ஜனவரி 7, 8 தேதிகளில் சென்னையில் நடக்கும் மூன்றாவது உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததும் நடத்தும் முதல் மாநாடு என்பதால் தமிழ்நாடு அரசு எவ்வளவு முதலீட்டை ஈர்க்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. Investor conference: CM Stalin to fascinate the world
அடுத்தடுத்து உலக முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு தன்னை எப்படி தகவமைத்துக் கொண்டது என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
உலகமயமாக்கலும் தமிழ்நாடும்!
90களில் உலகமயமாக்கல் உலகம் முழுவதும் முழுவீச்சில் தொடங்கியபோது அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் இந்தியாவுக்கான கதவை திறந்துவிட்டார்.
அதன்பிறகு அந்நிய முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வாக இருந்தது தமிழ்நாடு தான். 1960களில் இந்தியாவில் மிகவும் வறுமையான மாநிலமாக இருந்தது தமிழ்நாடு. ஒருபடி அரிசியை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து தேர்தலை சந்திக்கும் அளவில் வறுமை தலைவிரித்தாடியது.
ஆனால் திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தொடங்கி அடுத்த 50 ஆண்டுகளில் மனிதவளக் குறியீட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பின்னுக்குத் தள்ளியிருந்தது. தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலங்களாகத் திகழ்ந்த மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைக் காட்டிலும், வறுமை குறைந்து, படிப்பறிவு அதிகம் கொண்டவர்களைக் கொண்ட மாநிலமாகியிருந்தது தமிழ்நாடு.
கலைஞர் உருவாக்கிய ஐ.டி. கொள்கை!
குறிப்பாக தொழிற்கொள்கைகளை வகுப்பதில் மற்ற இந்திய மாநிலங்களுக்கு வழிகாட்டியாக மாறியிருந்தது தமிழ்நாடு. உலகம் முழுவதும் கணினி மயமாக்கல் தொடங்கிய காலத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 1996 இல் ஐடி கொள்கையை உருவாக்கியதோடு, அதற்கான பாடத்திட்டங்களையும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது.
இந்த கொள்கை உருவாக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் 0.2% ஆக இருந்த ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை, ஆட்சி முடியும் தருவாயில் அதாவது 2001-02 -இரண்டு ஆண்டுகளில் இந்த அளவு 13% ஆக உயர்ந்திருந்தது. ஐடி நிறுவனங்கள் மட்டுமல்லாது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டதால் தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் தடம்பதிக்கத்தொடங்கின.
இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது குஜராத் மற்றும் மஹாராஸ்டிரா மாநிலங்களைப் போல ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் முதலீடுகளை குவிக்காமல், தொழில் முதலீடுகளை மாநிலம் முழுவதும் பரவலாக்கியது தான். இந்தியாவின் மாநிலங்களை எடுத்துப்பார்த்தால் அதிகம் நகரமயமாக்கப்பட்ட பெரு மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும். இதை சாத்தியப்படுத்தியது திராவிடக்கட்சிகள் தான்.
ஜெயலலிதா நடத்திய முதலீட்டாளர் மாநாடு?
குறிப்பாக திமுக அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே பெருநிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்துவருவது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கே அழைத்துவந்து முதலீடு செய்ய வைத்தது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான். 2015 ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னை வர்த்தக மையத்தில் நடத்தினார் ஜெயலலிதா. முதலீட்டாளர் மாநாடு வழக்கம் போல ஜெயலலிதா புகழ்பாடும் மாநாடாகவே தான் நடந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் சுமார் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 242160 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளதாகவும், 10073 சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் 16 ,532 கோடி ரூபாய் முதலீட்டையும் ஈர்த்ததாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், அந்த முதலீட்டாளர்கள் மாநாடு கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. வராத முதலீட்டை வந்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று குற்றம்சாட்டப்பட்டது.
போட்டுடைத்த ராமதாஸ்
இதைச் சொன்னது யாருமில்லை பாமக நிறுவனர் ராமதாஸ் தான். 2016 ல் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த அவர்,
“உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இதுவரை 64 நிறுவனங்கள் ரூ.87,062 கோடி முதலீட்டில் தொழில் துவங்குவதற்கான பணிகளை துவங்கி விட்டன. அவை, இதுவரை ரூ. 25,020 கோடியே 48 லட்சம் முதலீடு செய்துள்ளன’’ என்று ஜெயலலிதா கூறுகிறார். தமிழக மக்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்ற எண்ணத்தில், தமிழ்நாட்டுக்கு வராத முதலீடுகளை வந்து விட்டதாகக் கூறி வந்ததாகக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு ஜெயலலிதா முயல்கிறார்.
தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்த தொகை ரூ.19,811 கோடி மட்டுமே. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 2,24,160 கோடி முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் முன்வந்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறுவதில் உண்மை இல்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது.
அதுமட்டுமின்றி 2016 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்த தொகை ரூ.3539 கோடி மட்டுமே. இவை தமிழகத்தில் செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீடு மட்டுமே. கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ.501 கோடி மட்டும் தான். நடப்பு ஆண்டில் தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீட்டின் அளவு சரியாக தெரியவில்லை. ஒருவேளை உறுதியளிக்கப்பட்ட முதலீடு முழுமையாக வந்ததாக வைத்துக் கொண்டால் கூட அது அதிகபட்சம் ரூ.3500 கோடியாக மட்டுமே இருக்கும். கடந்த ஆண்டின் முதலீட்டையும் சேர்த்தால் ரூ.4000 கோடி வரை வந்திருக்கலாம்.
அவ்வாறு இருக்கும் போது 64 நிறுவனங்கள் ரூ.87,062 கோடி முதலீட்டில் தொழில் துவங்குவதற்கான பணிகளை துவங்கி விட்டன. அவை, இதுவரை ரூ. 25,020 கோடியே 48 லட்சம் முதலீடு செய்துள்ளன என்று ஜெயலலிதா கூறுவது பொய் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். முதலீட்டாளர் மாநாட்டின் முடிவில், தமிழகத்தில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய முன்வந்த நிறுவனங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அவற்றில் பெரும்பாலானவை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட திட்டங்கள்” என்று போட்டு உடைத்திருந்தார் ராமதாஸ்.
தகவல் அறியும் சட்டம் சொன்ன திடுக் தகவல்!
ஓராண்டில் வைக்கப்பட்ட இந்த விமர்சனத்தை ஏற்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் பெறப்பட்ட தகவல்படி 2015 முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டதாகவும் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான வேலைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதோடு ஈர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட 2,24,160 கோடி ரூபாயில் உண்மையாக முதலீடானது 75000 கோடி மட்டுமே என்ற தகவலும் வெளியானது. அதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் எரிசக்தி துறையில் கையொப்பமான 15 திட்டங்களில் 75256 கோடி மதிப்பிலான 11 திட்டங்கள் கைவிடப்பட்டது என்பது தான். MSME துறையிலும் ஈர்க்கப்பட்டது 7,273.57 கோடி ரூபாய்தான். சுமார் 4 ,70 ,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் வேலைவாய்ப்பு உருவானது என்னவோ 1,86,000 பேருக்கு தான்.
சொன்னது 3 லட்சம் கோடி… சேர்ந்தது ஒரு லட்சம் கோடி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கல்வி, சுற்றுலா மற்றும் வீட்டு வசதி ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 10 .50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கீழேயே வரும் சிஎம்டிஏ, DTCP ஆகியவை செய்த முதலீடுகளும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிடைத்த முதலீடாக காட்டப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு வெளியான தகவல்படி வந்து சேர்ந்தது என்னவோ சுமார் 1 லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய்தானாம். ஒப்பீட்டளவில் ஜெயலலிதா நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டை விட எடப்பாடி பழனிசாமி நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கோ, அல்லது பணிகளை செய்யவோ ஆரம்பித்திருந்தன. கைவிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் குறைவு தான்.
ஸ்டார் அந்தஸ்து பெறும் ஸ்டாலின் அரசின் முதலீட்டாளர் மாநாடு
இப்படியான சூழலில் தான் ஜனவரி 7 ,8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் மூன்றாவது முதலீட்டாளர் மாநாட்டிற்கும், தங்கள் ஆட்சியின் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் விறுவிறுப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
கடந்த இரண்டு முறை நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டைக்காட்டிலும் இந்த முறை அதிக முதலீடுகள் பெறப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகியிருப்பதாகவே கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
2015 அப்போதைய தமிழ்நாடு அரசு சரியாக கையாளாதது, ஆட்சியில் நிலைத்தன்மையின்மை, தகுதி குறைவான மனிதவளம், அமைச்சர்களுடன் ஏற்பட்ட கமிஷன் பிரச்சனை உள்ளிட்டவை போன்ற காரணிகள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை யோசிக்க வைத்துவிட்டது.
ஆனால் இம்முறை சூழல் மாறியிருக்கிறது. உறுதியான அரசியல் நிலைத்தன்மை, புதிய பொருளாதார மண்டலங்கள் உருவாக்கியுள்ளது, தொழிற்துறைகளுக்கென புதிய கொள்கைகளை அப்டேட் செய்தது, செயற்கை நுண்ணறிவு துறைக்கு என்று புதிய கொள்கை வகுத்தது, உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியது என்று ஏற்பாடுகளை செய்திருக்கிறது திமுக அரசு.
மனிதவளத்தை உருவாக்கும், ‘நான் முதல்வன்’!
முதலீடுகளை ஈர்ப்பது மட்டும் முக்கியமில்லை அதற்கு தகுதியான மனித வளத்தையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டியதும் அரசின் கடமை தான். இதை உணர்ந்து தான், ’நான் முதல்வன்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த திட்டத்தின் கீழ் பொறியியல், கலை அறிவியில், பாலிடெக்னிக், கலை கல்லூரி மாணவர்கள் என்று அவர்கள் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான பயிற்சிகளையும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களைக் கொண்டு வழங்கியிருக்கிறது.
இந்த திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, ப்ளாக் செயின் தொழில் நுட்பங்கள் முதல் மேலாண்மை வரை பயின்ற சுமார் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
உறுதியான உட்கட்டமைப்புகள்!
உள் கட்டமைப்புகளை மேம்படுத்தியது என்று ஏற்பாடுகளை செய்திருக்கிறது. குறிப்பாக சென்னை பெருவெள்ளத்தை பெரிய இழப்புகள் ஏதுமின்றி திறமையாக கையாண்டது மட்டுமல்லாமல் மழை நின்ற இரண்டாம் நாளே சென்னையின் பெரும்பாலான பகுதிகளை இயல்புநிலைக்கு திரும்பும் அளவுக்கு கட்டமைப்புகளை மேம்படுத்தியது.
நிதி ஆயோக் தமிழ்நாட்டுக்கு தந்த முதலிடம்!
தொழில் நடத்துவதற்கான சூழலை உருவாக்கியதோடல்லாமல் தானும் தயாராகியிருக்கிறது தமிழ்நாடு அரசு. நிதி ஆயோக் வெளியிட்ட தகவலின் படி 2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் ஏற்றுமதியிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
அதேபோல இந்தியாவின் 6 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான முதன்மை நகரமாக சென்னையை உருவாகியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தொழிற்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் தற்போதைய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரின் முன்னெடுப்புகள் காரணமாக ஏற்கனவே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் முதலீடுகளை குவிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், ஆட்டோ மொபைல், மின்னணு, தகவல் தொழில்நுட்பம், மின்சார வாகனம், விமானத்துறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மருந்து தயாரிப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஜவுளி, ரசாயனம், உணவு பதப்படுத்துதல், கனரக வாகன உற்பத்தி , லெதர் ஆகிய துறைகளில் முதலீடுகளை எதிர்பார்க்கிறது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே முதலீடுகள் வந்து முந்தையகாலங்களைப் போல ஒப்பந்தங்களோடு நின்றுவிடாமல் தொழிற்சாலைகள் செயல்பட ஆரம்பிக்கும் போது தான் தமிழ்நாட்டிற்கு உண்மையான அச்சே தின், அம்ரித் கால் எல்லாம். திமுகவினரும் ஆப் கி பார், மு.க.ஸ்டாலின் சர்க்கார் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்.
–கிருஷ்ணகுமார்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விலை உயரும் பொங்கல் பானைகள்: காரணம் என்ன?
ரஜினியின் ‘வேட்டையன்’ வீடியோ லீக்: அதிர்ச்சியில் படக்குழு!
Investor conference: CM Stalin to fascinate the world