பிரபாத் பட்நாயக் தமிழில்: அ. குமரேசன்
உலக அளவிலான பல அமைப்புகள் இப்போது, ‘வறுமை’ என்று அவர்களால் சொல்லப்படும் நிலைமையை அளவிடுகிற வேலையில் இறங்கியிருக்கின்றன. இதற்காகப் “பன்முகப் பரிமாண வறுமை” என்பதாக ஓர் அளவை முறை வந்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டீபி), ஆக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைப்பகம் (ஓபிஎச்ஐ) ஆகிய அமைப்புகள் இதைக் கொண்டுவந்துள்ளன. இத்தகைய அளவை முறைகள் உண்மையிலேயே வறுமையை அளப்பதில்லை, மாறாக, நவீன தாராளமய முதலாளித்துவத்தைச் சிங்காரித்துக் காட்டுவதில்தான் முடிகின்றன.
உலக மக்கள்தொகையில் ‘தீவிர வறுமை’ நிலையில் வாழ்கிறவர்கள் 1990களில் 30 சதவீதமாக இருந்தார்கள், 2022ல் அவர்கள் 10 சதவீதமாகக் குறைந்துவிட்டார்கள் என்று உலக வங்கி மதிப்பிட்டிருக்கிறது (தீவிர வறுமை என்றால் 2011ம் ஆண்டு நிலவரப்படி தனிநபரின் தினசரிச் செலவு 1.90 டாலருக்குக் குறைவாக இருப்பதாகும்). அதாவது கோடிக்கணக்கான மக்கள் அதற்கு மேல் சம்பாதிக்கிறார்கள் என்பதால் அவர்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்கள், என்று சொல்ல வருகிறார்கள்.
உலக வங்கியின் அளவுகோளில் மூன்று அடிப்படையான பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவதாக, ஒருவரது கையிருப்பில் உள்ள சொத்து நிலையைப் பற்றி இது எதுவும் சொல்வதில்லை, அவருடைய வருமான நிலையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இரண்டாவதாக, வருமானத்திற்கான பதிலியாக செலவை எடுத்துக்கொள்கிறது. மூன்றாவதாக, வாழ்க்கைச் செலவுகள் உண்மையாக அதிகரித்திருப்பதைக் குறைத்து மதிப்பிடுகிற விலைவாசிக் குறியீட்டு எண்ணைப் (பிரைஸ் இன்டக்ஸ்) பயன்படுத்துகிறது.
வரத்தும் இருப்பும்
அக்கறையுள்ள வறுமை மதிப்பீடு என்றால் அதில் வருமானம் சார்ந்த ‘வரத்து’, சொத்துடைமை சார்ந்த ‘இருப்பு’ ஆகிய இரண்டு பரிமாணங்களும் இருந்தாக வேண்டும். மதிப்பீடு செய்யப்படுகிறவர்களின் உண்மை வருமானம் இரண்டு குறிப்பிட்ட காலக்கட்டங்களுக்கு இடையே ஒரே மாதிரியாக இருந்து, இரண்டாவது காலக்கட்டத்தில் அவர்கள் தங்களது சொத்துக்களை இழந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். இவ்வாறு சொத்துக்களை இழந்தாலும், வருமானம் மாறாமல் இருக்கிறது என்பதற்காக அவர்களை வறுமையில் விழுந்துவிட்டவர்களாகக் காணத் தவறுவது பரிகாசத்துக்குரியதேயாகும்.
மக்களின் சொத்து நிலவரம் பற்றி உலக வங்கியின் மதிப்பீடு எதுவும் சொல்லவில்லை. நவீன தாராளமய முதலாளித்துவ ஏற்பாட்டில் இது அப்பட்டமாக விடுபட்டிருக்கிறது. தனி மனிதர்கள் அவர்களுடைய சொத்துடைமைகளிலிருந்து அப்புறப்படுத்தப்படும் நிகழ்வுப்போக்கு கட்டுக்கடங்காததாக இருக்கும் நிலையில் உலக வங்கி மதிப்பீட்டில் சொத்து நிலவரம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. சொத்துடைமையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது இவ்வாறு கட்டுக்கடங்காமல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது “கோடிக்கணக்கானோர் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறுவது முரண்பாட்டின் உச்சமாகும்.
இரண்டாவதாக, உண்மையான வருமான நிலவரமும் கூட இந்த மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் வருமானம் குறித்த தரவுகளே கிடைப்பதில்லை. ஆனால், செலவுக்கான தரவுகள் எளிதாகக் கிடைக்கின்றன. ஆகவே, இந்த மதிப்பீட்டில் வரவுக்கான பதிலியாக செலவை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அபத்தமான முடிவு
மக்களுடைய வருமானம் கீழிறங்கினாலுமே கூட, அவர்கள் சொத்துகளை விற்பதன் மூலமோ கடன் வாங்கியோ முன் போலவே செலவுகளை சமாளித்துக்கொண்டுதான் இருப்பார்கள். இதை வைத்து, அவர்களின் செலவுகளில் மாற்றம் இல்லை என்பதால் அவர்கள் ஏழைகளாகிவிடவில்லை என்ற முடிவுக்கு வருவது அபத்தம். உண்மையில், ‘வரத்து’, ‘இருப்பு’ ஆகிய இரண்டு வகைகளிலுமே அவர்கள் ஏழைகளாகிறார்கள். ஆனால் அவர்கள் செய்யும் செலவை ஓர் அடிப்படையாக வைத்துக்கொண்டு அளவிடுவது அவர்கள் முன்போலவே இருக்கிறார்கள் என்றுதான் காட்டும்.
மூன்றாவதாக, இந்தியா போன்ற நாடுகளில் அவ்வப்போது மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படும் மாதிரி ஆய்வுகளின் அடிப்படையில், குடும்பங்களின் பணச் செலவுகள் பற்றிய தரவுகளைக் கொண்டு உண்மைச் செலவுகளை மதிப்பிடுவதும் கோளாறான வழியாகும்.
இத்தகைய பெயரளவிலான செலவுகளைக் குறைத்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் விலைவாசிப் புள்ளி, உண்மையில் அதிகரித்துவிட்ட வாழ்க்கைச் செலவுகளைக் குறைத்து மதிப்பிடுகிறது. மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும் அடிப்படை ஆண்டில் நுகரப்படும் பல்வேறு பொருள்களுக்கான தனிப்பட்ட விலை மாறுபாடுகளை ஒப்பீடு செய்ததன் நிறை சராசரியாக விலைவாசிப் புள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதுவும் தவறான முடிவுகளையே தரும். ஏனெனில், குறிப்பிட்ட அடிப்படை ஆண்டில் நுகரப்பட்ட பொருள்கள் இப்போது வாங்க முடியாமல் போயிருக்கும். அதனால் பல்வேறு பொருள்களின் ஒட்டு மொத்த நுகர்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.
எடுத்துக்காட்டாக, நவீன தாராளமயமாக்கலின் கீழ் முன்பு அரசுத்துறைகளால் வழங்கப்பட்டு வந்த கல்வி, மருத்துவம் போன்ற பல சேவைகளில் தனியார் நிறுவனங்கள் புகுந்துவிட்டன. இதனால் மக்கள் இந்தச் சேவைகளுக்காகச் செய்யும் செலவுகள் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. ஆனால் விலைவாசிப் புள்ளி கணக்கெடுப்பில் இது கண்டுகொள்ளப்படவில்லை.
மருத்துவத்தை எடுத்துக்கொண்டால், மதிப்பீட்டிற்கான அடிப்படை ஆண்டில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு ரூ.1,000 செலவானது என்றால், இப்போது அங்கே ரூ.2,000 செலவாகிறது. ஆகவே மருத்துவச் செலவு இரண்டு மடங்காகியிருக்கிறது என்று விலைவாசிப் புள்ளியில் கூறப்படும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் அப்படியே இருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது என்கிற நிலையில், மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். அங்கே அதே அறுவை சிகிச்சைக்கு 10,000 ரூபாய் செலவாகிறது. இதை விலைவாசிப் புள்ளி கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
சுருக்கமாகச் சொல்வதென்றால், உண்மையான வாழ்க்கைச் செலவு, விலைவாசிப் புள்ளியில் காட்டப்பட்டிருப்பதை விடவும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. குறைத்துக் காட்டும் அதிகாரப்பூர்வமான விலைவாசிப் புள்ளியை வைத்துக்கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறிவிட்டதாக மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது. வறுமை நிலவரமோ மிகவும் குறைத்துக் காட்டப்படுகிறது.
இரண்டு வழிகள்
வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பதால் பிழியப்படும்போதெல்லாம், மக்கள் குறைந்தது இரண்டு வழிகளைக் குறிப்பாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒன்று – கையிலுள்ள உடைமைகளை விற்பார்கள் அல்லது கடன் வாங்குவார்கள்; இரண்டு – அன்றாட நுகர்வுப் பொருள்களைக் கண்டிப்பாகத் தேவைப்படுவது, அப்படியொன்றும் தேவைப்படாதது என்று பிரித்து, முதலாவதற்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை மட்டும் வாங்குவார்கள்.
நமது நாட்டில் மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் இரண்டுமே அதிகரித்துவிட்ட நிலையில், அதைச் சமாளிப்பதற்கு இந்த இரண்டு வழிகளுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்தியக் குடும்பங்களின் நிகர சொத்து நிலவரம், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில், குறிப்பிடத்தக்க அளவுக்கு மோசமாகியுள்ளது. அதாவது சொத்துகளை விற்றிருக்கிறார்கள். சத்துள்ள உணவுகளைச் சிக்கனமாக எடுத்துக்கொள்வதால் பெரிய பிரச்சினை ஏற்பட்டுவிடாது என்ற தவறான கருத்தின் அடிப்படையில் குடும்பங்களில் ஊட்டச் சத்துள்ள உண்டி சுருக்கப்படுகிறது.
ஊரகக் காட்சியைக் காண்போம். 2018 ஜூன் இறுதி நிலவரத்தைத் தெரிவிப்பது 2019ம் ஆண்டின் அகில இந்திய கடன் மற்றும் முதலீடுகள் ஆய்வறிக்கை (ஏஐடிஐஎஸ்). 2012 ஜூன் இறுதி நிலவரத்தைத் தெரிவிப்பது 2013ம் ஆண்டின் அகில இந்திய ஊரகக் கடன் மற்றும் முதலீடுகள் ஆய்வறிக்கை (ஏஐஆர்டிஐஎஸ்). இந்த இரண்டு அறிக்கைகளையும் ஒப்பிடுகையில் பின்வரும் மூன்று நிலைமைகள் தெரிய வருகின்றன: ஊரகப் பகுதிகளில் 11 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிந்தைய காலக்கட்டத்தில் கடனாளியாகியுள்ளன. கடனாளியான ஊரகக் குடும்பங்கள் ஒவ்வொன்றின் சராசரிக் கடன் 43 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அடிப்படை ஆண்டு, ஆய்வுக்கான ஆண்டு ஆகிய இரண்டு காலக்கட்டங்களிலுமே, வேளாண் சாகுபடியில் ஈடுபடுகிற ஒவ்வொரு குடும்பத்தின் சராசரி சொத்து மதிப்பு 1 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இந்தியாவின் நகர்ப்புறக் காட்சியும் பெருமளவுக்கு இதே போன்றுதான் இருக்கிறது. ஒவ்வொரு நகர்ப்புறக் குடும்பத்திலும் சராசரி சொத்து மதிப்பு சரிவடைந்திருக்கிறது. சொந்தத் தொழில் செய்கிறவர்களின் குடும்பங்களில் 29 சதவீதம், மற்றவர்களின் குடும்பங்களில் 3 சதவீதம் சரிவு ஏற்பட்டிருக்கிறது. கடனில் சிக்கிய குடும்பங்களின் சதவீதம் கிட்டத்தட்ட முன்போலவே இருக்க, ஒவ்வொரு கடனாளிக் குடும்பத்தின் சராசரிக் கடன் இரண்டு காலக்கட்டங்களில் 24 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆம், ஆகப் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களின் நிகர சொத்து கணிசமாகக் குறைந்துவிட்டது.
நுகர்வைச் சுருக்கிக்கொள்ளும் இரண்டாவது வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஊரகப் பகுதிகளில், ஒரு நாளைக்கு ஒரு மனிதருக்கு 2,200 கலோரி எரியாற்றல் தேவை என முன்பிருந்த திட்டக்குழுவால் மதிப்பிடப்பட்டிருந்தது. அந்த கலோரி அளவைப் பெற முடியாத கிராமப்புற மக்கள் 1993-94ல் 58 சதவீதம் பேர் இருந்தார்கள். 2011-12ல் அவர்கள் 68 சதவீதமாக அதிகரித்துவிட்டார்கள். நகர்ப்புறங்களைப் பொறுத்த மட்டில் ஒரு நாளில் ஒருவருக்கு 2,100 கலோரி எரியாற்றல் தேவை. இந்த அளவைப் பெற முடியாதவர்கள் 57 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரித்துவிட்டார்கள்.
2017-18ம் ஆண்டுக்கான தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்ஓ) அனைத்துப் பொருள்களுக்கும் சேவைகளுக்குமான உண்மைச் செலவுகள் பெரிதும் சரிவடைந்துவிட்டதைத் தெரிவிக்கிறது. எந்த அளவுக்கு அந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியளித்தது என்றால், பொது வெளியிலிருந்து அதை ஒன்றிய பாஜக அரசு அவசரமாக அப்புறப்படுத்துகிற அளவுக்கு! அவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டதற்கு முந்தைய நிலவரம் பற்றிக் கிடைக்கக்கூடிய தரவுகளிலிருந்து (ஊட்டச்சத்து உணவுகளுக்கான உண்மையான செலவில் மாற்றமில்லை என்று வைத்துக்கொள்வோமானால்), 2011-12ம் ஆண்டில் நகர்ப்புறம் சார்ந்த செலவுகள் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருந்த நிலையில், ஊரகப் பகுதிகளில் 80 சதவீதம் அதிகரித்துவிட்டது.
விளம்பரத்துக்கு சாதகமாக
உண்மை நிலவரம் இப்படி இருக்கிறபோது, உலக வங்கி “தீவிர வறுமை” என்பதற்கான தனது அளவுகோலாக, தினசரிச் செலவு அளவை 1.90 டாலருக்குக் குறைவாக வரையறுத்துக்கொண்டுள்ளது. இதற்கு 2011ம் ஆண்டு நிலவரப்படி பிற நாடுகளுடனான பணப் பரிமாற்றத்துடன் இணைந்த வாங்கும் சக்தியை அடிப்படையாக வைத்துக்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் “தீவிர வறுமை” நிலை 2011-12ம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்தது என்றும், அது 2022-23ம் ஆண்டில் வெறும் 2 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்றும் சொல்கிறது. உலக வங்கியின் 1.90 டாலர் என்ற அளவுகோல், இந்தியாவின் உள்நாட்டுப் பண மதிப்பில் நாளொன்றுக்கு 53 ரூபாயாகிறது. இதுதான் அனைத்துச் செலவுகளையும் சமாளிப்பதற்கான அளவாம்.
பல ஏழை நாடுகளின் அரசுகள், வறுமைக்கோடு என மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்துகிற அளவுகோலைத்தான் உலக வங்கி எடுத்துக்கொண்டு, சராசரிச் செலவை வரையறுத்திருக்கிறது. அந்த அரசுகள் இந்த அளவுகோலைக் கையாளுவது கூட உலக வங்கியின் வழிகாட்டுதலில்தான்! இது சுயேச்சையான மதிப்பீடல்ல. இந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ வறுமை மதிப்பீடுகளில் இருக்கும் குறைபாடுகள் இதிலேயும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பெயரளவான செலவுகளைக் குறைத்துக் காட்டுவதற்காக விலைவாசிப் புள்ளியில், அதிகரித்துவிட்ட வாழ்க்கைச் செலவுகள் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கின்றன.
பல நாடுகளின் அரசுகள், வறுமையைக் குறைத்துவிட்டதாக அல்லது அதை ஒழித்தேவிட்டதாகப் விளம்பரப்படுத்திக்கொள்வதற்கு அங்கீகார அட்டை தருவதாகவே உலக வங்கியின் இந்த வறுமை அளப்புச் செயல் இருக்கிறது. ஆக, “கோடிக்கணக்கானோர் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்” என்கிற பேச்சுகள் எல்லாம் கொடூரமான நகைச்சுவையேயாகும்.
கட்டுரையாளர் குறிப்பு: பேராசிரியர் பிரபாத் பட்நாயக் மார்க்சியப் பொருளாதார அறிஞர், அரசியல் விமர்சகர். தொடக்கத்தில் லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தவர், 1974ல் தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு வந்து 2010ல் ஓய்வு பெறும் வரையில் சமூக அறிவியல் மற்றும் திட்டமிடல் மையத்தில் ஆய்வாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 2006 முதல் 2011 வரையில் கேரள அரசின் திட்டக்குழு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். குறிப்பாக அரசியல் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியிருக்கிறார். 79 வயதாகும் பிரபாத் பட்நாயக் இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொருளாதாரம் குறித்த ஆழமான உரைகளை வழங்கிவருகிறார். ‘சோசியல் சயின்டிஸ்ட்’ பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார்.
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். பல்வேறு உலக இலக்கிய, அரசியல், சமூக படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
“காழ்ப்புணர்ச்சியோடு பெயரிடாத அறிக்கை” : ஆட்சியாளர்களுக்கு எடப்பாடி கண்டனம்!