மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் முக்கியமானதொரு தொடராகும். ரிக்கி பாண்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அடுத்த ஆண்டில் நடைபெறும் தொடர்.
அதுவரை நடைபெற்ற 5 ஐபிஎல் தொடரில், ஒரு முறை கூட வெற்றி பெறாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் கோப்பையை எதிர்நோக்கி களமிறங்கியது.
அந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை அணி, அடுத்த 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, கோப்பையை நோக்கி முன் நகர்ந்தது.
ஆனால், அடுத்து நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு பெரிய தோல்வியை சந்தித்தது.
பின் தனது 6-து போட்டியிலும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் பெரும் தோல்வி. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 161 ரன்கள் சேர்த்தது.
4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், வழக்கமாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரிக்கி பாண்டிங்,
அப்போட்டியில் கடைசி வரை களமிறங்கவில்லை. அந்த போட்டிக்கு பிறகு, ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார், ரிக்கி பாண்டிங்.
ரோகித் சர்மா
அணியில் இருந்த மூத்த வீரரான சச்சின் டெண்டுல்கர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய சூழலில் தான், ரோகித் சர்மா வசம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
கொல்கத்தாவுக்கு எதிராக கேப்டனாக தனது முதல் போட்டியையே வெற்றியுடன் துவங்கினார் ரோகித் சர்மா.
அதன்பின், அந்த தொடரில் மும்பை அணி விளையாடிய 10 லீக் சுற்று ஆட்டங்களில், 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் முடித்தது.
Amigo Garage: அமீகோ கேரேஜ் – திரை விமர்சனம்!
முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக தோல்வியடைந்தாலும், 2-வது குவாலிஃபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, மும்பை இந்தியன்ஸ் அணி.
அதுவரை நடைபெற்ற 5 சீசன்களில் 2 முறை சாம்பியன், 2 முறை ரன்னர்-அப், 1 முறை செமி-ஃபைனலிஸ்ட் என தோனி தலைமையிலான மிக வலிமையான மஞ்சள் படையை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டார் ரோகித்.
கேப்டனாக பதவியேற்றுக்கொண்ட முதல் சீசனிலேயே அந்த அணியை வீழ்த்தி, மும்பை அணிக்கான முதல் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.
சாம்பியன்
அந்த சீசன் துவங்கி அடுத்து நடைபெற்ற 8 சீசன்களில், 5 முறை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றிகரமான அணி என்ற நிலைக்கு, மும்பை அணியை 8 ஆண்டுகளில் அழைத்து சென்றார், ரோகித் சர்மா.
ஆனால், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடம் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், இதுவரை இல்லாத அளவு மோசமான நிலைக்கு மும்பை அணி சென்றது. புள்ளிப்பட்டியலில் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கடைசி இடத்தினை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது.
2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், குவாலிஃபையர் வரை மும்பை அணியால் முன்னேற முடிந்தாலும், அந்த ஆண்டும் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஐபிஎல் அணியின் துவக்கத்தில் இருந்தே, முடிவுகளின்மீது கவனம் கொண்ட அணியாகவே மும்பை இந்தியன்ஸ் அணி பார்க்கப்படுகிறது.
கேப்டன் மாற்றம்
2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன், அதுவரை நடைபெற்ற 6 ஐபிஎல் தொடர்களில், ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் 4-வது முழு நேர கேப்டன். இதுவே அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
மும்பை குறிப்பிட்டதுபோல, ரோகித் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட, முதல் 8 ஆண்டுகளில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்தார்.
மின்னம்பலம் டாப் எம்பிக்கள் விருது விழா!
அதோடு 2022 முதல் இந்திய அணியின் கேப்டனாக அவர் ஜொலித்தாலும், 2021-க்கு பின் 3 ஆண்டுகளில், ஒரு முறை கூட மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு கூட அவரால் அழைத்து செல்ல முடியவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இந்த காரணத்தினாலும், அந்த அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுமே, ரோகித் சர்மா வசம் இருந்த கேப்டன் பொறுப்பை, 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா
2015ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான ஹர்திக் பாண்டியா, அடுத்த 7 தொடர்களில் அந்த அணியுடனே தொடர்ந்தார்.
2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஆக்சனுக்கு முன்பு, ஹர்திக் பாண்டியா புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் உடன் இணைந்தார்.
அந்த சீசனிலேயே, குஜராத் அணியை கோப்பையை கைகளில் ஏந்தவும் செய்தார். பின், 2023ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில், குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார், ஹர்திக் பாண்டியா.
பின், 2024ஆம் ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக, டிரேடிங் முறையில் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி மீண்டும் வாங்கியது.
மும்பை அணியில் ஜஸ்ப்ரிட் பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்ற அனுபவம் நிறைந்த வீரர்கள் இருந்தபோதும், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பை வழங்க, குஜராத் அணியுடன் அவரின் 2 வெற்றிகரமான சீசன்களே காரணமாக பார்க்கப்படுகிறது.
11 ஆண்டுகளில், 163 முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய ரோகித் சர்மா, 91 முறை வெற்றியை பெற்றுத்தந்துள்ளார்.
அனைவரும் அறிந்ததுபோல, அதில் 5 ஐ.பி.எல் கோப்பைகளும், 1 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையும் அடங்கும்.
–மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்!
’பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ நாளை நிறைவு : ஸ்டாலின் பங்கேற்பு!
மாமியார்-மருமகள் சண்டைக்கு முடிவே இல்லையா?