சஃப்வாத் ஜர்கார்
கடந்த திங்களன்று (ஜனவரி 13) பிரதமர் நரேந்திர மோடி மத்திய காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் மிகவும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதையைத் திறந்துவைத்தார்.
ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் 6.4 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள இந்த சோனமார்க் சுரங்கப்பாதை, லடாக் பகுதிக்கு ஆண்டு முழுவதும் இணைப்பை உறுதி செய்கிறது. 2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் மோடி இந்தப் பகுதியில் தொடங்கி வைத்த இரண்டாவது பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் இது.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தும் மாநில அந்தஸ்தும் 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டதை மறைமுகமாகக் குறிப்பிட்ட மோடி, காஷ்மீர் யூனியன் பிரதேசம் “கடந்த காலத்தின் கடினமான நாட்களைத் தாண்டிவந்து, ‘பூலோக சொர்க்கம்’ என்ற அடையாளத்தை மீண்டும் பெறுகிறது” என்று கூறினார்.

“ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் கிரீடம். இந்தக் கிரீடம் இன்னும் அழகாகவும் வளமாகவும் மாற்றப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று காண்டர்பாலில் நடந்த கூட்டத்தில் உரையாற்றுகையில் பிரதமர் கூறினார்.
இருப்பினும், ஜம்மு-காஷ்மீரின் பொருளாதாரத்தையும் பிற வளர்ச்சிக் குறியீடுகளையும் பார்த்தால் வேறு மாதிரியான சித்திரம் கிடைக்கிறது. சிறப்பு அந்தஸ்தையும் மாநில அந்தஸ்தையும் நீக்கி யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதற்கு முன்பு காஷ்மீர் மாநிலம் காலத்தில், பெரும்பாலான இந்திய மாநிலங்களைவிடவும் பொருளாதாரத்திலும் சமூக அளவிலான குறிப்பான்களிலும் சிறப்பாகச் செயல்பட்டது. பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் அரசியலமைப்பு சார்ந்த தீவிரமான மாற்றங்களைக் காஷ்மீரில் கொண்டுவந்ததிலிருந்து அதன் “செழிப்பு” பின்னடைவைச் சந்தித்திருப்பதையும் இந்த அளவீடுகள் குறிக்கின்றன.
சமூக, பொருளாதாரக் குறிப்பான்கள்-2019

ஜம்மு-காஷ்மீரில் மக்கள்தொகை மிகவும் குறைவு. எனவே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.8% மட்டுமே பங்களிக்கிறது. இருப்பினும், இதன் மனித மேம்பாடு, சமூக மேம்பாடு ஆகிய குறியீடுகள் நாட்டின் பிற பகுதிகளைவிடச் சிறப்பாகவே இருந்துவருகின்றன.
எடுத்துக்காட்டாக வறுமையை எடுத்துக்கொள்வோம். தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் கூற்றுப்படி, 2011-12ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகையில் 22% மக்கள் ஏழைகளாகக் கருதப்படும் நிலை இருந்தது. இதே காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் வறுமை நிலையின் விகிதம் அதில் பாதிக்கும் குறைவாக (10.3%) இருந்தது.
மனித மேம்பாட்டுக் குறிப்பான்களில் ஜம்மு-காஷ்மீர் தனித்து நின்றது. எடுத்துக்காட்டாக, 2009க்கும் 2016க்கும் இடையில், ஜம்மு-காஷ்மீரில் (ஆண், பெண்கள் ஆகிய இரு பாலருக்கும்) சராசரி ஆயுட்காலம் தேசிய சராசரியைவிட அதிகமாக இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் 67% ஆக இருந்தது, இது தேசிய கல்வியறிவு விகிதமான 73%ஐ விடச் சற்றே குறைவு.
பெண் பாலின விகிதத்தைப் பொறுத்தவரை, ஜம்மு-காஷ்மீரின் நிலை நாட்டின் பிற பகுதிகளைவிடவும் மேலானதாகவே இருந்தது. இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 929 பெண்கள் பிறக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் 1,000 ஆண்களுக்கு 976 பெண்கள். இந்தத் தரவு 2019-21ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5இன் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்திலும் ஜம்மு-காஷ்மீரின் நிலை மேம்பட்டதாக இருந்தது. இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 42 குழந்தைகள் ஐந்து வயதுவரை வாழ்வதில்லை. ஜம்மு காஷ்மீரில், இந்த எண்ணிக்கை 18.5 குழந்தைகள் மட்டுமே.
உயர்ந்துவரும் வேலையின்மை

யூனியன் பிரதேசத்தில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்குப் “புதிய வாய்ப்புகளை” வழங்கியுள்ளன என்று மோடி தனது உரையின்போது கூறினார்.
ஆனால், அதிகாரப்பூர்வமான தரவுகள், இப்பகுதியில் வேலைவாய்ப்பின்மை ஆபத்தான அளவில் உள்ளதைக் காட்டுகின்றன. ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை நீக்கி அதை யூனியன் பிரதேசமாகக் குறைத்த 2019ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு நெருக்கடி மோசமாகியுள்ளது.
எடுத்துக்காட்டாக, நவம்பரில், மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் கணக்கெடுப்பு தொடர்பான தரவு, ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2023ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10.2%இலிருந்து 11.8%ஆக உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது. 15-29 வயதினரிடத்தில் வேலையின்மை விகிதம் 32% ஆக இருந்தது. இதே காலகட்டத்தில் வேலையின்மை விகிதத்தில் தேசிய சராசரி 15.9%.
வருடாந்தர தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளை வைத்து ஸ்க்ரால் இதழ் மேற்கொண்ட அலசலில் 2017க்கும் 2019க்கும் இடையில் ஜம்மு-காஷ்மீரில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் தேசிய சராசரியைவிடக் குறைவாக இருந்தது தெரியவருகிறது. 2019 ஜூலை முதல் (ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது) 2024 ஜூன் வரை ஜம்மு-காஷ்மீரின் வேலையின்மை விகிதம் தேசிய வேலையின்மை விகிதத்தைவிடத் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
15-29 வயதுக்குட்பட்ட பணியாளர்களின் வேலையின்மை விகிதத்திலும் இதே போக்கு காணப்படுகிறது. 2019க்கு முன்பு, 15-29 வயதுக்குட்பட்டவர்களிடத்தில் ஆண்டு வேலையின்மை விகிதம் தேசிய சராசரியைவிடக் குறைவாக இருந்தது. 2019ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலிருந்து இது தேசிய வேலையின்மை விகிதத்தைவிட அதிகமாகவே உள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகளைப் பாதித்தது. தொற்றுநோய் பாதிப்பு நிலவிய ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதைத் தொழிலாளர் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 2019-20 இல் 4.8% ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2023-24இல் 3.2% ஆகக் குறைந்தது. இதோடு ஒப்பிடுகையில், ஜம்மு-காஷ்மீரின் வேலையின்மை விகிதம் அவ்வளவாகக் குறையவில்லை. 2019-20இல் 6.7% ஆக இருந்தது. 2023-24இல் 6.1% என்னும் நிலையில் இருந்தது.
தற்போது ஜம்மு-காஷ்மீரில் 15-29 வயதுக்குட்பட்டவர்களின் வேலையின்மை விகிதம் மிகவும் கவலையளிக்கிறது. 2023-24இல் இது 17.4% ஆக உயர்ந்தது. இதே சமயத்தில் 15-29 வயதுக்குட்பட்டவர்களின் வேலையின்மை விகிதத்தின் தேசிய சராசரி 10.2%.
ஜம்மு-காஷ்மீரில் வேலையின்மையின் ஆபத்தான அறிகுறிகள் எல்லா இடங்களிலும் உள்ளன. கடந்த டிசம்பரில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையில் 4,002 கான்ஸ்டபிள் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் 5.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
அதிகரிக்கும் கடன் சுமை
நிதிப் பற்றாக்குறையாலும் ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் திணறிவருகிறது. ஜம்மு-காஷ்மீர் அரசின் கடன் அளவை எடுத்துக் கொள்வோம். ஜம்மு-காஷ்மீரின் மொத்தக் கடன்கள் 2022-23ஆம் ஆண்டில் ரூ.1.12 லட்சம் கோடி என்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான 2024-25 பட்ஜெட் கூறுகிறது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும். 2019-20ஆம் ஆண்டில் கடன்களின் அளவு ரூ.83,573 கோடியாக இருந்தது.
பொருளாதார வல்லுநர்கள் இந்தக் கடன் அதிர்ச்சியூட்டும் அளவில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். பட்ஜெட்டின்படி, 2024-25ஆம் ஆண்டிற்கான யூனியன் பிரதேசத்தின் கடன்-ஜிடிபி விகிதம் 51% ஆக உள்ளது. கடன்-ஜிடிபி விகிதம் என்பது ஒரு நாட்டின் வருடாந்தரப் பொருளாதார உற்பத்தியுடன் ஒப்பிட்டு அதன் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் காட்டும் அளவீடு. கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக இருப்பது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.
மத்திய அரசை அதிகமாகச் சார்ந்திருத்தல், தனியார் துறையும் தொழில்துறையும் செழிப்பாக இல்லாதது, பல தசாப்தங்களாக அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றால் ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்துடன் இருந்தபோதும் அதன் கடன் சுமை அதிகமாகவே இருந்துவந்தது. ஆனால் அண்மைக்கால நிலவரம் ஜம்மு-காஷ்மீரின் தரநிலைகளின்படி பார்த்தாலும் திகைப்பூட்டும் வகையில் உள்ளது. உதாரணமாக, 2011-12ஆம் ஆண்டில் மாநிலத்தின் கடன் ரூ. 36,256 கோடியாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும் மாநில அந்தஸ்தையும் ரத்து செய்யப்பட்டது இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியின் புதிய விடியலுக்கு வழிவகுத்துள்ளது என்ற புது தில்லியின் கூற்றை இந்த எண்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன.
உற்பத்தியிலும் சரிவு

370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, புதுதில்லியில் உள்ள உரிமைகள் குழு ஒன்று, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தும் மாநில அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் பொருளாதார நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டது.
‘ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகளுக்கான மன்றம்’ என்னும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின்படி 2015க்கும் 2019க்கும் இடையில், மாநிலத்தின் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி 13.28% அதிகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாகத் தரமிறக்கப்பட்டதைத் தொடர்ந்து வளர்ச்சி விகிதம் 8.73% ஆக இருந்தது. குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பண மதிப்பு நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி என்று அழைக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்குள் தனிநபரின் பொருளாதார உற்பத்தியிலும் இந்தச் சரிவு காணப்பட்டது. “ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2019 வரை தனிநபர் தேசிய உற்பத்தி வளர்ச்சி விகிதம் 12.31% ஆக இருந்தது. ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2024 வரை 8.41% ஆக இருந்தது” என்று இந்தக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீரில் பணவீக்கம் தொடர்ந்து தேசிய சராசரியை விட அதிகமாகவே உள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்தின் பொருளாதார ஆய்வின்படி, 2018-23க்கு இடையில் ஜம்மு-காஷ்மீரில் பணவீக்க விகிதம் இரண்டு ஆண்டுகளில் மட்டுமே தேசிய சராசரியைவிடக் கீழே சென்றுள்ளது.
இவற்றையெல்லாம் பார்க்கையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தையும் மாநில அந்தஸ்தையும் நீக்கி அதை யூனியன் பிரதேசமாக ஆக்கிய பிறகு அங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு கூறுவது ஆதாரமற்ற கூற்று என்பது தெளிவாகிறது.
தமிழில்: தேவா