித்தான். வேலுவின் கழுகுக் கண்களுக்குள் ஸ்கேன் செய்யாமல் கட்டுமானப் பணிகளுக்கு எந்தப் பொருளும் செல்லாது.
இப்படியாக கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் கலைஞர் கோட்டத்தில் இருப்பார் எ.வ. வேலு., அரசு நிகழ்ச்சிகள், தொகுதிப் பணிகள், மாவட்டப் பணிகள், அமைச்சகப் பணிகள் என்று எல்லா பணிகளையும் செய்துவிட்டு வாரம் இரண்டு நாட்கள் கலைஞர் கோட்டத்துக்காகவே அர்ப்பணித்துவிடுவார். அங்கே சென்று அஸ்திவாரம் தோண்டுவதில் இருந்து ஒவ்வொரு நிலையாக அங்குலம் அங்குலமாக பார்த்து வந்திருக்கிறார்.
ஒவ்வொரு வாரமும் போகும்போது வெவ்வேறு நிர்வாகிகளை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார் வேலு, ‘வாய்யா திருவாரூர் போயிட்டு வருவோம்’ என்று சொல்லி காரில் ஏற்றிக் கொள்வார். அங்கே அழைத்துச் சென்று கலைஞர் கோட்டத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்கும் கூட்டிச் செல்வார். ‘பாத்தவுடனே என்ன தோணுதோ மறைக்காம சொல்லு’ என்று ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்டு அவர்களின் கண்ணோட்டத்துக்கும் மதிப்பளித்து ஒவ்வொரு நாளும் கலைஞர் கோட்டத்தை எழுப்பிக் கொண்டே வந்தார் எ.வ.வேலு.
கலைஞர் கோட்ட பணிகளை பார்வையிடுவதற்காக பல நேரங்களில் தன் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கிறார் எ.வ. வேலு. அப்போது, ‘அண்ணே நாளைக்கு போயிக்கலாமேண்ணே’ என்று சொல்லும்போது… ’நான் நாளைக்கு போனேன்னா அதுக்குள்ள அங்க அடுத்த கட்ட கட்டுமானத்துக்கு போயிடுவாங்க. என் கண்ணை கடந்து போயிடக் கூடாதுல்ல…’ என்று சிரித்திருக்கிறார்.
இப்படியாகத்தான் கனவு, சிந்தனை, உணர்வு, பேச்சு எல்லாவற்றிலும் கலைஞர் கோட்டத்தையே குழைத்து ஒரு வருடத்துக்கும் மேல் பார்த்துப் பார்த்து இந்த பிரம்மாண்டத்தை எழுப்பி நிறைவு செய்திருக்கிறார் எ.வ.வேலு.
கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் மாநாட்டுக்குப் பிறகு நிறைவுரையாற்ற வந்த முதலமைச்சர் ஸ்டாலின், ‘ஒரு முக்கிய அறிவிப்பு’ என்றார். எல்லாரும் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தனர்.
“கலைஞர் கோட்டம் உருவாகுவதற்கும், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் அமைச்சர் எ.வ.வேலு. ஆனால் அவருக்கு பொன்னாடையும், போர்த்தவில்லை, நினைவு பரிசும் வழங்கவில்லை.
அதனை அவர் வேண்டாமென்று தவிர்த்துள்ளார். அவர் வேண்டாமென்று சொன்னாலும், எனக்கு வழங்கப்பட்டிருக்க கூடிய நினைவு பரிசை அவருக்கு வழங்கி நான் அவருக்கு நன்றி கூற ஆசைப்படுகிறேன்” என்று கூற அனைவருக்கும் நெகிழ்ச்சி.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பைக் கேட்டதும் திகைத்த அமைச்சர் எ.வ.வேலு மேடையில் பின் வரிசையில் இருந்து எழுந்து முதலமைச்சர் அருகே சென்றார். தனக்கு வழங்கப்பட்ட கலைஞர் கோட்ட நினைவுப் பரிசையும், பொன்னாடையையும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வழங்கினார் ஸ்டாலின்.
கலைஞர் கோட்டத்தின் இன்ஜினியரிங் டிராயிங் முதல்… செம்மாந்து எழுந்து நிற்கிற இப்போதைய வடிவம் வரை ஒவ்வொரு அணுவாக ரசித்து உணர்ந்து உருவாக்கிய வேலு தனக்கு நினைவுப் பரிசு செய்வதை திட்டமிட்டே தவிர்த்துவிட்டார்.
நேற்று மேடையேறும் வரை ஸ்டாலினும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சொல்லியும் நினைவுப் பரிசை ஏற்க மறுத்துவிட்டார் எ.வ.வேலு.
அதனால்தான் ஒலிபெருக்கியிலேயே சொல்லி வேலு மறுக்க முடியாதபடி தனது நினைவுப் பரிசையே வேலுவுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
கலைஞர் கோட்ட விழா நிறைவுற்று எல்லாரும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். நேற்று மாலை மெல்லிய காற்று வீச அந்த வளாகத்தில் நின்றபடியே வண்ண விளக்குகளால் மிளிரும் தன் தலைவனின் கோட்ட அழகை பார்த்துக் கொண்டிருந்த எ.வ. வேலுவின் கண்களில் இருந்து அவரை அறியாமலேயே கண்ணீர் துளிகள் துளிர்த்தன.
‘வேலு நல்லா இருக்குய்யா…’ என்று கலைஞரின் குரலைப் போலவே வீசிக் கொண்டிருந்தது திருவாரூர்க் காற்று!
–வேந்தன்