நா.மணி how new education policy affected
(சென்றவார தொடர்ச்சி)
சில ஆண்டுகளுக்கு முன்பு, எழுத்தாளர் சாருநிவேதிதா தனது அனுபவம் ஒன்றை ஓர் இதழில் பகிர்ந்து கொண்டிருந்தார். தான் சுவிட்சர்லாந்து சென்ற போது. தனது நண்பர் மகனோடு உரையாடியுள்ளார்.
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவனிடம் , “நீ என்னவாக வரப் போகிறாய்?” என்று கேட்டிருக்கிறார். அந்தப் பையன் கொஞ்சம் நக்கலாக சிரித்துக் கொண்டு பதிலேதும் கூற வில்லையாம். நண்பரை திரும்பிப் பார்த்துள்ளார். “இங்கெல்லாம் இப்படி கேட்கக் கூடாது. அது நாகரிகம் இல்லை” என்றாராம்.
“அடுத்து என்ன செய்யப் போறேன்னு கேளு. சொல்வான்” என்று கூறியுள்ளார் நண்பர்.
“தம்பி அடுத்த வருசம் என்ன செய்யப் போறே?”
“பனிச் சறுக்கு விளையாடப் போறேன்” அதிர்ந்து போய் நண்பனை பார்த்து உள்ளார்.
“அவர், இங்கெல்லாம் இப்படித்தான். ஒரு வருசம் பனிச் சறுக்கு விளையாட போய்விட்டு வந்து அடுத்த வருசம் படிப்பான் ” என்று கூறியுள்ளார்.
“எப்போது வேண்டுமானாலும் படிப்பில் சேரலாம். எப்போது வேண்டுமானாலும் படிப்பை விட்டு வெளியேறலாம்” என்ற புதிய தேசிய கல்விக் கொள்கை அம்சம் இந்திய நிலைமைகளுக்கு பொருந்தாது. மிகக் கடினமான சூழ்நிலையில் தான் கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேறுகிறார்கள்.
குழந்தைகளின் இடைநிற்றல்
பின்னர் அதனைவிட மிக மிகக் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கிறார்கள்.மீண்டும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ வரவே இயலாது என்பதை கள ஆய்வுகள் உணர்த்துகிறது.
2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது. கல்வி உரிமை யாருக்கு ? கல்வி மறுக்கப்பட்டவர்களுக்குத் தானே. 14 வயதுக்குக் கீழே குழந்தைகள் ஏன் பள்ளியை விட்டு நிற்கிறார்கள்? கல்வி உரிமை சட்டத்தால் பள்ளி இடைவிலகலை தடுக்க முடியுமா? என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. இப்போதைய பேசு பொருளுக்கும் நூறு விழுக்காடு பொருந்தும்.
எல்லா நகரங்களிலும் சிக்கிக் கொண்ட ஆறுகள் எப்படி சாக்கடையாக மாறிவிட்டதோ அதே போல் ஈரோட்டிலும் ஓடும் பெரும் பள்ளம் அப்படியே ஒரு சாக்கடையாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் இரு கரைகளிலும் ஏராளமான மக்கள் குடியிருப்புகள் உள்ளன. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட முதல் பகுதி அது.
மாலை ஐந்து மணி இருக்கும். ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையில் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரும் பள்ளம் ஓடை பாலத்தை ஒட்டி பழைய பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்த 13 வயது பெண் குழந்தையிடம் தான் முதலில் உரையாடலைத் துவங்கினோம்.
கந்து வட்டி – பேப்பர் பொறுக்கிய குழந்தை!
அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் தெருவோரக் குழந்தை என அனுமானம் செய்தோம். நீ தெருவோரக் குழந்தையா என்று எப்படிக் கேட்பது?
“உம் பேரென்னம்மா?” “விஜயா”.
“உங்க வீடு எங்கே இருக்கு?” “ஓடைப் பள்ளத்தைக் காட்டினார்.
“என்னம்மா செய்யற!”. “பேப்பர் பொறுக்கறேன் சார்”.
“இப்ப கைல இருக்கிற பேப்பர் என்ன விலைக்கு போகும்?” “100 ரூபாய்க்கு விக்கும் சார்”
“தினமும் இந்த வேலைக்குப் போவியா?” “ஆமாங்க சார் “.
ஒரு நாளைக்கு நூறு ரூபாய்னா ஒரு மாதத்திற்கு 3000 ரூபாய் கிடைக்குமே” “ஆமாங்க சார்”.
சின்னப் பிள்ளை. பள்ளிக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறது. தனது செலவுக்கு இப்படி சம்பாத்தியம் செய்கிறது. தினமும் நூறு ரூபாய்க்கு என்ன செலவு செய்ய முடியும்? மாதம் ரூபாய் மூவாயிரத்தை என்ன செய்யும்? என்று யோசித்துக் கொண்டே அந்தக் குழந்தையிடம் கேட்டேன்.
“ஏம்மா மூவாயிரம் ரூபாய் பணத்தை என்ன செய்வே?”. கொஞ்சம் கிண்டல் கொஞ்சம் எகத்தாள மனநிலையில் தான் இந்த கேள்வியைக் கேட்டேன்.”கடனுக்கு வட்டி கட்ட வேண்டும் சார்” என்றது அந்தக் குழந்தை. எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
அதிர்ச்சி அடைந்து என்ன, “எவ்வளவு கடன் ?” “முப்பதாயிரம் சார்? “யார் வாங்கிய கடன்?”. “நான் வாங்கியது சார் “. “யார் உனக்கு கடன் கொடுத்தார்?”. “பத்தாயிரம் குழுவுல வாங்கி இருக்கிறேன். இருபதாயிரம் கந்து வட்டி சார்”. அதிர்ச்சி தாங்க முடியவில்லை.
ஆனால் மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. “உங்க அப்பா எங்கே?”. “நெஞ்சு வலியால் செத்துட்டார்”. “அம்மா?” “அம்மாவுக்கு நெஞ்சு வலி.வேலைக்கு போறதில்லை”. “கூடப் பிறந்தவர்கள்?” “அக்கா ஒண்ணு. அவளுக்கு கல்யாணம் ஆகி போயிருச்சு.”
விஜயாவை பள்ளியில் சேர்க்குமா கல்வி உரிமைச் சட்டம்?
“நீ மட்டும் தான்,வருமானம்” “ஆமாங்க சார் “. “கடன் எப்படியாச்சு?”. “அம்மா நெஞ்சு வலிக்கு செலவு. வீடு ஒழுகுது. பிரிச்சு மேஞ்சோம்”. “அப்பா செத்த பிறகு தான் பள்ளிக் கூடத்தை விட்டு நின்னையா?” “எந்த ஸ்கூல்?”.”கலைமகள்” “எப்ப நின்னே?”. “ஆறாவது படிக்கும் போது”. என்ன பேசுவது? நா எழவில்லை எனக்கு? கல்வி உரிமைச் சட்டம் இவரை பள்ளியில் சேர்க்குமா? விஜயாவின் கதி? எதிர்காலம? நினைக்கவே பயமாக இருந்தது.
இப்படி கல்வி மறுக்கப்பட்ட இருபத்து ஐந்து குழந்தைகளை சந்தித்தேன்.
கேள்விக்குறியான பாரதியின் கல்வி!
அதில் இன்னொருவர் பாரதி. அவர் சென்னை அருகே பள்ளிக்கரணையை சேர்ந்தவர். நன்கு படிக்கும் பையன். வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் பையன். அவன் தந்தை பெரும் ‘குடிமகன்’. குடித்து குடித்து பெரும் கடனாகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் ஊரை விட்டு சென்று விடுவார்கள் என்ற அச்சம்.
அது பள்ளிக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிகிறது. பள்ளியில் ஆசிரியர்கள் பாரதியிடம் தெளிவாக சொல்லி விட்டார்கள். நீ எதற்கும் உங்கள் வீட்டில் பணம் கேட்கக் கூடாது. உனக்கான துணிமணிகள் செலவுக்கு பணம் எல்லாம் நாங்கள் தருகிறோம். நீ வீட்டுக்கு சென்று உறங்கி எழுந்து வந்துவிடு போதும் என்கிறார்கள்.
அப்போதும் பாரதி தொடர்ந்து அங்கு படிக்க முடியவில்லை. ஒரு நாள் இரவோடு இரவாக ஈரோடு வந்து சேர்கிறார்கள். அங்கு பாரதியை ஓர் அச்சகத்தில் வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். வாரச் சம்பளம். இந்த சூழ்நிலையில் தான் பாரதியையும் அவனது தாயையும் ஒருநாள் இரவில் சந்திக்கிறோம்.
பாரதியின் தாய் இந்தக் கதையை நம்மிடம் சொல்லி கதறி அழுதார். அவரது தந்தை அதே இடத்தில் குடிபோதையில் படுத்திருந்தார். என்னால் தான் படிக்க முடியவில்லை. என் மகனாவது படித்து சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக அவனுக்குப் பாரதி என்று பெயர் வைத்தேன். என் மகன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று அழுதார். நம்மால் என்ன செய்ய முடியும்? கதையை ஆவணப்படுத்திக் கொண்டு வந்து விட்டோம்.
இருபத்து ஐந்து குழந்தைகளோடு நடத்திய உரையாடலை அப்படியே ஆவணமாக்கி அதற்கு ஓர் முன்னுரை மட்டும் எழுதி பாரதி புத்தகாலயம் வழியாக “இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி?” என்ற பெயரில் 2013 ஆண்டில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
உதவ முன்வந்த மீனவர்!
நூல் வெளிவந்ததும் படிப்பவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இரண்டு ஆண்டுகள் கழித்து, டேவிட் என்ற மனிதர் தொடர்பில் வந்தார்.
“மணி சாரா! தூத்துக்குடியிலிருந்து டேவிட் பேசுறேன் சார். உங்க புக் நேத்து நைட் தான் படிச்சு முடிச்சேன். படிச்சு முடிச்ச பிறகு தூக்கமேயில்லை சார். இந்த புக் வாங்கி ஆறு மாசம் ஆச்சு ஏண்டா இத்தனை நாளா படிக்கலைன்னு மனசு வேதனைப்படுது சார்” என்றார்.
தொடர்ந்து “சார் அந்த விஜயாவும் பாரதியும் இனி எம் பொண்ணு பையன் சார். அவங்க ரெண்டு பேரையும் நான் படிக்க வைக்கிறேன் சார்” என்று கூறினார். “என்ன சொல்றதுன்னு தெரியல டேவிட் சார். உங்களுக்குப் பெரிய மனசு” என்றேன்.
“அவங்க ரெண்டு பேரையும் நாளைக்கு போயிப் பாருங்க சார்” என்கிறார். “சரிங்க சார். ரொம்ப சந்தோசம் சார்” என்றேன். அடுத்து டேவிட் பேச்சினை செவிமடுத்தேன்.
“என்னை சார்ன்னு கூப்பிடாதீங்க சார். நான் மீனவன். தினமும் கடலுக்குப் போற மீனவன் சார். சும்மா டேவிட்ன்னு கூப்பிடுங்க சார்” என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்ன சொல்ல! மாமனிதன் அல்லவா?!.
இவ்வளவு ஏழை மீனவன் இரண்டு சிறுவர்களைப் படிக்க வைக்கிறேன் என்று சொல்கிறாரே! அதுவும் கல்லூரி கல்வி வரை படிக்க வைக்கிறேன் என்கிறாரே. மீண்டும் டேவிட் சார்” என்றேன். “சாரெல்லாம் வேண்டாம் சார். நீங்க தான் சாரு” நீங்க எப்பப் போய் பார்த்துட்டுவந்து சொல்வீங்க, அப்போ நான் போன் பண்றேன் என்றார்.
“இல்லை டேவிட் நானே பேசுறேன்” என்றேன். “இல்ல சார். என்னிடம் அலைபேசி இல்லை. பொதுத் தொலைபேசியோ, ஓசி போனோ கிடைச்சாத்தான் பேசமுடியும் சார்” என்றார். ஆர்வம் தாங்காமல் “இந்தப் புக்கெல்லாம் எப்படி வாங்கிப் படிப்பீங்க” “அதான் சார், மதுரை புத்தக கண்காட்சி, அப்புறம் திருநெல்வேலி போனா வாங்குவேன்” என்று பதில் கூறினார். “எத்தனை புக் வச்சிருக்கீங்க”. “தெரியல சார்”. மழை காலத்துல வீடு ஒழுகி நிறைய புக் நனைஞ்சு போச்சு சார். அதனால மழைக்காகாகித பையில் கட்டி கட்டி வைச்சிருக்க்கேன் சார்” என்றார். எத்தனை புக் இருந்துச்சு என்பதே தெரியல சார்” என்றார்.
பெருவாரியான ஆசிரியர்களிடம் பொது வாசிப்பு இல்லையென்று குறைபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு மீனவர், அன்றாடம் கடலுக்குப் போனால் தான் கஞ்சி என்ற நிலையில் உள்ள ஒருவர், ஒழுகும் கூரை வீட்டைக் கூட பிரித்து மேயாமல் புத்தகம் வாங்கி பாலீத்தின் பைகளில் சுற்றி வைத்துள்ள மனிதனைப் பற்றி என்ன பேசுவது.
“டேவிட், ரொம்ப சந்தோசம். இந்த சிறிது நேர உரையாடலில் எவ்வளவு உங்களிடமிருந்து தெரிந்து கொண்டேன். நாளை மதியம் இரண்டு மணிக்கு கூப்பிடுங்கள். அதற்குள் விஜயா மற்றும் பாரதி பற்றியும் செய்தி சேகரித்து விடுகிறேன்” என்றேன். நன்றி கூறி அலைபேசியை அணைத்தார்.
குழந்தைக்கு குழந்தை
மறுநாள் காலையிலேயே ஈரோட்டில் உள்ள ஓடைப்பள்ளம் நோக்கி விஜயாவைப் பார்க்க சென்றேன். வெறும் பேப்பர் பொறுக்கும் சிறுமியாக இருந்த விஜயா, இப்போது திருமணமாகி, தாயாகும் நிலையில் இருந்தார். அவளது கணவன் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வெட்டச் செல்கிறார். பாரதியை தேடிச் சென்றேன். அவன் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டுப் போய்விட்டார். வேலை செய்துவந்த பைண்டிங் பிரஸிலும் இல்லை. பிரஸிலும் வீட்டிலும் அக்கம்பக்கம் கேட்டும் பதிலில்லை. மிகச் சரியாக இரண்டு மணிக்கு டேவிட் அழைத்தார். நிலைமையைக் கூறினேன்.
பதறிப் போய் ”குழந்தை வயிற்றில் குழந்தையா” என கேட்டு துக்கித்தார். உடனே, “சார் விஜயாவுக்கு திருமணம் ஆனால் என்ன? பிள்ளை பிறந்தால் என்ன? தையல் கிளாசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள். பயிற்சிக் கட்டணம் நான் செலுத்துகிறேன். டைலரிங் கற்றுக் கொண்டதும் ஒரு தையல் மிஷின் வாங்கித் தருகிறேன் என்றார். மீண்டும் எப்போது அழைப்பது என்றார். நாளை மாலை ஆறு மணிக்கு கூப்பிடுங்கள் என்றேன்.
பாரதியின் நிலைமை
பாரதி, குடியிருந்த பகுதியில் நாம் நடத்தி வந்த இரவுப் பள்ளியும் இருந்தது. அதன் பொறுப்பாளர் பெரு முயற்சி எடுத்தார். பலனில்லை. சொல்லி வைத்தது போல் டேவிட்டிடம் இருந்து, குறித்த நேரத்திற்கு அழைப்பு வந்தது. நிலைமையை விளக்கினேன். மிகவும் துயருற்று எப்படியாவது தேடிக் கண்டுபிடியுங்க சார் என்றார்.
நமது மாணவர்களும் நானும் நாள் முழுக்கத் தேடியும் கிடைக்கவில்லை. நாம் சொல்லும் நேரத்திற்கெல்லாம் டேவிட் தொலைபேசியில் இருப்பார். ஒரு கட்டத்தில் அவரது அலைபேசி அழைப்பைக் கேட்டாலே மனம் பதறும். இந்த நல்ல உள்ளத்திடம் எப்படி இல்லையென்று சொல்ல.
காஞ்சிபுரம் மாவட்ட அறிவியல் இயக்க நண்பர்கள், மாணவர் சங்க நண்பர்கள் எனப் பலர் வழியாக தேடினோம். விளைவு என்னவோ பூஜ்ஜியம்தான். அவனது சொந்த ஊரான பள்ளிக்கரணைக்கே ஆள்விட்டுத் தேடினோம். ஒவ்வொரு நாள் தேடல் முடிவின் போதும் டேவிட் அழைப்பை எதிர்கொள்வது மிகுந்த சிரமமாக இருந்தது. எப்படியாவது கண்டு பிடித்து விடுங்கள் என்று டேவிட் கெஞ்சிக் கொண்டே இருந்தார். இப்படி ஒரு மாதம் கழிந்துவிட்டது.
ஒரு நாள் காலையில், நாங்கள் நடத்தி வந்த இரவுப் பள்ளியை சேர்ந்த செந்தில் “சார் பாரதி கிடைச்சுட்டான்” என்று அலைபேசியில் கூறினார். எனக்கோ மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இதை டேவிட்டிடம் உடனே சொல்ல வழியில்லை. டேவிட் கூப்பிடும் வரை காத்திருந்தேன். செய்தி கேட்டு டேவிட் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.
இந்த ஒரு மாத காலகட்டத்தில், டேவிட், பாரதியின் படிப்பு தொடர்பான பல்வேறு வேலைகளை செய்து வைத்திருந்தார். ஈரோட்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் சென்னையில் லயோலா கல்லூரியில் கொண்டு படிக்க வைக்க சில பாதிரியார்களை சந்தித்து, நிலைமையை விளக்கி, சில உத்தரவாதங்களைப் பெற்றிருந்தார்.
அதே சமயம் மூன்று ஆண்டுகளுக்கு முன் பார்த்த பாரதியின் குடும்பம் வேறாகவும் தற்போதுள்ள பாரதியின் குடும்பம் வேறாகவும் இருந்தது. பாரதியின் அப்பா குடிநோயிலிருந்து மீண்டிருந்தார். வேலைக்குச் சென்று வருமானத்தை வீட்டுக்குக் கொடுத்து வந்தார். தன் மகனின் கதையைப் படித்த யாரோ ஒருவர், தன் மகனை மீண்டும் படிக்க வைக்க, தூத்துக்குடியிலிருந்து வருகிறார். தனது குடிநோயால் அழிந்துபட்ட மகனின் படிப்பு மீண்டும் துளிர்க்கப் போகிறது, என்பது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார்.
திருந்திய அப்பா!
பாரதி தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் பிரஸ்ஸில் வாங்கியிருக்கும் முன் பணத்தை டேவிட்டே தந்துவிடுவதாக சொல்லியிருந்தார். அத்தோடு, அவன் பைண்டிங் பிரஸ்ஸில் வாங்கும் சம்பளத்தையும் கல்லூரிப் படிப்பு முடியும் வரை அவனது வீட்டுக்கு மாதாமாதம் கொடுத்துவிடுவதாகவும் கூறினார்.
பாரதியின் அப்பாவோ கண்ணீர் பெருக, “அதெல்லாம் வேண்டாம் சார். என்னால்தான் என் மகன் படிப்பு கெட்டது. இப்போது நான் திருந்திவிட்டேன். ஆனால், என மகன் படிப்பு போனது போனது தானே ! நான் உழைத்து சம்பாரித்து படிக்க வைக்கிறேன். அவன் மீது வாங்கியுள்ள முன் பணத்தை மட்டும் கொடுத்துவிடச் சொல்லுங்கள். அது போதும். அதையும் கூட டேவிட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிச் செலுத்தி விடுகிறேன் ” என்று கூறினார்.
இந்தச் செய்தி பாரதி குடியிருக்கும் பகுதி முழுவதும் பரவி, பரபரப்பான பேசு பொருளாக மாறிவிட்டது. முதலில் பாரதி எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு செல்ல முடியாமல் நின்று விட்டார் என்று புரிந்து கொண்டு இருந்தோம். இப்பொழுதுதான் தெரிந்தது, அவர் எட்டாம் வகுப்பும் இடையிலேயே நின்றுவிட்டார் என்று.
மீனவனின் விடா முயற்சி!
இப்பொழுது வயது கூடிவிட்டதே, எட்டாம் வகுப்பில் சேர்ப்பாளர்களா? என்று யோசனையில் ஆழ்ந்தோம். ஒரு நாள் கழித்து டேவிட் கூப்பிட்டார். “சார், உங்களுக்குத் தெரியாதது இல்லை. கல்வி உரிமைச் சட்டத்தில் இதுக்கெல்லாம் எடம் இருக்காமே! “வயதுக்கேற்ற வகுப்பில், எட்டாம் வகுப்பு வரை சேர்த்தல், 14 வயது கடந்திருந்தாலும் எட்டாம் வகுப்பு வரை தொடர்தல்” என்ற பிரிவுகளை சுட்டிக்காட்டி எனக்கு நினைவுபடுத்தினார். டேவிட்டின் இந்த முயற்சியை அதிர்ச்சியுடன் கண்டு மகிழ்ந்தேன்.
அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் மூலம், மாவட்டக் கல்வி அலுவலருக்கு இந்த சட்டப்பிரிவை சுட்டிக்காட்டி மனுக் கொடுத்தோம். பையனுக்கு 17 வயது ஆகிவிட்டது. கல்வி உரிமைச் சட்டப்படி 14வரை தான் சேர்க்க முடியும் என்றனர் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள். கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாகப் படித்துள்ளது யார்? என்று மாவட்டக் கல்வி அலுவலர் கேட்டார். ஒருவர் கூட வாய்திறக்கவில்லை.
பாரதியின் வீட்டுக்கு அருகில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். உடனடியாக சீருடை எடுத்துத் தைக்கப்பட்டது. அந்தப் பகுதி முழுமையும் ஒரு பேசுபொருளாகிவிட்டது.
இறையன்பு IAS, சைலேந்திரபாபு IPS, ஆகியோர் எழுதிய புத்தகங்களோடு பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் ஆகியவற்றோடு டேவிட் ஈரோடு வர ஆயுத்தமாகிக் கொண்டிருந்தார். இந்தக் கதையெல்லாம் பாரதி வேலை செய்துவந்த உரிமையாளருக்கு தெரிந்தவுடன், நல்ல ஸ்மார்ட் போன் ஒன்றை பாரதிக்கு வாங்கிக் கொடுத்தார். இன்னும் சில சலுகைகள் வழங்குவதாகவும் ஆசை காட்டினார். பாரதி உடனே மனம் மாறிவிட்டான்.
நாம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மீண்டும் பள்ளி செல்ல மறுத்துவிட்டான். பாரதியை ஒரு IAS அல்லது IPS ஆக்கும் கனவோடு டேவிட் தூத்துக்குடியிலிருந்து வந்து கொண்டிருப்பதாகக் கூறினேன். பாரதியையும் அவனது அம்மாவையும் எங்கள் வீட்டுக்கு அழைத்துவந்து, சில மணி நேரம் உரையாடிப் பார்த்தேன். பயனில்லை. டேவிட்டை சந்திக்கக் கூட மறுத்துவிட்டார். எங்கே சந்தித்தால் மனம் மாறிவிடுவோமோ என்ற பயமா தெரியவில்லை.
டேவிட் பாரதிக்காக கொண்டுவந்த எட்டாம் வகுப்பு புத்தகங்கள் ஒரு செட், இறையன்பு, சைலேந்திரபாபு எழுதிய நூல்கள் உள்ளிட்ட தன்னம்பிக்கை நூல்கள் கண்டு மெய்சிலிர்த்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. மெதுவாக நிலைமையை டேவிட்டிடம் விளக்கினேன். மனிதர் தொய்ந்து போனார். சிறிது நேரம் விக்கித்து அமர்ந்திருந்தார்.
பின்னர் சமாளித்துக் கொண்டு, எட்டாம் வகுப்பு பாட நூல்களை மட்டும் அவர் தன்னோடே எடுத்துக் கொண்டார். தன்னம்பிக்கை நூல்களை என்னிடம் கொடுத்து எனது மாணவர்களுக்கு கொடுத்துவிடும்படி கூறினார். “சரிங்கசார், இதுக்கு மேல என்ன செய்ய முடியும்? வருத்தப்படாதீங்க” என்று எனக்கு அவர் ஆறுதல் தந்துவிட்டு, அடுத்து விஜயாவைப் போய் பார்க்கலாம் என்றார்.
தூத்துக்குடியில், மீனவக் குப்பங்களையும் ஏழை எளிய மக்கள் வசிக்கும் தெருக்களையும் பார்த்திருந்தாலும், ஈரோடு பெரும்பள்ள ஓடையில் குடியிருக்கும் ஏழை மக்களின் குடியிருப்புகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த வீடுகளையும் தெருக்களையும் பார்த்துவிட்டு, அதிர்ச்சி அடைந்தார். விஜயாவின் வீட்டைத் தேடிச் சென்று, வீட்டு முன்னால் தெருவில் உட்கார்ந்து கொண்டோம்.
மாறிப்போன தலையெழுத்து
விஜயாவின் முகத்தில் மகிழ்ச்சியையோ, வருத்தத்தையோ காண முடியவில்லை. எங்களுக்கு குளிர்பானங்களை வரவழைத்திருந்தார். ”நீ நல்லா வாழனும்மா. உன் கல்யாணத்துக்கு முன்னால இந்த புத்தகத்த படிச்சிருந்தா, உந்தலையெழுத்தை மாத்திருப்பம்மா” என்றார். அதற்கும் விஜயா ஒன்றும் பேசவில்லை.
“ஆறாம் வகுப்பிலேயே உன் அப்பா செத்து, அம்மாவுக்கு நெஞ்சுவலி கண்டு, நீ படாத கஷ்டப்பட்ட. உன்னைக் காப்பாற்றி கரைசேர்க்க நினைத்தேன். திருமணம், குழந்தை என்று பெரிய வயசு வாழ்க்கை சின்ன வயசுல உனக்கு வாய்க்கப் பெற்றுவிட்டது. என்ன செய்ய? கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும் “ என்று கூறிவிட்டு ரூ.2000/- விஜயாவிடம் கொடுத்தார். அவர் அதை வாங்க மறுத்தார். “நான் உன் தகப்பனைப் போல, பெற்றுக் கொள்” என்றார். அப்போதும் தயங்கினார். வாங்கிக் கொள் விஜயா என்று வற்புறுத்தினேன். பணத்தைப் பெற்றுக் கொண்டார். நாங்கள் விடைபெற்றோம்.
மீண்டும் பாரதியைப் பார்க்க முடியுமா? பேசிப்பார்க்கலாமா என்றார். அவரது அம்மாவை அழைத்துக் கேட்டுப்பார்த்தோம். பாரதி அதே நிலையில் இருந்தான். எந்த மாற்றமும் இல்லை. டேவிட் விடைபெற்றுச் சென்றார்.
உரிய நேரத்தில் உரிய கல்வி!
விஜயாவையும் பாரதியையும் மீண்டும் பள்ளி சேர்க்க முனைந்த அனுபவங்கள் நமக்கு உணர்த்துவது என்ன? உரிய காலத்தில், உரிய தேவைகளை பூர்த்தி செய்து கல்வி வழங்காவிடில் பின்னர், என்ன முயற்சி செய்தாலும் கற்கவே முடியாது என்பதுதானே!
வெளிவந்த பிறகு பள்ளிக்கே திரும்ப முடியவில்லை என்றால், கல்லூரியிலிருந்து படிக்க முடியாமல் நின்றவர்கள் மீண்டும் படிப்பை தொடர முடியுமா? இன்றைய நிலையில், கல்லூரியில் படிப்பவர்கள், அறுதிப் பெரும்பான்மை பெண்கள். பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன் திருமணம் செய்ய முடியாது என்பதாலேயே பலரை பெற்றோர் படிக்க வைக்கிறார்கள்.
இன்னும் பிள்ளை முதிர்ச்சி அடையவில்லை, என்ற காரணத்தால் பட்டப் படிப்பு படிக்க வைக்கிறார்கள். இடையில் மாப்பிள்ளை கிடைத்தாலும் படிப்பு முடியட்டும் என்று காத்திருக்கிறார்கள். அப்படியும் கூட இடையில் திருமணம் செய்து வைப்பவர்கள் உண்டு. அதில், பெரும் பகுதி கல்லூரி வருவதில்லை. முதலாண்டு முடிந்ததும் ஒரு சான்றிதழ் உண்டு. இரண்டாம் ஆண்டில் டிப்ளமோ உண்டென்றால், முக்கால் வாசி பெண் குழந்தைகளுக்கு படிப்பை நிறுத்தி அவ்வப்போது திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இதையெல்லாம் பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலனை செய்ய தவறிவிட்டது.
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… ஆனால் மீண்டும் உள்ளே வர முடியுமா? – பகுதி 1
கட்டுரையாளர் குறிப்பு
நா. மணி, பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத்துறை கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அவைகுறிப்பிலிருந்து பெரியார் பெயர் நீக்கம்: ஸ்டாலின் கண்டனம்!
பிக்பாஸ் நாமினேஷன்: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்?
how new education policy affected