கள்ளுக் கடைகளைத் திறக்கச் சொல்வது நீதி ஆகுமா ?
– ரவிக்குமார்
“1986 ஆம் ஆண்டு கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஏன் பரிசீலிக்கக்கூடாது?” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
’டாஸ்மாக் கடைகளிலிருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை (IMFL) வாங்க முடியாத ஏழைகள் விஷ சாராயத்தைக் குடித்து உயிரிழந்து வருகிறார்கள்”. எனவே, ” கள்ளின் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய இது உகந்த நேரமாக இருக்கலாம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்தபோதே நீதிபதி இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
ஐடி துறையில் பணியாற்றும் ஒருவர் கள்ளுக் கடையைத் திறக்க வேண்டுமெனப் பொதுநல மனு தாக்கல் செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றால் நீதிபதி இப்படி கருத்து தெரிவித்திருப்பது ஆபத்தானது. ஏனென்றால் நீதிபதி கூறியிருக்கும் கருத்து அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்ட உறுப்பு 47 இல் “அரசு தனது மக்களின் ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றைத் தனது முதன்மைக் கடமைகளில் ஒன்றாகக் கருதும்; குறிப்பாக, மருத்துவ நோக்கங்களுக்காகத் தவிர உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் போதை தரும் பானங்கள், மருந்துகள் ஆகியவற்றின் நுகர்வுக்குத் தடையைக் கொண்டுவர அரசு முயற்சிக்கும்.” எனக் கூறப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறி முறைகளில் இது இருப்பதால் இதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு சட்டப்படியான நிர்ப்பந்தம் இல்லை. ஆனாலும் இதற்கு எதிராக அரசு செயல்திட்டங்களை வகுக்கக்கூடாது என்பதே இதன் உட்கிடை. அவ்வாறு அரசு செயல்பட்டால் அதை நேர் செய்யவேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கே உள்ளது. அவ்வாறிருக்க இங்கே நீதிபதியே இப்படி அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைக்கு மாறாக மது பயன்பாட்டை விரிவுபடுத்த ஆலோசனை சொல்வது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மது விலக்கு குறித்த உறுப்பு அரசியல் நிர்ணய சபையில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அதில் ‘போதையூட்டும் பானங்களை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாதவகையில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என்ற திருத்தத்தை மகாவீர் தியாகி கொண்டு வந்தார். அதில் மேலும் ஒரு திருத்தத்தை ஷிப்பன் லால் சக்ஸேனா முன்மொழிந்தார். ‘மருந்தாகவோ, மருத்துவ காரணங்களுக்காகவோவன்றி வேறு எதற்காகவும்’ பயன்படுத்தக்கூடாது என்பதே அவர் முன்மொழிந்த திருத்தம். அதில் ‘குறிப்பாக’ என்ற சொல்லை அம்பேத்கர் சேர்த்தார்.
கோல்ஹாப்பூரிலிருந்து வந்திருந்த கர்டேகர் என்ற உறுப்பினர் மதுவிலக்குக் கூடாது என வாதிட்டார். ‘மதுவிலக்கு என்பது தனிமனித உரிமையில் தலையிடுவதாகும். புதிதாக சுதந்திரம் பெற்றிருக்கும் இந்தியாவில் இப்படி தடைகளைப் போட்டால் வளர்ச்சியை பாதிக்கும்’ என்றார்.
பீகாரிலிருந்து வந்திருந்த ஜெய்பால் சிங் என்ற உறுப்பினரோ ‘மதுவிலக்கை அமல்படுத்துவது ஆதிவாசி மக்களின் உரிமையைப் பறிப்பதாகும் என்று பேசினார். சாராயத்தை வைத்துதான் ஆதிவாசிகள் சாமி கும்பிடுவார்கள். அவர்கள் வயலில் இறங்கி சேற்றில் கிடந்து கஷ்டப்பட்டு உழைப்பவர்கள், அவர்கள் சாராயம் குடித்தால்தான் வேலை செய்யமுடியும்’ என்று பேசினார்.
மதுவிலக்கினால் அரசாங்கத்துக்கு வருமானம் பாதிக்கும் என்ற வாதத்துக்கு ஷிப்பன் லால் சக்ஸேனா கூறிய பதில் இப்போதும் பொருத்தமாக உள்ளது. “ மாகாண அரசுக்கு 25 கோடி இழப்பு ஏற்படலாம். ஆனால் மது குடிக்காததால் மக்களுக்குக் கிடைக்கும் சேமிப்பு குறைந்தபட்சம் 100 கோடியாக இருக்கும் . குறிப்பாக தொழிலாளிகள், ஹரிஜன்கள் அவர்களுக்கே இந்த சேமிப்பு, அவர்களிடையேதான் மது என்னும் தீமை மலிந்திருக்கிறது” என அவர் கூறினார்.
