தொடரும் குற்றங்கள்: தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா தமிழக அரசு?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

கள்ளக்குறிச்சி கலவரத்தை தொடர்ந்து தமிழகத்தை அதிர்வடைய செய்த பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மீது எடுத்துள்ள நடவடிக்கை நம்மில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் கோனார் மற்றும் பட்டியல் சாதி என இருதரப்பைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஜாதியை அடிப்படையாக வைத்து கோனார் சமுதாய மக்கள் மேலத் தெருவிலும், பட்டியலின மக்கள் கீழத்தெருவிலும் வசித்து வருகின்றனர்.

2 ஆண்டுகளாக தொடரும் பிரச்னை!

கடந்த 2020ஆம் ஆண்டு பாஞ்சாகுளம் கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள கோனார் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரால் ராணுவத்தில் சேர முடியவில்லை.

எனவே கடந்த 15ம் தேதியன்று இரு தரப்பு மக்களும் கிராமத்தில் ஒன்று கூடிய நிலையில், வழக்கை வாபஸ் பெற்று சமரசம் செய்து கொள்ளலாம் என கோனார் சமூகத்தினர் கேட்டுள்ளனர்.

ஆனால் மற்றொரு சமூகமான பட்டியலின மக்கள் அதற்கு உடன்படவில்லை. இதனையடுத்து கோனார் சமூகத்தை சேர்ந்த ஊர் தலைவர் மகேஷ்வரன் தலைமையில் ஒன்று கூடி பட்டியலின மக்களுக்கு கடைகளில் பொருட்கள் எதுவும் விற்பனை செய்ய வேண்டாம் என தீர்மானித்துள்ளனர்.

பட்டியலின சிறுவர்கள் மீதான தீண்டாமை!

இந்நிலையில் 16ம் தேதி அன்று ஆதி திராவிடர் நல பள்ளியில் படிக்கும் பட்டியலின சிறுவர்கள், கோனார் சமூகத்தை சேர்ந்த ஊர் தலைவர் மகேஷ்வரன் நடத்தி வரும் பெட்டி கடைக்கு தின்பண்டம் வாங்க வந்தனர்.

அவர்களுக்கு, பொருட்கள் தர மறுத்து, அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிறுவர்களிடம் தீண்டாமை காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வந்தனர்.

வீடியோவை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை!

இதனையடுத்து சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவின்பேரில் தாசில்தார் பாபு மற்றும் அதிகாரிகள் 17ம் தேதி மகேஷ்வரனின் கடைக்கு சீல் வைத்தனர்.

மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ கோட்டாட்சியர்‌ கந்தசாமி முன்னிலையில்‌ கடையில்‌ நோட்டீஸ்‌ ஒட்டப்பட்டது.

தொடர்ந்து சாதி பாகுபாடு காட்டிய ஊர் தலைவரும், கடைக்காரருமான மகேஷ்வரன் மற்றும் அவரது நண்பர் ராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த ‘கரிவலம்வந்தநல்லூர்’ காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது சமூக வலைதளங்களில் தீண்டாமை சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 ஏ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக முருகன், குமார், சுதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம் புரிவோரை சில காலத்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவின் கீழ், குற்றவாளிகள்‌ ஊருக்குள்‌ நுழைய தடை விதித்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் நேற்று உத்தரவிட்டார்.

பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா அந்த பொறுப்பிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தாங்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் நடத்துகிறோம் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சாதி கலவரம் , வன்முறை போன்றவை நிகழாமல் இருக்க பாஞ்சாகுளத்தில்‌ பலத்த போலீஸ்‌ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலரின் கடமை என்ன?

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு ஆகி விட்ட நிலையில் இன்னும் சாதி பாகுபாடு சமூகத்தில் இருப்பது வேதனையளிக்கிறது. அத்துடன், இதற்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கையும் நிர்வாக அமைப்பில் நாம் இன்னும் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதை சுட்டி காட்டுகிறது.

கிராமத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்படும் கிராம நிர்வாக அலுவலரின் 24 கடமைகளை தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ஒன்றாக சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி கிராமத்தில் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே, அதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் அதில் விசாரணை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியருக்கு அதுகுறித்து தகவல் அளிக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதேபோல் உளவுத்துறை போலீசாரும் பிரச்சனைகள் குறித்து முன்னரே அறிந்து தகவல் கொடுத்தால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்படும்.

தமிழகத்தில் நடைபெறும் குற்றங்கள்!

பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு எதிராக தீண்டாமை கொடுமை நடக்கும் போது கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பில் இருந்தவர் மல்லிகா.

பட்டியலின சிறுவர்களுக்கு எதிரான மகேஸ்வரன் வீடியோ வெளியிட்ட பிறகே இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்தது. அதேவேளையில், கடந்த 2 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் நிலையில், முன்னமே இது குறித்து கருத்தை கிராம நிர்வாக அலுவலரான மல்லிகா தாசில்தாரிடம் கூறியிருந்தால், அப்போது இந்த விவகாரம் தடுக்கப்பட்டிருக்கலாம்.

இதே போன்று தான் கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் நடந்தது. மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு பள்ளி முன்பாக நடந்த இளைஞர்களின் போராட்டம் கலவரமாக மாறியது.

அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஸ்ரீதர் மற்றும் எஸ்பி செல்வ குமார் ஆகியோர் பணியிட மாற்றம் பெற்றனர். மேலும் கலவரம் தொடர்பாக உளவுத்துறையும் தகவல் அளிக்கவில்லை என்று பெரும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

அதிகாரிகளுக்கு முதல்வரின் அறிவுரை!

கடந்த 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அமைச்சர்களுக்கும், துறை அதிகாரிகளுக்குமான ஒருங்கிணைந்த செயல்பாடு கூட சில துறைகளில், சில நேரங்களில் ஏற்படாமல் இருப்பதாகவும் நான் அறிகிறேன்.

இது எங்கும், எப்போதும், எந்தத் துறையிலும் எந்த சூழலிலும் ஏற்படக் கூடாது. அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் செல்ல வேண்டும்” என்று பேசியிருந்தார்.

எனினும் அதிகாரம் படைத்த உயர் அதிகாரிகளுக்கும், மக்களுடன் பயணிக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான தூரம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் சமீப காலமாக எழுந்துள்ள அனைத்து பிரச்னைகளிலும் குற்றம் நடந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தும்பை விட்டு விட்டு வாலை பிடிக்கும் கதை தானே?

ஆனால் அதற்கு மாற்றாக ஆரம்ப புள்ளியில் ஒரு பிரச்சனையை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகள் எடுத்தால் தமிழகத்தில் பல குற்றங்கள் தடுக்கப்படும்.

அதற்கான வசதியையும், வாய்ப்பையும் குறிப்பாக நடவடிக்கைகளை துணிச்சலுடன் எடுப்பதற்கு தேவையான அதிகாரத்தையும் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

குற்றங்களுக்கு முன்னதாகவே அரசு தனது அதிகாரத்தை சரியாக பயன்படுத்தினால், குற்றங்களுக்கு பிறகான கேள்விகள் எழுவது நிச்சயம் தடுக்கப்படலாம்!

கிறிஸ்டோபர் ஜெமா

நமீபிய சீட்டாக்களும் குஜராத் சிங்கங்களும்!

+1
0
+1
0
+1
1
+1
5
+1
1
+1
1
+1
0

1 thought on “தொடரும் குற்றங்கள்: தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா தமிழக அரசு?

Leave a Reply

Your email address will not be published.