ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் மொத்தமுள்ள 77 இடங்களுக்கு இந்தியா, வெளிநாடு என மொத்தம் 333 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ipl2024 Chennai super kings target these players
ஐபிஎல் தொடர் வருகின்ற 2024-ம் ஆண்டில் 17-வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. பல்வேறு விமர்சனங்கள் ஐபிஎல் தொடர் மீது இருக்கலாம்.
ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலியில் தொடங்கி தற்போது அணியில் இருக்கும் பல்வேறு இந்திய வீரர்களை அடையாளம் காட்டி, வளர்த்தெடுத்த பெருமை ஐபிஎல்க்கே சேரும்.
இதனால் தான் வருடாவருடம் ஐபிஎல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும், போட்டிக்கான களங்களும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.
இந்த நிலையில் துபாயில் வருகின்ற 19-ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதில் உலகம் முழுவதுமிருந்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் மினி ஏலத்துக்கு தேர்வான வீரர்கள் குறித்த விவரங்களை தற்போது பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
333 வீரர்கள்
ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக மொத்தம் 1166 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 833 பேர் அதிரடியாக கழட்டி விடப்பட்டு, 333 வீரர்கள் ஏல பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர்.
அதில் 214 பேர் இந்தியர்கள். 119 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள். 116 வீரர்கள் தங்களது நாடுகளுக்காக விளையாடி வருகின்றனர்.
IPL 2024 Player Auction List Announced ✅
Here are the Numbers You Need To Know 🔽#IPLAuction | #IPL pic.twitter.com/WmLJMl3Ybs
— IndianPremierLeague (@IPL) December 11, 2023
119 பேர் இதுவரை தேசிய அணிகளில் இடம் பெறாதவர்கள். 2 வீரர்கள் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த ஏலத்திற்கு மொத்தமாக ரூ.262.95 கோடி வரையில் செலவு செய்யப்பட இருக்கிறது.
ஐபிஎல் ஏலமானது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்க இருக்கிறது.
10 ஐபிஎல் அணிகளுக்கும் சேர்த்து மொத்தமே 77 வீரர்கள் தான் தேவைப்படுகின்றனர். அதிலும் 30 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானவை.
மீதமுள்ள 47 இடங்கள் தான் இந்திய வீரர்களுக்கானவை. இதனால் இந்த முறை அணிகள் பூதக்கண்ணாடி வைத்து தான் வீரர்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.
சென்னை அணி
அதன்படி பார்த்தால் தற்போது நம்முடைய சென்னை அணியில் 6 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 3 வெளிநாட்டு வீரர்களுக்கானவை.
மீதமுள்ள 3 இடங்கள் தான் இந்திய வீரர்களுக்கானது. கைவசம் தற்போது ரூபாய் 31.4 கோடிகளை சென்னை அணி வைத்துள்ளது.
இதனால் தாராளமாக 3 பெரிய வீரர்கள், 3 நடுத்தர வீரர்கள் என 6 நல்ல வீரர்களை சென்னை அணியால் எடுக்க முடியும்.
ஆல் ரவுண்டர்கள்
ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்கா வீரர் ஜெரால்டு காட்ஸி, இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ரூபாய் 2 கோடிகளுக்கு தங்களை பதிவு செய்துள்ளனர்.
இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ரூபாய் 1.50 கோடிக்கும், நியுசிலாந்து வீரர் டேரில் மிட்செல் ரூபாய் 1 கோடிக்கும் தங்களை பதிவு செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியா நமக்கு எப்போதுமே ராசி என்பதால் கண்ணை மூடிக்கொண்டு சென்னை, கம்மின்சை எடுக்கலாம். ஒருவேளை கம்மின்சை தவற விட்டால் கூட டேரில் மிட்செல் நமக்கு நல்ல சாய்ஸ் ஆக இருப்பார்.
இந்தியாவை பொறுத்தவரை அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர் இருவரும் தங்களை ரூபாய் 2 கோடிக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் ஒருவரையோ அல்லது இருவரையுமே கூட அணி எடுக்கலாம் . ஷர்துல் முன்னாள் வீரர் என்றாலும் அக்ஷர் படேல் சென்னைக்கு நல்ல தேர்வாக இருப்பார்.
ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்சாய் , நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா இருவரும் தங்களை குறைவாக ரூபாய் 50 லட்சத்துக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் ஒருவரை எடுத்தால் நமக்கு நல்லதொரு ஆல்ரவுண்டர் கிடைப்பார். ஆனால் சென்னையின் சாய்ஸ் ரச்சின் தான்.
தொகை குறைவு என்பதோடு வளர்ந்து வரும் வீரர் என்பதால் நீண்ட கால அடிப்படையில் இவரை சென்னை தேர்வு செய்யக்கூடும்.
விக்கெட் கீப்பர்
தோனிக்கு பிறகு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் நமக்கு வேண்டும் என்பதால் கண்டிப்பாக இந்த பிரிவில் நமக்கு ஒருவர் அவசியம் தேவை.
ரூபாய் 50 லட்சம் வரிசையில் கே.எஸ். பரத், இலங்கையின் குஷால் மெண்டிஸ், தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஜோஸ் இங்லிஸ் ரூபாய் 2 கோடிக்கும், இங்கிலாந்தின் பிலிப் சால்ட் ரூபாய் 1.50 கோடிக்கும் என கொஞ்சம் காஸ்ட்லி வரிசையில் தங்களை பதிவு செய்துள்ளனர்.
மேலே சொன்ன 5 பேரில் இந்தியாவின் ஆடுகளங்களை நன்கு அறிந்தவர் என்பதால் கே.எஸ்.பரத் தான் சென்னை அணியின் சாய்ஸ் ஆக இருக்கக்கூடும்.
பவுலர்கள்
2 கோடி ரூபாய் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் முஜீப் ரஹ்மான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் & ஜோஷ் ஹேசல்வுட், நியூசிலாந்தின் லோகி பெர்குஷன் ஆகியோர் பதிவு செய்துள்ளனர் .
இவர்களில் ஒருவரை சென்னை அணி தேர்வு செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக ஜோஷ் முன்னாள் வீரர் என்பதால் மீண்டும் தாய் கழகத்திற்கே அவர் திரும்பக்கூடும்.
பேட்ஸ்மேன்கள்
ராயுடுவின் இடத்தை நிரப்பவும், நிலைத்து நின்று ஆடவும் ஒரு நல்ல பேட்ஸ்மேன் சென்னை அணிக்கு தேவைப்படுகிறார். அந்த இடத்துக்கு ஆஸ்திரேலியாவின் ட்ராவிஸ் ஹெட் பொருத்தம்.
உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றியை பறித்தவர் என்பதால், ரூபாய் 2 கோடிக்கு பதிவு செய்திருக்கும் அவரை எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும்.
என்றாலும் என்ன விலை கொடுத்தாவது சென்னை அணி அவரை எடுக்க வேண்டும். இவருக்காக செலவு செய்ய சென்னை அணியுமே யோசிக்காது.
அதேபோல இந்தியாவின் கருண் நாயர், மனிஷ் பாண்டே இருவரும் 50 லட்சத்துக்கு தங்களை பதிவு செய்துள்ளனர். இருவரில் ஒருவரை சென்னை எடுக்கலாம்.
6 இடங்கள்
மொத்தமுள்ள 6 இடங்களில் 3 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானவை. மீதமுள்ள 3 இடங்கள் தான் இந்திய வீரர்களுக்கானது.
ஒரு விக்கெட் கீப்பர், 2 பேட்ஸ்மேன்கள், 1 ஆல் ரவுண்டர், 2 பவுலர்கள் என்பது தான் சென்னையின் பிளானாக இருக்கும்.
அதன்படி கீழே உள்ள பிளேயர்கள் ஏலத்தில் சென்னையின் முதல் சாய்ஸ் ஆக இருக்கக்கூடும்.
விக்கெட் கீப்பர் – கே.எஸ்.பரத்
ஆல்ரவுண்டர்கள் – ரச்சின் ரவீந்திரா (அ) டேரில் மிட்செல், அக்ஷர் படேல்.
பவுலர்கள் – ஜோஷ் ஹேசல்வுட் (அ) மிட்செல் ஸ்டார்க்
பேட்ஸ்மேன்கள் – டிராவிஸ் ஹெட், மனிஷ் பாண்டே
சென்னை அணி
மேலே சொன்ன வீரர்களை சென்னை அணி வருகின்ற மினி ஏலத்தில் டார்கெட் செய்ய இருப்பதாக, நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
என்றாலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான் சென்னை அணியின் ஸ்டைல் என்பதால் ஏலம் வரை நாம் காத்திருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
IPL2024: தோனியின் இடத்தை நிரப்ப… 3 வீரர்களை டார்கெட் செய்யும் சென்னை அணி?
IPL2024: கம்மின்ஸ், ஷர்துலை விட இவரு பெட்டர்… ஆனா சென்னை இதை செய்வாங்களா?
ipl2024 Chennai super kings target these players