அந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பட்டியல் சமூகத் தலைவரும் அப்போது சென்னை மாகாணத்தில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவருமான வி.ஐ.முனிசுவாமி பிள்ளை “ சென்னை மாகாணம் மதுவிலக்கினால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட பதினேழு கோடி ரூபாயை இழந்துள்ளது. ஆனால் சென்னை மாகாண மக்கள் ஒரே குரலாக , ‘இந்தப் பதினேழு கோடி ரூபாயைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாங்கள் மக்களின் நலனை விரும்புகிறோம், ஏழை மக்கள் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றார்கள்.
ஐயா, மதுவிலக்கு சென்னை மாகாணத்தில் அமைதியையும் வளத்தையும் கொண்டு வந்துள்ளது. இது மக்களின் உடலமைப்பு மற்றும் அவர்களின் பொருளாதார நிலையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமான சமூகமான ஹரிஜனங்கள், சாதி-இந்துக்களாலும், மிராசுதாரர்களாலும் கீழ்த்தரமான தொழில்களைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படும் கூலி பணமாகக் கொடுக்கப்படவில்லை, சாராய கடைகளுக்குச் சென்று குடிப்பதற்கு சீட்டுகளாக வழங்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற விஷயங்கள் இப்போது மறைந்துவிட்டன. அந்த துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், மதுவிலக்கு எனது மாகாணத்தில் அமைதியையும் வளத்தையும் கொண்டு வந்துள்ளது என்று நான் தைரியமாகச் சொல்ல முடியும்.” என உறுதியோடு தெரிவித்தார்.
மதுவிலக்குக் கூடாது என வாதிட்ட கர்டேகரின் வாதங்களை அம்பேத்கர் நிராகரித்தார். மகாவீர் தியாகி, ஷிப்பன் லால் சக்ஸேனா, அம்பேத்கர் ஆகியோர் அளித்த திருத்தங்களோடு அந்த உறுப்பு அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47 என்ன சொல்கிறது என்பது நீதிபதிக்குத் தெரியாததல்ல. நன்கு தெரிந்திருந்தும் அவர் பேசியதுதான் வியப்பளிக்கிறது.
கள்ளுக்கடையைத் திறக்கவேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள், மற்ற மதுவகைகளை அரசாங்கம் அனுமதிக்கிறது. அயல்நாட்டு மதுவகைகளைத் தயாரித்து விற்கிறார்கள். அவையெல்லாம் செயற்கையாக இரசாயனப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. கள் என்பது இயற்கையாக வடிகிற ஒரு பொருள். அது ஒரு இயற்கை உணவு. அது உடம்புக்கு நல்லது, சாதாரண ஏழைகள் சாப்பிடக் கூடியதாக இருக்கிறது. அதனால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அப்படி இருக்கும்போது பிராந்தி விஸ்கி போன்றவற்றையும் விற்க அனுமதிக்கிற அரசாங்கம் அதன் மூலம் பெருமுதலாளிகளுக்கு லாபம் சேர்ப்பதற்குத் துணைபுரிகின்ற இந்த அரசாங்கம் ஏன் கள்ளை மட்டும் விற்கக் கூடாது?” என்று கேட்கிறார்கள்.
கள் என்பது போதைப்பொருள் இல்லையா?
மருத்துவரீதியாகப் பார்த்தால் கள் என்பது இவர்கள் சொல்வது மாதிரி உடலுக்குக் கேடு விளைவிக்காத ஒரு பொருள் அல்ல. ஏனென்றால் அதில் 7 சதவீதம் ஆல்கஹால் இருக்கிறது. ஒரு பொருளில் 4 சதவீதத்துக்குமேல் ஆல்கஹால் இருந்ததென்றால் அதைத் தொடர்ந்து பாவித்தால் அது மிகவும் மோசமாக உடலைப் பாதிக்கும். குறிப்பாக மூளையினுடைய சக்தியைப் பெரிதும் பாதிக்கும் என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். என்சைம்களை அது பாதிக்கிறது. நினைவாற்றலை இழக்கச் செய்கிறது. இதெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
குறிப்பாக கேரளாவிலிருந்து இரண்டு மருத்துவ நிபுணர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். கள் குடிப்பதால் வளரும் பருவத்தில் எந்த மாதிரியான கேடுகள் ஏற்படும் என்று ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். சினையாக இருந்த எலிகளைப் பிடித்து அவற்றுக்குத் தினமும் குறிப்பிட்ட அளவு கள்ளைப் புகட்டி அது குட்டி போட்டதற்குப் பிறகு ஆராய்ந்து பார்த்ததில் அந்தக் குட்டிகளுக்கு கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதே விதமான பாதிப்புகள் மனிதர்களுக்கும் ஏற்படும் என்பதை அந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கலப்பட கள் என்னும் ஆபத்து
இன்னுமொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதுதான் ‘கலப்பட கள்’ என்னும் பிரச்சனை. ஒரு கள்ளுக்கடையை லாபகரமாக நடத்த வேண்டுமென்றால் அதற்குப் போதுமான கள் உற்பத்தி செய்யப்படவேண்டும். அப்படி உற்பத்தி செய்வதற்கு அந்த அளவுக்கு தென்னை மரங்கள் இருக்கவேண்டும். தென்னை மரம் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து அதை கள் இறக்குவதற்கு விடமாட்டார்கள். காய்ப்பு பொய்த்துவிடும் என்பதால் ஒரு வருடம் விட்டு ஒரு வருடம்தான் கள் இறக்க விடுவார்கள். அப்படிச் செய்யும்போது கள் வடிக்கப் போதுமான மரம் கிடைக்காமல் போய்விடும். இதைச் சமாளிப்பதற்கு கள்ளுக்கடைக்காரர்கள் கண்டுபிடித்துள்ள உபாயம்தான் கலப்படக் கள் என்பதாகும்.
கலப்படக் கள் தயாரிப்பதற்கு என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்தால் நாம் கனவில்கூட கள்ளுக்கடையைப் பற்றி நினைக்கமாட்டோம். ஸ்பிரிட், க்ளோரல் ஹைட்ரேட், வெள்ளை நிற சாந்து இவைதவிர டையாஸ்பாம் மாத்திரையும்கூட கலக்கப்படுகிறது. இப்படிக் கலப்படம் செய்து தயாரிக்கப்படுகிற ‘கள்ளில்’ இருக்கும் போதை நாற்பது சதவீத ஆல்கஹாலின் போதைக்கு சமம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி செயற்கை கள் தயாரிப்பதற்கு மட்டுமின்றி இயற்கையாக இறக்குகிற கள்ளிலும்கூட க்ளோரல் ஹைட்ரேட்டைக் கலந்து அதில் தண்ணீர் ஊற்றி கூடுதல் கள்ளை உற்பத்தி செய்வது அநேகமாக எல்லா கள்ளுக்கடைகளிலும் உள்ள நடைமுறையாகும். ‘ஒரு லட்சம் விட்டர் கள்ளில் 0.44 மிலி கிராம் க்ளோரல் ஹைட்ரேட்டைக் கலந்தால் அதை ஐந்து லட்சம் லிட்டர் அளவுக்கு அதிகரித்துக்கொள்ளலாம் என கேரள கள்ளுக்கடை முதலாளி ஒருவர் சொன்னது ‘இண்டியன் என்விரான்மென்டல் போர்ட்டல்’ என்ற இணைய தளத்தில் வெளியான ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
க்ளோரல் ஹைட்ரேட் என்னும் இந்த வேதிப் பொருள் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகும். இதைக் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் மயக்கம், இதய பாதிப்பு, வாந்தி எனப் பல்வேறு உடல்நலக் கேடுகள் வருவதோடு கல்லீரல் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இதைத் தொடர்ந்து பாவித்துவந்தால் அந்த நபர் நிரந்தரமாக இதற்கு ‘அடிக்ட் ஆகிவிடுவாரென்றும் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஆக, கள் இயற்கை உணவு என்பதும் அதைக் குடித்தால் உடம்புக்கு நல்லது என்பதும் அப்பட்டமான பொய்யே தவிர வேறொன்றுமில்லை.
கள்ளுக்கு எதிரான பொருளாதார, அரசியல் காரணங்கள்
இப்படியான மருத்துவ காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும் பொருளாதார அரசியல் காரணங்களையும் நாம் ஆராய வேண்டும். இன்றைக்குக் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் ‘ஒருவர் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இன்றைய நாளில் பிராந்தி, விஸ்கி குடிக்க வேண்டுமென்றால் 400 ரூபாயை செலவு செய்து விடுகிறார். மீதி 100 ரூபாய் தான் அவர் கையில் இருக்கிறது. ஆனால் கள்ளுக் கடையைத் திறந்தால் 100 ரூபாய்க்கு மட்டும் குடித்துவிட்டு மீதி 400 ரூபாயை வீட்டிற்குக் கொண்டு போவார்’ என்று ஒரு புதிய பொருளாதாரக் கண்டுபிடிப்பை அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், உண்மையிலேயே கள்ளுக்கடை என்பது ஏழை மக்களுக்கு சாதகமான ஒரு விஷயமா? என்று பார்க்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் கிராமப்பகுதிகளில் அதிகமாகக் கிடையாது. எனவே, ஒரு கிராமத்தில் ஒருவர் குடிக்க வேண்டும் என்று விரும்பினாலும்கூட ஊரில் திருவிழா கொண்டாட்டம் அல்லது ஒரு துக்க நிகழ்வு அல்லது வீட்டில் ஏதாவது விசேஷம் என்று இப்படி ஏதாவது சந்தர்ப்பம் அமைய வேண்டும். அவர் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஒன்று நகரத்திற்குப் போக வேண்டும். அங்கு போய் வாங்கிக்கொண்டு வந்து குடிக்க வேண்டும் அல்லது அங்கேயே குடித்துவிட்டு வரவேண்டும். வெளிநாட்டு மதுவகைகள் அதிக விலை இருப்பதால் இவ்வளவு காசு போட்டுக் குடிக்கிறதா என்கின்ற காரணத்தால் அவர் குடிக்கும் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். ஆனால் விலை மலிவு என்பதாலேயே அவர் குடிக்கும் கள்ளின் அளவு கூடுதலாக இருக்கும்.
கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டால் அவை பெரும்பாலும் கிராமங்களில் தான் அமைக்கப்படும். தென்னந்தோப்புகள் கிராமங்களில்தான் உள்ளன என்பது அதற்கு முக்கியமான ஒரு காரணம். மற்ற மதுக்கடைகள் நகரம் சார்ந்து வைக்கப்படும். ஆனால் கள்ளுக்கடைகள் என்றால் எளிய மக்கள் வாழ்கிற இடங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே இருக்கும். அப்படி ஒரு ஊரில் ஒதுக்குப்புறமாக ஒரு இடம் தேட வேண்டும் என்று சொன்னாலே அது பட்டியல் சாதி மக்களின் குடியிருப்பிற்குப் பக்கத்திலே தான் இருக்கும்.
ஒட்டுமொத்த மது விலக்கே தீர்வு
மது அருந்துவதன் கேடுகளை விளக்கி திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே எழுதியிருக்கிறார், கள்ளுண்ணாமை என்ற அந்த அதிகாரத்தில் முதல் குறளாக இருப்பது,
“உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.”
என்பதாகும். அதாவது, ‘பெருஞ் செல்வம், பெரிய படை எல்லாம் இருந்தாலும் ஒருவன் கள் குடிப்பவனாக இருந்தால் அவனுடைய பகைவர்கள் அவனைப் பார்த்து அஞ்சமாட்டார்கள். அவன் தனது பெருமையைப் புகழை இழந்துவிடுவான்’ என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
கள்ளுண்ணாமை என வள்ளுவர் கூறி இருந்தாலும் அது ஒட்டுமொத்தமாக அனைத்துவிதமான மது வகைகளுக்கும் எதிரானதே ஆகும்.
தமிழ்ச் சமூகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகால மரபு மதுவுக்கு எதிரானதேயொழிய ஆதரவானதில்லை. இதை உணர்ந்து அரசமைப்புச் சட்டம் கூறியிருப்பதுபோல ஒட்டுமொத்தமாக மது விலக்கைக் கோருவதுதான் இன்றைய தேவை, கள்ளுக் கடைகளைத் திறந்து மதுப் பயன்பாட்டைப் பரவலாக்குவது அல்ல.
கட்டுரையாளர் குறிப்பு
டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மருத்துவக் கல்வியும் நீட் தேர்வு எனும் மோசடியும்!
எம்.சி.ராஜா : சட்டமன்றத்தில் சமத்துவத்துக்காக ஒலித்த முதல் குரல்!
பட்ஜெட் தாக்கல் : தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு!
ஆன்லைனில் கட்டிட அனுமதி : விதிமீறினால் சட்டப்படி நடவடிக்கை… கட்டுப்பாடுகள் என்னென்ன?
Share Market : பட்ஜெட் தாக்கல் பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்குமா?
பட்ஜெட் தாக்கல் : மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்