சிறப்புக் கட்டுரை : திருமணம் என்பது சிக்கலா?

சிறப்புக் கட்டுரை

சத்குரு

என் மனதில் திருமணம் என்பது ஒருவித மீளமுடியாத பொறுப்பில் சிக்கிக்கொள்வது என்று தோன்றுகிறது. நாம் செய்தே ஆக வேண்டிய கடமைகளும், எதிர்பார்ப்பும் இந்த உறவில் இருக்கிறது. இப்படி எதிர்பார்ப்பு இல்லாத உறவு அமைய முடியாதா?

எங்கே உறவு இருந்தாலும், அங்கே ஒரு எதிர்பார்ப்பு இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஏதோ ஒரு தேவை இருப்பதால் தானே எந்த உறவும் அமைகிறது? எந்தத் தேவையும் இல்லாத நிலை இருந்தால், அடுத்தவரை நாடி உறவு அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே?

எதிர்பார்ப்பு இல்லாத உறவு என்பதெல்லாம் பாசாங்கு ஆன்மீகவாதிகளின் சிபாரிசு. இதையெல்லாம் நம்பி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

எங்கோ இருக்கும் வெறுமையை நிரப்பி, உங்களைத் திருப்திப் படுத்திக் கொள்ளத்தான் நீங்கள் உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்.

உங்கள் தேவைக்காகத் தான் இந்த உறவை நாடினீர்கள் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்தால் போதும்.

‘அப்படி எதுவும் இல்லை, இன்னொரு உயிரை சந்தோஷப் படுத்துவதற்காகத் தான் அதனுடன் உறவு கொண்டேன்’ என்று நீங்கள் சொன்னாலும், அந்த உயிரை சந்தோஷப்படுத்த விரும்பியது நீங்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அந்த விதத்தில் பார்த்தால் உங்கள் விருப்பத்தை தானே அந்த உறவு நிறைவேற்றி இருக்கிறது?

இந்த அடிப்படையை உணர்ந்தால், அந்த இன்னொரு உயிரை நீங்கள் மதிக்கத் தொடங்கி விடுவீர்கள். ஓரு உயிரை எப்போது மதிக்கிறீர்களோ, அவ்வுயிருக்கு நீங்கள் பொறுப்பேற்பது தானாக நிகழும்.

இந்தப் பொறுப்புணர்வு இல்லையென்றால், உறவுகள் உணர்ச்சிக் கொந்தளிப்புகளாக மட்டுமே இருக்கும். எவ்வித பாதுகாப்பு உணர்வும் இல்லாமல், அது பதற்றத்தில் தத்தளிக்கும். பொறுப்பேற்கத் தயங்கும் மேற்கத்திய உறவுகளில் இதை அதிகம் காணமுடியும்.

வியாபாரமாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, உடல், மன உணர்ச்சி ரீதியான கொந்தளிப்புகள் அடங்கினால் தான், அடுத்த கட்டத்தைப் பற்றி ஒருவர் தீர்க்கமாக யோசிக்க முடியம்.

கேள்வி

கிராமங்களில் இன்னும் பால்யத் திருமணங்கள் நடக்கும் சூழ்நிலை நிலவுகிறது, இதனால் படிப்பும் பாதியில் நின்று போகிறது. கிராமத்தில் இருக்கும் பெண்களுக்குக் கல்வி வழங்குவது மிகவும் கடினமாக இருக்கிறதே, என்ன செய்வது?

பதில்

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். பெற்றோர் தங்கள் குழந்தைகள் நல்ல விதமாக வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் தான் செயல்படுகிறார்கள்.

தங்கள் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தால், அவள் சந்தோஷமாக இருப்பாள் என்று நினைத்துத் தான் அவர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

அதே பெற்றோர், தங்கள் மகள் படித்தாலோ, வேலைக்குப் போனாலோ தான் சந்தோஷமாக இருப்பாள் என்று நினைத்து விட்டால், அதைத் தான் செய்ய முற்படுவார்கள்.

பெற்றோருக்கு இந்த எண்ணம் வரும் சூழ்நிலையை நாம் தான் அமைத்துத் தரத் தவறி விட்டோம். கிராமத்தில் பெண்கள் முறையாக மேல் கல்வி முடித்து வேலைக்குப் போய் நன்றாக இருப்பதைக் கண்ணாரப் பார்த்து விட்டால், மற்ற பெற்றோரும் அதை நிச்சயம் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பார்கள்.

அதைச் செய்யாமல், அவர்களைச் சும்மா குறை சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

எண்கள் இல்லாவிட்டால் நாம் மேலான வாழ்க்கை வாழ்வோமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *