மீண்டும் ஒரு செமி பைனலில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை (நவம்பர் 15) மோத போகின்றன. முன்னதாக 2019-ம் ஆண்டில் இந்தியா-நியூசிலாந்து மோதிய செமி பைனலில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி பைனலுக்கு முன்னேறியது. IndVsNz Rohit Sharma Kane Williamson
அந்த ஆட்டத்தின் முடிவால் உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்களின் இதயம் சுக்குநூறாக நொறுங்கியது. அந்த தோல்வியில் இருந்து இன்னும் கூட ரசிகர்களால் மீண்டு வர முடியவில்லை. ஒருவேளை தோனி அன்று அவுட் ஆகாமல் இருந்திருந்தால் என, இந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு நடுவிலும் நினைத்து பார்க்கும் கொடூர சம்பவமாக நமக்கு அந்த தோல்வி அமைந்தது.
வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல மீண்டும் ஒரு செமி பைனலில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மீண்டும் ஒருமுறை இந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகளும் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறி உள்ளன.
இதில் நாளை (நவம்பர் 15) நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பரம வைரிகளை போல இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத, நாளை மறுநாள் (நவம்பர் 16) நடைபெறும் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இரண்டு முறை உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி இருப்பதால் அந்த அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் இந்தியா 9 வெற்றிகளுடனும், தென் ஆப்பிரிக்கா அணி 7 வெற்றிகளுடனும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
மறுபுறம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மற்ற அணிகள் சொதப்பியதால் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன. பழைய பன்னீர்செல்வமாக அந்த இரண்டு அணிகளும் இல்லை என்பதால் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
என்றாலும் கூட முக்கியமான போட்டிகளில் சொதப்பி ‘சோக்கர்ஸ்’ என்னும் பட்டத்தையும் தென் ஆப்பிரிக்கா அணி குடும்ப சொத்தாக தங்கள் வசம் வைத்திருப்பதால் அந்த அணியை நம்பி எந்தவொரு விஷயத்தையும் நம்மால் கணிக்க முடியாது.
இந்த நிலையில் நாளை (நவம்பர் 15) இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டியை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு முன்னதாக போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தில் இரண்டு அணிகளின் வெற்றி வாய்ப்பு விகிதம், பலம், பலவீனம், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் என்ன என்பதை இங்கு நாம் விரிவாக அலசலாம்.
வெற்றி தோல்வி
நம்முடைய இந்திய அணியை பொறுத்தவரை இங்கு 21 போட்டிகளில் விளையாடி அதில் 12 போட்டிகளில் வெற்றியையும் 9 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதே நேரம் நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளையும் 1 போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இந்திய அணி சராசரியாக 224 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் சராசரி 265.
அதிகபட்ச ஸ்கோர்
50 ஓவர் போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக இங்கு 357/8 ரன்களை இலங்கைக்கு எதிராக (2023) குவித்து, அதில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றுள்ளது. இதேபோல நியூசிலாந்து அணி கனடாவுக்கு எதிராக 358/6 ரன்களை கடந்த 2011-ம் ஆண்டு குவித்து அதில் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றுள்ளது.
குறைந்தபட்ச ஸ்கோர்
குறைந்தபட்சமாக இந்திய அணி இங்கு 1989-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 165/10 எடுத்தது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 280. நியூசிலாந்து அணி 2011-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக எடுத்த 153/10 என்பதே, இந்த மைதானத்தில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர். ஒட்டுமொத்தமாக சமீபத்திய லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை எடுத்த 55/10 ரன்களே இங்கு குறைந்தபட்ச ஸ்கோர் ஆக இருக்கிறது.
அதிக ரன்கள் மற்றும் விக்கெட் வேட்டை
இந்திய அணியை பொறுத்தவரை இந்த மைதானத்தில் 1 சதம் 3 அரை சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 11 போட்டிகளில் விளையாடி 455 ரன்கள்(சராசரி 41.6) குவித்துள்ளார். அதேபோல வெங்கடேஷ் பிரசாத் 6 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை (சராசரி 14.86) வீழ்த்தி இருக்கிறார்.
அதே நேரம் நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் 3 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் குவித்துள்ளார். பவுலிங்கில் டிம் சவுத்தி 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்தியா Vs நியூசிலாந்து
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேராக இந்த மைதானத்தில் ஒருமுறை மோதின. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு நியூசிலாந்து அணி அதிகபட்சமாக 284/4 ரன்களை இங்கு குவித்துள்ளது.
வெற்றி மாலையை சூடப்போவது யார்?
புள்ளி விவரங்கள் நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும் கூட இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா 9 வெற்றிகளுடன் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதோடு கடைசியாக தரம்சாலாவில் வைத்து நியூசிலாந்து அணியை இந்தியா தோற்கடித்துள்ளது.
எனவே இறுதியாக நாளை (நவம்பர் 15) நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. IndVsNz Rohit Sharma Kane Williamson
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
ஐஸ்வர்யா ராய் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்ச்சை கருத்து!
ஒருபக்கம் ஊழல் குற்றச்சாட்டு; மறுபக்கம் மதவாதம் : சத்தீஷ்கரில் பா.ஜ.க.வின் இரட்டைவியூகம்!