– ரவிக்குமார்
பீகார் மாநிலத்தில் தற்போதைய போஜ்பூர் மாவட்டத்தில் சந்த்வா என்ற சிறு கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜகஜீவன்ராம் ( 1908-1986). அவரது தந்தை ஷிவ் நாராயணி என்ற சமயப் பிரிவின் குருக்களில் ஒருவராக இருந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஜகஜீவன்ராம் பல்வேறு சமூகப் பாகுபாடுகளை எதிர்கொண்டாலும் கல்வி பயில்வதில் உறுதியாக இருந்தார்.
பள்ளிக் கல்வியை முடித்து பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்திலும், கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வியைப் பெற்றார். சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகளில் மட்டுமின்றி பட்டியல் சமூக மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டினார். 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல் முதல் தொடர்ச்சியாக 8 முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
பாபு ஜகஜீவன்ராம் இந்திய ஒன்றிய அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,வேளாண்துறை அமைச்சர்,செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர்- எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இந்தியா- பாகிஸ்தான் யுத்த காலத்தில் அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். வங்கதேச உருவாக்கத்தில் அவருக்கு முக்கியமான பங்கிருந்தது. 1979 இல் அவர் துணைப் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
ஜகஜீவன்ராம் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் குறைந்தபட்சக் கூலியை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அவர் வேளாண் துறை அமைச்சராக இருந்த காலத்தில் விவசாயத்துறையில் நடைபெற்ற முன்னேற்றங்களைப் பற்றி அந்தத் துறை சார்ந்தவர்கள் பாராட்டியுள்ளனர்.
புரட்சியாளர் அம்பேத்கருக்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சியால் அவர் முன்னிறுத்தப்பட்டாரென்றாலும் அம்பேத்கர் அவரிடம் ஒருபோதும் பகைமை பாராட்டியதில்லை. அதுபோலவே ஜெகஜீவன்ராம் காங்கிரஸ்காரராக இருந்தாலும் வர்ண பேத ஒழிப்பு , சாதி ஒழிப்பு ஆகியவற்றில் அவர் காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்தவரில்லை.
பெயர்களில் சாதி பட்டங்களையும் (titles) சாதி பின்னொட்டுகளையும் (Surname) பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என பாபு ஜெகஜீவன்ராம் வலியுறுத்தினார்:
“சாதியை முற்றாக ஒழிக்காமல், நிலங்களைப் பகிர்ந்தளிக்காமல், தீண்டாதவர்களாக வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு சம வாய்ப்புகளை வழங்காமல் இந்தியா ஒருபோதும் முன்னேற முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. பெயர்களின் பின்னால் இருக்கும் சாதி பட்டங்களும், சாதி பின்னொட்டுகளும் தடை செய்யப்பட வேண்டும் என்பதும் எனது கருத்து” என்று அழுத்தமாகத் தெரிவித்த அவர், “ சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னால் , பின்னாளில் திட்டக் கமிஷனின் உறுப்பினராகவும் குஜராத் மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்த திரு ஸ்ரீமான் நாராயணன் அகர்வால் தனது பெயரில் இருந்த ‘அகர்வால்’ என்ற சாதி பின்னொட்டை விட்டு விடுவதாக அறிவித்தார்.
அந்த நேரத்தில் அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். அவரது முடிவை நான் பாராட்டினேன். பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களும் மற்றும் பலரும் அந்த கருத்துக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், அது பரவலாக அனைவரையும் சென்று சேரவில்லை. அப்படியே கரைந்து மறைந்து போய்விட்டது. சாதி பட்டங்களும், சாதி பின்னொட்டுகளும் இன்னும் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டுமென்று நான் பலமுறை பேசி வந்திருக்கிறேன். இது நாட்டின் ஒற்றுமைக்குத் தடையாக இருந்து மிகப்பெரிய கேட்டை ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தில் நிலவும் சமத்துவமற்ற நிலைக்கும், அநீதிக்கும் அது மூல காரணங்களில் ஒன்றாக இருக்கிறது” என்று கூறினார் ( ‘ Jagjivan Ram, Caste challenge in India, Vision Books, New Delhi, 1980)
தனி நபர்கள் மட்டுமின்றிக் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதி பின்னொட்டுகளைச் சேர்ப்பதை அவர் வன்மையாகக் கண்டித்தார், “ கல்வி நிறுவனங்களில் இப்படியான சாதிப் பெயர்கள் காணப்படுவது சமூகத்திற்குப் பெரும் கேட்டை ஏற்படுத்துகிறது. பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இப்படி சாதி பெயர்களை வைப்பது நம்முடைய கேவலமான புத்தியை வெளிப்படுத்துகிறது.” என்று சாடினார்.
“மார்வாரி எஜுகேஷன் சொசைட்டி, பார்சி எஜுகேஷன் அசோசியேஷன், தமிழ்க் கல்வி சங்கம் என்பவற்றில் நாட்டுப் பற்று கொண்ட ஆளுமைகள் இருந்து கல்விக்காகப் பல அரிய சேவைகளைச் செய்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், இப்போது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாதியின் பெயரால் சாதியவாத சக்திகளை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
‘மக்கள் பள்ளி’ ‘விவசாயிகள் கல்லூரி’ அல்லது மிகப்பெரிய ஆளுமைகளின் பெயரால் கல்வி நிறுவனங்கள் என்று வைக்கலாம். விவசாயி என்பது எந்த சாதியையும் குறிப்பதல்ல. இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் எல்லோருமே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஒரு கல்வி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் இருந்தால் அதனால் சமூகப் பதற்றம் ஏற்படுகிறது. இந்தியச் சமூகம் இப்படியான அணுகுமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்று பாபு ஜெகஜீவன்ராம் கூறிய கருத்து அரை நூற்றாண்டுக்குப் பிறகும் பொருத்தமாகவே உள்ளது.
கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களைவதற்கெனத் தமிழ்நாடு அரசு அமைத்த நீதிபதி கே.சந்துரு ஆணையம் தனது அறிக்கையில் பாபு ஜகஜீவன்ராம் 1980 இல் கூறிய அதே கருத்தைப் பரிந்துரைத்துள்ளது. “அரசாங்கம் நடத்தும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் ஆகியவற்றின் பெயர்களில் இருக்கும் சாதி அடையாளங்கள் அகற்றப்பட வேண்டும்” என்பதோடு, “தனியார் பள்ளிகளின் பெயர்களில் இருக்கும் சாதி அடையாளங்களும் நீக்கப்பட வேண்டும், தேவையெனில் அதற்கென சட்டம் ஒன்றை இயற்றவேண்டும். புதிதாகத் துவக்கப்படும் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும்போது பெயர்களில் சாதி அடையாளம் சூட்டக்கூடாது என்ற நிபந்தனையை உள்ளடக்க வேண்டும்” எனவும் அது வலியுறுத்தியுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீதிபதி கே.சந்துரு ஆணையத்தின் பரிந்துரைப்படி கல்வி நிறுவனங்களில் சாதி அடையாளங்களை ஒழிக்கக் காலந்தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். அது நீதிபதி கே.சந்துரு ஆணையத்தின் பரிந்துரை மட்டுமல்ல பாபு ஜகஜீவன்ராமின் விருப்பமும் ஆகும்.
( ஜூலை 6 : பாபு ஜகஜீவன்ராம் நினைவு நாள்)
கட்டுரையாளர் குறிப்பு
ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மழை வரப்போகுதே… குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!
மத்திய பட்ஜெட் தாக்கல் எப்போது? வெளியான புதிய அறிவிப்பு!