How to live a better life? by Sadhguru

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

இந்தவார ஸ்பாட்டில், இலக்குகள் வகுப்பதன் மூலம் மிகப்பெரிய சாத்தியங்களை உங்களுக்கு நீங்களே மறுக்கிறீர்கள் என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு, குறைவாகக் கொடுத்து நிறைய வாங்குவது சாமர்த்தியம் என்ற நம் மனப்பான்மையிலுள்ள குறைபாட்டையும் நமக்கு சத்குரு சுட்டிக்காட்டுகிறார்.

உங்கள் வாழ்க்கையை இரண்டு விதங்களில் அணுகலாம். ஒன்று, இலக்குகள் நிர்ணயித்து அதன்படி செல்வது. நீங்கள் எப்படிப்பட்ட இலக்குகளை நிர்ணயிப்பீர்கள்? உலகில் நீங்கள் கண்டு வியந்த ஏதோவொன்று, ஆனால் அதை நீங்கள் இன்னும் செய்யவில்லை, அல்லது உங்கள் வாழ்வில் இன்னும் நிகழவில்லை. அப்படிப்பட்ட ஒன்றைத்தான் இலக்காக வைத்துக்கொள்கிறீர்கள். இன்னொருவரைப் போல இருக்க முயற்சிக்கிறீர்கள், அல்லது இன்னொருவர் செய்வதையே செய்ய முயற்சிக்கிறீர்கள். 

நீங்கள் எப்படிப்பட்ட இலக்குகளை முடிவுசெய்தாலும், அவை அனைத்தும் நீங்கள் ஏற்கனவே அறிந்தவை, அல்லது அதன் மிகைப்படுத்திய வடிவங்கள் எனும் வரையறைக்குள் வருகின்றன. ஏற்கனவே தெரிந்த ஒன்றை அடைவதற்கான முயற்சியில் உங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவுசெய்வது பரிதாபமானதல்லவா? உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் உங்களுக்கு நடக்கவேண்டும் என்பதே என் விருப்பம். நீங்கள் கற்பனையிலும் நினைத்திராத விஷயங்கள் உங்கள் வாழ்க்கைக்குள் வரவேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை உண்மையாகவே வளமாகும். ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைச் செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

பொருளாதார அளவிலோ பொருட்களைப் பொருத்தவரையிலோ, அது உங்களுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தினால், அப்போது வேண்டுமானால் இலக்குகள் நிர்ணயித்துக்கொள்ளலாம். என் கருத்தில், அதுவும்கூட வாழ்க்கையை வீணாக்குவதுதான். உங்களிடம் ஒரு மில்லியன் டாலர் பணம் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். புதுவருடம் முடிவதற்குள் அதை ஒரு பில்லியன் டாலராக மாற்றவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், அது நடக்காமல் போனால் நல்லது, ஏனென்றால் அந்த எதிர்பார்ப்பில் வாழ்ந்திருப்பீர்கள். ஒருவேளை அது நடந்துவிட்டால், ஜனவரியிலேயே நடந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம், அதற்குப் பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? 

அதை பத்து பில்லியன் டாலராக மாற்ற விரும்புவீர்கள். ஒரே ஒரு டாலர் பணத்தை வைத்து நீங்கள் சந்தோஷமாக இருந்த காலமுண்டு. இப்போது அதே சந்தோஷத்திற்கு உங்களுக்கு ஒரு மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. இதைத்தான் பணவீக்கம் என்கிறார்கள். இது வாழ்வை மேம்படுத்தாது.

வாழ்க்கையை வைத்து நீங்கள் இப்படி வீக்கம் மட்டுமே உருவாக்குகிறீர்கள். இந்த வீக்கம் பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல, உங்களுக்கும் நல்லதல்ல. பொருளாதாரத்தில் வீக்கம் என்றால், சில விஷயங்கள் கைமீறி சென்றுவிட்டன என்று அர்த்தம். நீங்களாகவே உங்கள் வாழ்க்கையில் இப்படியொரு வீக்கம் உருவாக்கினால், வாழ்க்கையை புத்திசாலித்தனமாக நடத்துவதற்கு இது வழியல்ல. காலவரையறைக்கு உட்பட்ட இலக்குகள் வகுப்பதன் மூலம் நீங்கள் சில விஷயங்களை சாதிக்கலாம், ஆனால் உங்கள் உயிர்த்தன்மையை அது எவ்விதத்திலும் தொடாது.

நீங்கள் இருக்குமிடத்திலிருந்து உங்கள் இலக்கு இருக்கும் இடத்தை அடைய, ரப்பர்பேண்டை இழுத்துப்பிடித்திருப்பது போல ஒரு டென்ஷன் உருவாக்குகிறீர்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து சென்றுகொண்டே இருக்க முயற்சிக்கிறீர்கள். சமுதாய அந்தஸ்தில் ஒரு நிலையிலிருந்து இன்னொன்றிற்கு, பொருளாதார நிலையில் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு, கல்வித்தகுதியில் ஒன்றிலிருந்து அடுத்ததற்கு என்று செல்ல முயல்கிறீர்கள். இது வேட்டையாடி சேகரித்த கற்கால மனிதனின் “முடிந்த அளவு சேர்த்துக்கொள்” எனும் மனப்பான்மையிலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல.

அந்தக்காலத்தில் அவர்கள் எலும்புகள், இறகுகள், போன்றவற்றை குவித்தார்கள். இன்றோ நீங்கள் பங்குச்சந்தையில் பங்குகள், சொத்து, என்று நினைப்பீர்கள். இல்லையென்றால் ஒன்னொரு தேசத்தை கைப்பற்ற வேண்டுமென்று நினைப்பீர்கள். பொருளளவில் பார்த்தால் இரண்டும் வெவ்வேறு போலத் தெரியலாம், ஆனால் அடிப்படையில் பார்த்தால், பொருட்கள் சேகரிக்கும் அதே அடிமட்ட சிந்தனைதான் இது. நீங்கள் இறந்தபின் இவற்றை எடுத்துச்செல்ல போக்குவரத்து வசதி செய்யமுடிந்திருந்தால், நீங்கள் சேகரித்தவை ஒருவேளை அர்த்தமுள்ளதாக இருந்திருக்கலாம். 

உங்களுக்கென்று உட்காரவும் தூங்கவும் மரச்சாமான் வைத்திருந்தால், சொர்க்கத்தில், அல்லது குறிப்பாக நரகத்தில் மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். யார்க்குத் தெரியும், சாய்வாக இல்லாமல் நேராக இருக்கும் அந்த பிடிக்காத நாற்காலியை அங்கு கொடுத்துவிடுவார்களோ என்னவோ. அதனால் உங்களுக்கென்று ஒரு சோஃபா எடுத்துச்செல்ல முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

நீங்கள் சேகரிப்பது எதுவாயினும், உங்கள் அறிவு, உங்கள் சொத்து, உங்கள் உறவுகள், அல்லது வேறெதுவானாலும், தற்போதைய பரிமாற்றங்களுக்கு மட்டுமே அவை மதிப்பானதாய் இருக்கும். அவற்றை துடிப்பாக நடத்திக்கொண்டால், சில விஷயங்களுக்கு ஏற்ற சூழ்நிலைகளை அவை உருவாக்கும். சமுதாய அளவில் அவை வித்தியாசத்தை ஏற்படுத்தலாம், ஆனால் உயிரளவில் அவை எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. இலக்குகள் வகுப்பதற்கு பதிலாக, நீங்கள் இருக்கும் உயிர்நிலைக்கு ஊட்டமளிக்க வழிகள் காண்பதே சிறந்தது.

இந்த உயிருக்கு ஊட்டம்கொடுத்தால், வளர்ச்சியின் அளவை கவனித்தால் போதும். நீங்கள் மாங்கன்று நடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 2018ற்குள் அது ஆயிரம் கனிகள் தரவேண்டும், இல்லாவிட்டால் அதை வெட்டிவிட முடிவுசெய்தால், வருடத்தின் இறுதியில் மரத்தை நீங்கள் வெட்டுவது மட்டும்தான் நடக்கும். மாறாக, சிறப்பாக அந்த மரத்திற்கு எப்படி ஊட்டம்கொடுப்பது என்று பார்த்து அதைச் செய்வதுதான் வேலைசெய்யும். ஆயிரம் கனிகள் கிடைப்பது பற்றி கவலைப்படாதீர்கள். அதிலிருந்து சிறப்பாக என்ன வரமுடியுமோ அது வரும். அதற்கு ஒரு குறிப்பிட்ட விதமாக ஊட்டம்கொடுத்து கவனித்துக்கொண்டால், உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டதாய் அது இருக்கக்கூடும்.

வாழ்க்கையின் எந்தவொரு அம்சத்திற்கும் இலக்குகள் வகுப்பது நல்லதல்ல, அப்படிச் செய்யும்போது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை மட்டுமே செய்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் முற்றிலும் புதுமையாக எதுவும் நிகழாது. அது மிகப்பெரிய இழப்பு என்றே நான் நினைக்கிறேன். உங்கள் கனவுகள் நிஜமாவதில் எதுவுமில்லை. நீங்கள் கற்பனை செய்யக்கூட தைரியமில்லாத ஒன்று நிஜமானால், அது அற்புதமான வாழ்க்கை. பலன்கள், நீங்கள் எந்த அளவு சிறப்பாக வாழ்க்கை செயல்முறையை கையாளுகிறீர்கள் என்பதைப் பொருத்தும், நீங்கள் இருக்கும் காலத்தைப் பொருத்தும், எங்கு இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அமையும். 

இன்று ஒரு குறிப்பிட்ட அளவு முயற்சிசெய்தால், நீங்கள் ஒரு மில்லியன் டாலர்களை சம்பாதிக்கலாம். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, உங்களைவிட பத்து மடங்கு சாமர்த்தியமான ஒருவர், நிறைய முயற்சிசெய்தும் சிறிதளவே சம்பாதித்திருப்பார். இதில் ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியமில்லை. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் தன்னால் முடிந்த அளவு சிறப்பான பலன்களை அவர் ஈட்டினார். நீங்கள் வாழும் காலகட்டத்திற்கு, உங்களால் முடிந்த அளவு சிறப்பான பலன்களை நீங்கள் ஈட்டுகிறீர்களா? அதுதான் கேள்வி.

ஒவ்வொரு மேனேஜ்மென்ட் ஸ்கூலும் இலக்குகள் வகுப்பது பற்றி பேசுவதை நான் அறிவேன். ஆனால் அவர்கள் தங்களுக்காக இலக்குகள் நிர்ணயிப்பதில்லை, மற்றவர்களை அதைநோக்கி நகர்த்தவே இலக்குகள் வகுக்கிறார்கள். நிறையப்பேர் தங்களால் இயன்ற அளவு சிறப்பாக செயலாற்றுவதேயில்லை, அவர்கள் எப்போதும் தங்கள் முழுத்திறனுக்குக் குறைவாகவே செயல்படுவார்கள். ஒரு மனிதராக, ஒருவர் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செயலாற்றவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. முழுத்திறனுக்கு செயல்படாவிட்டால் வாழ்க்கை வீணாகும். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நீங்கள் இலக்குகள் வகுக்கவேண்டும்.

நீங்கள் கழுதையாக இருந்தால், எவ்வளவு குறைவாக செயலாற்றுகிறீர்களோ அவ்வளவு சாமர்த்தியமாக இருப்பீர்கள். ஏனென்றால் அப்படியிருந்தால், உண்பது, இனத்தைப் பெருக்குவது, தூங்குவது, அங்குமிங்கும் சுற்றித்திரிவது, பிறகு ஒருநாள் இறப்பது, இதைத்தவிர உங்களுக்கு எதுவும் தெரியாது. வேறு சாத்தியங்கள் இல்லாததால், எவ்வளவு குறைவாக செயலாற்றுகிறீர்களோ அவ்வளவு நல்லது. மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த கழுதை தத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள். குறைவாகச் செயலாற்றி அதிகம் வாங்கிக்கொண்டால் அவர்கள் நன்றாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் முட்டாள் என்பது மட்டுமே நிஜம். அவர்கள் வாழ்க்கையின் சாத்தியத்தை முற்றிலுமாக தவறவிடுகிறார்கள்.

உங்களை எல்லாவற்றிலும் முழுவதுமாக வீசும்போது மட்டும்தான் மனித வாழ்க்கை உண்மையிலேயே சிறப்பாக நடக்கிறது. உங்களை பிடித்துவைத்துக் கொண்டால், வாழ்க்கையை தவறவிடுவீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதற்கு உங்களை முழுவதுமாக கொடுக்காவிட்டால், நீங்கள் வேறெவரையும் ஏமாற்றவில்லை, உங்களை நீங்களே ஏமாற்றி வாழ்க்கையை தவறவிடுகிறீர்கள்.

ஒருமுறை சங்கரன்பிள்ளைக்கு கெட்டகாலம் வந்தது. அவர் வயிற்றுப் பிழைப்பிற்காக கட்டிடவேலை செய்யும் தினக்கூலியானார். ஒரு பலகையின்மீது இருபத்தைந்து செங்கற்கள் அடுக்கி, அவற்றை மூன்று மாடிக்கு மேலே எடுத்துச்சென்று வைத்துவிட்டு கீழே வரவேண்டும். இதையே திரும்பத்திரும்பச் செய்யவேண்டும். ஆனால் சற்று நேரத்தில் சூப்பர்வைசர் சென்றதும், சங்கரன்பிள்ளை அதே இருபத்தைந்து செங்கற்களை மேலும் கீழும் எடுத்துச்செல்ல ஆரம்பித்துவிட்டார். அவருடன் வேலை செய்த மற்றவர்கள் இதைக் கண்டதும், “ஏய், ஏன் செங்கற்களை திருப்பிக் கொண்டுவருகிறாய்?” என்று கேட்டார்கள். “சூப்பர்வைசர் தான் பார்க்கவில்லையே?” என்றார் சங்கரன்பிள்ளை. “அட முட்டாளே! இப்போது போகும்போது மட்டுமின்றி வரும்போதும் அல்லவா நீ செங்கல் சுமந்து வருகிறாய். அங்கே வைத்துவிட்டு வந்திருந்தால் வரும்போதாவது சுமை தூக்க வேண்டியிருக்காதே.”

குறைவாகச் செயலாற்ற முயற்சித்தால் இதுதான் நடக்கும் – சாதாரண விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிடும். மக்கள் அலுவலகத்தில் காலை ஒன்பது மணிமுதல் மாலை ஐந்து மணிவரை வேலை செய்வதை பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். அவர்கள் அந்தக் கம்பெனியை முழுவதுமாக நிர்வகிக்கவில்லை. அவர்கள் அரசாங்கத்தை நிர்வகிக்கவில்லை.

யாரோ அவர்களுக்கு தங்கள் வேலையின் ஒரு பாகத்தைக் கொடுத்துள்ளார்கள், அதுவும் பிழைப்பை நடத்துவதற்காக – அதை எவ்வளவு சிக்கலாக செய்துகொள்கிறார்கள்! அதைச் செய்வதில் இரத்த அழுத்தம் வருகிறது, அல்லது மாரடைப்பு வருகிறது. குடும்பங்களில் நடக்கும் காட்சிகளை நீங்கள் காணவேண்டும். இரண்டே பேர் ஒன்றாக வாழ்வதில் அவ்வளவு சிக்கலாக்கியிருப்பார்கள்! சிறு குழந்தைகள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்! அவ்வப்போது அவர்கள் சந்தோஷம் தருகிறார்கள், மற்ற சமயங்களில் அவர்களால் சொல்லமுடியாத அளவு பாதிப்படைகிறார்கள்.

அவர்கள் வேலை, அவர்கள் குழந்தை, அவர்கள் துணை, அவர்கள் வீடு, அவர்கள் தொழில், அவர்கள் வண்டி ஓட்டிச்செல்வது – எதை எடுத்துக்கொண்டாலும் கஷ்டப்படுகிறார்கள். இது நடப்பதற்குக் காரணம், என்ன கிடைக்கப்போகிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், உங்களை அதற்குள் வீசினால்தான் வாழ்க்கை சிறந்த விதத்தில் நடக்கும் என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. வாழ்க்கை நடப்பது உங்கள் ஈடுபாட்டால், உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதால் அல்ல.

உங்களுக்குக் கிடைப்பதை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரே வக்கிரமான சந்தோஷம், உங்களைவிடக் குறைவாக இருப்பவருடன் உங்களை ஒப்பிடும்போது கிடைப்பதாகவே இருக்கும். வாழ்க்கையை உணர்ந்து ரசிக்க விரும்பினால், இந்த உயிரின் முழு ஆற்றலையும் அறிந்துணர விரும்பினால், முழுமையான ஈடுபாடுதான் ஒரே வழி. அதிலிருந்து என்ன வரப்போகிறது என்று வாழ்ந்துதான் பார்க்கலாமே. வாடைக்காலத்தில் பூமியிலிருந்து எதுவும் வராது. வசந்தகாலத்தில் சிறிதளவு முயற்சியிலேயே நிறைய கிடைக்கும். வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்… 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பணம் வந்தால் கஷ்டமும் கூட வரும்! – இது உண்மையா?

குற்றவுணர்ச்சி உங்களைக் கொல்கிறதா?

நாம் தமிழர் கட்சியில் தாசில்தார்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

‘கங்குவா’ சோதனைகள்… அப்டேட் குமாரு

நாளை கனமழை பெய்யுமா? வானிலை அறிக்கை!

கொடநாடு வழக்கு – எடப்பாடியிடம் ஏன் விசாரிக்கக் கூடாது?; நீதிபதி கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *