தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

Published On:

| By Kavi

சத்குரு

நான் சிறிதும் தன்னம்பிக்கை இல்லாமல் தவிக்கிறேன், என்னுடைய தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது?

யாருக்கு அகங்காரம் இருக்கிறதோ அவருக்குத்தான் நம்பிக்கையும் இருக்கும். அகங்காரம் என்றால் என்ன? யார் அகங்காரம் உள்ளவர்? இவற்றை முதலில் பார்ப்போம்.

நம்மைச் சுற்றியுள்ள மக்களில் பலர் தனக்கு அகங்காரம் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள். வேறு பலர் மற்றவர்களின் அகங்காரத்திற்கு பலியானவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில்தான் நாம் வாழ்கிறோம். அகங்காரம் என்பது பிழைப்பிற்கான ஒரு செயல்முறை. இது மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது. நீங்கள் பணக்காரராகவோ, அதிகாரம் நிறைந்தவராகவோ அல்லது அழகானவராகவோ ஆன பிறகு இது உங்களிடம் ஏற்படவில்லை. உங்களுடைய தாயின் கருவறையில் நீங்கள் புகுந்த முதல்நாளே அதுவும் வந்துவிட்டது.

தாயின் கருப்பையை விட்டு வெளியில் வந்து, எனக்கு உணவு வேண்டும் என்று எப்போது அழுதீர்களோ, அப்போதே உங்களுடைய அகங்காரத்தின் முதல் குரலை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி விட்டீர்கள். ஆம். எனக்கு இது வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை தெரிவிப்பதுதான் அகங்காரம். எனவே யாருக்காவது அகங்காரம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியே எழ முடியாது.

அகங்காரம் என்பது ஆசை குறித்த விஷயமாக இருப்பதால், அதனை ஒரு தொந்தரவாக நினைத்து நிறைய பேர் தவிர்க்க நினைக்கிறார்கள். உங்கள் இருப்பின் அடிப்படையே அகங்காரம்தான். அப்படியிருக்கும்போது அகங்காரத்தை நீங்கள் அழிக்க முடியுமா? அதற்கு பதிலாக, அகங்காரத்திலிருந்து உங்களை விலக்கி நிறுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.

அப்படிச் செய்வதற்கு முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அகங்காரம் உங்களுடைய நிழல் போன்றது. உடல் உள்ள ஒவ்வொருவருக்குமே அகங்காரம் உள்ளது. ஆனால் நிழல் சிறியதாக இருப்பது நல்லது. எப்படி சூரியனின் திசையைப் பொறுத்து உங்கள் நிழலின் அளவு நண்பகலில் குறுகியும் காலை மற்றும் மாலை நேரங்களில் நீளமாகவும் இருக்கிறதோ அதேபோல் உங்களுடைய அகங்காரத்தையும் வெளிச்சூழ்நிலைகளின் தேவைக்கேற்றவாறு வைத்துக் கொள்ளுங்கள். அகங்காரத்தின் அளவை எப்போதும் ஒரே அளவாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால், ஒரு குறிப்பிட்ட அடையாளத்துடன் சிக்கிக் கொள்ளாமல், எளிமையாகவும், இலேசான தன்மையுடனும் இருப்பதற்குக் கற்றுக்கொள்வீர்கள்.

அதேநேரத்தில், இன்னொன்றிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற்கும் எத்தகைய அகங்காரத்துடன் இருக்கிறீர்கள் என்பதற்கும் இடையில் உள்ள பிரிவினைக்கோடு தெளிவாக இல்லாமல் இருக்கின்றது. அவ்விதம் பிரிவினைக் கோட்டை தெளிவாக வைத்துக்கொள்ளாத காரணத்தால், முட்டாள்தனமான விதங்களில் செயல்பட்டு, உங்களுக்கு நீங்களே வலியையும், துயரத்தையும் உண்டாக்கிக் கொள்கிறீர்கள்.

இதனை இப்படிப் பார்க்கலாம். ‘என்னுடைய நிழல்தான் நானா?’ என்பதாக நீங்கள் நினைத்துவிட்டால், அதன்பிறகு மற்ற உபயோகமான தேடல்களை நாடுவதற்குப் பதிலாக, உங்களுடைய நிழலையே துரத்தியவாறு தரையில் தவழத் துவங்குகிறீர்கள். உங்களுடைய உடல் தன்மையின் காரணத்தால், தரையில் தவழும்போது வலியை உணரத் துவங்குகிறீர்கள். விரிப்பு போடப்பட்ட தரையின் மீது தவழ்ந்தாலும் சௌகரியத்தைதான் உணர்வீர்கள், ஆனந்தத்தை உணர மாட்டீர்கள். சில நேரங்களில் ஏதாவது குத்தும்போது வலி அதிகமாகி கெஞ்சி இறைஞ்சுகிறீர்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் தற்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் மண் மீது தவழும் நபராகத்தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் கூறுவதன் காரணம், உங்களுடைய முழு அனுபவமும், உடல்தன்மையின் எல்லைக்குள் மட்டுமே இருக்கின்றது. உடல்தன்மையின் எல்லைகளை எப்போது நீங்கள் கடந்து செல்லவில்லையோ, அப்போது நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கை ஆகிய உணர்வுகளால் மாறி மாறி அலைக்கழிக்கப்படுவீர்கள். அப்போது உங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

எனவே, ஒரு அகங்காரமுள்ளவன்தான் அவநம்பிக்கை கொள்கிறான், அதேபோல் நம்பிக்கையும் கொள்கிறான். எந்த ஒரு சூழ்நிலையிலும் வாழ்வின் நிகழ்வுகளோடு இயைந்து வாழ்ந்தீர்களென்றால் நம்பிக்கையோ அல்லது அவநம்பிக்கையோ எழுவதற்கான வழியே இல்லை. அப்போது, நீங்கள் உங்களுடைய அதிகபட்ச திறனுடன் செயலாற்றுவீர்கள்.

ஒரு செயலைச் செய்வதற்கு தன்னம்பிக்கை அவசியம் என்று ஏன் மக்கள் நம்புகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. தொடர்ந்து நம்பிக்கையுடன் மட்டுமே செயல்படும்போது, இறுதியில் முட்டாள்தனமான செயல்களைத்தான் செய்து வருவீர்கள். ஆகவே, ஒரு செயல் செய்வதற்கு உங்களுக்குத் தேவையானது புத்திசாலித்தனம்தானே அன்றி, நம்பிக்கையல்ல. நீங்கள் செய்யவிருக்கும் செயலுக்கேற்ற திறன் உங்களுக்கு இருந்தால், நீங்கள் அந்தச் செயலை செய்வீர்கள். அத்தகைய திறன் உங்களுக்கு இல்லையென்றால், எப்படியும் அந்தச் செயலைச் செய்யமாட்டீர்கள், அவ்வளவுதான்.

உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்… வாழ்க்கையை உள்ளபடியே அறிந்து கொள்வதற்கு, வாழ்க்கையின் செயல்களால் பாதிக்கப்படாமல் அமைதியாகவும், ஆனந்தமாகவும் பயணிக்க வேண்டும். இல்லையென்றால், புறச்சூழ்நிலைகளுக்கு அடிமையாகத்தான் இருப்பீர்கள். ஏனென்றால், வாழ்க்கையை அதன் போக்கில் அறிந்து கொள்வதும் மற்றும் புறத்தன்மையைக் கடந்து செல்வதும்தான் ஆன்மீகம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை சங்கமம் நிகழ்வில் சம்பவம் : மேடையேறி சென்று பாராட்டிய ஸ்டாலின்

கோவை விமான நிலையம் படைத்த புதிய சாதனை!

சென்னை ரிட்டர்ன்ஸ் பரிதாபங்கள் : அப்டேட் குமாரு!

‘சீனா முழுவதும் நாறுகிறது’- பாகிஸ்தான் டாக்டர் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel