தொடர்ந்து நழுவிய சதம்… தொட்டுப் பிடித்த கோலி -பிறந்தநாளில் சச்சின் சாதனை சமன்!

சிறப்புக் கட்டுரை விளையாட்டு

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், சேஸிங் ஹீரோ, கிரிக்கெட் ராஜா, எதிரணிகளின் சிம்ம சொப்பனம் என புகழப்படும் விராட் கோலி இன்று (நவம்பர் 5) தன்னுடைய 35-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். ரசிகர்களுக்கு சிறந்த ஒரு பரிசாக இன்று தன்னுடைய பிறந்தநாளில் மேலும் ஒரு சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதத்தை சமன் செய்வாரா என்ற  கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறார்.

இதற்கு முன் இல்லாத அளவுக்கு பேட்டிங், பீல்டிங், பவுலிங் என மூன்றிலும் இந்திய அணி மிகுந்த வலிமையுடன் திகழ்கிறது. இதற்கு ஏற்றவாறு இதுவரை மோதிய 7 ஆட்டங்களிலும் தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

இந்தியா போலவே தென் ஆப்பிரிக்கா அணியும் மிகுந்த வலிமையுடன் இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. நெதர்லாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்த அந்த அணி அதற்குப்பின் சுதாரித்து கொண்டது. குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்துள்ளனர். இந்த நிலையில் ‘பேய்க்கும் பேய்க்கும் சண்டை’ என்பது போல இன்று மதியம் 2 மணிக்கு தென் ஆப்பிரிக்கா-இந்தியா அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேரடியாக மோதுகின்றன. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை அந்த அணியின் குவிண்டன் டி காக் 4 சதங்களுடன் 545 ரன்களையும், 2 சதங்களுடன் 353 ரன்களை சேர்த்த ராஸி வான் டெர் டஸ்ஸன், 1 சதம் 3 அரை சதங்களுடன் 362 ரன்களை குவித்துள்ள எய்டன் மார்க்ரம் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர்.

அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 61 பந்துகளில் சதமடித்த ஹெய்ன்ரிக் கிளாசனும் இன்றைய போட்டியில் மீண்டும் அதுபோன்ற சாதனையை நிகழ்த்தக்கூடும். இதில் கிளாசன், மார்க்ரம் இருவரும் சுழற்பந்துக்கு எதிராக தாக்குதல் தொடுக்க கூடியவர்கள் என்பதால் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இருவரும் அழுத்தத்தை எதிர்கொள்ள கூடும்.

இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதேபோல கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஷுப்மன் கில் ஆகியோருக்கும் இந்த மைதானம் பேவரைட்டாகவே இருந்து வருகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை மொஹம்மது ஷமி, குல்தீப் யாதவ்,மொஹம்மது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரும் தெறி பார்மிலேயே இருக்கின்றனர். இதனால் இன்றைய ஆட்டம் ஒரு ‘எல் கிளாஸிக்’ ஆட்டமாக இருக்கும்.

என்றாலும் இதற்கு முன்னர் நடந்த போட்டிகளை வைத்து பார்த்தோமானால் தென் ஆப்பிரிக்கா அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இதுவரை இரண்டு அணிகளும் 90 முறை மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 50 போட்டிகளிலும், இந்திய அணி 37 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. அதேபோல உலகக்கோப்பையில் நேருக்கு நேர் 5 முறை மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டியிலும், இந்திய அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஈடன் கார்டனை பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றி விகிதம் 50% என்றளவிலும், இந்திய அணியின் வெற்றி விகிதம் 59% என்றளவிலும் இருக்கிறது. ஆடுகளத்தை பொறுத்தவரை இங்கு முதலில் பேட் செய்த அணிகளே அதிக வெற்றிகளை(19) பெற்றுள்ளன. இரண்டாவது சேஸிங் செய்த அணிகளின் வெற்றி விகிதம் குறைவாகவே(13) உள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் மைதானம் உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு குறைவான விக்கெட்டுகளையே எடுத்துள்ளனர்

.

அதே நேரம் இந்திய அணியின் தளபதியான கிங் கோலி கடந்த 3 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 ரன்களிலும், நியூசிலாந்துக்கு எதிராக 95 ரன்களிலும், இலங்கைக்கு எதிராக 88 ரன்களிலும் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். எனவே இன்றைய போட்டியில் அவர் கட்டாயம் சதமடிக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 50 ரன்களை கடந்து விட்டால் கோலி அதை 100 ரன்னாக மாற்றக்கூடியவர் என்பதால் பிறந்த நாளான இன்று சதமடித்து அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு பரிசு அளிக்க வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை கொண்டாட்டம் ஆக்கும் வகையில்,  இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 119 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார் கோலி. இதன் மூலம் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் என்ற உலக சாதனையை  சமன் செய்துள்ளார் கோலி.

35 ஆவது பிறந்தநாளன்று தனக்கும் நாட்டுக்கும்  ‘கெத்’தான பரிசைக் கொடுத்துள்ளார் கோலி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா 

சிவில் நீதிபதி பணிக்கான முதன்மை தேர்வில் குளறுபடியா?: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் ‘மசாலா பிரியாணி’!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *