எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… ஆனால் மீண்டும் உள்ளே வர முடியுமா? – பகுதி 1

சிறப்புக் கட்டுரை

நா.மணி

2016-ம் ஆண்டு கருக்கொண்ட புதிய கல்விக் கொள்கை 2020-ம் ஆண்டு உருக்கொண்டது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 என்று பெயரும் பெற்றுக்கொண்டது. 2016-ம் ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கைக்கான கருத்து கேட்பு நடக்கும் போதே அதன் மீதான எதிர்பார்ப்பு இயக்கமும் தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, புதிய தேசிய கல்வி கொள்கைக்கான கருத்து கேட்பு கூட்டங்கள், டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் அறிக்கை, கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை என எல்லா நிலைகளிலும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மத்தியில் திமுக சன் தொலைக்காட்சி வழியாக ஓர் கூட்டத்தை கூட்டியது. தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கான தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும் என உத்தரவாதம் அளித்தது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் சாரம்

புதிய கல்வி கொள்கையை அமலாக்கம் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நேரத்தில் வடமாநிலங்களிலும் இதன் எதிர்ப்பு இயக்கம் விரிவடைகிறது. ஏன் இத்தனை எதிர்ப்புக்கு இடையே ஒரு புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அமலாக்கம் செய்கிறது? என்பது பற்றியோ அதனை ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கட்சிகள், சமூக நல இயக்கங்கள் எதிர்க்கிறார்கள்? என்பது பற்றியோ எத்தனை விழுக்காடு பொது மக்களுக்கு தெரியும்?

புதிய தேசிய கல்வி கொள்கை கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் நடைமுறைக்கு வந்த கல்விக்கொள்கை என்கிறது காங்கிரஸ் கட்சி. புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது மூன்று C-க்கள் அடங்கியது என்கின்றன இடதுசாரி கட்சிகள். அதாவது Commercialisation, Communalisation and Corporatisation ( வணிகமயமாதல், வகுப்புவாத மயம் மற்றும் கார்பரேட் மயமாக்கல்) என்கின்றனர்.

சமஸ்கிருதமயமாக்கல், மீண்டும் குலக்கல்வியை நோக்கிய பயணம் என திராவிட கட்சிகள் கூறுகின்றன. மக்கள் எப்படி புரிந்து கொண்டு உள்ளார்கள்? என்று தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்கட்டும். அதி தீவிரமாக புதிய தேசிய கல்விக்கொள்கையை அமலாக்கம் செய்து வரும் மத்திய அரசு, அதன் ஒரு பிரிவின் அமலாக்கத்தை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. அது பற்றி நாம் இக்கட்டுரையில் காண்போம்.

மறுபரிசீலனை அவசியம் 

புதிய தேசிய கல்வி கொள்கையின் படி, “நான்காண்டுகள் பட்டப்படிப்புகளே இனி நடைமுறையில் இருக்கும்.‌ இதில் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து சேரலாம். எப்போது வேண்டுமானாலும் படிப்பை விட்டு வெளியேறலாம்” இதில் நான்காண்டுகள் பட்டம் என்பது மாத்திரம் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடரும். இதில் அந்த “எப்போது வேண்டுமானாலும் வந்து சேரலாம்.

எப்போது வேண்டுமானாலும் படிப்பை விட்டு விலகலாம்” என்ற பிரிவை மட்டும் நிறுத்தி வைக்க பாராளுமன்ற நிலைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஏன் அப்படி பாராளுமன்ற நிலைக்குழு நிறுத்தி வைக்கிறது? மேலை நாடுகளில் சிறப்பாக இயங்கி வரும் இத்தகைய நடைமுறை நாட்டில் சிக்கல்களை சந்திக்கும் என்கிறது நிலைக்குழு. ஏன் அப்படி? நம் இந்திய நாட்டில் மக்கள் தொகை அதிகம்.

அதேபோல மக்கள் அடர்த்தியும் அதிகம். இந்திய உயர்கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை எத்தனை மாணவர்கள் வந்து சேருவார்கள்? எத்தனை மாணவர்கள் இடை நிற்பார்கள்? எத்தனை மாணவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்? என்று நம்மால் ஒருபோதும் கணிக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர்-மாணவர் விகிதம் என்பது பெருமளவில் பாதிக்கப்படும்.

கல்வி நிறுவனங்கள்

இந்தியாவை பொறுத்தவரை கல்வி நிறுவனங்கள் ஒன்று போல ஒரே சீராக எல்லா இடங்களிலும் இல்லை. உயர் கல்வி நிறுவனங்களின் பரவலும் சீராக இல்லை. எனவே இது பற்றி மத்திய அரசு மேலும் பரிசீலனை செய்ய வேண்டும். இதில் இருக்கும் பிரச்சினைகளையும், சிரமங்களையும் நன்கு ஆராய்ந்து அறிய வேண்டும். இதுபற்றி உயர்கல்வி பங்கேற்பாளர்களோடு உரிய கலந்துரையாடலை நடத்திட வேண்டும்.

நான்காண்டுகள் பட்டப்படிப்பில் உள்ளே வரவும், வெளியேறவும் இன்னும் தெளிவான வழிகாட்டல் மாணவர்களுக்கு உருவாக்கப்பட வேண்டும். இதுதான் அந்த பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை. புதிய தேசிய கல்விக் கொள்கையை வரவேற்கும் அனைவரும், ‘எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம்’ என்ற அம்சத்தை உச்சி முகர்ந்தனர்.

பின்னர் ஏன் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு அதனை நிறுத்தி வைக்கவும், ஆழமாக பரிசீலனை செய்யவும் கோரிக்கை வைக்கிறது? புதிய தேசிய கல்விக் கொள்கையின் இந்த அம்சம் நம் மண்ணுக்கு ஏற்றதல்ல என்ற கூற்று மற்றுமொரு உண்மை கள நிலவரத்தோடு முடிச்சுப்போட வைக்கிறது. மறுபுறம் பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரையை விடவும் ஆபத்தானது யதார்த்த நிலைமைகள். இந்த இரண்டையும் கொஞ்சம் விரிவாக நாம் பரிசீலனை செய்வோம்.

மாணவர்கள் வெளியேறினால் என்ன ஆகும்?

ஒரு தேசிய அறிவியல் தினத்தில், ஒரு பொறியியல் கல்லூரியில் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தேன். விழா முடிந்து சிற்றுண்டி பரிமாற்றம் நிறைவுற்று, விடை பெறும் தருணம்.

கல்லூரி முதல்வர் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். “சார் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து எங்களுக்கு தெரிந்த விபரம் ஒன்றை நீங்கள் செல்லும் இடமெல்லாம் பேச வேண்டும். அரசிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தால் அங்கும் இதனை பேச வேண்டும்” என பெரிய பீடிகை போட்டார். நான் அசந்து போனேன். இவ்வளவு பெரிய விசயங்களை தீர்க்கும் சக்தி நமக்கும் இல்லையே? சரி வந்த இடத்தில் காது கொடுத்து கேட்க வேண்டியது நம் கடமை அல்லவா?

கல்லூரி முதல்வர் “சார்! இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் நான்காண்டுகள் படிப்பு சரி. (ஏனெனில் பொறியியல் கல்லூரியில் ஏற்கவே நான்காண்டுகள் தான்). எப்போது வேண்டுமானாலும் வந்து படிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் கல்லூரியை விட்டு நின்று கொள்ளலாம்” என்பது ரொம்ப தப்பு சார் என்றார். பொறியியல் கல்லூரியில் அது ஒரு நடுத்தரமான கல்லூரி.

சேர்க்கை இல்லை என்று அந்த கல்லூரி நின்று விடாது. அதேபோல மறுபுறம் சேர்க்கை வந்து குவியும் கல்லூரியும் அல்ல. “எப்போது வேண்டுமானாலும் வந்து சேரலாம். எப்போது வேண்டுமானாலும் படிப்பை விட்டு வெளியேறலாம். மீண்டும் சேரலாம், என்ற நடைமுறையில் உங்களுக்கு என்ன சிக்கல்? உங்கள் கல்லூரிக்கு ஏதேனும் பாதிப்பா?” என்று அவரிடம் கேட்டேன்.

பதிலுக்கு அவர் “நிச்சயமாக பாதிப்பு தான் சார். முதலாம் ஆண்டுக்கு ஒரு சான்றிதழ். இரண்டாம் ஆண்டில் பட்டயம். நான்கு வருடங்கள் முடித்தால் பட்டம். இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், பெரும்பாலான மாணவர்கள் வெறும் சான்றிதழ் பட்டயம் போதும் என்று போய் விடுவார்கள். நாங்கள் கல்லூரியை எப்படி நடத்துவது? ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்படி தருவது?” என்று கேட்டார்.

சுயநிதி கல்லூரிகள்

அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் 9,626. இதில் சுமார் 31 இலட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் கிட்டத்தட்ட 90% தனியார் சுயநிதி கல்லூரிகளே. இதிலும் சுமார், நடுத்தரம், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கும் நிதி உதவியை மட்டுமே நம்பி வாழும் கல்லூரிகள் என நிறைய பிரிவுகள் இருக்கிறது.

“எப்போது வேண்டுமானாலும் படிப்பை விட்டு வெளியேறலாம்” அதற்கு ஒரு சான்றிதழும் கிடைக்கும் என்ற நிலைமை இருந்தால் தங்கள் சுய உழைப்பை நம்பி இருப்பவர்களும், உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினரும், “நம்மால் இனி தாக்குப் பிடிக்க முடியாது படித்தது போதும்” என்று கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேறி விடுவார்கள்.

நான்கு ஆண்டுகள்

பொருளாதார ரீதியாக எந்தவித நிதி சிக்கல்களும் இல்லாதவர்கள் அல்லது சமாளித்து விடலாம் என்று நினைப்பவர்கள் மட்டுமே நான்கு ஆண்டுகள் இடை நில்லாமல் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியும். மீதமுள்ள மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டு வெளியேறி விடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலை உருவானால் சுயநிதி தனியார் கல்லூரிகள் பெருத்த நட்டத்திற்கு உள்ளாகும்.

அல்லது கல்லூரிகளை நடத்தவே முடியாமலும் போகலாம். எனவே எப்போதும் போல, ஒரு பாதிப்பு வந்தால் அந்தந்த துறையை சேர்ந்த முதலாளிகள் அரசை அணுகி தங்களுக்கு சாதகம் செய்து கொள்ள பார்ப்பார்கள். அப்படித்தான் இந்த விசயத்தில் நடந்திருக்க‌ வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் இந்த ஒரு பிரிவை மட்டும் நிறுத்தி வைக்க பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது என்ற மாதிரியான புரிதலும் உள்ளது.

ஆபத்து என்ன?

பாராளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டிய சிக்கல்களைத் தாண்டி, “எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம்” என்ற‌ நெகிழ்வு தன்மையில் ஏழை, எளிய வீட்டு பிள்ளைகளுக்கு என்ன ஆபத்து உள்ளது? ஏன் அது கூடாது? என்பதற்கான காரணங்களை தனிப்பட்ட உதாரணம் ஒன்றின் வழியாகவே காண்போம்.

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ஒரு வறண்ட கிராமம். எழுபதுகளில் ஏற்பட்ட ஒரு சிறு வறட்சியை கூட தாங்கிக்கொள்ள முடியாமல் ஊரே காலியாகி சென்று விட்ட அவலம். இதில் இருந்தே என்னுடைய ஊர் எப்படிப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த சிற்றூரில் முதல், முதலாக நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்தேன். அடுத்து என்ன செய்யலாம்? என்ன படிக்கலாம்? என்பது குறித்த எந்தவித புரிதலும் என்னிடம் இல்லை.

தேர்வு முடிவுகள் வந்த அன்றிரவே என் தந்தை என்னிடம், “மேற்கொண்டு என்ன படிக்கப் போறே?” என்று கேட்டார். எப்படியும் என்னை படிக்க வைக்க வேண்டும் என்பதில் தெள்ளத்தெளிவாக இருந்தார். ஆனால் என்னுடைய மனநிலை பத்தாம் வகுப்பு படித்ததே போதும் என்று இருந்தது. ஏன் அந்த மனநிலை? என்றால் குடும்பத்தின் வறுமையை அப்போதே நான் நன்கு உணர்ந்திருந்தேன்.

பதிலுக்கு தந்தையிடம், “அப்பா! ITI படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்று சொல்றாங்க. பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சா கிளார்க் வேலை, வாத்தியார் வேலைன்னு போகலாம் சொல்றாங்க. எனக்கு ITI படிக்கப் போலாம்னு தோணுதுப்பா” என்றேன். அப்போது படிக்காத என் தந்தை கூறினார் “ஏம்ப்பா! ITI படிச்சிட்டு மெக்கானிக் வேலைக்கு தான போகனும்?” நான் “ஆமாங்கப்பா” என்றேன்.

காட்டு வேலை Vs மெக்கானிக் வேலை

அவர் “நாம் செய்யற காட்டு வேலைக்கும், மெக்கானிக் வேலைக்கும் என்னப்பா வித்தியாசம்? நாம சட்டை இல்லாம காட்டுல வேலை செய்றோம். அவுங்க காக்கி சட்டைய போட்டுக்கிட்டு மில்லுல வேலை செய்யறாங்க. ரெண்டும் ஒண்ணு தான்ப்பா? நீ பன்னிரண்டாம் வகுப்பே படி தம்பி” என்று கூறி என்னை பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அவரின் தூண்டுதலால் நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டேன்.

அடுத்து என்ன படிப்பது? அன்று போலவே இன்றும் என் தந்தை கேட்டார். “அடுத்து என்னப்பா படிக்கிறே?” மீண்டும் என் குடும்பத்தின் நிலைதான் எனக்கு ஞாபகம் வந்தது. “கண்டக்டர் லைசென்ஸ் எடுத்தா உடனே‌ வேலை கிடைக்கும்னு சொல்லறாங்க”. அந்த காலகட்டத்தில் அது உண்மை தான். பணம், காசு எதுவும் இல்லாமல் கண்டக்டர் லைசென்ஸ் எடுத்த எல்லோருக்கும் அப்போது வேலை கிடைத்தது.

அப்போது என் தந்தை சொன்னார், “கண்டக்டர் பஸ்ல விசில் அடிக்கிறதும், படியில் நின்னுட்டு வர்றதும் பஸ்ல நின்னுக்கிட்டு எழுதறதும் பார்க்க ஜாலியா தான் இருக்கும். ஆனா உனக்கு என்னோட வயசு ஆச்சுன்னா நைட்ல கண்ணு முழிக்கிறது, வெடிய வெடிய பஸ்ல போறது, படில தொங்கறது எல்லாம் கஷ்டமான வேலையா மாறிடும். நீ மேல படிப்பா ” என்று சொன்னார். நான் அன்று வறுமைக்குள் இருந்து சிந்தித்தேன்.

என் தந்தை வறுமையை வென்று விட வேண்டும் என்ற தீர்மானத்துடன் முடிவுகளை எடுத்தார். கல்லூரிக்கு படிக்க வந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் அதில் இருந்து வெளியே செல்லலாம் என்ற‌ இன்றைய விதி அன்று இருந்திருந்தால் நிச்சயம் நான் இவ்வளவு படித்திருக்க மாட்டேன். ஏதோவொரு ‌ கல்லூரியில் பேருக்கு ஒரு சான்றிதழை பெற்றுக்கொண்டு, எங்கோ ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டு இருந்திருப்பேன். நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் வாய்ப்பு நிச்சயம் இருந்திருக்காது.

 

யாருக்கு சாதகம்?

பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம் ஆகியோருக்கு எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம் என்ற முழக்கம் ஆர்ப்பாட்டமான முழக்கமாக தெரியலாம். புரட்சிகரமான முடிவாக இருக்கலாம்.‌ அதேபோல ஏழை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேறி விடலாம். ஆனால் எப்போது வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய முடியாது. இந்த இரண்டிற்கும் இடையில் அப்படி என்ன பெரிய வித்தியாசம் இருந்து விடப்போகிறது? என்பதை நாம் அடுத்த வாரம் காணலாம்.

கட்டுரையாளர்: மணி

பேராசிரியர் மற்றும் தலைவர்

பொருளாதாரத்துறை கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

தலைவர்கள் மறுப்பு… இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு!

மீண்டும் சென்னைக்கு கனமழை உண்டா?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *