யானைகளும் ஆஸ்கர் விருதும்: ரூ.1 கோடி தந்தது சரியா?

அரசியல் சிறப்புக் கட்டுரை

எஸ்.வி.ராஜதுரை

2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் பரிசைப் பெற்றுள்ள கார்த்திகி கோன்சால்வ்ஸைப் பாராட்டி அவரை ஊக்குவிக்கும் விதமாக தமிழக முதல்வர் அந்தப் பெண்மணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளித்திருப்பது, அவருடைய தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசாங்கம், கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் வழங்கும் பாராட்டுகள், பணக்கொடைகள் ஆகியவற்றின் ஒரு பகுதியே என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இவை இதுவரை தமிழ்நாட்டிலிருந்த கலைஞர்  மு.கருணாநிதி தலைமையிலிருந்தது உட்பட வேறு எந்த அரசாங்கமும் மேற்கொண்டிராத நடைமுறை.

கார்த்திகி, கோவாவைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவர் என்றாலும்,  ஊட்டியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்து வருகிறவர். ஊட்டியிலும் கோவையிலும் படித்தவர். நீலகிரி மாவட்டத்திலுள்ள காட்டுப் பகுதிகளையும் காட்டுயிர்களையும் நன்கு அறிந்தவர். அவற்றை உளமார நேசிப்பவர். அவர் இயக்கிய முதல் ஆவணப்படம் தமிழ் மொழியில் உள்ளது பாராட்டுக்குரியது.

எனினும், தமிழக முதலமைச்சர்  தனது தமிழ் ஆர்வத்தின் காரணமாகவே மிகவும் அவசரப்பட்டு அந்த பெண்மணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அளித்திருக்கிறார் என்றும் அதில் ஒரு பகுதியை அந்த ஆவணப்படத்தில் காட்டப்படும் யானைகளைப் பராமரிக்கும் பழங்குடி இணையர்களுக்குக் கொடுத்திருக்கலாமே என்றும் எனக்குத் தோன்றுகிறது.

இந்த எண்ணம் எனக்குத் தோன்றுவதற்கான முக்கியக் காரணம் அந்த ஆவணப்படத்தின் தலைப்பு அசலானது அல்ல.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து  பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டவரும் காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாப்பதற்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவருமான லாரன்ஸ் ஆண்டனி, தனது அனுபவங்களைக் கூறும் நூலின் தலைப்பும் ‘The Elephant Whisperer’  என்பதுதான்.

காடுகளையும் காட்டுயிர்களும் நேசிப்பவர்கள் பலரும் அறிந்த செய்திதான் இது.

1 crore for kartiki

எனவே கார்த்திகி, தனது ஆவணப்படத்தின் பெயருக்கு லாரன்ஸ் ஆண்டனிக்குக் கடன்பட்டிருப்பதாக அதில் எங்கும் சொல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது.

லாரன்ஸ் ஆண்டனி பற்றிய சில விஷயங்களை லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய ‘கானகன்’ நாவலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். அந்த நாவல் 2014-இல் வெளியானது. அதை அப்படியே இங்கு தருகிறேன்:

1 crore for kartiki

”தென்னாப்பிரிக்காவின் க்வாஸுலு மாநிலத்தின் ஜுலுலேண்டிலுள்ள துலா துலா புதர்க்காட்டுப் பகுதியில் வாழ்கின்றன இரண்டு யானைக் கூட்டங்கள்.  மனிதர்களைக் கொல்கின்ற, சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கும்  மனிதர்களின் குடியிருப்புகளுக்கும் சேதம் விளைவிக்கின்ற ‘மதம் பிடித்த யானைகள்’ என்றும் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவை என்றும்  ஒரு காலத்தில் கருதப்பட்டவையே அவை.

ஆனால், அவை தமது இயற்கையான வாழ்க்கைச் சூழல் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானவை என்று கருதிய உலகப் புகழ்பெற்ற  காட்டுயிர்/கானகப் பாதுகாப்பாளர் லாரன்ஸ் ஆண்டனி, அந்த யானைகளிடம் அவற்றின் ‘மொழியிலேயே’ பேசி, அந்த ஜுலுலேண்ட் புதர்க்காடுகளில் அவை நிம்மதியாக வாழ வைத்திருக்கிறார்.

காட்டுயிர்கள் பற்றியும் அவற்றைப் பாதுகாப்பது பற்றியும் அவர் எழுதிய மூன்று நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை (Babylon Ark, The Last Rhinos, The Elephant Whisperer). பல ஆண்டுகள் அவரது வீட்டுக்கு அடிக்கடி  வந்துபோய்க் கொண்டிருந்த அந்த யானைகள் கடந்த இரண்டாண்டுகளாக வரவில்லை.

1 crore for kartiki

”அவர் கடந்த 2012 ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி காலமானார். அவரது மரணத்தைப் பற்றி அந்த யானைகள் எப்படித் தெரிந்துகொண்டனவோ, யாருக்கும் தெரியாது. பல மைல் தூரம் அவை ஏதோ சவ ஊர்வலத்தில் கலந்துகொள்வது போல நூற்றுக்கணக்கான மைல்கள் வரிசையாக நடந்துவந்து இறந்துபோனவரின் வீட்டுக்கு அருகே இரண்டு நாட்கள் இருந்துவிட்டுத் திரும்பிச் சென்றன.

1 crore for kartiki

யானைக்கு நினைவாற்றல் மிக அதிகம் என்று வாய்மொழிக் கதைகள், நாட்டார் கதைகள் மூலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், துக்கம் விசாரிக்க அவை வந்தது பற்றிய செய்தி நமக்குத் தெரிந்தவரை இது ஒன்றுதான்.

விலங்குகளை நேசிப்பவர்களுக்கு –  நாய், பூனை போன்றவற்றை வேட்டை விலங்குகளாகவோ, செல்லப் பிராணிகளாகவோ வைத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும் கூட – அவற்றின் ‘மொழி’ தெரியும்; அவற்றின் ‘மொழி’யில் பேசவும் தெரியும்”.

கார்த்திகியிடம் நாம் குறைந்தபட்சம் வேண்டிக்கொள்வது என்னவென்றால், “உங்கள் ஆவணப்படத்தில் லாரன்ஸ் ஆண்டனியின் பெயரை எங்காவது குறிப்பிடுங்கள்.”

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

அண்ணாமலை அமித்ஷா சந்திப்பு: நடந்தது என்ன?

+1
1
+1
2
+1
1
+1
14
+1
7
+1
3
+1
1

2 thoughts on “யானைகளும் ஆஸ்கர் விருதும்: ரூ.1 கோடி தந்தது சரியா?

  1. இவரின் கருத்து சரியே. அந்த ஒரு கோடி தேவையில்லாதது

  2. தமிழ்நாட்டினரை பாராட்டாமல் மேல் நாட்டவரையே பாராட்டிக்கொண்டிருக்கிறகலாச்சாரங்கொண்டவர்களை மாற்றமுடியாது.எல்லோருக்கும் கடமைப்பட்டோ நன்றி கூறிக்கொண்டே இருக்கமுடியுமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *