பாஸ்கர் செல்வராஜ்
நாம் சாதியச் சமூகமாகத் தொடர்வதற்குக் காரணம் உலக முதலாளித்துவ மற்றும் உள்ளூர் பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியவாதிகள் நம் உழைப்பைச் சுரண்டுவது; அதற்கான கருவி பணம்; அதன் பொறிமுறை உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்பங்களின் விலைகளை மாற்றி பணத்தின் மதிப்பைத் திரிப்பதும் நீர்ப்பதும்; இதற்கான மூலாதாரம் உற்பத்திக்கான எரிபொருள், தொழில்நுட்பம், பண உருவாக்கத்தில் இவர்கள் கொண்டிருக்கும் முற்றோருமை.
சுரண்டலை குறைக்க
எரிபொருளிலும் தகவல் தொழில்நுட்பத்திலும் அமெரிக்கா கொண்டிருந்த முற்றோருமை இப்போது உடைந்திருக்கிறது. இதனைப் பயன்படுத்தி டாலர் தவிர்த்த பணத்தில் மலிவாக எரிபொருளை வாங்கும் ஒன்றியம் அதன் பலன்களை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்காமல் அம்பானி-அதானியிடம் குவிக்கிறது.
தகவல் தொழில்நுட்பத்தில் போட்டிக்கு நிற்கும் சீனாவை நுழைய விடாமல் இரு ஏகாதிபத்தியவாதிகளும் தங்களது முற்றோருமையைக் காத்து பெருலாபமீட்டி வருகிறார்கள்.
எரிபொருளைப்போல தகவல் தொழில்நுட்ப பொருட்களையும் மாற்று நாணயத்தில் வாங்கி அவற்றின் விலைகளையும் வீழச்செய்ய சீனாவையும் சந்தையில் அனுமதித்து போட்டியை உருவாக்கி உலக ஏகாதிபத்திய சுரண்டலை நாம் குறைக்க வேண்டும்.
அதற்குத் தடையாகவும் அப்படியே அனுமதித்தாலும் அதன் பலன்களை எல்லாம் தன்னிடம் குவித்துக் கொண்டு நம்மைச் சுரண்டும் உள்ளூர் பார்ப்பனியவாதிகளின் சுரண்டல் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர எரிபொருள், கனிமவளம், வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரங்களை மாநிலங்களுக்கு மாற்றி அவற்றை ஜனநாயகப்படுத்த வேண்டும். அது தானாக நடக்காது; நாம்தான் போராடி அதனை நோக்கி நகர்த்த வேண்டும்.
போராட்ட உத்தி
சீனர்கள் தங்களது சந்தைக்குள் நுழைந்த டாலரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அதேவேளை தங்களது சரக்குகளுக்கான பணத்தை தாங்களே உருவாக்கிக் கொண்டு அமெரிக்கா மிகையாக டாலர் அச்சிடுவதைத் தடுத்து அவர்களின் கைகளைக் கட்டும் உத்தியைப் பயன்படுத்தி சரக்குகளின் விலைகளை இருவரும் பொதுவாக தீர்மானிக்கும் திசையில் நகர்கிறார்கள்.
ஒன்றிய பார்ப்பனியத்தை வழிக்குக் கொண்டுவர நாமும் தமிழகத்தில் சுழற்சியில் இருக்கும் ரூபாயை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பணத்தை உருவாக்கும் வலிமையைப் பெற்று பெருமளவு மூலதன நிதியச் சந்தையைக் கைப்பற்றி அவர்களாகவே வேறுவழியின்றி இத்துறைகளை நம்மிடம் விட்டுவிட்டுச் செல்லும் சூழலை உருவாக்க வேண்டும்.
அதற்கு முதலில் நாம் வங்கி, காப்பீட்டுத் துறைகளில் கால்பதித்து மூலதனத்தைக் கைப்பற்றி உற்பத்தியில் ஈடுபட வேண்டும். இதன் வழியாக உற்பத்தித் தொழில்நுட்பங்களைக் கைக்கொண்டு உற்பத்திச் சங்கிலியில் தவிர்க்க இயலாத இடத்தை எட்டி யாரும் நம்மைச் சுரண்டமுடியாத நிலையை அடையவேண்டும்.
இருவகை பணம்
இப்படி தமிழகம் வங்கி, காப்பீட்டு நிறுவனங்களை ஏற்படுத்துவதால் மட்டும் உற்பத்திக்கான பணத்தை உருவாக்கும் வலிமையை அடைந்துவிடுமா என்றால் நிச்சயமாக அடையாது. ஏனெனில் அது வெறுமனே காகிதத்தில் படம் வரைந்து கையொப்பமிட்டு உருவாவதல்ல. பணக்காகிதத்திற்கு சுயமான மதிப்பில்லாத நிலையில் அதனைக் கொடுத்தால் மற்றவர் ஏற்றுக்கொண்டு பொருளையும் உழைப்பையும் கொடுக்க ஒப்புக்கொள்ளும் போதுதான் பணமாகிறது. ஆகவே நம் கையில் இருக்கும் காகிதப்பணம் நாட்டில் உற்பத்தியாகி இருக்கும் சரக்கு மற்றும் உற்பத்தியாகப்போகும் சரக்கு ஆகிய இரண்டில் மதிப்பைத் தெரிவிப்பது.
எனவே அது 1. சரக்குப்பணம் 2. கடன்பணம் (commodity and debt money) என இருவகைப்பட்டது. இது வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமானால் இந்தப் பணத்தைக் கொடுத்தால் சந்தையில் பொருட்கள் தோய்வின்றிக் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். எனவே பொருட்களின் உற்பத்தியும் உற்பத்தித்திறனும் தொடர்ந்து வளர்ந்து பெருக்கப்படும் பணத்தின் மதிப்பை ஈடுசெய்ய வேண்டும். அப்படியான பொருளுற்பத்தி வளர்ச்சி இல்லாமல் பணத்தை மட்டும் மிகையாக உற்பத்தி செய்யப்படும்போதும் அது விலைவாசி உயர்வாகவும் பங்குச்சந்தை வீழ்ச்சியாகவும் பொருளாதார நெருக்கடியாகவும் வெளிப்படுகிறது.
கூடிய கடன் பணம்
முன்பு உற்பத்தியில் செம்பு, இரும்பு போன்ற உலோகங்கள் இன்றியமையாத பாத்திரத்தை அடைந்து பெருகிய அதன் தேவையும், எங்கும் நிறைந்திராத எளிதாக உருவாக்க முடியாத நிலையும், சமூகத்தில் அதற்குப் பதிலாக எவரும் தனது எந்தச் சரக்கையும் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது. அதனால் செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்கள் பயனுள்ள சரக்காகவும் பரிவர்த்தனைக்குரிய பண ஊடகமாகவும் மாறின. உலகப் போர்களுக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளியில் பொருட்களின் மதிப்பைத் தெரிவித்து அவற்றின் மதிப்பைத் தெரிவிக்கும் பணத்தில் வர்த்தகம் நடைபெற்றது. இந்த இருவகை உலோகங்களைக் கொண்டு விலையைத் தீர்மானிக்கும் முறை கொண்டுவந்த சிக்கலை விரிசலை அம்பேத்கரின் “ரூபாயின் பிரச்சனை” என்ற நூலில் காணலாம். உலகப் போர்களுக்குப் பிறகு தங்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விலையைத் தீர்மானித்துத் தங்கத்தை அதிகமாக வைத்திருந்த அமெரிக்காவின் டாலரில் வர்த்தகம் செய்யும் முறை உண்டானது. மிகையாக டாலரை உற்பத்தி செய்து அதனைச் சமாளிக்க எழுபதுகளில் தங்கத்தை எண்ணெய்யைக் கொண்டு பதிலீடு செய்தது அமெரிக்கா. பின்பான தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் ஊடான உற்பத்திப் பெருக்கம், சோவியத் உடைப்பினால் ஏற்பட்ட எரிபொருள் முற்றோருமை ஆகியவை உலகில் டாலர் பெருக்கத்துக்கு வித்திட்டன. இதன்பிறகு தகவல் தொழில்நுட்ப பொருட்களின் உற்பத்தித்திறனைப் பெருக்க தவறவிட்ட அதேசமயம் தொடர்ந்து டாலரைப் பெருக்கிக் கடன் பணத்தின் அளவைக் கூட்டிக்கொண்டே சென்றது அமெரிக்கா.
வரப்போகும் சரக்குப்பணம்
உற்பத்தித்திறனைப் பெருக்கிய சீனாவின் பக்கம் எரிபொருள் விற்கும் நாடுகள் சாயும் நிலையில் தற்போது மிகையாக பெருக்கப்பட்ட டாலர் கடன் பணத்துக்கு இணையாக சந்தையில் சரக்குகள் இல்லாமல் டாலர் நெருக்கடியைச் சந்திக்கிறது. சரக்கை உற்பத்தி செய்யும் இந்த நாடுகள் டாலருக்கு சரக்கைத் தருவதைக் குறைக்கின்றன அல்லது தவிர்க்கின்றன. அது சந்தையில் இருக்கும் டாலர் மதிப்புக்கு நிகரான சரக்கைப் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தி விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறது. உலகப் பங்குச்சந்தை நெருக்கடியை நோக்கி நகர்த்துகிறது.
இது போர்களின் மூலமாக தீர்க்கப்படுமா அல்லது சமாதான உடன்படிக்கையின் மூலமாக முடிவுக்கு வருமா என்று தெரியவில்லை. ஆனால் இப்போதிருக்கும் டாலர் கடன்பண கட்டமைப்பு உடைவது உறுதி. அதேசமயம் இந்த உடைப்பினால் கடன்பணம் நடைமுறையில் இருந்து காணாமல் போய்விடப் போவதில்லை. பதிலாக இதன் பங்களிப்பு குறைந்து சரக்குப் பணத்தின் முக்கியத்துவம் கூடும். அந்தந்த நாடுகள் அவரவர் சரக்கின் மதிப்பைத் தெரிவிக்கும் பணத்தை வெளியிடும். நம்பகமான பரிவர்த்தனையிலும் சரக்குகளின் மதிப்பை நிர்ணயிப்பதிலும் மீண்டும் தங்கம் இடம்பெறலாம்.
தங்கம் சரக்குகளின் பணம்
பரிவர்த்தனை செய்யப் போதுமான சரக்கை உற்பத்தி செய்யாத நாடுகள் மற்றவர்களின் பணத்தைக் கடனாகப் பெற்று அவர்களின் சரக்கை இறக்குமதி செய்வார்கள். எனவே உலக வங்கி வர்த்தகக் கட்டமைப்பு சரக்குப்பணமும் கடன்பணமும் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களைக் கொண்டதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனைப் பிரதிபலிக்கும் விதமாக நமது பண உருவாக்கமும் இவ்விரண்டையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எண்ணெய், கனிமவளம் கொண்ட நாடுகளும், தொழிற்துறை பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் அவற்றின் மதிப்பைச் தெரிவிக்கும் சரக்குப்பணத்தை உருவாக்க முடியும். அந்தப் பணத்தைக் கொடுத்தால்தான் சரக்கைத் தருவேன் என்றால் மற்ற நாடுகள் அதனை ஏற்று வாங்கித்தான் ஆகவேண்டும்.
நெய்வேலி நிலக்கரியைத் தவிர குறிப்பிடத்தக்க கனிமவளம் எதுவும் நம்மிடம் இல்லை. அதுவும்கூட நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆகவே இப்படியான சரக்குப் பணத்தை நம்மால் உருவாக்க முடியாது. எல்லோரும் ஏற்றுக்கொண்டு சரக்கைத் தரும் தங்கம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அதுவும் உற்பத்தியில் ஈடுபடாமல் மக்களிடம் நகைகளாகச் செல்வக்குவிப்பாகத் தேங்கிக் கிடக்கிறது. முற்கால சோழர்கள் காலத்தில் தொடங்கி பிற்கால சோழர்கள் காலத்தில் வலுக்கொண்ட இந்தத் தேக்கம் இன்றுவரை உடையாமல் இருக்கிறது. இக்காலங்களில் இங்கு வந்த பார்ப்பனியமும் அதைக் கொண்டுவந்த வடக்கின் வர்த்தக வர்க்கமும் இப்போதும் இதில் ஆதிக்கம் செலுத்துகிறது.
தங்கம் நம் சமூகப் பிரச்சனை
ஆகவே இது கடந்தகால வரலாறு மட்டுமல்ல நிகழ்காலத்திலும் நம்மை பார்ப்பனியம்தான் ஆள்கிறது என்பதன் சாட்சி. இது வெறும் கலாச்சாரத் தொடர்ச்சி அல்ல; அந்த வடிவில் உழைக்கும் மக்களைச் சுரண்டும் பொருளாதார நடவடிக்கை. எரிபொருளுக்கு அடுத்ததாக இந்தியா தங்கத்தைத்தான் ஆண்டுதோறும் அதிகளவில் இறக்குமதி செய்கிறது.
74 விழுக்காடு மக்கள் சத்தான உணவை உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நாடு இவ்வளவு தங்கத்தை இறக்குமதி செய்வதை என்னவென்று சொல்வது. இறக்குமதியாகும் எல்லா தங்கத்தையும் இந்திய மக்கள் நுகர்வதில்லை என்றாலும் நல்ல சத்தான உணவுக்கே வழியில்லை என்றாலும் என் காது, மூக்கில் கடுகளவு தங்கம்கூட இல்லையே என மூக்கை சிந்தும் மகளிர் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறார்கள். அப்படி நகையணியாதவரை ஏளனமாகக் காண்பது நம் சமூகத்தின் இயல்பாகவே மாறியிருக்கிறதே! இதற்காகவே இரவல் நகையை வாங்கிப் போட்டுக்கொண்டு நற்காரியங்களுக்குச் செல்லும் கதைகள் ஏராளமல்லவா!
நம்முடைய இந்தப் பழக்கம் தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடுகளும் அதனை வாங்கி விற்கும் பார்ப்பனிய வர்த்தகர்களும் நமது உழைப்பை சுரண்டுவதற்கும் பணக்காரர்கள் செல்வத்தைத் தங்கமாகக் குவிப்பதற்கும் பயன்படுகிறது என்ற நிலையில் மட்டும் இல்லாமல் எல்லா குடும்பங்களும் திருமணத்தின்போது குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து பவுனாவது பெண்ணுக்குப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. வாழ்நாள் முழுக்க இதனை நம் ஆண்களும் பெண்களும் கையிலும் காதிலும் கழுத்திலும் மாட்டிக்கொண்டு திரிகிறார்கள். இதில் தன் வாழ்நாள் முழுக்க சேர்த்த செல்வத்தை இழக்கிறார்கள் அல்லது வாழ்நாள் முழுக்க இதற்கு வாங்கிய கடனை உழைத்து அடைக்கிறார்கள்.
கண்ணிருந்தும் பார்வையற்றவராக வாழும் சிலரைபோல பலரும் தங்கமிருந்தும் ஏழையாகவே வாழ்கிறார்கள். இது நமது பெண்களை தங்கத்துக்கும் அதனுடன் தொடர்புடைய ஆண்களுக்கும் அடிமைகளாகவே வைத்திருக்கிறது. ஆகவே இது வெறும் கலாச்சாரப் பிரச்சனையல்ல வரலாற்றுச் சமூகப் பிரச்சனை.
நகைகள் தங்க நாணயமாக
அதனடிப்படையில் இதனைத் தீர்க்கவேண்டியது அரசின் கடமையாகிப் போகிறது. அதுமட்டுமல்ல கோரோனாவிற்குப் பிறகு இப்படி வாங்கிய தங்கமும் வங்கிகளிடமும் அடகுகடைகளுக்கும் செல்வது அதிகரித்து வருகிறது. மதிப்புமிக்க இந்த நாட்டு மக்களின் செல்வம் மதிப்பு குறைவான பணத்தின் மூலம் தனியாரிடம் சென்று குவிந்து கொண்டிருக்கிறது. இதனைக் கைப்பற்றி இச்சமூகத்தின் சொத்தாக மாற்றுவது ஒரு பொறுப்பான அரசின் கடமையல்லவா!
இதற்காக அமெரிக்கர்கள் 1933இல் ஒரு அரச ஆணையில் அனைவரின் தங்கத்தையும் அபகரித்தத்தைப்போல நாம் செய்யமுடியாது. அதேபோல அரசு ஆணையிட்டும் மக்கள் சிந்தனையை மாற்றவும் முடியாது. திட்டமிட்ட படிப்படியான நடவடிக்கைகளின் மூலமே மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். அதனால் ஒரு தங்க சேமிப்புக் கடன் தொடங்குவது இன்றைய உடனடித்தேவை.
இந்த திட்டத்தின் நோக்கம் 1. மக்களின் தங்கத்தின் மீதான மேகநோயைக் குணப்படுத்தி அவர்களின் சிந்தனையில் தங்கத்தை மூலதனமாக, உற்பத்தியில் சுற்றிச்சுழன்று செல்வத்தைப் பெருக்கும் ஊடகமாகப் பதியவைப்பது 2. உடலில் கிடந்து தேய்ந்து கொண்டிருக்கும் நகையை மூலதனமாக்கிப் பெருகும் செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் கருவியாக மாற்றி அதன் மதிப்பைப் பெருக்கிப் பகிர்ந்தளிப்பது ( A tool for wealth creation and distribution). இதற்கான பொறிமுறையின் முதல்கட்டம் இறக்குமதியாகும் தங்கம் நகைகளாக மாறுவதைக் குறைப்பது, அடுத்து இருக்கும் ஆபரண நகைகளை படிப்படியாக உற்பத்திச் சுழற்சிக்குள் கொண்டுவருவது, இறுதியாக தங்க இறக்குமதியை குறைத்து உற்பத்திக்கான மற்ற உலோகங்களின் இறக்குமதியை அதிகரிப்பது. அரசு வலுவான வங்கி மற்றும் பணப்பரிமாற்ற கட்டமைப்பை ஏற்படுத்தி அரசு தொடர்பான அனைத்துப் பணப்பரிவர்த்தனைகளும் அதில் நடைபெறுமாறு மாற்றி அதன் வழியாகத் தங்கநகை சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கி மக்களை சேமிக்க ஊக்குவிக்க வேண்டும்.
தங்க நாணயம் பணமாக
இந்தத் திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் தங்கம் நடைமுறையில் இருக்கும் 22 கேரட் தங்கத்தின் தரத்தைவிடக் கூடுதலான 24 கேரட் தங்க நாணயங்களாகவும் அரசின் சிறப்பு அடையாள எண்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும். தங்கத்தின் மதிப்பு சந்தையில் இதுவரையிலும் குறையவுமில்லை இனிமேலும் குறையப் போவதுமில்லை. இந்திய மத்திய வங்கியில் சேமிக்கப்படும் தங்கத்தின் வாயிலாக ஈட்டும் மதிப்புப் பெருக்கத்தை ஒன்றியம் வாங்கி செலவு செய்கிறது. நாம் அதனை மக்களுக்குக் கொடுத்து இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்யலாம். இந்தத் தங்க நாணய சேமிப்புக்கு மற்ற சேமிப்புக் கணக்குகளுக்குக் கொடுக்கும் வட்டிவிகிதத்தைவிடக் கூடுதலாகவும், மற்ற நகைக்கடன்களைவிட மிகக் குறைவான வட்டிவிகிதத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.
இந்த ஏற்பாடு தங்க நாணயங்கள் சேட்டுக் கடைகளுக்குச் சென்று நகைகளாக மாறுவதைக் குறைப்பதோடு மார்வாரிகள் நகைகள் செய்யத் தேவையான தங்கத்தின் தேவையையும் குறைக்கும். இந்தத் திட்டம் வெற்றிபெற்று பெருமளவில் வளர்ச்சி அடையும்போது அது அரசை மொத்த கொள்முதலாளராக மாற்றி தங்கத்தின் விலைகளைத் தீர்மானிக்கும் இடத்துக்கு உயர்த்தும். அதன்மூலம் விலைகளை செயற்கையாக மாற்றி மக்களைச் சுரண்டவும் அரசின் முயற்சிகளை சீர்குலைக்க நினைப்பவர்களின் செயல்களையும் முறியடிக்க உதவும். தேவை பெருகி தக்க அரசியல் சூழலும் அமையப்பெறும் பட்சத்தில் உலகில் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒருவரான ரசியாவுடன் சலுகை விலையில் இறக்குமதி செய்து மேலும் நமது இழப்பைக் குறைக்க நாம் முயற்சிக்கலாம்.
தங்கப்பணம் சரக்காக
எண்ணெய், எரிவாயு, உரம் என அவர்களிடம் இருந்து நாம் பெருமளவில் சரக்குகளை இறக்குமதி செய்கிறோம். அவர்களும் விலோடிவோஸ்டாக்-சென்னை நீர்வழி இணைப்பை ஏற்படுத்தும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்யை சுத்திகரித்து மேற்குலகத்துக்கு ஏற்றுமதி செய்வதைப்போல எரிவாயுவை இறக்குமதி செய்து நமது சூரியமின்னாற்றல் மூலம் திரவ ஹைட்ரஜனாக மாற்றி நாமும் பயன்படுத்திக் கொண்டு மதிப்புகூட்டப்பட்ட சரக்காக ஏற்றுமதியும் செய்யலாம். இதன்மூலம் அவர்களின் கனவான விலோடிவோஸ்டாக்-லிஸ்பன் நிலவழி இணைப்பை விலோடிவோஸ்டாக்-சென்னை-லிஸ்பன் நீர்வழி இணைப்பின் வழியாக நனவாக்கலாம். இதற்கான துறைமுகம், தொழில்நுட்பம், உள்கட்டமைப்புகளுக்கு அவர்களிடம் இருந்து தங்க முதலீடுகளைக் கோரிப்பெற்று இருவரும் பலனடையலாம். இப்படித் தமிழக அரசின் வங்கியின் சேரும் தங்கத்தை அடித்தளமாகக் கொண்டு கடன்பணத்தை உருவாக்கி நமது உற்பத்தியைப் பெருக்கி அதன் பலன்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கலாம்.
இதன் வளர்ச்சியின் போக்கில் தங்க இறக்குமதியைக் குறைத்து சில்லுகள் போன்றவற்றின் உற்பத்திக்கான அரிய உலோகங்களை இறக்குமதி செய்து சேமிக்கலாம். இப்படி சேமிக்கும் தங்கத்தை மட்டுமே கொண்டு நமது உற்பத்திக்கான கடன்பணத்தை உருவாக்கிவிட முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. அதன் தேவையுடன் ஒப்பிடும்போது இது சொற்பமாகவே இருக்கும். நாம் பெருமளவு பணத்தை உருவாக்க வேண்டுமானால் அது தொழிற்துறை சரக்கு உற்பத்தியை பெருக்குவதன் மூலமே சாத்தியம்.
அப்படி சரக்கை உற்பத்தி செய்ய அதன் மதிப்பை தெரிவிக்கும் கடன்பணத்தை உருவாக்குவது அவசியமானது. அதற்கும் ஒரு ஆதாரமோ அடித்தளமோ வேண்டும். அப்படியான ஒன்று ஏதேனும் நம்மிடம் இருக்கிறதா என்று கேட்டால் ஆம் நம்மிடம் பெருமளவில் பயிரிடத்தக்க நிலம் இருக்கிறது. ஆனால் அது விவசாயிகளிடம் துண்டுத்துண்டாக உடைந்து கிடக்கிறது. அதனை இணைத்துக் கடன்பணத்தை எப்படிப் பெருக்குவது? அதனைக் கொண்டு எந்த சரக்கை உருவாக்குவது அடுத்த கட்டுரையில் காணலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
ஒன்றிய பார்ப்பனிய சுரண்டலைத் தடுப்பதற்கான முதல்படி? பகுதி 16 வடவர்களைத் தலையில் வைத்திருக்கும் தமிழகம்!- பகுதி 15 ரூபாய்மைய வர்த்தகத்தின் முக்கியத்துவம் என்ன? பகுதி 14
சாதி எப்போது ஒழியும்? பகுதி 11
சாதிக்கும் தொழில்மயமாதலுக்குமான தொடர்பு என்ன? – பகுதி 10
எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா- பகுதி 9
சிறப்புக் கட்டுரை: உலகை மாற்றிக்கொண்டிருக்கும் உக்ரைன் போர் பகுதி 8
சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி -7
சிறப்புக் கட்டுரை: இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6
சிறப்புக் கட்டுரை: பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5
சிறப்புக் கட்டுரை: டாலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? பகுதி -4
சிறப்புக் கட்டுரை: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? பகுதி-3
சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2
சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?