கோவி.லெனின் journalist kovi lenin japan visit
எல்லாப் பறவைகளும் கூடுகளுக்குத் திரும்பியிருந்த நேரம். அடர்த்தியான இருள் போர்வையைப் போர்த்தியிருந்தது வானம். இயந்திரப் பறவை தன் சக்கர கால்களுடன் வேகமாக ஓடி, சிறகை விரித்துப் பறக்கத் தொடங்கியது.
வங்காள விரிகுடாவுக்கு மேல் பறக்கத் தொடங்கிய பகல் பொழுதிலிருந்து பல கடல்கள் தாண்டி, பசிபிக் பெருங்கடல் நோக்கிய சிறகடிப்பில் இருந்தது இயந்திரப் பறவை. முதல் காதலியின் ஈர இதழ்கள் தந்த முத்தம் போல, மனதில் புதிய சுவை. கண்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது தூக்கம்.
களைப்புடன் கண்களை மூடியபோது, “எப்படி இந்தப் பயணம் சாத்தியமாயிற்று” என்ற கேள்வி, கொக்கியில் தொங்கிக் கொண்டிருக்கும் சட்டை போல மெலிதாக அசைந்து கொண்டிருந்தது மனது. தூக்கம் தழுவிய கண்களும், நினைப்பில் ஊறிய நெஞ்சமுமாக இன்னும் சில மணிநேரம் பறந்தாக வேண்டும். கொக்கியில் தொங்கிய மனது தன் நினைவுச் சிறகை அசைத்தது.
அப்படியொரு நேரத்தில் இப்படியான அழைப்பு வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பேசியவர், பெரியார் திடல் பிரின்ஸ் என்னாரெசு பெரியார்.
“பிஸியா இருக்கீங்களா.. ஒரு ரெண்டு நிமிடம் பேசலாமா?”
“சொல்லுங்க..”
“ஜப்பானில் கல்யாணராமன் அடுத்த பார்ட் எடுக்குறாங்களாம்.. நீங்க ஒரு சில சீன் நடிக்க முடியுமான்னு கேட்கிறார் கமல்” என்று சிரிக்காமல் சொன்னார் பிரின்ஸ். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“என்ன செய்தியோ அதை மட்டும் சொல்லுங்க” என்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன்.. ஓர் இரவு நேரத்தில், ஆவணப்பட எடிட்டிங் பணி தொடர்ந்து கொண்டிருந்த போது, களைப்பும் தூக்கமும் வராமல் இருப்பதற்காக பாடல்களை ஒலிக்கவிட்டிருந்தார் பிரின்ஸ்.
இளையராஜாவின் குரலில், “காதல்… உன் லீலையா” என்ற பாட்டு நெஞ்சத்தை வருடியது.
“என்ன படம்?” என்றேன்.
“ஞாபகமில்லையா..? ஜப்பானில் கல்யாணராமன்” என்றார்.
எனக்கு சுத்தமாக ஞாபகமில்லை. படத்தில் இந்தப் பாட்டு இடம் பெறவில்லை. ஆடியோவிலும் நான் கேட்டதில்லை. கமல் படத்தில் இப்படியொரு இளையராஜா குரல் என்பதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டேன். அதன்பிறகு பல முறை கேட்டிருக்கிறேன். கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்தப் படத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு, எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும், ‘சின்னப் பூ.. சின்னப் பூ.. கண்ணெல்லாம் வண்ணப்பூ’. ஜப்பானின் அடையாளங்களில் ஒன்றான ‘செர்ரி ப்ளாஸம்’ பருவத்தில் எடுக்கப்பட்ட காட்சியுடன் படத்தில் அந்தப் பாடல் ஒலிக்கும். நாயகி ராதாவின் அழகு கண்ணிலேயே நிற்கும். என் ப்ளே லிஸ்ட்டில் எப்போதும் இருக்கும்.
ஸ்டாப். நான் என் செய்தியை சொல்லிக் கொண்டிருக்கிறேன். பிரின்ஸ் சொன்ன செய்திக்கு வருகிறேன்.
“ஜப்பானில் ஒரு நிகழ்ச்சியில நீங்க கலந்துக்கணும்னு கூப்பிடுறாங்க. செப்டம்பர் மாசக் கடைசியில நிகழ்ச்சி.”
“நான் என் பாஸ்போர்ட்டை ரினீவல் பண்ணவே இல்லையே?”
“அதை முதலில் பண்ணுங்க. டைம் இருக்கு கமல் உங்ககிட்ட பேசுவார்.”
“எந்த கமல்?”
“பேசும்போது தெரியும்”
இப்படித்தான் அந்த அழைப்பு வந்தது. அப்போதும் எனக்கு நம்பிக்கையில்லை. என் வழக்கமான பணிகளுக்கு நடுவே பாஸ்போர்ட் புதுப்பிப்பு, விசா நடைமுறைகளில் எப்படி கவனம் செலுத்தப் போகிறேன் என்று தெரியாமல் இருந்தேன். பாஸ்போர்ட் ரினீவலுக்கானத் தொடர்புகளை பிரின்ஸ் ஏற்படுத்திக் கொடுத்தார். விரைந்து முடிந்தது.
அது ஜூலை கடைசி வாரம். ஜப்பான் தலைநகரம் தோக்கியோவிலிருந்து கமல் என்கிற கமலக்கண்ணன் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்தார். “இந்திய நேரப்படி மதியம் பேசுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். அவர், வரலாறு டாட் காம் என்ற இணையளதளத்தை நிர்வகித்து வரும் வரலாற்று ஆய்வாளர்-எழுத்தாளர்.
சொன்னபடி அழைத்தார். ஜப்பானில் நடைபெறுகிற தமிழ் இலக்கிய விழாவில் மொழிப் போர் பற்றிப் பேச வேண்டும் எனத் தெரிவித்து, பயண நடைமுறைகளை விளக்கினார். விசா ஏற்பாட்டுக்கானத் தொடர்புகளையும் தந்தார். 10 நாட்களில் எல்லாம் தயாரானது. அதற்குள் பல முறை தொடர்பு கொண்டு பேசினார் கமல். அவரது நண்பரும் மன்னார்குடிக்காரருமான ஜப்பான் வாழ் தமிழ் எழுத்தாளர் செந்தில்குமார் பேசினார். பயணம் குறித்தும், நிகழ்வுகள் குறித்தும் அடிக்கடி பேசும் வாய்ப்பு கிடைத்தது.
செப்டம்பர் 12 அன்று சென்னைக்கு வந்தார் கமல். இராயப்பேட்டையில் லாயிட்ஸ் சாலையாக இருந்து, அவ்வை சண்முகம் சாலையாக மாறி, தற்போது பி.எஸ்.ராமன் சாலையாகியிருக்கும் இடத்தில் அறிமுகமானோம். மதிய உணவு வரை அவருடன்தான் பயணம். சொந்த ஊர் கோபி. அவருடனான உரையாடலில் ஜப்பான் பயணத்திற்கான ஆர்வம் அதிகமானது.
அவரை சந்தித்த இரண்டு நாட்களில் விசா நடைமுறைகள் நிறைவடைந்து, ஏர் டிக்கெட்டும் கைக்கு வந்து சேர்ந்தது.
என் உடலில் சிறகுகள் முளைத்திருப்பதைக் கண்டேன்.(விரியும்)
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார். journalist kovi lenin japan visit
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறை அனுபவங்கள் புக் ரிலீஸ்: அப்டேட் குமாரு
ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது!