சிறப்புக் கட்டுரை: எல்லாவற்றுக்கும் காரணம் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி தானா?
நா.மணி
பள்ளிக் கல்வியில் ஏன் தரம் குறைந்தது? ‘எட்டாம் வகுப்பு வரை சும்மா பாஸ் போட்டு விட்டா என்ன ஆகும்?’ என்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் சொல்கிறார். ‘எல்லோரையும் எட்டாவது வரை பாஸ் போட்டு நம்ம உயிரை எடுக்கிறாங்க’ என்று. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இத்தனை ஆயிரம் பேர் எழுதவில்லை, என்ற பேச்சு வந்தால் அதற்கும் எட்டாம் வகுப்பு வரை பாஸ் போடுவது தான் காரணம் என்கிறார்கள்.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வரவில்லை என்றாலும் அதற்கும் எட்டாம் வகுப்பு வரை பாஸ் என்பதையே காரணம் காட்டுகிறார்கள். இவ்வாறு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வரை எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தேர்வு இல்லாமல் எப்படி கற்றல் மேம்பாட்டை அளப்பது என்று கேட்கின்றனர். தேர்வு இல்லையென்றால் படிக்க வேண்டும் என்ற பயம் எப்படி வரும் என்று கேட்கின்றனர்.இப்படி ஒட்டுமொத்தமாக எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சிக்கு எதிர்ப்பு இருக்கிறது. உண்மையில் எட்டாம் வகுப்பு வரை பாஸ் போடுவதால் தான் எல்லாப் பிரச்சனைகளும் ஏற்படுகிறதா? இப்படிப் பேசிப் பேசி எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை காலி செய்வதை நெருங்கி விட்டோம்.
இந்த நிலையில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை கொஞ்சம் பரிசீலனை செய்வோம்.
பயன்படுத்தாமலே பாழ்படுத்தும் கொடுமை!
பார்வைத் திறனற்ற ஒருவரிடம் நவீன தொழில்நுட்பம் அடங்கிய ஊன்றுகோல் ஒன்றைக் கொடுக்கிறோம். அதனைப் பயன்படுத்த எந்தப் பயிற்சியும் தரவில்லை. சில ஆண்டுகள் கழித்து, அவர் அதனைப் பயன்படுத்தவேயில்லை எனக் குற்றம் சுமத்தி, அதைப் பறித்துக் கொண்டால் எப்படியிருக்கும்? அந்த ஊன்றுகோலை பயன்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்காமல், குறைந்தபட்சம் அதற்கான விளக்கம் கூட தராதுவிட்டது பற்றி யாருக்குத் தெரியும்? ‘அய்யோ பாவம் என்று வாங்கிக் கொடுத்தால் அதைத் தூக்கி கடாசிவிட்டானே’ என்பது போல் இருக்கிறது ‘எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி ரத்து’. எட்டாம் வகுப்பு வரை ஏன் தேர்ச்சி தர வேண்டும் என்ற உன்னதம் தெரியாமல், அதன் ஆழமான பொருள் புரியாமல் கட்டாய தேர்ச்சியை காலி செய்ய கடும் முயற்சி செய்கிறார்கள்.
கட்டாயத் தேர்ச்சியின் கடும் விளைவுகள்!
ஒரு கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. 1954ஆம் ஆண்டே அந்தப் பள்ளி உருவாகிவிட்டாலும் 1987ஆம் ஆண்டு வரை முப்பது ஆண்டுகளில் அப்பள்ளியில் படித்துத் தேறியவர்கள் மூன்றே மூன்று பேர். இந்தியாவெங்கும் உள்ள சுமார் ஆறு இலட்சம் கிராமங்களிலும் சற்றேறக்குறைய இத்தகைய நிலையே இருந்திருக்கும் என்பதற்கு பெரும் ஆய்வுகள் தேவையில்லை.
ஆசிரியர்களின் அடி தாங்காமலும், அவமானம் தாங்காமலும் பள்ளிவிட்டே விரட்டப்பட்டவர்கள், எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருந்தும் ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இவர்கள் எண்ணிக்கையே எங்கும் மிகுந்து காணப்பட்டது. பள்ளிவிட்டு வெளியே வந்த மாணவர்கள், ‘நான் முட்டாள்’ எனத் தனக்குத்தானே நாமகரணம் சூட்டிக்கொண்டனர்.
“ஏன்ப்பா பள்ளிக் கூடம் போகல?” என்று கேட்டால், ‘எனக்கு படிப்பு வரல’ என்று உடனே பதில் வரும். ‘என்ன செய்றது? வாத்தியார் இவனைப் படிக்க வைக்க தலைகீழாக கட்டிவச்சு கூட அடிச்சுப் பாத்தாரு. ஒன்னும் வேலைக்கு ஆவல. அவனுக்கு படிப்பு மண்டைல ஏறுல’ என்பார் அவனது தந்தை. ‘அவன் தலையெழுத்து அவ்வளவு தான்’ என்பது இன்னொரு பெற்றோரின் கூற்றாக இருக்கும். இப்படி பேசிப் பேசியே குழந்தைத் தொழிலாளிகள் இயல்பாக உருவாகி வந்தனர்.
இப்படிப்பட்ட குழந்தைகளின் அன்றைய நிலையை கணநேரம் நினைத்துப் பாருங்கள். பாவபுண்ணியம் என்பது இருந்தால் இவர்களுக்கு செய்த பாவமூட்டையை இதற்குப் பொறுப்பானவர்கள் சுமக்க முடியாது. சொர்க்கம், நரகம் என்று இருந்தால், நரகமே அவர்களுக்கு வாய்க்கும் என்று சொல்லத் தேவையில்லை.
இழிநிலையை மாற்ற வந்த மாமருந்து:
ஒரு புறம் கொத்துக் கொத்தாக மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேற்றம். மறுபுறம், குழந்தை தொழிலாளர் என்னும் வன்கொடுமை. இந்த இழிநிலை மாற, “எந்தக் குழந்தையும் எப்போதும் தோல்வி அடைவதில்லை. எல்லாக் குழந்தைகளும் கற்கும் திறன் மிக்கவையே. விதிவிலக்குகள் தனி. மாணவர்களின் தோல்வி என்பது பள்ளிக் கல்வி முறையின் தோல்வியே” என்று கல்வியாளர்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்பினர்.
இதற்கு ஆதரவான அமைப்புகளும் ஆதரவுக் கரம் நீட்டின. இதன் விளைவே குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி என்ற அரசின் அறிவிக்கை வெளிவந்தது. அது கல்வி உரிமை சட்டத்திலும் முக்கிய அம்சமாக இடம் பெற்றது. மாணவனை ஃபெயிலாக்கக் கூடாது என்றால், கற்றுத் தரக்கூடாது என்ற பொருள் கொண்டு விட்டோம். ‘பாஸ், ஃபெயில் தான் கற்றல் அடைவுகளை அளக்கும் கருவி. அது இல்லையெனில் கற்றல் அடைவுகளை எப்படி அளப்பது?’ என நாம் அமைதியாகிப் போனோம். ஃபெயிலாக்கினால் படிப்பார்கள் என்பதற்கு எந்த நிரூபணமும் இல்லாமலே ஃபெயில் செய்தோம். மாணவனின் கற்றல் அடைவுகளை அளப்பது பாஸ், ஃ பெயில் இல்லை என்று சிந்திக்கத் தவறினோம்.
மரண தண்டனை நம் நாட்டில் அமுலில் உள்ளதால் குற்றங்கள் குறைந்துவிட்டதா? இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று இருப்பதால் இலஞ்சம் நாட்டில் குறைந்துவிட்டதா? அச்சத்தால் கற்றல் கைக் கூடும் என்பது மிகப் பெரிய மூட நம்பிக்கை. அதிலிருந்து நம்மால் விடுபட முடியவில்லை. கற்றல் என்பது குழந்தையின் இயல்பான குணம். எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி என்ற அரசின் கொள்கையால் பள்ளி சேர்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. சின்னஞ் சிறுவர்கள் படிக்க லாயக்கு அற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு குழந்தைத் தொழிலாளியாய் அலையும் அவலம் வெகுவாக குறைந்துள்ளது.
கட்டாயத் தேர்ச்சிக்கு முன் குழந்தைகள் படிப்பறிவு இன்றி, பள்ளிக்கு வெளியே அலைந்தனர். குழந்தை தொழில் என்னும் வதை முகாம்களில் சீரழிந்தனர். தற்போது போதுமான கற்றல் அடைவுகள் இன்றி, பள்ளிக்கு உள்ளே உள்ளனர். முந்தைய நிலைக்கு இழி நிலைக்கு தற்போதைய நிலை மோசமில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
பள்ளிக்குள் வந்துவிட்ட ஒரு குழந்தைக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்ற கற்றல் அடைவுகளை வழங்க வேண்டியது யார் பொறுப்பு? எல்லாக் குழந்தைகளும் சம திறன் உடையவை. சாதி, சமய, மத, இன, மொழி பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் சம வாய்ப்பை இழந்தன குழந்தைகள். இதனை சரி செய்தால் எல்லாக் குழந்தைகளும் அந்தந்த வகுப்புக்கு உரிய கற்றல் அடைவுகளுடன் தேர்ச்சி பெறும். ‘ஃபெயில்’ என்ற அச்சுறுத்தல் கருவி அவசியம் இல்லை. இதைச் செய்ய அரசு தனது பொதுச் செலவில், கலைத் திட்டத்தில், பாடத் திட்டத்தில், பயிற்று முறைகளில் மொழியைக் கையாள்வதில், மக்களின் பண்பாட்டுக் கூறுகளை உற்று நோக்குவதில், பள்ளியின் உள் கட்டமைப்பு, கற்றல் உதவிப் பொருட்களில், மதிப்பீட்டு உத்திகள் என மாறுதல்களை கொண்டுவர வேண்டும்.
இவ்வளவு காலத்தில் கொண்டு வந்து இருக்கலாம். இதில் தவறியது நாம்தான். குழந்தைகள் அல்ல. இத்தகைய மாறுதல்களுக்கு இசைவான சூழலுக்கு ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கங்களும் உதவியிருக்க வேண்டும். ஒரு குழந்தை ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்புக்கு எதுவும் கற்றுக் கொள்ளாமல் இடம் பெயர்வதை ஆசிரியர் தனது தோல்வியாக கருதவேண்டும். வெறும் பாஸ் கொள்கையினால் கற்றல் நடைபெறாது.
தரம் ஏன் சாத்தியம் ஆகவில்லை?
தற்போது நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டமும் கூட, கல்வித் தரம் பற்றி பேசினாலும் ஆசிரியர் மாணவர் விகிதம் என்று வரும் போது, 1:30 என்ற பொத்தாம் பொதுவான குருட்டு சூத்திரத்தை முன் மொழிகிறது. இதுவும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளி முறைக்கு வழிவகுப்பவை. ஒரு வகுப்பு ஒரு வகுப்பறை, ஒரு வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையின்றி கற்றல் திறன் எப்படி மேம்படும்? அரசு தனது பொறுப்பையும் ஆசிரியர்கள் தங்கள் கடமையையும் சரிவர நிறைவேற்றாமல் கட்டாயத் தேர்ச்சியே கற்றல் குறைவுக்கு காரணம் என்பது அறிவுடமை அன்று.
எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியில் எழுத்தறிவு எண்ணறிவு விகிதம் குறைந்துவிட்டதால் மேற்படி கொள்கையை மறுபரிசீலனை செய்யலாம் என்ற பரிந்துரையை செய்தது ஆஸ்கர் பெர்ணாண்டஸ் தலைமையிலான குழு. இதனை ஆமோதித்து களத்தில் இறங்கியுள்ளது புதிய தேசிய கல்விக் கொள்கை. மத்தியில் ஆண்ட ஆள்கிற இரு அரசுகளுக்கும், ‘எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி’ என்பதன் நோக்கம் புரியவில்லை. மேற்படி கொள்கை நடைமுறையில் இருப்பதாலேயே கற்றல் நிகழ்த்தாமல் விட்டுவிட்டு, ஏழை எளிய குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளை பறிப்பது, கல்வியை தனியார்மயமாக்கவும், வணிகமயமாக்கவும், அரசுப் பள்ளி முறைமை தகர்ந்து போகவும் காரணமாக அமையும்.
வாழ்வில் வெற்றி பெற்றவர்களை தோல்வியுறச் செய்தமை:
என்னுடன் பயின்று, ஆறாம் வகுப்பில் மூன்று முறை தோல்வியடைந்து பள்ளியைவிட்டு துரத்தப்பட்ட ராமசாமி இன்று பெரும் தொழிலதிபர். இவர் போன்றவர்கள் நம் கல்வி முறையைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கிறார்கள். எனது இணையரின் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை சரியாகப் படிக்காத, படித்த எத்தனையோ மாணவர்கள் 9ஆம் வகுப்பில் நன்கு படித்து 10ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றுள்ளனர். உயர் படிப்புகளுக்கு சென்றுள்ளனர்.
ஏழாம் வகுப்பில் பள்ளியில் படிக்க லாயக்கில்லை என்று துரத்தப்பட்ட தூத்துக்குடி சிரீதர் கணேசன் இன்று நாவலாசிரியர். இவர்களைப் போன்றவர்கள் இந்தியாவெங்கும் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். கட்டாயத் தேர்ச்சி கொள்கையை கேலி பேசுபவர்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
கட்டுரையாளர் குறிப்பு:
நா. மணி, பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு
“மணிப்பூர் மக்களுக்காக இந்தியா துணை நிற்கும்” – பிரதமர் மோடி
77 வது சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து!