எஸ்.வி.ராஜதுரை
ஒருவரையொருவர் காதலித்து வந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருந்த கோகுல்ராஜும், உயர் சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்களைச் சேர்ந்தவரும் கோகுல்ராஜ் படித்த அதே கல்லூரியில் அவரது வகுப்புத் தோழருமாக இருந்தவருமான சுவாதியும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர்.
அந்த சமயத்தில், சாதிப் பெருமையைக் காப்பதற்காக கோகுல்ராஜை 23.6.2015 அன்று ஆணவக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட எட்டு சாதி வெறியர்களுக்கு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யும் மதுரை அமர்வு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும், அத்தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்துள்ளனர் சென்னை உயர்நீதிமன்ற நீதிநாயகங்கள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர்.
சாதியொழிப்பிலும் உண்மையான சமூக நீதியிலும் அக்கறை கொண்டவர்கள் அனைவராலும் இந்த நீதிநாயகங்களோடு சேர்த்துப் போற்றப்பட வேண்டியவர்களில் முதன்மையானவர்கள் மனித உரிமைக்காகவும் சாதி வெறிக்கு எதிராகவும் ஓயாது பாடுபட்டு வருபவரும் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராகப் பணியாற்றியவருமான வழக்குரைஞர் ப.பா.மோகன், மதுரை நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்காடிய வழக்குரைஞர் லஜ்பதிராய் முதலானோருமாவர்.
இந்த தீர்ப்பில் எடுத்த எடுப்பிலேயே இரு நீதிநாயகங்களும் கூறியுள்ள கருத்துகள் மிக முக்கியமானவை.
மனித நடத்தையின் இருண்ட பகுதியை வெளிப்படுத்துகின்ற ஒரு வழக்கு என்று தொடங்கும் அவர்களது தீர்ப்புரை, அது நமது சமுதாயத்திலுள்ள சாதி அமைப்பு, சாதி வெறி, விளிம்பு நிலையிலுள்ள மக்களை மனிதத்தன்மையற்ற வகையில் நடத்துதல் ஆகிய விகாரமான பரிமாணங்களை எடுத்துக் காட்டுகிறது என்று கூறுகின்றது.
மேலும், இப்போது வாடிக்கையாகி விட்டதும், நீதிமன்றத்துக்குப் பழக்கப்பட்டு போனதுமான இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சுட்டிக் காட்டுகின்றது:
அதாவது அரசாங்கத் தரப்பு சாட்சிகள் திட்டமிட்ட வகையிலும், திடீரென்றும் பிறழ்வு சாட்சிகளாக மாறி, குற்ற வழக்கு விசாரணைகளைத் தடம் புரளச் செய்வதிலும், திசைதிருப்பச் செய்வதிலும் நீதித் துறையைத் தங்கள் விருப்பப்படி ஆட்டிவைக்கவும் அதில் வெற்றி பெறவும் முயல்கிறார்கள் என்பதற்கு இது போன்ற வழக்குகள் பாட நூல்களில் இடம் பெற வேண்டிய எடுத்துகாட்டுகளாக அமைகின்றன.
செல்வாக்கும் பிரபலமும் படைத்த மனிதர்கள் மீது குற்ற வழக்கு விசாரணை நடக்கும்போது இது மிக இயல்பாக நடைபெறுகின்ற நிகழ்வாகிவிட்டது என்றும், ஊடகங்களிலிருந்தும் சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற நிர்பந்தங்களின் மூலம் கிடைக்கப்பெரும் சாட்சியங்களைப் பொருத்தவரை நீதிபதிகள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களையும் சுட்டிக்காட்டும் நீதிநாயகங்கள்,
இவை போன்றவை இதர தீர்ப்பை வழங்கும் பொறுப்பிலுள்ள அவர்களுக்கு ஐயத்துக்கிடமின்றி கூடுதலான சுமைகளை சுமத்துகின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.
இந்த நிர்பந்தங்களையெல்லாம் மீறியும் , இந்த சவால்களை எதிர்கொண்டும் இறுதியில் சட்டத்தின் கட்டுக்கோப்பிற்கு உள்பட்டு நீதிபதிகள் நீதியை வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வழக்கில், ஊடகங்களின் தலையீட்டுக்கு எடுத்துக்காட்டாக ‘புதிய தலைமுறை சேனல்’ 25, 26 ஜூன் 2015 ஆகிய இருநாள்களில் செய்த ஒளிபரப்புகளையும் யுவராஜ் தலைமறைவாக இருந்தபோது அந்த சேனலுக்குக் கொடுத்த நேர்காணலையும் மேற்சொன்ன நீதிநாயகங்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
அந்தச் சேனல் யுவராஜ் மீது வழங்கிய தார்மிகத் தீர்ப்பு தங்களை எவ்வகையிலும் பாதிக்கவில்லை என்றும் நீதிகளிலிருந்து சற்றும் பிறழாமல் இந்தத் தீர்ப்பு சொல்லப்படுவதாகவும் அறுதியிடுகின்றனர்.
யுவராஜ் மீதான குற்ற வழக்கின் தொடக்கத்தை 2014ஆம் ஆண்டு இறுதியிலேயே காண முடியும் என்றும், அந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலிலுள்ள சில பகுதிகள் திருச்செங்கோட்டிலும் அதைச் சுற்றிலுமிருந்த சில சமூகத்தினரிடையே சினத்தை மூட்டியிருந்தது என்றும் கூறும் நீதிநாயகங்கள் பெருமாள் முருகனுக்கு எதிராகச் சொல்லப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 11.01.2015 அன்று ஒரு சமாதானக் குழு ஏற்படுத்தப்பட்டதையும்,
அவர் மீது குற்றம் சாட்டியதில் முக்கியப் பாத்திரம் வகித்தது யுவராஜால் தொடங்கப்பட்ட மாவீரன் தீரன் சின்னமலைப் பேரவை என்பதையும், அந்த சமாதானக் குழுவில் பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டதையும் குறிப்பிடும் நீதிநாயகங்கள்,
தங்களுக்கு அந்த விசயத்திற்குள் ஆழமாகப் போக வேண்டிய அவசியமில்லை என்றும் அது தொடர்பான விஷயங்களுக்கு ஏற்கெனவே ’ச.தமிழ்செல்வன் எதிர் தமிழ்நாடு அரசாங்கம்’ என்ற வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுவிட்டது என்றும் கூறுகின்றனர்.
இன்று உலகெங்கும் அறிமுகமாகியுள்ள பெருமாள் முருகனுக்கு அன்று ஏற்பட்ட மன அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் சொல்லி மாளாதவை.
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதற்கு அரக்கனைப் போன்ற சாதி வெறிதான் காரணம் என்று கூறும் நீதிநாயகங்கள்,
கொங்கு வேளாளக் கவுண்டர்களை உறுப்பினர்களாகக் கொண்டதும் 2014இல் யுவராஜால் தொடங்கப்பட்டதுமான மாவீரன் தீரன் சின்னமலைப் பேரவையின் கூட்டம் திருச்செங்கோட்டுக்கு அருகிலுள்ள கொங்னாபுரத்தில் 7.8.2015இல் நடத்தப்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
கவுண்டர்களின் வரலாற்றைப் பரப்புவதற்காகக் கூட்டப்பட்டதாகச் சொல்லப்படும் அக்கூட்டத்தில் கவுண்டர் சாதியைச் சேர்ந்த பெண்கள் பிற சாதிகளைச் சேர்ந்தவர்களை, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை காதலிக்கவோ, அவர்களுடன் தொடர்புகொள்ளவோ கூடாது என்று பேசப்பட்டதாகவும், அப்படிபட்ட உறவுகளைக் கொள்பவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் யுவராஜ் பேசினார் என்றும் முதலில் சாட்சியம் கூறியவர்கள், பிறகு பிறழ்வு சாட்சிகளாக மாறிவிட்டனர்.
ஆனால் அரசாங்கத் தரப்பு, வேறு சான்றுகளைக் கொண்டு அப்படிப்பட்ட பேச்சு பேசப்பட்டது என்பதை நிரூபித்தது.
கோகுல்ராஜுக்கும் சுவாதிக்கும் திருச்செங்கோடு கோவிலில் நடந்த கடைசிச் சந்திப்பின் போது யுவுராஜும் அவரது கூட்டாளிகளும் அங்கு வந்திருந்ததை அந்தக் கோவிலில் எட்டு இடங்களில் வைக்கப்பட்டிருந்த காமிராக்களில் பல பதிவு செய்திருந்தன.
ஆனால் அந்தப் பதிவுகளில் இருந்த மனிதர்களை அடையாளம் காட்டிய சுவாதி தானும் அங்கு இருப்பதை அடையாளம் காட்டவில்லை.
காரணம், அவருமே பிறழ்வு சாட்சியாக மாறிவிட்டதுதான். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
234 பக்கங்களைக் கொண்டதும் ஒரு துப்பறியும் நாவலைப் போல விரிகின்றதுமான இந்தத் தீர்ப்பு [Crl.A.(MD).Nos.228, 230, 232, 233, 515, 536 and 747 of 2022] , மேற்சொன்ன இரு நீதிநாயகங்கள் புலனாய்வுத் துறைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளதை நமக்குக் காட்டுகிறது.
இது, கோகுல்ராஜ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களைப் போல் சாதி ஆணவக் கொலைகளுக்குப் பலியாகின்றவர்கள் குடும்பங்களின் சார்பில் வழக்காடும் வழக்குரைஞர்கள் சட்ட நுணுக்கங்களை அறிந்துகொள்வதற்கும் சட்டத்தின் கட்டுக்கோப்புக்குள்ளிலிருந்து விலகாமலேயே நீதியை நிலை நாட்டுவதற்குமான பாட நூலாகத் திகழ்கிறது.
23.6.2015 அன்று காலை கண்விழித்த கோகுல்ராஜ் அதுதான் அவரது கடைசிநாளாக இருக்கும் என்று நினைத்திருக்கமாட்டார் என்று சொல்வதற்காக நீதிநாயகங்கள் மனித உரிமை ஆர்வலரும் போர் எதிர்ப்பாளருமான காலஞ்சென்ற பிரிட்டிஷ் பாடகர் ஜான் லென்னானின் பாடல் வரியொன்றை மேற்கோளாகக் காட்டும்போது நம் கண்கள் குளமாகின்றன.
தலித்துகள் மீது இழைக்கப்படும் வன்கொடுமைகளின் நூறில் இரண்டு அல்லது 3 விழுக்காடுகளே உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் வரை சென்று நீதி கிடைக்கச் செய்கின்றன.
எனினும் அவர்கள் தொடர்ந்து போராடுவதற்காக உள் உந்துதலைத் தரும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது, இப்படிப்பட்ட நீதிநாயகங்களும், வழக்குரைஞர்களும் இன்னும் இருப்பதாலேதான் சங்கப் புலவன் பாடியதுபோல ‘உண்டால் அம்ம’ என நம்மைப் பாடச் செய்கின்றது.
கட்டுரையாளர் குறிப்பு:
எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.
“லோகோபைலட் பிரேக் அடிக்கலனா…” : தமிழ்நாட்டு பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!
ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்!
’எனது மனைவி மரணத்திற்கு யார் காரணம்?’: நடிகை ரஞ்சிதாவின் தந்தை உருக்கம்!
சாதிவெறியாகளுக்கு சாட்டையடி தீர்ப்பு.
நல்ல தீர்ப்பு….ஆனால் வடக்கன் நீதிபதியாக இருந்தா இது சாத்தியம் இல்லை.. நல்ல நீதிபதிகள் இருக்க தான் செய்கிறார்கள்
கோகுல்ராஜும், சுவாதியும் காதலித்ததாகவும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாகவும் கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் தவறானது