journalist kovi lenin japan visit 2

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2

அரசியல் சிறப்புக் கட்டுரை

 கோவி.லெனின் journalist kovi lenin japan visit 2

அடிக்கடி வெளிநாடு செல்கின்ற வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஒரு மாமாங்கத்திற்கு முன் (2010), தாய்லாந்துக்குப் பயணித்திருக்கிறேன். 4 நாள் பயணம் முடித்து திரும்பியதுமே பொதுவான நண்பர்கள் கேட்ட கேள்வி, “பட்டையா வாக்கிங் ஸ்ட்ரீட்டில் பட்டைய கௌப்புனீங்களா?” என்பதுதான். நெருக்கமான நண்பர்களோ, “நீ ஏன்யா எக்ஸ்ட்ரா லக்கேஜ் மாதிரி தாய்லாந்து போனே..? அங்கே சுத்துறதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டியே?” என்றனர்.

“எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும்னு தெரியாது மாப்ளே!” என்று அவர்களிடம் சொன்னதுடன், தாய்லாந்துக்கு ஏன் போனேன், அங்கே என்ன அனுபவித்தேன் என்பதை ‘தாய்லாந்து- அங்கே கிடைத்த அனுபவங்கள்’ என்ற தலைப்பில் புத்தகமாகவே எழுதி விட்டேன்.

journalist kovi lenin japan visit 2

அதன்பிறகு, 8 ஆண்டுகள் கழித்து 2018ல் கத்தார் பயணம். அங்குள்ள தமிழ் நண்பர்கள் நடத்திய பொங்கல் விழாவில் பேசுவதற்கான வாய்ப்பும், அதையொட்டி ஒரு சில இடங்களை மட்டும் பார்க்கக்கூடிய வகையிலான 2 நாள் சுற்றுப்பயணமுமாக அமைந்தது. 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, ஜப்பானுக்குப் பறக்க ஆயத்தமானேன்.

வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் (NRTIA) அமைப்பின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவும், அந்த அமைப்பும் துளிக்கனவு இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய தமிழரங்கம் நிகழ்வுக்காகவும்தான் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அழைத்திருந்தார்கள்.

“தமிழரங்கம் நிகழ்வில் நீங்களும் அவரும் கலந்துக்குறீங்க” என்று டோக்கியோவிலிருந்து NRTIA நிர்வாகிகள் குன்றாளன், கமலக்கண்ணன், ரா.செந்தில்குமார் ஆகியோர் சொன்னார்கள். அவர்கள் சொன்னது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பெயரை! “அவரோடதான் நீங்க ஜப்பான் வரீங்க” என்றனர். இந்த காம்பினேஷன் காபியில் முறுக்கை முக்கி எடுத்து சாப்பிடுவது போல வித்தியாசமாகத் தெரிந்தது.

கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் உள்ள அரங்கில் சுந்தரராமசாமி தலைமையில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு, சாரு நிவேதிதா அதிரடியாகப் பேசினார். எழுதியவரை மேடையில் வைத்துக் கொண்டே, வெளியிட்ட புத்தகத்தை மொத்தமாக நிரகாரிப்பதாகச் சொன்னதை நேரில் பார்த்திருக்கிறேன். அதற்கு அவர் முன்வைத்த காரணங்கள் ஒரு வகையில் எழுத்தாளருக்கான பாராட்டாகவே அமைந்தன. அரங்கம் கைத்தட்டியது.

அவரது கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். இலக்கியத்தில் ஈடுபாடுள்ள நண்பர்களுடன் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். பழகியதில்லை. எனினும், எல்லாரும் மனிதர்கள்தான் என்பதிலும், மனிதத்தின் இயல்பான குணம் அன்பு என்பதிலும் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவரும் அப்படித்தான் என்பதை அடுத்தடுத்த நாட்களில் புரிந்துகொள்ள முடிந்தது.

journalist kovi lenin japan visit 2

பயணத்திற்கு முன்பாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக Japan Tour என்றவாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கினார்கள் நண்பர்கள். அதிலேயே நானும் எழுத்தாளர் சாருவும் நண்பர்களாகிவிட்டோம். அதன்பின் பயணத்திற்கு முன்பாக ஒரு முறை நேரிலும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் ஒரு கேப்புச்சினோ, நான் ஒரு க்ரீன் டீ என ‘சியர்ஸ்’ செய்தோம்.

டெல்டாகாரர்கள் என்பது இருவரையும் எளிதாக இணைப்பதற்குப் பயன்பட்டது. அவருடைய குடும்பமும் உறவுகளும் தி.மு.க.வினர்தான் என்பதை பழைய நிகழ்வுகளுடன் அவர் நினைவுபடுத்தியது கூடுதல் இணைப்பு. இலக்கியவாதியாக கவிஞர் கனிமொழி, கவிஞர் தமிழச்சி எனத் திராவிடப் படைப்பாளிகளுடன் அவருக்குள்ள நட்பு எங்கள் இணைப்புக்கு இன்னொரு போனஸ்.

என்னுடைய பத்திரிகை பணி, இயக்கம் சார்ந்த பணிகள், என் சொந்த ஊர், என் குடும்பச் சூழல் ஆகியவற்றை சாருவும் அறிந்து வைத்திருந்தார். ஏர்போர்ட்டில் பார்க்கலாம் என விடை பெற்றேன்.

செப்டம்பர் 27. காலை நேரத்தில் சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையம் பெயருக்கேற்றார் போல அமைதியாகத் தெரிந்தது. உள்ளே நுழைந்தால் அண்ணாவைப் போலவே அத்தனை வசீகரத் திறனை அதனுள் காண முடிந்தது. புதுப்பிக்கப்பட்ட பன்னாட்டு முனையம், சர்வதேச தரத்திற்கு ஈடு கொடுத்த அண்ணாவின் ஆங்கில மொழியாற்றல் போல ஈர்த்தது.

மலேசியன் ஏர்லைன்ஸில் நாங்கள் பயணிக்க வேண்டும். முதலில், கோலாலம்பூர்., அங்கிருந்து டோக்கியோ நரிடா விமான நிலையத்திற்கு! இரண்டுக்குமான போர்டிங் பாஸ்களைப் பெற்றுக்கொண்டு பயணித்தோம்.

கோலாலம்பூர் வரை மூன்றரை மணி நேரப் பயணம். மேகங்கள் கடந்து பறந்து கொண்டே, சீட்டின் முன் இருந்த திரையில் Journey To The Centre of Earth படம் பார்த்துக் கொண்டும், அவ்வப்போது எழுத்தாளருடன் பேசிக்கொண்டும் பயணம் தொடர்ந்தது.

அதன்பின், கோலாலம்பூர் விமான நிலையத்தில் சுமார் 4 மணி நேர இடைவெளிக்குப் பிறகு, டோக்கியோ நோக்கி 7 மணி நேரப் பயணம். மலேசிய தலைநகரில் அப்போது மணி இரவு 11.30. (நம்ம நேரம் இரவு 9 மணி) ராத்திரி நேரப் பயணத்திற்கு இதமான உணவையும் பானத்தையும் புன்னகையுடன் வழங்கினார்கள் ஏர்ஹோஸ்ட்டஸ்கள்.

நானும் சாரு நிவேதிதாவும் உற்சாகமாகப் பேசினோம். கொஞ்ச நேரம் கண் மூடுவதும், பிறகு இருக்கைக்கு முன்புள்ள தொடுதிரையில் படம், பாட்டு, பயண விவரங்களைப் பார்ப்பதுமாக பயணம் தொடர்ந்தது.

பசிபிக் பெருங்கடல் மீது அடர்ந்த இருளில் சிறகடித்தது இயந்திரப் பறவை. எவ்வளவு உயரத்தில் பறக்கிறோம். எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்கிறோம்,. மலேசியா நேரம் என்ன, ஜப்பான் நேரம் என்ன, தரையிறங்க இன்னும் எத்தனை மணி நேரம் என்பதை கவுன்ட்டவுன் முறையில் காட்டியது இருக்கைக்கு முன்பிருந்த தொடுதிரை.

அடர்ந்திருந்த இருளை விலக்கி, ஜன்னல் வழியே ஒளிக்கைகளை நீட்டி, தன் வெதுவெதுப்பான விரல்களால் கன்னத்தை வருடியது ஜப்பான் சூரியன். journalist kovi lenin japan visit 2

(விரியும்  வரும் ஞாயிறு அன்று)

கட்டுரையாளர் குறிப்பு

journalist kovi lenin japan visit 2

கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.an visit

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் – 1

சச்சின் – காம்ப்ளி நட்பை படமாக்கும் கௌதம் மேனன்

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *